இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0352



இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:352)

பொழிப்பு (மு வரதராசன்): மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம்.
இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: மருள்நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.
(இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.)

சி இலக்குவனார் உரை: அறியாமையால் வரும் மயக்கத்திலிருந்து நீங்கி, குற்றமற்ற அறிவினையுடயவர்க்குத் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு இருள்நீங்கி இன்பம் பயக்கும்.

பதவுரை: இருள்-அறியாமை; நீங்கி-நீங்கி, விலகி; இன்பம்-மகிழ்ச்சி; பயக்கும்-உண்டாக்கும்; மருள்-மயக்கம்; நீங்கி-நீங்கி; மாசறு-குற்றமற்ற; காட்சியவர்க்கு-அறிவுடையார்க்கு.


இருள்நீங்கி இன்பம் பயக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம்;
பரிப்பெருமாள்: அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம்;
பரிதி: அஞ்ஞானமாகிய இருள் நீங்கிப் பேரின்பம் பெருக்கும்;
காலிங்கர்: தமது அறியாமையானது நீங்கி மற்று அளவிறந்த இன்பமானது பயக்கும்;
காலிங்கர் குறிப்புரை: இருள் நீங்கி என்பது தாம் அறியாமை நீங்கி என்றது;
பரிமேலழகர்: அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும்.

'அறியாமையானது நீங்கி மற்று இன்பமானது பயக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இருள் என்பதற்குப் பரிமேலழகர் பிறப்பு என்கிறார். இன்பம் என்ற சொல்லுக்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் முத்தியாகிய இன்பம் எனக் கொண்டார். பரிதி பேரின்பம் என்றார். காலிங்கர் அளவிறந்த இன்பம் என்கிறார். பரிமேலழகர் வீடு என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதைமை இராது; பேரின்பம் உண்டாம்', 'அம்மெய்யுணர்வு அறியாமைத் துன்பம் நீக்கிப் பேரின்பம் கொடுக்கும்', 'அஞ்ஞானம் நீங்கி, பிறப்பில்லாத பேரின்பம் கைகூடும்', 'அம் மெய்யுணர்ச்சி துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறியாமை நீங்கி இன்பம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு.
மணக்குடவர் குறிப்புரை: இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.
பரிப்பெருமாள்: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு (முத்தி) யின்ப முண்டா மென்றது.
பரிதி: மாசற்ற தரிசனம் கண்டவர்க்கு என்றவாறு.
காலிங்கர்: யார்க்கு எனின், மெய்ப்பொருளை வேறொன்றாகவும் வேறொன்றினை மெய்ப்பொருளாகவும் இங்ஙனம் மயங்கி நின்ற மயக்கம் நீங்கித் தெளிந்த உள்ளத்துக் குற்றமற்ற நல்லறிவுடையோர்க்கு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மருள் நீங்கி என்பது மயக்கம் நீங்கி என்றது; மாசறு காட்சி என்பது; மாசு என்பது குற்றம்; காட்சி என்பது அறிவு.
பரிமேலழகர்: அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன. [கேவல உணர்வு-இறையுணர்வாகிய மெய்யுணர்வு; நிரதிசய இன்பம்- பேரின்பம்]

'மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மயக்கம் விட்டுத் தெளிந்த அறிஞர்களுக்கு', 'திரிபாக உணரும் மயக்கம் நீங்கிக் குற்றமற்ற மெய்யுணர்வு உடையார்க்கு', 'மயங்கித் திரிபாக எண்ணிவிடாமல் குற்றமற்ற நோக்கத்தோடு மெய்ப் பொருளை அறிகின்றவர்களுக்கு', 'மயக்கத்தினின்றும் விலகிக் குற்றமற்ற மெய்யுணர்வு உடையவர்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மயக்கத்திலிருந்து நீங்கிய குற்றமற்ற அறிவினையுடயவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மயக்கத்திலிருந்து நீங்கிய மாசறு காட்சியவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'மாசறு காட்சியவர்' யார்?

உலகப் பொருட்கள் பற்றிய பார்வை தெளிவானால் இன்பம் கிட்டுவது இயல்பானதே.

மயக்கநிலை நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையார்க்கு, அது அறியாமை இருளினை நீக்கி அவர்கட்கு இன்பத்தினை அளிக்கும்.
எப்பொருளையும் உள்ளது உள்ளபடியே உணர்ந்து, மாசற்ற தோற்றம் பெற்றவர்க்கு, அந்த மெய்யுணர்வு அறியாமை இருளை நீக்கி இன்ப ஒளியைத் தரும். எது பொய்? எது உண்மை? என்று ஆய்ந்துணர்ந்து, பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்றுணர்ந்த மருள் நீங்கியவர்க்கு, இருள் நீங்கிய தூய்மையான தெளிவான பார்வை உண்டாவதால். அவர்க்கு உலகக் காட்சிகள் தெளிவாகத் தோன்றும். அவர் மெய்யுணர்வு பெற்றவராகிறார். உள்ளத்தில் வெளிச்ச உணர்வு தோன்றி இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான மேன்மையான இன்பம் அவர்க்குக் கிடைக்கும்.
மெய்யுணர்வு என்பது உள்ளம் சார்ந்த சிந்தனை. மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு அவ்வுணர்வு இன்பத்தையும் கொடுக்கும்.

'மாசறு காட்சியவர்' யார்?

'மாசறு காட்சியவர்' என்ற தொடர்க்குக் குற்றமற்ற அறிவுடையார், மாசற்ற தரிசனம் கண்டவர், குற்றமற்ற நல்லறிவுடையோர், குற்றம்அற்ற மெய்யுணர்வை உடையவர், மெய்யுணர்வுடையார், குற்றமற்ற ஞானத்தையுடையவராயினார், தெளிந்த அறிஞர்கள், குற்றமற்ற நோக்கத்தோடு மெய்ப் பொருளை அறிகின்றவர், குற்றமற்ற மெய்யறிவினை யுடையவர், தெளிந்த பார்வை உடையவர்கள், தூய அறிவையடைந்தோர், குற்றமற்ற மெய்யுணர்வு தோன்றியவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பொருள்களின் உண்மையை மனத்தால் உற்று உணர முடிந்தால், அது எல்லாக் காட்சிகளிலும் ஒளி தோன்றும் பேராற்றல் கூடிய நிலையாகும். அந்நிலையில் காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.. என்று ஆடிப்பாடி களிக்கக்கூடியதோர் பார்வை கிடைக்கும். அதுபோன்ற குற்றமற்ற பார்வை எய்தியவர்களே மாசறு காட்சியவர் ஆவர்.

...புன்மையில் காட்சி யவர். (வெஃகாமை 174 பொருள்: ...குற்றமற்ற தெளிந்த அறிவுடையவர்கள்.. ) என காட்சியவர் என்ற சொல் அறிவுடையவர் என்ற பொருளிலேயே குறளில் பிற இடத்திலும் ஆளப்பட்டது.

'மாசறு காட்சியவர்' என்றதற்கு இங்கு குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர் என்பது பொருள்.

மயக்கத்திலிருந்து நீங்கிய குற்றமற்ற தெளிவானவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மெய்யுணர்தல் பேரின்பம் தருவது.

பொழிப்பு

மயக்கம் நீங்கிய குற்றமற்ற தெளிவானவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் உண்டாகும்.