இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0319பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:319)

பொழிப்பு (மு வரதராசன்): முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.

மணக்குடவர் உரை: பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும் மற்றொருவன் செய்யாமல்.
இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பிறருக்குத் தீங்கு முன்னால் செய்தால் தமக்குத் தீங்கு பின்னால் கண்டிப்பாக வந்தே தீரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.

பதவுரை: பிறர்க்கு-மற்றவர்களுக்கு; இன்னா-கெடுதல்; முற்பகல்-முன் ஒருபொழுது; செய்யின்-செய்தால்; தமக்கு-தங்களுக்கு; இன்னா-தீயவை; பிற்பகல்-பின் ஒருபொழுது; தாமே-தாமாகவே; வரும்-வந்தடையும்.


பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின்;
பரிப்பெருமாள்: பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின்;
பரிதி: தான் ஒருத்தற்குப் பொல்லாங்கு செய்வானாகில்;
காலிங்கர்: ஒருவர் பிறர்க்கு இன்னாதனவற்றை முற்பகற்காலம் தாம் செய்வராயின்;
பரிமேலழகர்: துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின்;

'பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றைச்' செய்யின் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலையில் பிறர்க்குக் கொடுமை செய்யின்', 'ஒருவர் பிறர்க்கு முற்பகலில் துன்பம் செய்தால்', 'ஒருவன் முற்பகலிலே பிறர்க்குத் தீங்கு செய்தால்', 'பிறர்க்கு இன்னாதவற்றை முற்பகல் செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவர் பிறர்க்கு ஒருபொழுது கொடுமை செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும் மற்றொருவன் செய்யாமல்.
மணக்குடவர் குறிப்புரை: இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: அச்செய்தல் தானே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்; மற்றொருவன் செய்யாமல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: அந்தப் பொல்லாங்கு தனக்கே பிறகு வரும்; ஆகையால் ஒருவர்க்கும் பொல்லாங்கு செய்யவேண்டாம் என்றவாறு.
காலிங்கர்: தமக்கு இன்னாதனவும் அச் செய்த அக்கருமத்தின் பயன் பிற்காலத்துத் தானே வந்து எய்தும்; அதனை ஒருவர்க்கு [ம் ஒழித்தல் அரி]து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: முற்பகல் பிற்பகல் என்பது முற்காலம் பிற்காலம் என்றது.
பரிமேலழகர்: தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.

'தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும் மற்றொருவன் செய்யாமல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாலையில் உனக்குக் கொடுமை தானேவரும்', 'அத்துன்பம் அவர்க்குப் பிற்பகலில் அவர் செய்யாமல் வேறு வகையால் வரும்', 'பிற்பகலிலே அவனுக்குத் தீங்குகள் பிறர் செய்யாமல் தாமாகவே நேரும்', 'தமக்கு இன்னாதன, அற்றைப் பிற்பகல் தாமே வரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவர்க்கு மறுபொழுது துன்பம் தானேவரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவர் பிறர்க்கு ஒருபொழுது கொடுமை செய்தால் அவர்க்கு மறுபொழுது துன்பம் தானேவரும் என்பது பாடலின் பொருள்.
முற்பகல்-பிற்பகல் என்பன குறிப்பது என்ன?

இன்றைக்குச் செய்யப்படும் கொடுமைக்கு நாளைக்குத் திரும்பப் 'பலன்' கிடைக்கும்.

பிறர்க்குத் துன்பம் தருவனவற்றை ஒருவர் ஒரு பொழுது செய்வாரேயானால் அவருக்கு இன்னாதன மற்றொருபொழுது தாமே அவரை வந்து அடையும்.
முற்பகலில் பிறர்க்கு இன்னா செய்தால் பிற்பகலில் துன்புறுத்தப் பட்டவர் செய்யாமல் இன்னா தானே தமக்கு வரும்; இதைத்தான் வினையின் பயன் என்பர். இது அறத்தின் ஆணை. உலகியல்பானது நன்னெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையுமாறும், அறநெறி புறக்கணித்து வாழ்ந்தால் தீமை விளையுமாறும் அமைந்திருக்கின்றது. அறக்கடவுள் ஆட்சியில் கொடுமை செய்தவர் விரைவில் தீங்கு அடையுமாறுதான் உள்ளது. இன்னா செய்தவர்களை நாளும் பார்க்கிறோமே, அவர்களுக்குத் தீது ஒன்றும் நடக்கவில்லையே என்று எண்ணவேண்டாம். அவர்களுக்கு உண்டானது கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். நமக்குத் தெரியவில்லை என்பதனால் இன்னாசெய்தார்க்கு அப்படி ஒன்றும் இன்னா ஏற்படவில்லை என்று பொருளல்ல. ஒருவன் செய்யும் தீமைக்குத் தனிமனிதனோ அரசோ தண்டனை அளிக்காவிடினும் அறம் விரைந்து அளிக்கும் என்கிறது இப்பாடல்.

செயலைக் காரணமாகவும், துன்பம் உண்டாதலைக் காரியமாகவும் கூறாது அச்செயலே இன்னா என்று கூறப்பட்டது. ஒருவன் செய்த தீவினைகளுக்குரிய விளைவுகளை எவ்வகையாலேனும் அனுபவித்தே ஆகவேண்டும் என்ற உலகத்தியற்கையை வள்ளுவர் பல இடங்களில் ஐயம் திரிபு இன்றிப் பேசுகிறார். அதுவும் முற்பிறப்பு, பழவினை எனத் திரித்துப் பொருள் கொள்ள வேண்டிய தேவையில்லாமல், இந்தப் பிறப்பிலேயே, விளைவுகள் நிகழும் என்பது அவரது கருத்து. செயலுக்குரிய விளைவுகள் விரைந்து நிகழும் என்பதும் அவர் கூறுவது. 'முற்பகலில் பிறர்க்குத் கொடுமை செய்தால் அவ்வாறு செய்பவர்களுக்குப் பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வரும்' என்கிறார்.
முன்பு மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு(தீவினையச்சம் 204 பொருள்: பிறனுக்குத் தீமை பயக்குஞ் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும்வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும் தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று (தீவினையச்சம் 208 பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேடுறுவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போன்றது) என்றும் அறக்கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்குண்டான கேட்டைச் சிந்திக்கும் என்று சொல்லப்பட்டது.

முற்பகல்-பிற்பகல் என்பன குறிப்பது என்ன?

காலிங்கர் 'முற்பகல் பிற்பகல் என்பது முற்காலம் பிற்காலம்' என்று தெளிவாகத் தமது உரையில் குறிப்பு தருகிறார்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'முற்பொழுது-பிற்பொழுது' என உரைப்பர்.
பரிமேலழகர் பகல் முன், பகல் பின் என்பன முற்பகல், பிற்பகல் என மாறி நின்ற ஆறாம் வேற்றுமைத் தொகைச் சொற்கள் என விளக்கினார். இவை பகலினது முன், பகலினது பின் என விரியும். இவ்வாறு மாறி நிற்பதை இலக்கணப் போலி என்பர் இலக்கண நூலார்.
பின்வந்த உரையாசிரியர்கள் முற்பகல் என்பது காலை நேரத்தையும் பிற்பகல் என்பது மாலைக் காலத்தையும் குறிக்கும் என்றனர். சிலர் முன்னால்- பின்னால், முற்பிறவி-அடுத்துவரும் பிறவி, இளமைக்காலம்-முதுமைக்காலம் என முற்பகல்-பிற்பகல் என்பதற்குப் பொருள் கூறினர். முற்பகல் என்பது பகலவன் எழுவதிலிருந்து உச்சி வேளை வரை என்றும் பிற்பகல் என்பது உச்சிநேரம் முதல் பகலவன் மறைவது வரை உள்ள வேளை என்றும் கூறினர். வ உ சிதம்பரம் 'ஞாயிறு தோன்றியது முதல் பத்து நாழிகை வரையில் முற்பகல் எனவும், அப் பத்து நாழிகை முதல் இருபது நாழிகை வரையில் பகல் எனவும், அவ் விருபது நாழிகை முதல் ஞாயிறு படும் வரையில் பிற்பகல் எனவும் சொல்லப்படும்' என காலவரையறை தந்து விளக்கம் செய்தார்.

ஒருநாளின் முற்பகலில் ஒருவருக்கு தீங்கு செய்தால் செய்தவருக்குத் தீங்குகள் அன்று பிற்பகலுக்குள் தாமாகவே வந்து சேரும் என்பது இக்குறளுக்கான நேர்பொருள். அதாவது . இன்றிலிருந்து நாளையன்று; நாள் விடியலிலிருந்து அடையும் வரையிலன்று; மிகக் குறுகிய கால அளவில் - முற்பகலிருந்து பிற்பகலிலேயே கேடுகள் உண்டாகும் என்பது.
இன்னாசெய்தார்க்குக் கேடு உண்டாவது உறுதி என்றாலும் எல்லா இடங்களிலும் இவ்வளவு விரைவாக இயற்கை நீதி வழங்குவதில்லை. எனவே முற்பகல்-பிற்பகல் என்பதற்கு முற்காலம்-பிற்காலம் அல்லது முற்பொழுது-பிற்பொழுது என்று பொருள் கொள்வது சிறக்கும்.

முற்பகல்-பிற்பகல் என்பதை முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் (கொன்றைவேந்தன் 74 ) என்பதை ஔவையாரும் தமது நூலில் ஆண்டுள்ளார்.
குறள் சொல்லாட்சியைச் சுவைத்த இளங்கோவும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்
(சிலப்பதிகாரம். வஞ்சினமாலை. வரி-3-4.)
என மதுரை மன்னன் பாண்டியன் வினைப்பயனை அன்றே எய்தியதை 'இன்று காலையில், கோவலன் உயிருக்குக் கேடு சூழ்ந்தான் பாண்டியன்; இதே மாலைக்குள் பிற்பகலில் தனக்கே கேடு சூழ்ந்து உயிர் துறந்தான்' என்று பாடினார்.

ஒருவர் பிறர்க்கு ஒருபொழுது கொடுமை செய்தால் அவர்க்கு மறுபொழுது துன்பம் தானேவரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இன்னாசெய்யாமை அறக்கடவுளிடமிருந்து ஒருவனைக் காக்கும்.

பொழிப்பு

ஒருபொழுது பிறர்க்குக் கொடுமை செய்யின் மறுபொழுது துன்பம் தானே வரும்.