இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0353



ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான் நணியது உடைத்து.

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:353

பொழிப்பு (மு வரதராசன்): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.



மணக்குடவர் உரை: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து.
துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.

பரிமேலழகர் உரை: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.
(ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: மெய்ப்பொருளைத் தெளிவுபட, ஐயமின்றித் துணிவாக அறிந்தவர்க்கு, எய்திநின்ற இவ்வுலகத்தைவிட மிகச்சிறப்புடையதெனப் போற்றப்படுகின்ற வானுலகம் அண்மையிலுள்ளதாகும்.
'துணிந்த அறிவின்கண்னது எல்லாவுலகும் ஆதலின், அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்கு தோற்றுதலின் நணித்தாம் என்றவாறு' என மணக்குடவர் கூறுவது கருதத்தக்கது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு,வையத்தின் வானம் நணிய துடைத்து.

பதவுரை: ஐயத்தின்-ஐயத்தினின்றும்; நீங்கி-விலகி; தெளிந்தார்க்கு-தெளிவு பெற்றவர்களுக்கு, உணர்ந்தார்க்கு, மெய்யுணர்வை அடைந்தார்க்கு; வையத்தின்-நிலவுலகத்தைவிட; வானம்-விண்ணுலகம்; நணியது-அருகாதல்; உடைத்து-உடையது.


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு;
பரிப்பெருமாள்: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு;
பரிதி: சந்தேகமற உபதேசத்தில் நிலைமை கண்டார்க்கு;
காலிங்கர்: கீழ்ச்சொன்னபடியே உள்ளமானது ஓர்ந்து, உணர்ந்த மெய்ப்பொருளை என்றும் இதன் தன்மை என்னைகொல் என்று உள்ள ஐயப்பாட்டினின்றி நீங்கி மற்ற அதனை அதுவேயாகத் தெளிந்த பெரியோர்க்கு;
பரிமேலழகர்: ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது.

'மெய்ப்பொருள் பற்றிய ஐயம் நீங்கித் தெளிந்தவர்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐயம் இன்றி உண்மை கணடவர்களுக்கு', 'மெய்ப்பொருள் ஐயப்படுதலின்றும் நீங்கித் தெளிந்தவர்கட்கு', 'சந்தேகத்தை விட்டுத் தெளிவடைந்தவர்களுக்கு', 'ஐயத்தினின்றும் நீங்கி மெய் உணர்ந்தார்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

வையத்தின் வான் நணியது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து.
மணக்குடவர் குறிப்புரை: துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.
பரிப்பெருமாள்: இவ்வுலகத்தினும் மேலுலகம் அணித்தாதலை உடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் அணித்தாமென்றவாறு. இது எல்லாம் அறியுமென்றது.
பரிதி: பூமியிலே இருக்கையிலே முத்தி பெற்றதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: இவ்வையத்தின் நணுமைபோல வான் நணுமை உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தின் வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.

'இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'பூமியிலே இருக்கையிலே முத்தி பெற்றதற்கு ஒக்கும்' என்றார் பரிதி. 'இவ்வையத்தின் நணுமைபோல வான் நணுமை உடைத்து' என்பது காலிங்கர் உரை. 'எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து' என்கிறார் பரிமேலழகர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுலகம் கிட்ட உள்ளது', 'இவ்வுலகத்தினும் மேலுலகம் பக்கத்திலுள்ளது', 'இந்த உலகத்தைக் காட்டிலும் பேரின்ப உலகம் சமீபமாகும்', 'இவ்வுலகத்தினும் வான உலகம் அண்மையில் உள்ளது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மண்ணுலகத்தைவிட விண்ணுலகம் அண்மையில் உள்ளது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு வையத்தின் வான் நணியது உடைத்து என்பது பாடலின் பொருள்.
'வையத்தின் வான் நணியது உடைத்து' என்ற பகுதி குறிப்பது என்ன?

உலக இயக்கத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு வானம் வசப்படும்.

ஐயத்தினின்றும் நீங்கித் தெளிவு அடைந்தவர் இந்த நில உலகத்தைக் காட்டிலும் வானுலகம் மிகவும் அருகிலே இருப்பதாக உணர்வர்.
பொருள்களின் இயல்பறியாது ஐயத்தை அதாவது இதுவோ அதுவோ என்ற சந்தேகத்தைக் களைவது என்பது மெய்யுணர்வுபெற அடிகோலுவது. பொருள்களைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர் இங்கேயே மேலுலகம் காண்பர். கண்ட, கேட்ட, பயின்ற நிகழ்வுகளில்,செயல்களில் ஐயப்பாடுகள் உண்டாவது இயல்பு. அந்த ஐயத்தை விலக்கி கல்வி, கேள்வி, பட்டறிவு மூலம் அறிவினைப் பெற்றபின் மாசறு காட்சி பெறுதல் என்பது மெய்யறிவு பெறுதல். பொய்யை மெய்யென்று நினைத்த மயக்க அறிவினின்றும் விலகி எது சரி எது தவறு என்ற பலதிறப்பட்ட கலவர உணர்வு தெளிதலாவது ஐயம் நீங்கியதாகும். அப்படித் தெளிவு பெற்றவர்களுக்கு வானுலகமும் அருகாமையில் வந்துவிட்டதாகும்.
எந்தத் துறையிலும் ஐயப்பாடுகள் நீங்கித் தெளிவு பெற்றால் எல்லாம் எளிதாகிவிடும். இக்குறட்பா மெய்யியலுக்கு மட்டுமன்றி அறிவியலுக்கும் பொருந்தும். அறிவியல் தெளிவால் வானம் வசப்படுவதை நாம் நாளும் காண்கிறோம்.
தெளிவு பெற்ற அறிவுடையவர்க்கு குற்றமற்ற காட்சி தோன்றும்; அப்பொழுது வான உலகம் என்பது எங்கோ வெகுதொலைவில் உள்ளதாகாது; மிக அருகில் இருப்பதாகும்.

'வையத்தின் வான் நணியது உடைத்து' என்ற பகுதி குறிப்பது என்ன?

மெய்யுணர்தல் அதிகாரப் பாடல்களை மெய்யியல் சார்ந்தே பலரும் விளக்கினர். இப்பாடல் அறிவியல் பொருள் பற்றிப் பேசுவது போல் தோன்றுகிறது. அறிவியலும் இறைப்பொருளின் ஒரு பகுதிதானே. அறிவியல் பொருளை ஐயமின்றி உணர்ந்து கொண்டவர்க்குப் பேரண்டத்திலுள்ள உலகங்கள் எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். இதை இன்று நாம் புரிந்துகொள்வதில் இடர் ஒன்றும் உண்டாவதில்லை. நிலவுக்கு விண்கலன் அனுப்புவது முதல் மற்றக் கோள்களுக்கு சுற்றுலா செல்ல முனைவது வரை மிகத் தேறி நாம் வந்திருப்பதால் உலகங்கள் சுருங்கியும் நெருக்கமாக உள்ளனவாகவும் தோன்றுகின்றன. குறள் இதைத்தான் 'வையத்தின் வான் நணியது உடைத்து' என்கிறது.
இக்குறளுக்கான உரையில் 'துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின்' என்று கூறிய தொல்லாசிரியரான மணக்குடவர் 'அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது" என்று மெய்யுணர்வு பெற்றவர்க்கு எல்லா உலகமும் ஒன்றாகவே தோன்றும் என்று நல்லதோர் விளக்கமும் தந்துள்ளார்.

நிலவுக்குச் சென்று வந்த முதல் மனிதன் ஆம்ஸ்ட்ராங் சென்னைக்கு வந்தபோது வரவேற்பு அறையில் இத்திருக்குறளும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் எழுதப்பட்டு இருந்ததாம். அதைப் படித்த ஆம்ஸ்ட்ராங் கேட்ட முதல் கேள்வி, "இதை எழுதியது யார்? விஞ்ஞானியா!" என்பதாம் என்பது ஒரு சுவையான செய்தி.

முதுகண்ணன் சாத்தனார் உலகியற்கை அறிவார் பற்றிச் சொல்லும் புறப்பாடல் இங்கு நோக்கத்தக்கது:
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே
(புறநானூறு 30 பொருள்: சென்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டு ஆண்டுப் போய் அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்)

ஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு மண்ணுலகத்தைவிட விண்ணுலகம் அண்மையில் உள்ளது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வையம் ஒன்றென்னும் மெய்யுணர்தல் முழுத்தெளிவு பெற்றவர்க்குக் கிடைக்கும்,

பொழிப்பு

ஐயம் நீங்கி உண்மை கண்டவர்களுக்கு இவ்வுலகத்தினும் வானுலகம் பக்கத்திலுள்ளது.