மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்
(அதிகாரம்:வெகுளாமை
குறள் எண்:303)
பொழிப்பு (மு வரதராசன்): யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும்.
|
மணக்குடவர் உரை:
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான்.
இது வெகுளாமை வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.
(வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.)
வ சுப மாணிக்கம் உரை:
யார்மேலும் சினத்தை மறந்து விடுக; மறவாவிடின் தீமைகள் பிறந்துவிடும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
யார்மாட்டும் வெகுளியை மறத்தல் தீய பிறத்தல் அதனான் வரும்.
பதவுரை:
மறத்தல்-மறந்து விடுக; வெகுளியை-சினத்தை; யார்மாட்டும்-எல்லாரிடத்தும்; தீய-கொடியவை; பிறத்தல்-தோன்றுதல்; அதனான்-அதனால்; வரும்-வந்தடையும்.
|
மறத்தல் வெகுளியை யார்மாட்டும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க;
பரிப்பெருமாள்: வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க;
பரிதி: யாரிடத்திலும் கோபத்தை விடுக;
காலிங்கர்: யாவர் மாட்டும் ஒருவன் வெகுளியை மறத்தலே காரியமாவது;
பரிமேலழகர்: யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக';
'வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாரிடத்தும் சினத்தைக் காட்டாதே', 'யாரிடத்திலும் கோபம் செலுத்துவதை விட்டுவிட வேண்டும்;', 'யாரிடத்துஞ் சினங் கொள்வதை மறத்தல் வேண்டும்', 'எவரிடத்திலும் சினம் கொள்ளுதலை ஒழிக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
யாரிடத்தில் வெகுளி கொண்டாலும் மறந்துவிடுக என்பது இப்பகுதியின் பொருள்.
தீய பிறத்தல் அதனான் வரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இது வெகுளாமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வெகுளாமை வேண்டுமென்றது.
பரிதி: விடாது ஒழியில், பொல்லாங்கு கோபம் முன்னிலையாக வரும் என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின் தனக்கு எல்லாத் தீயனவும் தோன்றுதல் மற்று அவ் வெகுளியானே வரும் ஆதலால் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.
'தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவர்க்குச் சினத்தால்தான் தீமையெல்லாம் வரும்', 'ஏனெனில் தீமைகள் உண்டாகக்கூடிய காரணங்கள் கோபிப்பதால் உண்டாகும்', 'ஒருவனுக்கு தீயனவெல்லாம் சினத்தால் உண்டாவன ஆதலால்', 'ஒருவர்க்குத் தீயன எல்லாம் உண்டாதல் சினத்தால் வரும். ஆதலின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஒருவர்க்குச் சினத்தால் தீமையெல்லாம் தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
யாரிடத்தில் வெகுளி கொண்டாலும் மறந்துவிடுக; ஒருவர்க்குச் சினத்தால் தீமையெல்லாம் தோன்றும் என்பது பாடலின் பொருள்.
வெகுளியை மறத்தல் என்றால் என்ன?
|
வெகுளியையே மறந்துவிடுதல் தீமை வராமல் தடுக்கும்.
சினம்கொள்வதில் தீமைகள் தொடங்குகின்றன; ஆதலால் யாரிடத்திலும் சினம் கொள்வதை ஒருவர் மறந்து விடுதல் வேண்டும்.
ஒருவரது உள்ளத்தில் உள்ள வெறுப்பும் பகையுமே சினமாய் வெளிப்படும். நெஞ்சிலே வெகுளியான நினைவு இல்லாமல் மறந்தால்தான், அதில் சினம் பிறக்காமல் காத்துக்கொள்ள முடியும். தீவினைகளுக்கு வெகுளி வித்தாகும் என்பதாலும் அவ்வெகுளி மனித உறவைச் சீர்குலைப்பதாலும், யார் மாட்டும் சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் எனச்சொல்லப்படுகிறது.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனின்று நன்று (பொறையுடைமை 152 பொருள்: பிறர் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக; அக்குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவும் நல்லது) என்ற பாடலில் மிகை செய்யப்பட்டதை மறந்து விடுக எனக் கூறப்பட்டது.
.......நன்றல்லது அன்றே மறப்பது நன்று (செய்ந்நன்றியறிதல் 108 பொருள்: ............நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது) என்ற குறள் போன்ற நடையில் அமைந்தது இப்பாடலும்.
|
வெகுளியை மறத்தல் என்றால் என்ன?
வலியவர், ஒப்பர், மெலியார் என யாராயிருந்தாலும் அவர்மேல் சினம் கொள்வதற்கு எது காரணமாக இருந்தாலும் அது அவரது மனதுள் கனன்று கொண்டே இருந்து முன்னிலையாய் சீறி வெடிக்கும். சில சமயங்களில் வெகுளி உடனே தோன்றி மற்றவரை நெருப்பாய்ச் சுட்டுவிடுவதும் உண்டு. சினம் மனதில் தோன்றி வெளிப்படும் தன்மையது ஆதலால், தோன்றியவுடனேயே அதை மறந்துவிடல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். அது தொடர்ந்த பயிற்சியினாலேயே முடியும். மறக்காவிட்டால் சினம் மேன்மேலும் சினத்தையே தூண்டி, உள்ளத்தில் வளர்ந்து பெரிதாகிக் கொண்டேதான் போகும். எந்தச் சூழலிலும் யார்மாட்டும் சினம் தோன்றாதவாறு மனத்தைப் பக்குவடுத்தப்படுத்தும் முகத்தான் அதை நினைவிலிருந்து அழித்துவிடச் சொல்கிறார் வள்ளுவர்.
இங்கு மறத்தல் வெகுளியை என்பதற்கு வெகுளியைக் கைவிடுக எனவும் பொருள் கொள்ளலாம்.
|
யாரிடத்தில் சினம் கொண்டாலும் மறந்துவிடுக; ஒருவர்க்குச் சினத்தால் தீமையெல்லாம் தோன்றும் என்பது இக்குறட்கருத்து.
வெகுளாமை தீயன உண்டாவதைத் தடுக்கும்.
யார்மேல் சினம் கொண்டாலும் மறந்துவிடுக; மறவாவிடின் தீமைகள் யெல்லாம் தோன்றும்.
|