இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
(அதிகாரம்:இன்னா செய்யாமை
குறள் எண்:314)
பொழிப்பு (மு வரதராசன்):இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்துவிடுதலாகும் .
|
மணக்குடவர் உரை:
இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக.
இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
பரிமேலழகர் உரை:
இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.
(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை:
தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையயும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும். பிறர் செய்த தீமையை நினைப்பதால் பகைமை உணர்வும், தாம் செய்த நன்மையை நினைப்பதால் தன் முனைப்பும் துளிர்க்கும். அதனால் மறந்து விடுக என்றார். உளவியல் அடிப்படையில் ஒருவரைத் திருத்த, உடன்பாட்டு முறையிலே அணுகுதல் வேண்டும். பழிவாங்கும் உணர்வில் நின்ற ஒருவனை "ஒறுத்தல்" "நாண" என்ற சொற்களின்வழி, பழி வங்குதலுக்கு உடன்பட்டு நிற்பார் போலக் காட்டி அவன் வெகுளியைத் தணிய வைத்துப் பின் நன்னயம் செய்யும் நெறியில் ஆற்றுப்படுத்தும் நிலையில் இக்குறள் அமைந்திருப்பதறிக.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நல் நயம் செய்துவிடல்.
பதவுரை: இன்னா-தீங்குகள்; செய்தாரை-செய்தவரை; ஒறுத்தல்-தண்டித்தல்; அவர்-முற்குறிப்பிட்டவர் (இங்கு இன்னா செய்தார்); நாண-வெட்கப்பட; நல்-நல்ல; நயம்-நன்மை; செய்துவிடல்-செய்துவிடுதல்.
|
இன்னா செய்தாரை ஒறுத்தல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின்;
பரிப்பெருமாள்: இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின்;
பரிதி: தனக்குப் பொல்லாங்கு செய்தார்க்கு;
காலிங்கர்: துறவோர்க்கு இன்னாதனவற்றைச் செய்தாரை ஒறுத்தலாவது யாதோஎனின்;.
பரிமேலழகர்: தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது;
'தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கொடுமை செய்தாரைத் தண்டிப்பது எப்படி?', 'தமக்குத் துன்பம் செய்தவரைத் தண்டித்தல் என்பது', 'தீங்கு செய்வதை (மாசற்ற மனமுடையவர்கள்) தண்டிக்கிறவிதம் எதுவென்றால்', 'தமக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்தவர்களைத் தண்டித்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தமக்குத் தீமை செய்தாரைத் தண்டித்தல் இப்பகுதியின் பொருள்.
அவர்நாண நன்னயம் செய்து விடல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
பரிப்பெருமாள்: அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
பரிதி: அவர் நாணுதல் பிறக்கும்படியாக நன்மையே செய்வது தகுதி என்றவாறு.
காலிங்கர்: அவர் (தமது பெரு)மையின் நிலைமை கண்டு மற்று அவர் தாமே நா(ணுமாறு) நாம் அவர்க்கு நல்ல (ஒழுக்கமே செய்து) விடல் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: நயம் என்பது ஒழுக்கம்.
பரிமேலழகர்: அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.
பரிமேலழகர் குறிப்புரை: மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின், மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு.
இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.
'அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
‘செய்துவிடல்’ என்ற தொடரிலுள்ள ‘விடல்’ என்பதைத் தனியே பிரித்து அதற்குப் பிறர் செய்த இன்னாமையையும் தான் செய்த நன்னயத்தையும் மறக்க என்று பரிமேலழகர் கூடுதல் உரை செய்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் வெட்கப்படும்படி நன்மை செய்வது', 'தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நல்ல இனிய அச்செயல்களை மனம் மகிழச் செய்தலேயாம்', 'அந்தத் தீங்கு செய்தவர்கள் தாமே வெட்கப்பட்டு வருந்தும்படி அவர்களுக்கு நல்ல உதவிகளைச் செய்துவிடுவது', 'அவர் தாமே நாணுமாறு அவர்க்கு நன்மை தருவனவற்றைச் செய்து அவர் செய்த குற்றத்தையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடலாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களுக்கு நல்ல நன்மை செய்துவிடுவது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தமக்குத் தீமை செய்தாரைத் தண்டித்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடுவது என்பது பாடலின் பொருள்.
'அவர்நாண நன்னயம் செய்து' குறிப்பது என்ன?
|
குறளுக்குப் பெரும்சிறப்புச் சேர்த்த பாடல் இது. தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்துவிடுக என்கிறது.
தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்தலாவது கொடுமை செய்தவர்களே நாணுமாறு அவர்களுக்கு நன்மையைச் செய்துவிடுவதே யாகும்.
ஒருவன் நமக்குத் தீங்கு செய்தால் அவனைத் தண்டிக்க நினைப்பது மனித இயற்கை. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், சூட்டுக்கு சூடு, காயத்துக்குக் காயம் எனப் பழிவாங்க வேண்டும் என்பதே பொதுவாக எவரும் விரும்பும் தண்டனையாக இருக்கும். வள்ளுவரும் தீமை செய்தவனைத் தண்டிக்கலாம் என்கிறார். ஆனால் அவர் கூறும் தண்டனை நெறி முற்றிலும் மாறுபட்டதாகவும் அதற்கு முன்னும் பின்னும் எந்தஒரு சிந்தனையாளரும் கூறாததாகவும் இருக்கிறது. நமக்கு ஊறு விளவிப்பவர்களைத் தண்டிக்கச் சிறந்த வழி அவர்களே வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை செய்துவிடுங்கள் என்கிறார் அவர். தீமை செய்தவனுக்கு நன்மையை ஒருவன் செய்யும்போது அவன் நெஞ்சே அவனைச் சுட்டுணர்த்தி நல்வழிப்படுத்தும்.
இதைத் தீங்கு செய்தவர்க்கு அஞ்சி நன்மை செய்வதாகக் கொள்ளக் கூடாது. இங்கே பழிதீர்த்தலும் இல்லை.
'விடல்' என்பதற்குப் பரிமேலழகர் 'அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்' என விளக்கம் தருவார்.
'மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின், மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு.' என்று மேலும் அதை விரித்துரைப்பார். அவ்விதம் நன்மையைச் செய்தபின், அவர்கள் செய்த தீங்கு தாம் செய்த நன்மை இவை இரண்டையும் மறந்து விடவேண்டும்; மறக்காவிட்டால் நெஞ்சில் பகையும் காழ்ப்பும் வளர இடம் ஏற்படும்; இன்னா செய்தவனின் கெடுதியையும் தான் செய்த இனிய நன்மையையும் பாராட்டாதிருத்தல் வேண்டும். இது பரிமேலழகர் தனது உரைத்திறன் தோன்றச் சொல்லப்பட்டது.
|
'அவர்நாண நன்னயம் செய்து' குறிப்பது என்ன?
நன்மை தரும் செயல்கள் நயம் என்ற சொல்லால் குறிக்கப் பெறுகிறது. நன்னயம் என்பது நல்ல நன்மை என்று பொருள்படும். 'அவர்நாண நன்னயம் செய்து' என்ற தொடர் 'அவர் அதாவது தீங்கு செய்தவர் வெட்கும்படி நல்ல நன்மை செய்து' என்ற பொருள் தரும்.
இயேசுகிருஸ்து 'உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உன் மறு கன்னத்தைக் காட்டு' என்று அறவுரை தந்தார்.
அறைந்ததைப் பொறுத்துக் கொள்வதே பெரிது. இயேசுவோ ‘நீ திருப்பி அறையாதே. அறைந்தவன் திருப்பி உன்னையே அறையுமாறு உன் மறு கன்னத்தையும் அவனுக்குக் காட்டு’ என்கிறார். இயேசு பெருமானின் இவ்வுரையை உலகம் வெகுவாகப் போற்றுகிறது. ஆனால், வள்ளுவரோ இதற்கும் மேலே போய் ‘ஒருவன் உனக்குத் தீமை செய்தால் அதற்கு மாறாக நீ அவனுக்கு நன்மையைச் செய்’ என்கிறார்.
ஒருவர் நமக்குத் தீங்கிழைக்கிறார். அத்தீங்கை மறந்து அவரை மன்னித்துவிடுவது ஓர் நல்ல பண்பு. ஆனால் மறந்துமன்னித்து அவருக்கு வேண்டிய நன்மைகள் செய்துவிடுவது அதைவிட உயர்ந்த அறக்குணம். அது அவரை வெட்கப்படுத்தித் தமது செயலுக்கு வருத்தப்பட வைக்கும். பெருமனத்துடன் நல்லன செய்துகாட்டி தீயரை அடக்கி அவர்களை வென்று காட்டும் வழியும் அதுவே. பதில்தீங்கு செய்யாமல் நல்லது செய்தால், 'இப்படிப்பட்ட குணம் கொண்டவர்க்கா தீங்கு செய்தோம்' என்று எண்ணி அவர் நாணுவார். அதுவே அவருக்குத் தக்க தண்டனையாய் அமையும். இனிமேல் இன்னா செய்ய எண்ணவும் மாட்டார். இன்னா செய்தார் நாணமடைவதால் அவர் திருந்தி நல்வழிப்படுவர் என்பது குறிப்பு.
வள்ளுவரின் சொல்திறனையும் இக்குறள் நன்கு வெளிப்படுத்துகிறது. 'ஒறுத்தல்' 'அவர் நாண' என்பன இக்குறளுக்கு நல்லணி சேர்க்கும்
சொற்களாகும். தண்டித்தலும் வெற்றி பெறுதலும் அற நெறியால் அமைய வேண்டும் என்பதால் 'அவர் நாண நன்னயம் செய்து விடல்' என வழியும் விளைவும் ஒன்றுபடக் கூறினார்.
இது பகையை நட்பாய் மாற்றும்; உறவை வளர்க்க உதவும். மனித நேயமே வள்ளுவர் வகுக்கும் அறத்தின் அடிப்படை என்பதையும் காட்டுவது.
இன்னா செய்தார்க்கும் இனிய நன்மை செய்யுமாறு வற்புறுத்துவதால் உலகத்து அறநூலாருள் சீரியராவர் நம் வள்ளுவர்.
|
தமக்குத் தீமை செய்தாரைத் தண்டித்தல் தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களுக்கு நல்ல நன்மை செய்துவிடுவது என்பது இக்குறட்கருத்து.
இன்னாசெய்தார்க்கு இன்னா செய்யாமை மட்டுமல்ல நல்லதும் செய்.
தீங்கு செய்தவர் வெட்கப்படுமாறு அவருக்கு நல்ல நன்மை செய்வதே அவரைத் தண்டிக்கும் முறை ஆகும்.
|