இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0320நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:320)

பொழிப்பு (மு வரதராசன்): துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன. ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர், பிறர்க்குத் துன்பம் செய்யார்.

மணக்குடவர் உரை: இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.

பரிமேலழகர் உரை: நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.
('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பிற உயிர்க்குச் செய்த துன்பமெல்லாம் துன்பம் செய்தாரையே சார்வன. ஆதலால், தமக்குத் துன்பம் கூடாது என விரும்புபவர் பிற உயிர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலஆம்; நோய்இன்மை வேண்டுபவர் நோய்செய்யார் .

பதவுரை: நோய்-துன்பம்; எல்லாம்-அனைத்தும்; நோய்-துன்பம்; செய்தார்-செய்தவர்; மேலவாம்-இடத்தனவாம்; நோய்-துன்பம்; செய்யார்-செய்யமாட்டார்கள்; நோய்-துன்பம்; இன்மை-இல்லாதிருத்தல்; வேண்டுபவர்.


நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்;
பரிப்பெருமாள்: இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்;
பரிதி: ஒருவர்க்குத் தான் செய்த விதனம், பின்பு தனக்கு வருகிறபடியினாலே;
காலிங்கர்: துன்பமானவை எல்லாம் பிறர்க்குத் துன்பம் செய்வார்மாட்டு உள்ளழுந்தவே வந்து விளையும்;
பரிமேலழகர்: இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்,
பரிமேலழகர் குறிப்புரை: 'உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார்.

'இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேடுகள் கேடுசெய்தார்க்கே வந்துசேரும்', 'துன்பங்களெல்லாம் துன்பங்களைச் செய்தவர்களுக்கே வந்து சேரும்', 'துன்பங்களெல்லாம் அவற்றைப் பிறர்க்குச் செய்தவரை வந்தடையும்', 'துன்பம் எல்லாம் பிறர்க்குத் துன்பம் செய்தாரிடம் செல்லும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்த துன்பங்களெல்லாம் துன்பங்களைச் செய்தவர்களிடமே வந்து அடையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.
பரிப்பெருமாள்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார்கள் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் இன்னாத செய்தார்க்கு இன்னாத வருமென்றார்; இது வந்தவாறு காட்டிற்று.
பரிதி: ஒருவர்க்கும் தாங்கள் விதனஞ்செய்யார் என்றவாறு.
பரிதி குறிப்புரை: அஃது எப்படி என்றால், பிரம்ம ராட்சதன் ஒருஇராசாவின் மகளைப்பற்றி நின்று சந்தியாவந்தனை செய ஆற்றங்கரையிலே வந்து நின்றளவில், பிராமணப் பிள்ளையின் பிள்ளை வாசிக்கின்றவனுக்கு அனறையிற் பாடம் இந்தக் குறள் ஆகையால் அவன் முகசுத்தி பண்ண வந்தவன், இந்தக் குறளைப் பாடமாகச் சொல்லிக் கொண்டு வந்தான். இத்தைப் பிரம்ம ராட்சதன் கேட்டுத் தானொரு பிராமண வடிவாய், இந்தப் பிள்ளை வாய்ப் பாடத்தை இரண்டு பிரகாரங் கேட்டு, 'நாம் இராசாவின் மகளை நோய் செய்தோமே! நமக்கு அந்த விதனம் பிறகே வரும்' என்று பயப்பட்டு, இந்தப் பிள்ளை முன்னிலையாக, இராசகுமாரத்தியை விட்டுப்போச்சு என்றவாறு.
காலிங்கர்('வேண்டுமவர்' பாடம்): ஆதலால், பிறர்க்கு இனிது [நோக்கி, என்றும் தரம்] ஒரு நோய் செய்வது இலர்; யார் எனின் தமக்குத் துன்பத்து இன்மையை விரும்புவர் என்றவாறு.
பரிமேலழகர்: அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.
பரிமேலழகர் குறிப்புரை: இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.

'தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் வேண்டாதார் துன்பம் செய்யார்', 'அதனால் தமக்குத் துன்பம் வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் செய்ய மாட்டார்கள்', 'ஆதலால் துன்பமில்லாமையை விரும்புகின்றவர்கள் பிறர்க்கு இடுக்கண் விளைக்கமாட்டார்கள்', 'ஆதலின் துன்பம் இல்லாமையை விரும்புபவர் பிறர்க்குத் துன்பம் செய்யார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தமக்குத் துன்பம் வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் செய்யார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்த துன்பங்களெல்லாம் துன்பங்களைச் செய்தவர்களிடமே வந்து அடையும்; தமக்குத் துன்பம் வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் செய்யார் என்பது பாடலின் பொருள்.
இக்குறளிலுள்ள 'மேலவாம்' என்றதன் பொருள் என்ன?

இன்னா செய்தவர்கள் அதற்குண்டான இன்னல் படுவதிலிருந்து தப்ப முடியாது.

துன்பங்களெல்லாம் துன்பம் செய்தாரையே சென்று சேரும். ஆதலால், துன்பமின்றி வாழ விரும்புகின்றவர்கள் பிறருக்கு துன்பம் செய்யமாட்டார்கள்.
'நோய்' என்ற சொல் துன்பம், உடற்பிணி, காமப்பிணி, குற்றம் என்ற பொருள்களில் குறளில் ஆளப்பட்டுள்ளது. இங்கு இன்னாதன அதாவது தீயவை அல்லது கொடுமையானவை என்ற பொருளில் வந்துள்ளது. கொடுமையால் விளையும் துன்பத்தை இப்பாடலிலுள்ள நோய் என்ற சொல் குறிக்கிறது. 'நோய் எல்லாம்' என்ற தொடர் ஒருவன் செய்யும் துன்பங்கள் எல்லாமே அவனையே சென்றடையும் என்ற பொருள் தருவது; அதில் வேறு யாரும் சிறு பங்காகக் கூடப் பொறுப்பேற்க முடியாது.

மருந்து என்ற அதிகாரத்தில் மனிதனுக்கு நோய் தான் உண்ணும் உணவாலும் அந்த உணவின் செரிமானத்தைப் பேணமால் போவதுமே பெரிதும் காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுவார் வள்ளுவர் அதாவது அவனுக்கு நோய் வெளியில் இருந்து வருவது இல்லை; உள்ளே இருந்துதான் வருகிறது என்பது அவரது துணிபு. அதுபோல்தான் ஒருவன் உறும் துன்பங்களுக்கும் அவன் செய்யும் துன்பங்களே காரணம் என்கிறார் இங்கு. நமக்குத் துன்பம் வேண்டாம் என்றால், நாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.
துன்பம் செய்தார் துன்படைவர் என்பது இயல்பாக நிகழும் நீதியாம். அறநெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையுமாறும், அறமல்லாத நெறியில் இருந்தால் தீமை விளையுமாறும் உலகத்தியற்கை அமைந்திருக்கின்றது. பிறர்க்குத் துன்பம் செய்யின் பின்பு அது தமக்கே துன்பமாகும் என்பது அறம் சார்ந்த நம்பிக்கையும் கூட. அறத்தைச் செய்வதும் செய்யாமற் போவதும் மக்கள் விருப்பம். ஆனால் அதனால் விளையும் நன்மை தீமையை மாற்றிவிட அவர்களால் முடியாது. எனவே நாம் பிறர்க்குச் செய்யும் துன்பம் அனைத்தும் பின் நம்மையே வந்து வருத்தும் என்பது கருத்து.

இப்பாடலில் நோய் என்ற சொல், ஒரே வகையான பொருளில் திரும்பத் திரும்ப வந்து, ஒருவகை ஒலிநயம் தருகிறது. இச்சொல், இக்குறளில் பொருள் வேற்றுமையின்றிப் பலமுறை வந்துள்ளது. இதைச் சொற் பொருட் பின் வரு நிலை யணி என்பர்.

இக்குறளிலுள்ள 'மேலவாம்' என்றதன் பொருள் என்ன?

'மேலவாம்' என்றதற்கு மாட்டுஉளவாம், மாட்டு உள்ளழுந்தவே வந்து விளையும், மேல் ஆம், சார்வன, மேலேயே தொடர்வனவாம், மேலே வந்தேறி, வந்துசேரும், மேலேயே வந்து விழும், தொடர்ந்து வருவனவாம், வந்தடையும், செல்லும், வந்து அடையும், மீதே உள்ளன, சார்வனவாம் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

செய்யும் எல்லாத் துன்பங்களும் செய்தவர் மேலவாம் என்பதால். பிறருக்குத் துன்பம் செய்யற்க என்கிறது பாடல். மேலவாம் என்பது மேல்+ஆம் என விரியும். ஆம் என்பது ஆகும் என்ற பொருளது. துன்பம் இப்பொழுது செய்திராவிட்டாலும் முன் எப்போதாவது செய்தது இப்பொழுது 'ஆகி' வருகிறது என்றும் இப்பொழுது செய்வது வரும் காலத்தில் ஆகும் என இதை விளக்குவர். செய்தவர் மேல் ஆகாமல் போகாது என்பது கருத்து.
பந்து எறிந்தவுடன் எங்கோ சென்று தாக்குவது போல் சென்று தாக்கி, உடனே எறிந்தவனிடமே திரும்பி வருவது போன்றது ஒருவன் பிறனுக்குச் செய்யும் துன்பமும் எனவும் இதை விளக்குவர். பந்து பிறரைத் தாக்குவதைப் புறத்தே காண்கின்றோம்; ஆனால் துன்பச் செயலைவிடத் துன்ப எண்ணமே பொல்லாதது. துன்பச் செயலின் அடிப்படையான துன்ப எண்ணம் பந்து போன்றது; பந்தைவிட ஆற்றலுடன் எண்ணியவனிடமே திரும்பி வந்து தாக்கவல்லது என்பர் இவர்கள்.

'மேலவாம்' என்றது சார்வனவாம் என்ற பொருள் தரும்.

செய்த துன்பங்களெல்லாம் துன்பங்களைச் செய்தவர்களிடமே வந்து அடையும்; தமக்குத் துன்பம் வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் செய்யார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இன்னாசெய்யாமை ஒருவன் துன்பமுறுவதை நிறுத்தும்.

பொழிப்பு

துன்பங்கள் எல்லாம் துன்பம் செய்தவரையே வந்துசேரும்; துன்பம் கூடாது என விரும்புபவர் துன்பம் செய்யார்.