எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
(அதிகாரம்:இன்னாசெய்யாமை
குறள் எண்:317)
பொழிப்பு (மு வரதராசன்): எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.
|
மணக்குடவர் உரை:
யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.
பரிமேலழகர் உரை:
மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம்.
(ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
தீயவற்றை எவ்வளவு சிறிதாகவாயினும் எக்காலத்தும் யாவருக்கும் மனத்தாலுங்கூடச் செய்யக்கருதாமையே முதன்மையாகிய அறமாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் மாணா செய்யாமை தலை.
பதவுரை: எனைத்தானும்-எவ்வளவு சிறிய அளவினதாயினும்; எஞ்ஞான்றும்-எப்போதும்; யார்க்கும்-எவருக்கும்; மனத்தானாம்-உள்ளத்தோடும்; மாணா-மாட்சிமைப்படாத செயல்கள்; செய்யாமை-செய்யாதிருத்தல்; தலை-சிறப்பு.
|
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும்;
பரிப்பெருமாள்: யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும்;
பரிதி: ஆரளவிலும் பொல்லாங்கு செய்யாமல்;
காலிங்கர்: ஒருவன் உலகத்து யாவர்க்கும் எஞ்ஞான்றும் எத்துணையும் சிறிதாயினும்;
பரிமேலழகர்: எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.
'யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வகையாலும் என்றும் எவர்க்கும்', 'எக்காலத்தும் எவர்க்கும் சிறிதானாலும்', 'எவ்வளவு சிறிய அளவிலும் கூட எப்போதும் யாருக்கானாலும்', 'எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
மனத்தானாம் மாணாசெய் யாமை தலை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்('மனத்தானும்' பாடம்): இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.
பரிப்பெருமாள்: இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வகுத்துக் கூறினார்; இஃது அவ்வாறன்றி யாவர்மாட்டுந் தவிர வேண்டும் என்றது.
பரிதி: மனத்தாலும் பொல்லாங்கு நினையாமல் இருப்பது தலைமை என்றவாறு.
காலிங்கர்('மனத்தானும்' பாடம்): இன்னாதனவற்றைத் தன் மனத்தினானும் கருதுதல் செய்யாமையும், வாக்கினாலுரைத்தல் செய்யாமையும், காயத்தாற் செயல் செய்யாமையுமே தலைமைப்பாடாவது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மனத்தானாம் என்பாருமுளர்.
பரிமேலழகர்: மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை செய்யாமை தலையாய அறம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம்.
'இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'மனத்தாலும் பொல்லாங்கு நினையாமல் இருப்பது தலைமை' என்றார். காலிங்கர் 'இன்னாதனவற்றைத் தன் மனத்தினானும் கருதுதல் செய்யாமையும், வாக்கினாலுரைத்தல் செய்யாமையும், காயத்தாற் செயல் செய்யாமையுமே தலைமைப்பாடாவது' என்று விரிவான உரை தருகிறார். பரிமேலழகர் 'மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை செய்யாமை தலையாய அறம்' என்கிறார். மணக்குடவர்/பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் 'மனத்தானும்' என்று பாடம் கொள்ள பரிமேலழகர் 'மனத்தானாம்' எனக் கொண்டதால் உரை வேற்றுமை உண்டாயிற்று.
இன்றைய ஆசிரியர்கள் 'மனமறியக் கொடுமை செய்யாதே', 'மனத்தானும் தீமை தரும் செயலை நினையாதிருத்தல் தலைசிறந்த அறம். (மனத்தானாம்-பிறர் பாடம்)', 'கண்ணியமில்லாதது என்று மனதிற்படுகிற எதையும் செய்யாமலிருப்பது மிகச் சிறந்த குணம்', 'மனத்தொடு பொருந்த இன்னாத செயல்களைச் செய்யாமலிருத்தல் தலையாய அறம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் கொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்பது பாடலின் பொருள்.
'மாணா' என்றால் என்ன?
|
மனத்தாலும் பிற உயிர்களுக்குக் கொடுமைகள் நினைக்கவேண்டாம்.
இழிவுஉண்டாக்கும் செயல் எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதை எக்காலத்தும் எவருக்கும் மனத்தினாலும் செய்ய எண்ணாதிருத்தலே சிறந்ததாகும்.
வள்ளுவர்க்கு மனம்தான் மிகவும் முக்கியம். உள்ளத்தால் உள்ளுவதை பலப்பல இடங்களில் குறளில் அவர் பேசியுள்ளார். மனத்தில் நினைப்பதுதான் எல்லாச் செயல்களுக்கும் மூலமாகவும் தூண்டுதலாகவும் இருப்பதால், உள்ளம் யாவர்க்கும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதை அவர் எப்பொழுதும் வலியுறுத்துவார். இங்கு பிறர்க்கு இழிவு செய்வதை - அது எந்த அளவு இருந்தாலும் எக்காலத்திலும்-அவர்கள் உயர்வான நிலையிலிருந்தாலும் அல்லது அவர்களது தாழ்நிலை காலத்தும், யாவருக்காக இருந்தாலும்- சிறியவர் அல்லது பெரியவர், எளியவர் அல்லது வலியவர், ஏழை அல்லது, செல்வர் என்றாலும் - மனத்தால் எண்ணாமல் இருப்பது மிக உயர்ந்த குணம் எனக் கூறுகிறார்-
இழிவு செய்யும் செயல்களும் துன்பம் தருவதால் அவையும் இன்னாதனவே. எனவே அவற்றைச் சிந்தையிலும் நினைக்கக் கூடாது என்கிறார்.
மற்றத் தொல்லாசிரியர்கள் 'மனத்தானும்' எனப் பாடங்கொள்ளப் பரிமேலழகர் 'மனத்தான்ஆம்' எனக் கொண்டார். அதற்கு அவர் சொல்லும் விளக்கம் 'மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது. இது துன்பம் தரும் செயலை மனமறியாது செய்தவிடத்து அதனால் பாவமுண்டாவதில்லை என்ற கருத்தைத் தருகிறது.
'மனத்தானும்' என்று பாடங்கொண்ட காலிங்கர் இதிலுள்ள உம்மைகொண்டு 'இன்னாதனவற்றைத் தன் மனத்தினானும் கருதுதல் செய்யாமையும், வாக்கினாலுரைத்தல் செய்யாமையும், காயத்தாற் செயல் செய்யாமையுமே தலைமைப்பாடாவது' என விரித்து உரைக்கிறார்.
‘மனத்தானும்’ என்னும் பாடம் பொருட்சிறப்போடு 'எனைத்தானும்' என்னும் சீரோடு இயைந்து நின்று எதுகை நயமும் தருதலால் அதுவே சிறப்புடைத்து (இரா சாரங்கபாணி).
|
'மாணா' என்றால் என்ன?
'மாணா' என்ற சொல்லுக்கு இன்னாதவை, இன்னாத செயல்கள், பொல்லாங்கு, இன்னாதன, மாட்சிமைப்படாதன (இன்னாத செயல்கள்), பொல்லாதன, கொடுமை, தீமை தரும் செயல், கண்ணியமில்லாதன, சிறுமை, தீயவை, துன்பம் வரும் செயல்கள், கொடுஞ்செயல்கள், தீய செயல்கள் என உரையாளர்கள் பொருள் கூறினர்.
மாணா என்ற சொல்லுக்கு மாட்சிமைப் படாதன அல்லது கண்ணியமில்லாதவை என்பது நேர்பொருள். அதிகாரம் நோக்கி அனைவரும் இன்னாத செயல்கள் எனப் பொருள் கொள்கின்றனர்.
ஒருவரது பேச்சுப் பிடிக்காமலிருந்தால் 'இவனை நாலு அறை கன்னத்தில் பட்பட் என்று விடவேண்டும்' என்று சிலர்க்கு எண்ணத் தோன்றும். அப்படி எண்ணுவதும் மாணாச் செய்கை; அதுவும் கூடாது என்கிறார் வள்ளுவர்.
'மாணா' என்ற சொல் மாட்சிமைப்படாதன என்ற பொருள் தருவது.
|
எவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் கொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்பது இக்குறட்கருத்து.
இழிவுதரும் இன்னாசெய்யாமை மிக மேலானது.
எவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் மனத்தாலும் கொடியவற்றை செய்ய நினையாதிருத்தல் தலையாயது.
|