இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0311சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:311)

பொழிப்பு (மு வரதராசன்): சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

மணக்குடவர் உரை: மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு.
(உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: சிறப்புகளெல்லாம் உண்டாகக் கூடிய செல்வம் கிடைப்பதானாலும் (அதற்காகவும்) பிறருக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்ற மனமுடையவர்களுடைய கொள்கை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.

பதவுரை: சிறப்பு-பெருமை; ஈனும்-தரும்; செல்வம்-பொருள்மிகுதி; பெறினும்-அடைந்தாலும்; பிறர்க்கு-மற்றவர்க்கு; இன்னா-தீங்குகள்; செய்யாமை-செய்யாதிருத்தல்; மாசுஅற்றார்-குற்றம் நீங்கியவர்; கோள்-கோட்பாடு.


சிறப்புஈனும் செல்வம் பெறினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும்;
பரிப்பெருமாள்: மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும்;
பரிதி: எட்டுவகைப் போகந் தருகின்ற செல்வம் பெற்றாலும்;
காலிங்கர்: மறுமைக்கு முத்தியையும் இம்மைக்குச் செல்வத்தையும் பெறினும்;
காலிங்கர் குறிப்புரை: சிறப்பு என்பது முத்தி. செல்வம் என்பது திரு.
பரிமேலழகர்: யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை பெறாமைமேற்று.

'மிகுதியைத் தருகின்ற/ எட்டுவகைப் போகம் தருகின்ற/ மறுமைக்கு முத்தியை இம்மைக்கு/ யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய, செல்வங்களைப் பெற்றாலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறப்புச் செல்வம் கிடைப்பினும்', 'பிறர்க்குத் துன்பம் செய்து சிறப்பளிக்கும் செல்வத்தை ஒருவன் பெறலாமாயினும்', 'பெருமை தரவல்ல செல்வங்களைப் பிறர்க்குத் துன்பஞ் செய்து பெறலாமாயினும்', 'சிறப்புக்களைத் தரும் செல்வங்களைப் பெற்றாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிறப்புக்களைத் தரும் செல்வங்கள் கிடைப்பதாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
மணக்குடவர் குறிப்புரை: இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது; அதாவது தீத்தொழிலார் மாட்டுளதாகிய செல்வம் அவரை நலிந்து கொண்டால் உலகத்தார் பழியாராதலான்.
பரிதி: பிறர்க்கு விதனஞ் செய்யாமை இருப்பது நல்லோர் கொள்கை என்றவாறு.
காலிங்கர்: தன் நெஞ்சு அறியத் துயருறுவதைத் தாம் பிறர்க்குச் செய்யாது ஒத்தல், உட்குற்றமற்ற உணர்வுடைத் துறவோரது நெஞ்சின் கோட்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு.
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.

'பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு/துணிவு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்க்குத் துன்பம் செய்யாமையே தூயவர் கொள்கை', 'அத்துன்பத்தைப் பிறர்க்குச் செய்யாதிருத்தலே மனக்குற்றம் நீங்கிய நல்லோர் கோட்பாடு', 'அத்தகைய துன்பத்தைச் செய்யாமையே நல்லதென்பது குற்றமற்றவரது கொள்கை. சிறப்பீனும் செல்வம்-மிக்க செல்வம். செல்வச் செருக்கால் பிறர்க்குத் துன்பம் செய்யக் கூடாது. இன்னா-துன்பம்', 'பிறர்க்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாமலிருத்தல் குற்றமற்ற பெரியோர்களின் கொள்கையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர்க்குத் துன்பம் செய்யாமையே குற்றமற்றவர் கொள்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சிறப்புஈனும் செல்வம் கிடைப்பதாயினும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே குற்றமற்றவர் கொள்கை என்பது பாடலின் பொருள்.
'சிறப்புஈனும் செல்வம்' குறிப்பது என்ன?

பிறர்க்குத் துன்பம் செய்யாமையைத் தங்கள் கொள்கையாகக் கொண்டவர்கள், பெருஞ் செல்வம் கிடைக்கும் என்றாலும் கொடுமை புரியார்.

பிறருக்குத் துன்பத்தைத் தருவதால் சிறப்புகளைத் தரும் செல்வமிகுதியைப் பெறுவதாக இருந்தாலும் மனக்குற்றமற்றவர் கேடுகள் செய்ய மாட்டார்கள்; அது அவர்களது கொள்கையாம்.
செல்வம் ஆற்றல் மிக்கது. எனவேதான் 'செய்க பொருளை' என்று வள்ளுவர் தயங்காமல் கூறுவார். செல்வம் பல சிறப்புக்களையும் தேடித்தரும் வல்லமை பெற்றது. இன்னா செய்வதால் தமக்கு நிறைய நன்மை வரும் என்பதாக இருந்தாலும், பிறர்க்குத் தீமை செய்யாமல் வாழ்வர் மாசற்ற வாழ்க்கையை நெறியாகக் கொண்டவர்கள். எத்தகைய சிறப்பினைப் பெற்றாலும் பிறருக்குக் கொடுமை செய்தலை அவர்கள் எண்ணுவதில்லை. அருள்வழி நடக்கும் நெஞ்சத்தூயர், பிறர் துன்புறத் தாம் செல்வச் சிறப்புடன் வாழ நினையார்.
மாசற்றார் எனச் சொல்லே பிறருக்குத் துன்பம் செய்யார் என்பதை விளக்கி நின்றது; செல்வத்தைக் கொண்டு மன மாசின்மையாகிய அறத்தைப் பெறஇயலாது என்பதையும் உணர்த்தவே மாசற்றார் கொள்கை எனக் கூறப்பட்டது.
கொள்கை என்ற சொல் 'எந்தச் சூழ்நிலையிலும் கொடுமை செய்து பொருள் ஈட்ட மாட்டேன்' என்ற உறுதிப்பாட்டுடன் இருப்பதைத் தெளிவாக்குகிறது.

'சிறப்புஈனும் செல்வம்' குறிப்பது என்ன?

'சிறப்புஈனும் செல்வம்' என்ற தொடர்க்கு மிகுதியைத் தருகின்ற செல்வம், எட்டுவகைப் போகந் தருகின்ற செல்வம், மறுமைக்கு முத்தி இம்மைக்குச் செல்வம், யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்கள் (அணிமா, மகிமா, கலிபா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசித்துவம், வசித்துவம் என்ற எட்டுச் சித்திகள்), சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வம், மேன்மையைத் தரும் செல்வம், சிறப்பைத் தரும் பெருஞ்செல்வம், சிறப்புச் செல்வம், சிறப்பளிக்கும் செல்வம், சிறப்புகளெல்லாம் உண்டாகக் கூடிய செல்வம், புகழ் உண்டாகத் தக்க பெரிய செல்வம், பெருமை தரவல்ல செல்வங்கள், சிறப்புக்களைத் தரும் செல்வங்கள், மிக்க செல்வம், சிறப்பைத்தரும் பெருஞ்செல்வம், சிறப்பையும் செல்வத்தையும், எல்லாராலும் நன்கு மதிக்கப்படுஞ் செல்வம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் தனது சிறப்புரையில் பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டும் எனக் குறிக்கின்றார். இவர் துன்புறுத்திப் பெற்றது, ஆனால் பழி தராத செல்வத்தைச் சொல்கிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மணக்கொடை (dowry)தான். மணக்கொடை பெருஞ்செல்வத்தால் ஆவது, அதைக் கொடுப்பவரில் பெரும்பான்மையர்க்கு துன்பங்கள் பல எய்திய பின்னரே அதைத் தர இயலும். திருமணத்துக்குப் பின்னும் மணக்கொடை தொடர்பாக ஏற்படும் கொடுமைகள் பல. மணக்கொடை பெறுவதும் வாங்குவதும் சட்டப்படி குற்றமென்றாலும் சமுதாய நடைமுறையாகப் பரவலாக உள்ளதாகும். வள்ளுவர் இக்குறளில் மணக்கொடையைச் சொல்லவில்லை என்றாலும் அதுபோன்று பெற்ற செல்வம் அவர்க்கு ஏற்புடைத்தல்ல என்பதை அறியலாம்.

'சிறப்புஈனும் செல்வம்' என்றதற்குச் சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வம் என்பது இயல்பான பொருள்.

சிறப்புக்களைத் தரும் செல்வங்கள் கிடைப்பதாயினும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே குற்றமற்றவர் கொள்கை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பழிவராது என்று தோன்றினாலும் இன்னாசெய்யாமை நன்று.

பொழிப்பு

பிறர்க்குத் துன்பம் செய்து மிகு செல்வம் பெறக்கூடுமாயினும் அதைச் செய்யாதிருத்தலே மனக்குற்றமற்ற நல்லோர் கொள்கை.