இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0308இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:308)

பொழிப்பு (மு வரதராசன்): பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

மணக்குடவர் உரை: தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும் கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று.
மேல் வலியவன் பொறுக்க வேண்டுமென்றார் அவன் பொறுக்குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றார்.

பரிமேலழகர் உரை: இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.
(இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: பல சுடர்களோடு கூடிய பெரிய நெருப்புத் தொகுதி தன்னைச் சூழ்ந்து வருத்தும் துன்பத்தைப் போன்ற கொடிய துன்பங்களை ஒருவன் தனக்குச் செய்யினும் தன்னால் முடியுமானால் அவன் மீதும் கோபம் கொள்ளாதிருத்தலே நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் வெகுளாமை புணரின் நன்று.

பதவுரை:
இணர்-பலசுடர், பூங்கொத்து; எரி-நெருப்பு; தோய்வு-தீண்டுதல்; அன்ன-அதுபோன்ற; இன்னா-தீங்குகள்; செயினும்-செய்தாலும்; புணரின்-கூடுமாயின்; வெகுளாமை-சினவாதிருத்தல்; நன்று-நல்லது.


இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும்;
பரிப்பெருமாள்: தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும்;
பரிதி: பூங்கொத்தை அக்கினியில் இட்டாற் போலே ஒருவர் தனக்குப் பொல்லாங்கு செய்தாலும்;
பரிமேலழகர்: பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்;

தொடர்வுபட்ட/பல சுடரை உடைத்தாய நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும் என்ற பொருளில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி இணர் என்பதற்குப் பூங்கொத்து எனப் பொருள் கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பூங்கொத்தை நெருப்பில் இட்டாற்போலக் கொடுமைகள் செய்யினும்', 'பூங்கொத்தைத் தீயிலிட்டாற் போலத் தனக்கு ஒருவன் தீமை செய்யினும்', 'நெருப்புச் சுடர் சுடுவது போலத் துன்பம் செய்கிறவனிடத்திலும்', 'தொகுதியான தீச்சுடருள் தோய்ந்தால் போலத் துன்பந் தருவனவற்றைத் தனக்கு ஒருவன் செய்தானாயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொத்தாக நெருப்பு வந்து வருத்தினாலொத்த தீமைகளை ஒருவன் செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

புணரின் வெகுளாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: மேல் வலியவன் பொறுக்க வேண்டுமென்றார் அவன் பொறுக்குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றார்.
பரிப்பெருமாள்: கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வலியவன் பொறுக்க வேண்டுமென்றார் அவன் பொறுக்குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றார்.
பரிதி: அவ்விடத்தும் கோபம் விடுகை நன்று என்றவாறு.
பரிமேலழகர்: அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.

'கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கோபம் கூடாது', 'முடியுமானால் சினவாதிருத்தல் நல்லது', 'கோபங் கொள்ளாதிருக்க முடியுமானால் அதுவே நல்லது', 'அவன் தன்னிடம் வந்து கூடினாலும் அவனைச் சினந்து கொள்ளாதிருத்தல் நல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சினவாமல் இருத்தல் கூடுமாயின் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொத்தாக நெருப்பு வந்து வருத்தினாலொத்த தீமைகளை ஒருவன் செய்தாலும், புணரின், சினவாமல் இருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
'புணரின்' என்றால் என்ன?

தீயவை பலவாறாகத் தாக்குமிடத்திலும் வெகுள வேண்டாம்.

பல கொழுந்துகளாக எரியும் பெருநெருப்பு வந்து வருத்தினாலொத்த துன்பங்களைச் செய்தாலும் சினங்கொள்ளாமல் இருத்தல் கூடுமானால் அது நல்லது.
எந்த எல்லைவரை சினம் காப்பது? ஒருவன் தொடர்ந்து கடுமையான தீமைகளால் துன்புறுத்தப்படுகிறான். கொடுமையாய்க் காயும் தீநாக்குகள் ஒருங்கு சேர்ந்து சுடுவது போன்று சினமூட்டுஞ் செயல்களைத் தாங்க முடியாதபடி உணர்கின்றான். அவ்வேளைகளிலும், இயலுமாயின், வெகுளாமல் இருக்க முடியவில்லையே என்று குறை கூறாமல் பொறுமை காக்கச் சொல்கிறார். என்கிறார் வள்ளுவர். இழைக்கப்படும் கொடுமையின் மிகமிஞ்சிய தன்மையைக் குறிக்க “இணர் எரி” எனச் சொல்லப்பட்டது, 'இன்னா' என்ற சொல் தீச்செயல்ப்பன்மையைக் குறிக்கிறது. 'இயலுமாயின்' என்றது துன்பம் தருவனவற்றின் மிகுதியை உணர்த்துகிறது.

இணர் என்பதற்குப் பூங்கொத்து என்றும் பொருள் உண்டு. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர்.... (சொல்வன்மை 650 பொருள்: கொத்தாக மலர்ந்திருப்பினும் மணம் பெறாத மலரை ஒப்பர்..) என பிறிதோரிடத்தும் இணர் என்பது பூங்கொத்து என்ற பொருளில் குறளில் ஆளப்பட்டுள்ளது. 'இணர்எரி தோய்வன்ன' என்பதற்குப் பூங்கொத்தைத் தீயிலே இட்டாற்போலும் என்றும் பொருள் கொண்டனர். இதுவும் பொருந்துவது என்றாலும் 'இணர்எரி' என்ற தொடர்க்குப் பன்சுடர் நெருப்பு என்ற பொருள் இதைவிடச் சிறக்கும்.

'புணரின்' என்றால் என்ன?

'புணரின்' என்றதற்குக் கூடுமாயின், இயலுமாயின், முடியுமானால், வருந்தி வந்து கூடுவானானால், தன்னிடம் வந்து கூடினாலும், கூடுமானால், தவறுணர்ந்து தன்னிடத்து வந்து சேருவானாயின் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'புணரின்' என்ற சொல்லுக்குக் 'கூடுமாயின்' என்றும் சேருவானாயின் என்றும் பொருள் கூறினர். கூடுமாயின் என்றது இன்னாமை மிகுதியைச் சுட்டுவதால், அதுவே பொருத்தமாக உள்ளது.
'வெகுளாதீர்' என்று அறுதியிட்டுச் சொல்வது வள்ளுவர் வழக்கம். அப்படியில்லாமல், இங்கு, 'முடியுமானால் வெகுளாமல் இருக்க' என்று வேண்டுவதாக அமைந்துள்ள நடை குறளில் அரிதாகக் காணப்படுவதாகும். உயிர்களுக்குச் சினத்தைக் கட்டுப்படுத்த முடியாத சமயங்களும் உண்டு என்பதை அவர் உணர்ந்ததாலேயே இவ்வாறு கூறியுள்ளார் எனத் தோன்றுகிறது. அவரே குறளில் பல இடங்களில் அறச்சீற்றம் காட்டியுள்ளார் என்பது நாம் அறிந்ததே. இதனால் சினமூட்டும் செயல்களைத் தாங்க முடியாவிடின் வெகுளுதல் நன்று என்று பாடல் கூறுவதாகவும் கொள்ளக்கூடாது.

'கலத்தல், சேர்தல், இணைதல், புணர்தல், கூடுதல் ஆகிய ஒரு பொருள் பல சொல்லாகக் கருதத் தகுந்தவை. கலத்தல் நீர்மப் பொருளுக்கே உரியது. புணர்ச்சி உடல் உறவைக் குறிப்பதே பெரும்பான்மை. நண்பர்கள் அறிஞர்கள் ஒன்று சேர்வதையும் (புணர்ச்சி பழகுதல் வேண்டா.... -குறள் 785) இரண்டு பொருள் சேர்தலையும் (செப்பின் புணர்ச்சி போல் கூடினும்... குறள் 887) குறிப்பது சிறுபான்மை.
இணர் என்ற சொல்லுக்கு எதுகையாக அமையும்படி 'புணர்' பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இயலும் என்ற பொருளே கொள்ளப்படுகிறது. உண்மையில் 'புணர்' என்பதற்கு இயலும் என்ற பொருள் கிடையாது. அதன் ஒரு பொருள் பல சொல் வகையைச் சார்ந்த 'கூடு' என்ற சொல்லுக்கு, இயலும் என்ற மற்றொரு பொருளும் உண்டு. புணர் = [புணர் கூடு]கூடு = [இயலும் கூடு]. புணர், கூடு என்பவை ஒரு பொருள் பல சொல். மேலும் கூடு என்பது பல பொருள் ஒரு சொல்லாய், 'இயலும்' என்று இன்னொரு பொருளும் உடையது. அந்த முறையிலேயே இங்கு, 'புணரின்' என்பதற்குக் 'கூடுமாயின், இயலுமாயின்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.' (செ வை சண்முகம்).

கொத்தாக நெருப்பு வந்து வருத்தினாலொத்த தீமைகளை ஒருவன் செய்தாலும் சினவாமல் இருத்தல் கூடுமாயின் நல்லது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொறுக்கப் பொறுக்க மேலும் பொங்கினாலும் வெகுளாமை நன்று.

பொழிப்பு

கொத்தாய் நெருப்பு இட்டாற்போல ஒருவன் தீமை செய்யினும் சினவாமல் இருத்தல் இயலுமாயின் நல்லது.