இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0302



செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்
இல்லதனின் தீய பிற.

(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:302

பொழிப்பு (மு வரதராசன்): பலிக்காத இடத்தில் (தன்னைவிட வறியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறில்லை



மணக்குடவர் உரை: இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.

பரிமேலழகர் உரை: சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை.
(செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: பலிக்காத இடத்தில் சினம் தனக்கே தீமையைத் தரும்; பலிக்கும் இடத்திலும் அதனைவிடத் தீமை பயப்பன வேறொன்றும் இல்லை. (சினம் பலிக்குமிடம்-தம்மைவிட எளிவர். சினம் பலியாதவிடம் - தம்மைவிட வலியவர்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
சினம் செல்லா இடத்துத் தீது; செல் இடத்தும் அதனின் தீய பிற இல்.

பதவுரை:
செல்லா இடத்து--பலிக்காத இடத்தில்; சினம்-வெகுளி; தீது-தீமை; செல்இடத்தும்--செல்லும் இடத்திலும்; இல் -இல்லை; அதனின்-அதனைக் காட்டிலும்; தீய-கொடியவை; பிற-மற்றவை.


செல்லா இடத்துச் சினம்தீது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இயலாவிடத்துச் சினந்தீது; .<
பரிப்பெருமாள்: இயலாவிடத்துச் சினத்தல் தீது;
பரிதி: தனக்குச் செல்லா இடத்தும் சினம் பொல்லாது;
பரிமேலழகர்: ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்';

'இயலாவிடத்துச் சினந்தீது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலிக்காத இடத்துக் கோபிப்பது தீது', 'தன் சினம் காட்டமுடியாத வலியார்மேல் செல்லின் தீமை தரும்', 'ஒருவனுக்குச் சினமானது தன்னினும் வல்லவர்களிடத்து உண்டானால், அஃது அவனுக்கே கெடுதியை விளைக்கும்', 'பலிக்காத இடத்தில் சினம் தனக்கே தீமையைத் தரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சினம் காட்ட முடியாதவர் மேல் எழுமாயின் தனக்குத் தீங்காகும் என்பது இப்பகுதியின் பொருள்.

செல்இடத்தும் இல் அதனின் தீய பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.<
பரிப்பெருமாள்: இயலுமிடத்தும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது இயலாதவிடத்து இம்மையிலே தீதாயினும், இயலுமிடத்து மறுமையிலே தீதாமாதலான் எவ்விடத்தினும் தவிர வேண்டுமென்றது.
பரிதி: தனக்குச் செல்கிற இடத்தும் சினம் பொல்லாது என்றவாறு.
பரிமேலழகர்: மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.

'எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலிக்கும் இடத்தும் அதுபோல் தீயது இல்லை', 'காட்டக்கூடிய எளியவர் மேல் செல்லினும் அச்சினத்தைப் போலத் தீமை தருவன வேறில்லை', 'செல்லுமிடத்தில் உண்டானாலும், அது பாவமும் பழியும் விளைத்தலால், அதனைப் பார்க்கினுங் கெடுதியானவை வேறில்லை', 'பலிக்கும் இடத்திலும் அதனைவிடத் தீமை பயப்பன வேறொன்றும் இல்லை. (சினம் பலிக்குமிடம்-தம்மைவிட எளிவர். சினம் பலியாதவிடம் - தம்மைவிட வலியவர்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செல்லும் இடத்தில் சினம் எழுமாயினும் அதைவிடத் தீமை வேறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.


நிறையுரை:
சினம் காட்ட முடியாதவர் மேல் எழுமாயின் தனக்குத் தீங்காகும்; செல்இடத்து சினம் எழுமாயினும் அதைவிடத் தீமை வேறு இல்லை என்பது பாடலின் பொருள்.
'செல்இடத்து' என்ன தீய பயக்கமுடியும்?

யாரிடம் காட்டப்பட்டாலும் சினம் தீங்கு தருவதே.

சினத்தைக் காட்ட இயலாத இடத்தில் சீற்றம் கொள்வது தனக்குத்தான் தீங்கினை விளைவிக்கும். தன் சினம் தாக்கக்கூடிய இடத்திலும் அதைக் காட்டிலும் பெரிய தீமை வேறொன்றுமில்லை.
செல்லா இடம் என்பது சினம் தாக்க முடியாத இடம் அதாவது தம்மைவிட வலியவர் இடம் குறித்தது; பொருள்வலி, செல்வாக்கு, உடல்வலி, இவற்றில் தம்மினும் மிக்கவர்களைச் 'செல்லா இடம்' என்று சொல்கிறது இக்குறள். சினம் பலிக்காத ஒப்பார்/மிக்கார் மேல் வெகுளியை அடக்காவிட்டால் அவர்கள் உடனே தீமை செய்து சினம் கொண்டவரை அடக்குவர். வலிமை மிக்கவர்கள் ஆதலால், தீயதான எதிர்விளைவுகள் உடன் நிகழும்.
சினம் செல்லும் இடம் என்று சொல்லப்படுவது தம்மைவிட எளியவரைக் குறிக்கும். அத்தகையோரிடமும் சினப்படாமல் இருப்பதுதான் உண்மையிலேயே வெகுளாமை; அவர்களிடம் சினம் கொண்டால் அது பெரிய தீமையாய் ஆகிவிடும்.
எவ்வாறேனும் சினத்தால் தீமை பிறப்பதால், அதை பலிக்கும் இடம் பலிக்காத இடம் எங்கேயும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுருக்குக செல்லா இடத்துச் சினம் (நான்மணிக் கடிகை 89 பொருள்: செல்லத்தகாத இடத்திற் சினத்தைத் தணித்துக்கொள்க) என்னும் பழம்பாடலிலும் இப்பாடலில் காணப்படும் 'செல்லாஇடத்துச் சினம்' என்னும் தொடர் ஆளப்பட்டுள்ளது,
இக்குறள் அடிகளையே இராமலிங்க அடிகளார் தம்முடைய திருவருட்பாவில்.
செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்
இல் அதனின் தீய தென்றது எண்ணிலையே-மல்லல் பெறத்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப் போல் போற்றிப் புகழ்ந் திலையே!
(நெஞ்சறிவுறுத்தல் கண்ணிகள் 433, 434) என ஆண்டுள்ளார். .

'செல்இடத்து' என்ன தீய பயக்கமுடியும்?

செல்இடத்தும், செல்லா இடத்தும், சினத்தலைவிடத், தீயது வே[று இல்லை என்கிறது இப்பாடல். செல்லா இடம் அதாவது வலியவரிடத்து சீற்றம் கொண்டால் தீமையில் முடியும் என்பது சரி. ஆனால் செல்லும் இடத்தும் தீய உண்டாகும் என ஏன் சொல்லப்படுகிறது?.
இதற்கு உரையாளர்கள் தரும் விளக்கங்கள்:

  • மெலியவரிடத்தில் சினம் கொள்வது இயலுமிடத்து மறுமையிலே தீதாம் ஆதலான்,
  • இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் பயக்கும் என்பதால்,
  • இம்மையும் மறுமையும் துன்பம் விளையும். பெருமையும் குன்றும்,
  • மெலியார்மேல் சினம் கொண்டாலும் நாளடைவில் அவனைப் பலரும் பகைத்துத் தீமை செய்வார்கள்,
  • அது அருளுடைமைக்கு மாறானது,
  • எளிதாகப் பலிக்கக்கூடிய மெலியார் மேல் காட்டினால் அத்தாக்கத்தால் எளியவர்க்குத் துன்பம் விளைவதோடு சினம் கொண்டவரது பெருமையும் குன்றுவதால் செல்லிடத்துச் சினம் மிக்க தீமை தருவதாகும்,
  • செத்த பாம்பை அடிப்பது போல் மெலியார் மீது சினப்பது உலகப் பழிப்புக்கு ஆளாக்கும்,
  • அதனால் மறுமையில் தனக்குத் தெய்வ தண்டனை கிடைக்கும் என்பதால்.

இவற்றுள் மெலியாரிடம் சினம் காட்டுபவரது பெருமை குன்றும்; பழிப்புக்கு ஆளாவர் என்பது பொருத்தம்.

சினம் காட்ட முடியாதவர் மேல் எழுமாயின் தனக்குத் தீங்காகும்; செல்லும் இடத்தில் சினம் எழுமாயினும் அதைவிடத் தீமை வேறு இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

யாரிடத்தும் வெகுளாமை நன்று.

பொழிப்பு

சினம் காட்டமுடியாத வலியாரிடம் வெகுண்டால் தீமை தரும்; காட்டக்கூடிய எளியவர் மேல் சினம் கொண்டாலும் அச்சினத்தைப் போலத் தீமை தருவன வேறில்லை.