இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0313



செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:313)

பொழிப்பு (மு வரதராசன்): தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

மணக்குடவர் உரை: தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும்.
இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது

பரிமேலழகர் உரை: செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.
(அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.)

வ சுப மாணிக்கம் உரை: வலிய வந்து பகைத்தவர்க்குங்கூடத் துன்பம் செய்யின் துயரம் நீங்காது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்.

பதவுரை: செய்யாமல்-செய்யாதிருக்க; செற்றார்க்கும்-பகைவர்க்கும்; இன்னாத-தீயவை; செய்தபின்-செய்தால்; உய்யா-தப்பமுடியாத; விழுமம்-துன்பம்; தரும்-கொடுக்கும்.


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('செய்யாமை' என்பது பாடம்): தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின்;
பரிப்பெருமாள்: தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாத செய்யின்;
பரிதி: தானொருத்தற்குப் பொல்லாங்கு செய்யாதிருக்கையிலே தன்மீது கோபித்தார்க்குத் தான் மீண்டும் இன்னாதனவற்றைச் செய்தாராயின்;
காலிங்கர் ('செய்யாமை' என்பது பாடம்): தான் பிறர்க்கு ஓர் இன்னாமை முன்னம் செய்யாதிருக்கத் தன்னைவந்து செறுத்தவர்க்கும் தான் பெயர்த்து இன்னாதனவற்றைச் செய்தானாயின்;
பரிமேலழகர்: தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்;

'தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான் முன் தீமை செய்யாதிருக்கத் தன்மேல் பகை கொண்டார்க்கும் தீங்கிழைத்தல்', 'பகைவர்களுக்கும்கூட அவர்கள் ஒரு தீங்கும் செய்யாதிருக்கிறபோது அவர்களுக்குத் தீங்கு செய்துவிட்டால்', 'தான் ஒரு கெடுதியுஞ் செய்யாமலிருக்கத் தனக்குத் தீங்கிழைதவர்க்குக்கூட எதிர்கெடுதி செய்தால்', 'தாம் துன்பம் செய்யாமல் தமக்குப் பிறர் துன்பம் செய்த போது அதற்கு மீண்டும் துன்பம் செய்தால் தாம் துன்பம் செய்யாமல் தம்மை வருத்தியவருக்கும் துன்பம் செய்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்கும் தீங்கிழைத்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

உய்யா விழுமம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது உய்வில்லாத நோயைத்தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது
பரிப்பெருமாள்: அஃது உய்வில்லாத நோயைத்தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காரணமின்றி இன்னாதன செய்தலைத் தவிரவேண்டுமென்றது.
பரிதி: அது பிழைப்பில்லாத நரகந்தரும் என்றவாறு.
காலிங்கர்: தனக்கு உய்ந்து கரையேறுதற்கு அரிதாகிய பெருந்துன்பத்தைத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.

'அஃது உய்வில்லாத நோயை/நரகத்தை/பெருந்துன்பத்தை/இடும்பையைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அச்செயல் தப்பிக்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும்', 'அக்குற்றம் தப்பமுடியாத தீவினையை உண்டாக்கும்', 'அது (தவத்தையழித்துக்) கடத்தற்கரிய துயரத்தைக் கொடுக்கும்', 'கடக்க முடியாத துயரத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது மீள முடியாத துயரத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்கும் தீங்கிழைத்தால் அது உய்யா விழுமம் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'உய்யா விழுமம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

என்ன காரணத்துக்காக என்றாலும் ஒருவன் செய்த தீங்கு அவனை உறுத்திக் கொண்டே இருக்கும்.

ஒருவன் ஒரு தீமையும் செய்யாதிருக்க அவனிடம் வலிந்து பகை பகைகொண்டவர்க்கும் அவன் தீங்கு செய்தால், அச்செயல் அவனுக்கு மீள முடியாத துயரத்தை அவனுக்குத் தரும்.
அவன் யாருக்கும் ஒரு துன்பமும் செய்வதில்லை. எனினும் ஒருவன் வலிய வந்து பகைகொண்டு அவனுக்குச் சினமூட்டிப் பெருந்துன்பம் செய்கிறான். வேண்டுமென்றே தனக்குத் துன்பம் செய்தவர்களை அடக்குவதற்காகத் திருப்பி இன்னா செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். ஆனால் ஒரு தூண்டுதலும் இல்லாமல் தீங்கு செய்த பகைவனுக்கும்கூடத் திருப்பித் துன்பம் செய்ய வேண்டாம்; தீமை செய்யும் பகைவர்க்கும் தீங்கு செய்வது தவறு; அத்தவறு அவன் வாழ்நாள் முழுவதும் அவனது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்து வருத்தம் தரும் என்று கூறி அவனைத் தடுக்கிறார் வள்ளுவர்.

.... கற்றபின் நிற்க அதற்குத் தக (கல்வி 391 ...கற்றால் அதற்குப் பொருந்த ஒழுகுக) என்ற குறளில் உள்ள 'கற்றபின்' என்ற தொடர் 'கற்றால்' எனப் பொருள் தருவதுபோல, இப்பாடலிலுள்ள 'செய்தபின்' என்ற தொடர் 'செய்தால்' என்று பொருள்படும்.

'உய்யா விழுமம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'உய்யா விழுமம்' என்றதற்கு உய்வில்லாத நோய், பிழைப்பில்லாத நரகம், உய்ந்து கரையேறுதற்கு அரிதாகிய பெருந்துன்பம், தப்பமுடியாத துன்பம், கடக்கவியலாத துன்பம், நீங்காத துயரம், தப்பிக்க முடியாத துன்பம், தப்பமுடியாத தீவினை, கடத்தற்கரிய துயரம், மீளாத் துயர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்,

உய்யா என்ற சொல் தப்பமுடியாத என்றும் விழுமம் என்றது துன்பம் என்றும் பொருள்படும், 'உய்யா விழுமம்' என்பது தப்பமுடியாத துன்பம் என்ற பொருள் தரும். தான் ஒன்றுமே செய்யவில்லை. பின்னும் தனக்கு தீங்கிழைத்தவர்க்கு எதிர் தீங்கு செய்தால் மீளாத் துன்பமே அடைவான் என்கிறது இக்குறள். தீங்குக்குப் பதில் தீங்கு நேர் செய்துவிடுமே. பின் ஏன், முன்னம் தீங்கு ஒன்றும் செய்யாதிருந்தவன் கடக்கமுடியாத துயரம் அடையவேண்டும்? மாசற்றோர் கயவர் போன்று நடந்து கொள்வாரேயானால், அது அவர்க்குத் தீராத பழியைத் தந்து வாழ்நாள் முழுவதும் வருத்திக் கொண்டே இருக்கும் என உய்யா விழுமம் தரும் என்பதை விளக்குவர்.
அப்படித் தீங்கு செய்தால் மேன்மேலும் மாறாப் பகையுந் துன்பமும் பெருகும்; பழிக்குப்பழி என்பது முடிவே இல்லாத சுழற்சியாகி மீளாத் துயரத்தைத் தரும் விடும் எனவும் விளக்கம் செய்வர்.

'உய்யா விழுமம்' என்ற தொடர்க்கு தப்பமுடியாத துன்பம் என்பது பொருள்.

தான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்கும் தீங்கிழைத்தால் அது மீள முடியாத துயரத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பகைவர்க்கும் இன்னாசெய்யாமை ஒருவன் துயருறுவதிலிருந்து காக்கும்.

பொழிப்பு

தான் ஒரு தீமையும் செய்யாதிருக்க வலிய வந்து பகை கொண்டார்க்கும் துன்பம் செய்யின் தப்பமுடியாத துயரம் உண்டாகும்.