செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
(அதிகாரம்:வெகுளாமை
குறள் எண்:301)
பொழிப்பு (மு வரதராசன்): பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
|
மணக்குடவர் உரை:
தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை.
இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.
பரிமேலழகர் உரை:
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்?
('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை அடக்குபவனே சினம் காப்பவன் ஆவான். பலிக்காதவனிடத்து அச்சினத்தை ஒருவன் அடக்கினால்தான் என்ன? அடக்காவிட்டால்தான் என்ன?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்.
பதவுரை:
செல்-செல்கின்ற; இடத்து-இடத்தில்; காப்பான்-தடுப்பவன்; சினம்காப்பான்-வெகுளான்; அல்இடத்து-அல்லாத இடத்தில் (தன்னிலும் பலமுடையவரிடம்இடத்தில்); காக்கின்-தடுத்தால்; என்-என்ன? காவாக்கால்-தடுக்காவிடில்; என்-என்ன?
|
செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்;
பரிப்பெருமாள்: தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளானாவான்;
பரிதி: தனக்குக் கை செல்லுமிடத்தில் சினங்காட்டாது ஒழிக;
பரிமேலழகர்: தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான்;
'தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பலிக்குமிடத்துச் சினவாதவனே காப்பவன்', 'செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் கோபத்தை அடக்குகிறவன்தான் அதை அடக்கினவனாவான்', 'சினம் வராமல் தடுத்துக்கொள்பவன் யாரென்றால், தன் கோபம் செல்லுமிடத்தும் அது வராமல் தடுப்பவனே', 'சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பவனே, அருளால் சினத்தைத் தடுப்பவன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சினம் செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் அடக்குகிறவன்தான் வெகுளானாவான் என்பது இப்பகுதியின் பொருள்.
அல்இடத்து காக்கின்என் காவாக்கால் என்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.
பரிப்பெருமாள்: இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் (பயனில்லை) தவிராததனாலும் பயனில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.
பரிதி: தனக்குக் கை செல்லா இடத்திலே சினம் காட்டினாலும் காட்டா விடினும் பிரயோசனம் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்?
பரிமேலழகர் குறிப்புரை: 'செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.
'ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பலியா இடத்து எப்படி நடந்தால் என்ன?', 'மற்ற இடத்தில் அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன?', 'அது செல்லாத விடத்து அதனைத் தடுத்தாலென்ன? தடுக்காது விட்டா லென்ன?', 'பலியாத இடத்தில் அதனைத் தடுத்தால் என்ன? தடுக்காது ஒழிந்தால் என்ன?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அது செல்லாத விடத்து அதனை அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சினம் செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் அடக்குகிறவன்தான் வெகுளானாவான்; அது செல்லாத விடத்து அதனை அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன? என்பது பாடலின் பொருள்.
செல்லிடம், அல்லிடம் என்பன யாவை?
|
தன் சீற்றத்தைக் காண்பிக்க இயலும் இடத்தும் அது வராமல் தடுப்பவனே சினம்காப்பான் ஆவான்.
தன் சினம் தாக்கும் இடத்து அச்சினத்தை எழவொட்டாமல் அடக்குபவனே வெகுளானாவான். அது எந்த விளைவும் உண்டாக்காத இடத்தில் அவன் சினம் வராமல் தடுத்தால் என்ன? தடுக்காவிட்டால் என்ன?
இக்குறள் சினத்தை யாரிடம் காட்டக்கூடாது என்பதைச் சொல்கிறது. 'நீ சீற்றம் கொண்டால் யார் தாங்கிக் கொள்ளமாட்டார்களோ அவர்களிடம் சினம் கொள்ளாமல் இருப்பதற்கு நீ பழகிக்கொள்ள வேண்டும். உனது சினம் செல்லுபடியாகாத இடத்தில் நீ சினந்தால் என்ன? சினக்காமல் இருந்தால் என்ன?' என்று சினம் கொள்வானை நோக்கிக் கூறுகிறார் வள்ளுவர்.
வெகுளாமை என்பது வலியவன் சினம் கொள்ளாமையைக் குறித்தது எனச் சொல்லப்படுகிறது.
முன்பு வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (அருளுடைமை 250 பொருள்: தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும்) என்ற குறளில்
தம்மின் வலியார்க்கு ஒருவர் அஞ்சுதல் இயல்பு என்று சொல்லப்பட்டது. இங்கு எளியார்மேல் சினம் தோன்றுவதைத் தவிர்க்க; அது அருளுடைமைக்கு மாறானது எனக் கூறப்படுகிறது.
எவரிடத்து ஒருவன் தன் சினத்தைக் காண்பிக்க முடியுமோ அவரிடத்துச் சினத்தை அடக்கிக் காத்தடக்குவதே சிறப்பாம். சினம் காட்ட இயலாத இடத்தில் சினத்தை அடக்குதல் அடக்காமல் விடுதல் இவற்றுள் ஒன்றும் வேற்றுமை இல்லை. இரண்டும் ஒன்றுதான் எனவும் சொல்லப்பட்டது.
|
செல்லிடம், அல்லிடம் என்பன யாவை?
'செல்லிடம்' என்பதற்கு இயலுமிடத்தே, கை செல்லுமிடத்தில், பலிக்குமிடத்து, பலிக்கும் இடத்தில், எங்கு செல்லுமோ, பலிக்குமிடத்து, பலிக்குமிடத்தில், செல்லக்கூடிய இடத்தில், (சினம்) வெற்றி கொள்ளும் இடத்தில், செல்லுமிடத்தும், தாக்கக் கூடிய எளிய இடத்தில் என்றும்
'அல்லிடம்' என்பதற்கு இயலாவிடத்தில், கை செல்லா இடத்திலே, பலியாத இடத்து, பலிக்காத இடத்தில், முடியாத இடத்தில், பலியா இடத்து, பலிக்காதவனிடத்து, மற்ற இடத்தில், மற்றை இடத்தில், செல்லாத விடத்து, அல்லாத வலிய இடத்தில் என்றும் உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பரிமேலழகர் 'செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும் அதாவது (தவத்தின்) ஆற்றலால் தன்னைவிட மெலியாரையும், (தவத்தின்) ஆற்றலால் தன்னைவிட வலியாரையும் என விரிவுரையில் கூறினார்.
செல்லிடம் என்பது செல்வம், செல்வாக்கு, வலிவு, முதலியவைகளால் தன்னினும் தாழ்ந்தோரிடம் எனவும் அல்லிடம் என்பது அல்லாத இடம் அதாவது தன்னிலும் பலமுடையவரிடம் எனவும் பொருள்படும்.
|
சினம் செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் அடக்குகிறவன்தான் வெகுளானாவான்; அது செல்லாத விடத்து அதனை அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன? என்பது இக்குறட்கருத்து.
யார் மாட்டு வெகுளாமை வேண்டும்?
சினம் செல்லுமிடத்தில் அதனை அடக்குபவனே சினம் காப்பவன் ஆவான். அது செல்லாத விடத்து அதனை அடக்கினால்தான் என்ன? அடக்காவிட்டால்தான் என்ன?
|