இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0305தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:305)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால் சினம் தன்னையே அழித்துவிடும்.

மணக்குடவர் உரை: ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும்,
இஃது உயிர்க்கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும்.
('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.)

இரா இளங்குமரனார் உரை: ஒருவன் தன்னைத் தானே அழிவில் இருந்து காக்க விரும்பினால் தன்னிடம் சினம் உண்டாகாமல் காப்பானாக. அவ்வாறு காக்கத் தவறினால், அச்சினமே அவனை அழித்து விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் சினம் தன்னையே கொல்லும்.

பதவுரை:
தன்னைத்தான்-தன்னைத்தான்; காக்கின்-காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்; சினம்-வெகுளி; காக்க-தடுக்க; காவாக்கால்-தடுக்காவிடில்; தன்னையே-தன்னையே; கொல்லும்-கெடுக்கும்; சினம்-சினம்.


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க;
பரிப்பெருமாள்: ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க;
பரிதி: தன் ஆத்மாவை இரட்சிக்க வேணுமாகில் சினங்காப்பான்;
பரிமேலழகர்: தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க;

'ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீ வாழவேண்டின் சினத்தை ஒழிக்க', 'ஒருவன் தன்னைத் தீமை வந்தெய்தாமல் காக்க வேண்டின் சினம் வாராமல் காத்துக் கொள்க', 'ஒருவன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் மனதில் கோபம் உதித்தால் உடனே அடக்கிவிட வேண்டும்', 'துன்பம் அடையாமல் தன்னைத்தான் காக்க நினைத்தானாயின் தன் உள்ளத்தில் சினம் வராமல் தடுக்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தீமை வந்து எய்தாமல் தன்னைக் காக்க வேண்டின் சினம் வாராமல் தடுக்க என்பது இப்பகுதியின் பொருள்.

காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காவானாயின் சினம் தன்னையே கொல்லும்,
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயிர்க்கேடு வருமென்றது.
பரிப்பெருமாள்: காவானாயின் அச்சினம் தன்னையே கொல்லும்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உயிர்க்கேடு வருமென்றது.
பரிதி: அல்லது தன்னைச் சினங் கொல்லும் என்றவாறு.
பரிமேலழகர்: காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.

'காவானாயின் சினம் தன்னையே கொல்லும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழிக்காவிடின் சினம் உன்னை ஒழிக்கும்', 'அங்ஙனம் காத்துக் கொள்ளாவிட்டால், அச்சினம் பல துன்பங்கள் தந்து அவனைக் கெடுக்கும்', 'அடக்காவிட்டால் அக்கோபம் தனக்கே அழிவு செய்யும்', 'சினத்தைக் காவானாயின் அச்சினம் தன்னையே கொன்றுவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காத்துக் கொள்ளாவிட்டால், அச்சினம் பல துன்பங்கள் தந்து தன்னையே கொல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தீமை வந்து எய்தாமல் தன்னைக் காக்க வேண்டின் சினம் வாராமல் தடுக்க; தடுக்காவிட்டால், அச்சினம் பல துன்பங்கள் தந்து தன்னையே கொல்லும் என்பது பாடலின் பொருள்.
சினம் எப்படி ஒருவனைக் கொல்லும்?

சினம் கொள்பவன் துன்பங்களைத் தனக்குத்தானே வரவழைத்துக் கொள்கிறான்.

ஒருவன் தனக்குத் துன்பம் நேராமல் தன்னைத்தான் காத்துக் கொள்ள விரும்பினால் அவன் சினத்தை அடக்கிக் கொள்ள வேண்டும்; சினத்தைத் தடுக்காவிட்டால் அது பேரழிவை உண்டாக்கும்.
சொற்காத்தல், நிறைகாத்தல், நாகாத்தல், அடக்கம் காத்தல் போன்ற காவல் வழிகளைக் காட்டியுள்ள வள்ளுவர் இங்கு சினம் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். வெகுண்டெழுந்து வன்சொற்கள் பேசி வன் கொடுமை புரிவதைத் தடுக்க வெகுளியை அடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சினம் வந்தபின் காப்பதினும் வருமுன் காப்பது நல்லது. நாம் நம்மிடம் சினம் நேராமல் காப்பற்றிக் கொண்டால், அச்சினம் இல்லாமை நம்மைக் காப்பாற்றும். சினம் கொள்ளுதல் பல துன்பங்களுக்கும் காரணமாக அமையும் என்பதால் வள்ளுவர் 'சினம் காக்க' என்று ஆணையிடுகின்றார். வள்ளுவர் சொல்லும் மிகச்சிறந்த தற்காப்பு முறை, சினம் வராமல் காப்பது.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்(தீவினையச்சம் 206 பொருள்: துன்பப் பகுதிகள் தன்னை நெருங்குதலை விரும்பாதவன் தீமையானவற்றைத் தான் பிறருக்குச் செய்யாது ஒழிக) என்றும் தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்(தீவினையச்சம் 209 பொருள்: தன் நலத்துக்காக என்றாலும் ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதே) என்றும் பிற இடங்களில் தற்காப்புக்கான ஒழுக்கம் பேணச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

சினம் எப்படித் தன்னையே கொல்லும்?

‘சினம்’ என்பது எல்லா உயிர்களிடமும் காணப்படும் பொதுவான குணம். அதைக் கட்டுப்படுத்தாதவிடில் உயிருக்கே தீங்கு விளையும், வலியவரிடம் சினம் கொண்டால் உடன் எதிர்விளைவுகள் ஏற்படும். வலிமை கொண்டவர் எல்லாவகையான ஊறுகளையும் விளைக்கத் தயங்கமாட்டார். மெலியாரும் சினத்தைப் பொறுத்துக்கொண்டு வஞ்சம் தீர்க்கக் காத்திருப்பார். இவ்வாறு சினம் செலுத்தப்பட்ட இடங்களிலிருந்து துன்பங்கள் உண்டாகும்.
சினம் கொண்டவனது இதயத் துடிப்பும் இரத்த ஓட்டமும் கூடுகின்றன; அவனுக்குக் குருதிக் கொதிப்பும் நரம்புத் தளர்ச்சியும் ஏற்படும்; அவன் சிந்திக்கும் திறனை இழப்பான். இவற்றால் நோய்பல தொற்றி உடல் நலம் கெடுகிறது. உடல்நலம் கெட்டால் அதைத் தொடர்ந்து மனநலமும் கெடுகிறது. காத்து அடக்காமல் சினத்தைச் செலுத்தினால் அது வெகுண்டவனது உயிர்ப்பாதுகாப்பு இல்லாத நிலைக்கும் இட்டுச் செல்லும். இதை மருத்துவ உலகமும் உறுதி செய்யும். சினத்தை மறந்துவிட்டால் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடக் கூடியது.
இங்கு கொல்லும் என்பதற்கு மிகுந்த துன்பங்களைச் செய்யும் என்பது பொருள் என்று சொல்லி பரிமேலழகர் கொல்லச் சுரப்பதாம் கீழ் (ஈயாமை 279) என்ற நாலடியாரை மேற்கோள் காட்டுகிறார். அப்பாடலின் பொருளாக இரா சாரங்கபாணி கூறுவது: 'மிகுந்த துன்பங்களைச் செய்யக் கீழ்மகன் பிறர்க்குப் பொருளைக் கொடுப்பான்' என்பது

வெகுள்வானையே ஒழித்துவிடுவது போன்ற கேடுகளைச் சினம் தரும் என்பது கருத்து.

தீமை வந்து எய்தாமல் தன்னைக் காக்க வேண்டின் சினம் வாராமல் தடுக்க; தடுக்காவிட்டால், அச்சினம் பல துன்பங்கள் தந்து தன்னையே கெடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வெகுளாமை ஒரு தற்காப்புக் கருவியுமாகும்.

பொழிப்பு

தீமைகளிலிருந்து தன்னைக் காக்க வேண்டின் சினத்தைத் தடுக்க; தடுக்காவிடின் சினம் தன்னையே ஒழிக்கும்