யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
(அதிகாரம்:வாய்மை
குறள் எண்:300)
பொழிப்பு (மு வரதராசன்): யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை.
|
மணக்குடவர் உரை:
யாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை.
இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
பரிமேலழகர் உரை:
யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள், எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.
(மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
யாம் மெய்ம்மையுடையனவாக உலகில் அறிந்தனவற்றுள், வாய்மையை விட நல்லன என்று கூறக்கூடிய பிறிதொன்று எதுவும் இல்லை.
திருவள்ளுவர் 'யாம்' என்று தன்மைப் பன்மையில் அழுத்திக் கூறுமிடங்களில் இது ஒன்று. (ஏனைய இடங்கள்: 61, 1071)
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
யாம்மெய்யாக் கண்டவற்றுள் எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை.
பதவுரை:
யாம்-நான்; மெய்யா-மெய்யாக; கண்டவற்றுள்-அறிந்தவரையில்; இல்லை-இல்லை; எனைத்துஒன்றும்-வேறு ஏதேனும்; வாய்மையின்-மெய்ம்மையினும்; நல்ல-நல்லன; பிற-மற்றவை.
|
யாம்மெய்யாக் கண்டவற்றுள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் மெய்யாக் கண்டவற்றுள்;
பரிப்பெருமாள்: யாம் மெய்யாக் கண்டவற்றுள்;
பரிதி: ஆத்மாவைச் செனனத்திலே தள்ளாமல் திருவடியிலே சேர்ப்பது சத்திய வாக்கியம் அன்றி, வேறொன்றும் கண்டிலோம்;
பரிமேலழகர்: யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்;
பரிமேலழகர் குறிப்புரை: மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம்.
'யாம் மெய்யாக் கண்டவற்றுள்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்குப் பொருள் கூற பரிமேலழகர் 'யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்' என உரை நல்கினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாம் உண்மையாகக் கண்ட உண்மைகளுள்', 'யாம் உண்மையாகக் கண்ட அறங்களுள்', 'நாம் அறிந்த உண்மைகளுக்குள்', 'நிலைபெற்ற பொருளாக ஆய்ந்து அறிந்தவற்றுள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நான் மெய்யாக அறிந்தவரையில் என்பது இப்பகுதியின் பொருள்.
இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
பரிப்பெருமாள்: மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
பரிதி: அசத்தியம் சொன்ன தருமபுத்திரன் நரகங் கண்டான். சத்தியம் சொன்ன அரிச்சந்திரன் ஸ்ரீ பரமேசுவரன் பாதம் கண்டு சிவலோகம் சேர்ந்தான் என்றவாறு.
பரிமேலழகர்: யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.
'மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் பொருள் கூற 'யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை' என்றார் பரிமேலழகர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வாய்மையினும் நல்லறம் வேறில்லை', 'வாய்மை கூறுவது போல நல்ல அறம் வேறு யாதொன்றும் இல்லை', 'பொய் சொல்லாமை என்பதைக் காட்டிலும் நல்ல துணை வேறொன்றும் இல்லை', 'யாதொரு வகையிலும், மெய்ம்மையைப் பார்க்கினுஞ் சிறந்த பொருள் வேறில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நான் மெய்யாக அறிந்தவரையில் வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'யாம்மெய்யாக் கண்டவற்றுள்' என்பது குறிப்பது என்ன?
|
வாய்மையே எல்லாவற்றுள்ளும் நல்லது.
யாம் உண்மையாகக் கண்டவற்றுள் வாய்மையைக் காட்டிலும் நல்லதாகக் கூறக் கூடிய பொருள் வேறு ஒன்றும் இல்லையாம்.
யாம் ஆய்ந்து தெளிந்து கண்ட அறங்கள் எல்லாவற்றினும் வாய்மையைவிட சிறந்த அறம் எதுவும் இல்லை என்பது இதன் பொருள். யாம் மெய்யாகக் கண்டவற்றுள் தலையாய அறம் வாய்மை யொழுக்கமே என்று வள்ளுவர் தம்மையே ஆணைப்படுத்தி ஐயத்திற்கிடமின்றியும், உறுதியாகவும், தெளிவாகவும் அறிவிக்கிறார்.
நம் உள்ளத்துச் சட்டெனப் பதியுமாறு தம்மையே சான்று வைத்து வாய்மையின் உயர்வை மொழிகிறார்.
ஒருவன் தன் எண்ணத்தைப் புறத்தோர்க்குப் புலனாக்கும் கருவி மொழியாகும். வஞ்சக மனமில்லாத வாய்மையாளன் புறங்கூறமாட்டான் வசைமொழி சொல்லமாட்டான்; திருடமாட்டான்; சினம் கொள்ளமாட்டான்; குற்றங்கள் செய்ய அஞ்சி தன்னைக் காத்துக் கொள்பவனாயிருப்பான். பிறர்சொல்லுக்கு அஞ்சுபவனாதலால் துணிந்து ஒப்புக் கொள்ளுமாறான செயல்களையே ஆற்றுவான்; மெய்யாகப் பொய்யாதான் எல்லா அறமும் செய்வான். ஆகவே நெஞ்சத்தைத் தூய்மை செய்யும் வாய்மை யொழுக்கத்துக்கு முன் மற்றவை நில்லா என்ற தெளிவுகொண்டு, வாய்மையே எல்லாவற்றுள்ளும் நல்லது என மெய்யுரையாக விளம்பினார். வாய்மை என்பது பொய்யின்மை பூண்டு கொண்டு ஒழுகும் குணத்தைக் குறிப்பது.
தம்மையுடம்படுத்து உறுதிப்பாடுடன் எல்லாவற்றுள்ளும் வாய்மையே நல்லது என்று கூறியிருப்பதால், வள்ளுவர், முடிந்த முடிபாக, அதைப் பேரறமாகக் கருதினார் என அறிகிறோம்.
இக்குறள் ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று (கொல்லாமை 323 பொருள்: இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது) என்னும் குறட்கருத்துக்கு மாறுபடுவதாகத் தோன்றுகிறதே என்ற கேள்வி எழலாம். அது முரணாகாது எனச்சொல்லி 'இக்குறள் கொள்ள வேண்டிய அறங்களில் தலையாயதைக் கூறுகின்றது. அப்பாடல் தள்ள வேண்டிய மறங்களில் தலையாயதைக் கூறுகின்றது' என வ உ சிதம்பரம் விளக்கம் தந்துள்ளார்.
|
'யாம்மெய்யாக் கண்டவற்றுள்' என்பது குறிப்பது என்ன?
'யாம்மெய்யாக் கண்டவற்றுள்' என்பதற்கு நான் உண்மையாக அறிந்தவரையில் என்பது நேர்பொருள். இதை 'நான் கற்றும், கண்டும், கேட்டும், பட்டறிந்தும் உணர்ந்தவற்றுள்' எனக் கொள்ளலாம். இது 'பலஅறங்களைப் பலவாறாக ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கி வாய்மையே நல்லது என முடிவுக்கு வந்தேன்' என்று வள்ளுவர் சொல்வதுபோல் உள்ளது.
உரையின்றி எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதே இத்தொடர். மணக்குடவர்/பரிப்பெருமாள் கிடந்தாங்கே 'யாம் மெய்யாக் கண்டவற்றுள்' என்றே பொருள் கூறுவர். பரிமேலழகர் யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள் என ஆகுபெயராகக் கொண்டு உரை செய்தார். பின்னதைவிட முந்தையது இயல்பானது.
இவ்வதிகாரம் தவிர்த்து புதல்வரைப்பெறுதல், கயமை என்ற அதிகாரங்களையும் சேர்த்து மூன்று இடங்களில் மட்டும், தான் அறிந்த உண்மையை நேரடியாகவே
'யாம் கண்டதில்லை' 'யாம் அறிவதில்லை' என்ற முறையில் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னை முன்னிலைப்படுத்தித் தன்மைப்பன்மையில் (யாம்) சொல்லும் மற்ற இரண்டு குறள்கள்:
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற(புதல்வரைப் பெறுதல் 61 பொருள்: பெறுவதற்குரிய பேறுகளுள் அறிவினால் அறிதற்குரிய மக்கட்பேறு அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை).
மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல் (கயமை 1071 பொருள்: மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை).
மூன்று இடங்களிலும் வள்ளுவரே நம்முன் வந்து நேராகப் பேசுவது போல ஓர் உணர்வு ஏற்படுகிறது. இங்கே அவர் யாம் என்ற ஆசிரிய நானால் தம்மையே குறிக்கிறார்.
ஓர் ஆசிரியர் என்ற நிலையிலே பெருமிதத்துடன் 'யாம்' என்று தம்மை முன் இருத்தி ஆராய்ந்து தெளிந்த முடிவுகளை இவ்விடங்களில் பதிவு செய்கிறார்.
இவை பொதுப்படையாகக் கூறும் அவரது உள்ளம் வீறுபெற்றபோது கூறியவையாகும். இவற்றைத் தம் பரந்த அறிவாராய்ச்சி மூலம் முயன்று அவர் கண்டு பிடித்த முடிவுகள் எனக் கொள்ளவேண்டும்.
|
நான் மெய்யாக அறிந்தவரையில் வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை என்பது இக்குறட்கருத்து.
எப்படிப் பார்த்தாலும் வாய்மை கூறுதலைப் போன்ற நல்லது இல்லை.
யாம் மெய்ம்மையாகக் கண்டவற்றுள் வாய்மையினும் நல்லது வேறில்லை.
|