இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:304)

பொழிப்பு (மு வரதராசன்): முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?

மணக்குடவர் உரை: நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?
இஃது இன்பக்கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.
(துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: முகத்தின்கண் சிரிப்பையும் உள்ளத்தின்கண் மகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைவிட வேறு பகைகளும் உளவோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பிற பகையும் உளவோ?

பதவுரை:
நகையும்-சிரிப்பும்; உவகையும்-மகிழ்ச்சியும்; கொல்லும்-அழிக்கும்; சினத்தின்-வெகுளியைவிட; பகையும்-பகையும்; உளவோ-இருக்கின்றனவோ; பிற-பிறவாகிய.


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல;
பரிப்பெருமாள்: நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல;
பரிதி: முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும்;
காலிங்கர்: நகையாகிய முகமலர்ச்சியும் உவகையாகிய மனமகிழ்ச்சியும் இவை இரண்டினையும் கொன்று விடுவதாகிய சினத்தைப்போல;
பரிமேலழகர்: துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது,

'நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும்' என்றபடி பரிதி, காலிங்கர் பரிமேலழகர் ஆகியோர் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும் சினத்தினும்', 'முக மலர்ச்சியையும் உள்ளத்தின் மகிழ்ச்சியையும் அழித்தொழிக்கும் சினத்தைப் போல', '(முகம் மலர்ந்து) சிரிப்பதையும் (அகம் மகிழ்ந்து) சந்தோஷப்படுவதையும் அழித்துவிடுகிற கோபத்தைக் காட்டிலும்', 'முகத்தில் உளதாகிய புன்சிரிப்பையும் அகத்தில் உளதாகிய அன்பையும் அழிக்கும் சினத்தைப் பார்க்கிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

பகையும் உளவோ பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?
மணக்குடவர் குறிப்புரை: இஃது இன்பக்கேடு வருமென்றது.
பரிப்பெருமாள்: பகையா யிருப்பனவும் வேறும் சிலவுளவோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இன்பக்கேடு வருமென்றது. இவையைந்தும் வெகுட்சியால் வரும் குற்றம் கூறிற்றன.
பரிதி: தனக்கு வேறே பகைவேணுமோ; சினமே அமையும் என்றவாறு.
காலிங்கர்: வேறு சில (பகையும் உள்)வோ? காலிங்கர் குறிப்புரை: எனவே இதனைப் போல இவ்வுலகத்தைப் பெருங்கேடு செய்யவல்லனவாய் இருப்பன சில பகையாகவும் இல என்று பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.

'பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறபகை உண்டோ?', 'வேறு பகைகளும் இருக்கின்றனவா? (இல்லை)', 'பகைவனும் வேறு உண்டோ?', 'கொடிய பகைப் பொருள்கள் வேறும் உண்டோ? இல்லையென்றவாறு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வேறு பகைகளும் உளவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைவிட வேறு பகைகளும் உளவோ? என்பது பாடலின் பொருள்.
'நகையும் உவகையும்' குறிப்பன எவை?

சினம் மிகுந்தவன் இன்பவாழ்வை இழக்கிறான்.

முகத்தில் தோன்றும் மலர்ச்சியையும் உள்ளத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அழிக்கின்ற சினத்தைக் காட்டிலும் வேறு பகை ஒருவனுக்கு உண்டோ?
சினம் தீமைதருவதாக இருக்கின்றது என்பதற்கு இன்னொரு சான்று அது முகம் மலர்ந்த சிரிப்பையும் அகம் உவந்த மகிழ்ச்சியையும் அழித்து மனித உறவுகளைக் கெடுக்கும் தன்மை பெற்றிருப்பது. அது வெகுள்வான் முகத்தில் தவழ வேண்டிய நகையைக் கெடுக்கும்; அவனது மனக் களிப்பை அழிக்கும். ஒருவர் சீற்றம் கொள்ளும்போது முகத்தைச் சுருக்கிக் கோணலாக்கித் தீய சொற்களை அள்ளி வீசுவர். அவரைப் பார்க்க எவருக்குமே பிடிக்காது. எப்பொழுதுமே முகத்தைச் சிடுசிடுவென்று வைத்துக் கொள்பவர் நகையையும் நல்ல மகிழ்ச்சியையும் சிதைத்து விட்டவராகக் காணப்படுவர், மகிழ்ச்சியை இழந்துவிட்டால் ஒருவரது வாழ்வே தொலைந்துபோனது போன்றதுதான். புன்னகையையும், மகிழ்ச்சியையும் கொல்லவல்ல சினத்தைவிட கொடிய பகை வேறு ஏதேனும் இருக்கமுடியாது என்கிறது இப்பாடல்.
சினம் நீங்கி இன்பக்கேட்டினைத் தவிர்க்க என அறிவுறுத்துகிறது இப்பாடல்.

'நகையும் உவகையும்' குறிப்பன எவை?

மாந்தர் அனைவரும் இன்பவாழ்வையே விரும்புவர். ஒருவன் மலர்ந்த முகத்துடனும் மகிழ்ச்சியான உள்ளுணர்வுகளுடன் இருந்தால் அவன் இன்பமாய் இருக்கிறான் என்பதை அறியலாம். நகையும் உவகையும் வாழும் அனைவர்க்கும் வேண்டப்படுவது. இக்குறளில் கூறப்படும் நகை என்பது முகத்தில் காணப்படும் சிரிப்பையும் உவகை என்பது உள்ளத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் குறிக்கும். சிரித்தபடி வாழ்வதே சிறந்த வாழ்வு.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப
(தொல்காப்பியம், பொருள். மெய்ப்பாட்டியல் 252 ) என்று எட்டு மெய்ப்பாடுகளைக் கூறுகிறது தொல்காப்பிய நூற்பா. அவற்றுள் நகையும் உவகையும் அடக்கம். நகையாவது முறுவலித்தல். நகை மூரல் என்றும் அறியப்படும். உவகையாவது உவத்தல் அதாவது இனிமையொடு திளைக்கும் உள்ளக்களிப்பு. அதை மகிழ்வென்றும் கூறுவர்.

நகை என்பது முகமலர்ச்சியையும் உவகை என்பது உள்ள மகிழ்ச்சியையும் குறிக்கும்,

முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைவிட வேறு பகைகளும் உளவோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் வெகுளாமை விரும்பி வரும்.

பொழிப்பு

முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் அழித்தொழிக்கும் சினத்தைவிட வேறுபகையும் உண்டோ?