சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று
(அதிகாரம்:வெகுளாமை
குறள் எண்:307)
பொழிப்பு (மு வரதராசன்): (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.
|
மணக்குடவர் உரை:
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும்,
இது பொருட்கேடு வருமென்றது.
பரிமேலழகர் உரை:
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.
(வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக் குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
தரையை ஓங்கி அடித்தவனது கை தரையிற் பட்டுத் துன்புறுவது தவறாதது போலச் சினத்தை ஒரு பொருளாக மதித்துக் கொண்டவன் துன்புறுதல் தவறாது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று.
பதவுரை:
சினத்தை-வெகுளியை; பொருள்-பொருள்; என்று-என்பதாக; கொண்டவன்-பூண்டிருந்தவன்; கேடு-கெடுதல்; நிலத்து-பூமியின் கண்; அறைந்தான்- அடித்தவன்; கை-கை; பிழையாது-தவறாதது; அற்று-அத்தன்மைத்து.
|
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல்;
பரிப்பெருமாள்: சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல்;
பரிதி: கோபத்தைப் பொருளென்று கொண்டார்க்குக் கேடு வராது தப்பாது;
காலிங்கர்: இம்மை மறுமை ஆகிய இரண்டினையும் கெடுப்பதாகிய சினத்தைப் பொருளெனவே கைக்கொண்டவனது கேடானது சிறிதும் தப்பாது என்பது எங்ஙனமெனில்;
பரிமேலழகர்: சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள் எனப்பட்டது.
'சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் பொருள் என்பதற்கு ஆற்றல் எனப் பொருள் கொண்டு உரை செய்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சினத்தைப் போற்றிக்கொண்டவன் கெடுவான்', 'கோபத்தை ஒரு திறமையென்று பாராட்டுகிறவன் கெடுதி அடைவது', 'தன் திறமை காட்டுவதற்குக் கோபத்தைக் கருவியாகக் கொண்டவன் கெட்டுப்போதல் எவ்வாறு உறுதியெனின்', 'சினத்தை முதன்மையாகக் கருதியவன் அழிதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சினத்தை ஒரு பொருளாக கருதுபவன் துன்புறுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும்,
மணக்குடவர் குறிப்புரை: இது பொருட்கேடு வருமென்றது.
பரிப்பெருமாள்: நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருட்கேடு வருமென்றது.
பரிதி: அஃது எப்படி என்றால், நிலத்தில் அடித்த கை தப்பாதுபோல் என்றவாறு.
காலிங்கர்: ஒருவன் தனக்கு நிலத்தை இலக்காகக் குறிக்கொண்டு மற்று அந்நிலத்தின்கண் கண் புதைத்து எறியினும்! [உய்த்த] கை பிழையாது போலும் என்றவாறு.
பரிமேலழகர்: நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.
பரிமேலழகர் குறிப்புரை: 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
'நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தரையைக் குத்தியவனுக்குக் கைவலியாதா?', 'நிலத்தை ஓங்கி அறைந்தவனுடைய கை கெடுதி அடைவது எப்படித் தப்பாதோ அப்படித்தான்', 'நிலத்தின் கண் கையை மோதினவன் துன்புறுதல் தப்பாமை போலாம்!', 'நிலத்தை நோக்கி அடித்தவன் கை அந்நிலத்தைத் தவறாது அடைதல் போலத் தவறாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நிலத்தை அறைந்தவனுடைய கை துன்புறுதல் எப்படித் தப்பாதோ அவ்விதம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நிலத்தை அறைந்தவனுடைய கை துன்புறுதல் எப்படித் தப்பாதோ அவ்விதம் சினத்தை ஒரு பொருளாக கருதுபவன் துன்புறுதல் என்பது பாடலின் பொருள்.
இங்குள்ள 'பொருள்' என்ற சொல்லின் பொருள் என்ன?
|
வெகுளியே தனது வலிமை எனச் செயல்படுபவன் தோற்பான்.
தன் வலிமையைக் காட்டுவதற்குச் சினத்தைக் கருவியாகக் கொண்டவன் கெடுவது நிலத்தைத் தன் கையினால் ஓங்கி அறைந்தவனுடைய கை தவறாது துன்புறுவது போல் உறுதியாக கேடுறுவான்.
சினமே தனது வலிமை என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள்; அதில் பெருமைப்படக் கூடியவர்களும் உண்டு. ஆனால் நிலத்தைக் கையால் ஓங்கி அறைந்து காட்டிகொள்வது போன்றதுதான் அந்த வலிமை. தரையைக் குத்தியவன் கைதான் நோவுற்றுப் புண்ணாகும்; கையேகூட முறிந்து போகலாம். பின் என்ன வலிமை அது? இவ்வுவமை வெகுண்டவனின் அறியாமையையும் வெகுளியால் நன்மை ஒன்றும் அவனுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதையும் மாறாக கெடுதி உண்டாவது உறுதி என்பதையும் உணர்த்துகிறது.
‘கேடு’ என்பதற்குப் பொருட்கேடு என்றும் ஆற்றலிழத்தல் என்றும் உரை கண்டுள்ளனர். கேடு என்பதைப் பொதுநிலையில் கை புண்படுதல் போலத் துன்புறுவான் எனக் கொள்வது சிறக்கும்
பொருள் அல்லவற்றைப் பொருளென்று உணர்ந்ததால் வரும் கேடு பற்றிப் பேசுகிறது இப்பாடல். ஒருவன் தன் வலிமையால் பிறருக்கு விளைவிக்கும் தீங்குகளைவிட அவனுக்கு உண்டாகும் தீமையே மிகையாக இருக்கும் என்பதால் பொருளல்லாத சினத்தைப் பொருளென்று நினைக்கவேண்டாம் என அறுவுறுத்துகிறது இது.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று (தீவினையச்சம் 208 பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேடுறுவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போன்றது) என்று தீயவை செய்தவன் கெடுதல் தப்பாது திண்ணம் என்று முன்பும் சொல்லப்பட்டது.
|
இங்குள்ள 'பொருள்' என்ற சொல்லின் பொருள் என்ன?
'பொருள்' என்ற சொல்லுக்குப் பொருள், உறுதிப்பொருள், ஆற்றல் உணர்த்துவதோர் குணம், தன் ஆற்றலை மற்றவர்க்குக் காட்டக்கூடிய சிறந்ததொரு குணம், போற்றுதல், திறமை, வலிமையான பொருள், கருவி, முதன்மை, தனக்குரிய குணம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அறுவகைக் காட்சிகளில் கணாதரது நியாயமதத்தைப் பின்பற்றிய வைசேடிகமும் ஒன்று. வைசேடிக நெறியினர் உலகப் பொருள்களை எல்லாம் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு (திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேடம், சமவாயம்) என்னும் ஆறு உலகப்பொருட்களாகப் பாகுபாடு செய்து ஆரய்ந்தவர்கள். இக்குறளில் பொருள் என்ற சொல்லை வைசேடிகத்தில் சொல்லப்பட்டுள்ள குணம் அதாவது பண்பு என்ற பொருளில் வள்ளுவர் ஆண்டுள்ளதாகப் பரிமேலழகர் எண்ணுகிறார்.
பொருள் என்றதற்கு உரையாளர்கள் கூறிய பொருள்களுள் வலிமை, கருவி என்பன சிறந்து தோன்றுகின்றன.
|
நிலத்தை அறைந்தவனுடைய கை துன்புறுதல் எப்படித் தப்பாதோ அவ்விதம் சினத்தை ஒரு பொருளாக கருதுபவன் துன்புறுதல் என்பது இக்குறட்கருத்து.
வெகுளாமை அறம் மேற்கொள்ளாதவன் துன்புறுவான்.
தரையை ஓங்கி அடித்தவனது கைவலியாது போகாததுபோல, சினத்தை ஒரு பொருளாக மதித்துக் கொண்டவன் கேடுறுதல் தவறாது.
|