இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0299



எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:299)

பொழிப்பு (மு வரதராசன்): (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

மணக்குடவர் உரை: சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்.
இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.
(உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: எல்லா ஒளியும் ஒளியல்ல; சான்றோர்க்கு உண்மை ஒளியே ஒளி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே.

பதவுரை:
எல்லா-அனைத்து; விளக்கும்-விளக்கும்; விளக்கு-ஒளி; அல்ல-ஆகமாட்டா; சான்றோர்க்கு-நீதியரசர்க்கு, நற்குணம் நிரம்பியவர்க்கு; பொய்யா-பொய்யாமையாகிய; விளக்கே-விளக்குதான்; விளக்கு-ஒளி.


எல்லா விளக்கும் விளக்கல்ல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல;
பரிப்பெருமாள்: எல்லாவறத்தின் உண்டான ஒளியும் ஒளியல்ல;
பரிதி: எல்லா விளக்காவன: தானம், தன்மம், கல்வி, ஞானம், பூசை என்பன;
பரிமேலழகர்: புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா;
பரிமேலழகர் குறிப்புரை: உலகத்தார் விளக்காவன: ஞாயிறு, திங்கள், தீ என்பன.

'எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தானம், தன்மம், கல்வி, ஞானம், பூசை என்பன: எல்லா விளக்காவன' என்றார். 'புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா' என்பது பரிமேலழகரின் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'புறத்தே யுள்ள இருளைப் போக்கும் எல்லா விளக்கும் விளக்காகா', 'மற்ற விளக்குகள் அல்ல', 'வெளியிருளை நீக்கும் ஞாயிறு, திங்கள், தீ முதலிய விளக்குகளெல்லாம் சிறந்த விளக்காகமாட்டா', 'குணங்களால் அமைந்த பெரியார்க்குப் புற இருள் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகா' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாம் ஒளியும் விளக்கம் அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர்க்குப் பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: சான்றோர்க்குப் பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது (பொய்யாவிளக்குச்) சான்றோர்க்கு இன்றியமையாமை கூறிற்று.
பரிதி: இந்த விளக்கிலும் பொய் சொல்லாததே விளக்கு என்றவாறு.
பரிமேலழகர்: துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.

'சான்றோர்க்குப் பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சால்புடையார்க்கு உள்ளத்தின் இருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்', 'சத்தியம்தான் உயர்ந்த அறிவுடைய மேலோர்க்கு வழி காட்டும் விளக்கு', 'நல்லோர்க்கு அகத்திருளை நீக்கும் பொய்யாமை என்னும் விளக்கே இவற்றினுஞ் சிறந்த விளக்காகும்', 'அக இருள் போக்கும் அணையாத பொய்யாமை என்ற விளக்கே சிறந்த விளக்காகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சான்றோர்க்கு பொய்யாமையினால் உண்டாகும் ஒளியே விளக்காகும். என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லாம் ஒளியும் விளக்கம் அல்ல, சான்றோர்க்கு பொய்யாமையினால் உண்டாகும் ஒளியே விளக்காகும். என்பது பாடலின் பொருள்.
'சான்றோர்' என ஏன் விதந்து சொல்லப்பட்டது?

சான்றோர்கள் பொய்யாமை விளக்கால் ஒளி பெறுகின்றனர்.

மற்ற எல்லாவற்றையும்விட சான்றோர்கள் பொய்யாமை என்னும் விளக்கையே மிகவும் சார்ந்திருப்பர்.
புறவுலகிலுள்ள பொருள்களை கண்டறிய ஞாயிறு, திங்கள் இவற்றின் ஒளி அல்லது கைவிளக்கு, அகல் விளக்கு, தூண் விளக்கு, மின்விளக்கு இவற்றைப் பயன்படுத்துவோம். இவற்றிலிருந்து வரும் ஒளி நாம் தேடும் பொருள்களை அடையத் துணை செய்கின்றன. அதுபோல நீதி உரைக்கும் சான்றோர் ஒரு குற்ற வழக்கின் உண்மையை அறிய பல வழிகளில் முயல்வார். குற்றத்தை நேரில் கண்டவர், குற்றம் நிகழ்ந்த இடத்துத் திரட்டப்படும் சான்றுகள். இவையெல்லாம் வழக்கை எடுத்துச் செல்ல ஒளி பாய்ச்சக் கூடியவையே. ஆயினும் அவை அனைத்தும் முழுமையாக நம்பத்தக்கன அல்ல. எனவே பொய்பேசாதவர் தரும் சான்றினையே முறைமன்றத் தீர்ப்பு வழங்கும் நிலையில் இருப்பவர் மிகவும் நம்புவர். அவர்க்கு அதுவே சிறந்த ஒளியாக அமையும். மனத்தூய்மை வாய்மைக்குப் பிறப்பிடம் ஆதலால், உள்ளொளியிலிருந்து பிறக்கும் வாய்மை, நீதியை மறைக்கும் இருளை ஓட்டவல்லது. எனவே அந்தப் பொய்யா விளக்கே சான்றோர்க்கு விளக்கு எனச் சொல்லப்பட்டது.

குற்ற வழக்குகளில் உண்மைதான் தேடப்படும் பொருள். அதை அடைய சான்றோர்க்குப் பொய்யாமை என்பதுதான் சிறந்த விளக்கமாக (பொய்யா விளக்கு) அமையும். சான்று கூறுபவராக உண்மை பேசுவோர் உள்ளத்தையே அவர்கள் நாடுவர். பொய்யாமை ஏற்ற விளக்காக உருவகிக்கப்பட்டது. உள்ளத்தால் பொய்யாது நேர்மையாக வாழ்பவனின் உள்ளத்திலே தோன்றும் ஒளியை சான்றோர்கள் அடையாளம் கண்டு பயன்படுத்திக் கொள்வர்.

'சான்றோர்' என ஏன் விதந்து சொல்லப்பட்டது?

சான்றோர் என்ற சொல்லுக்குத் தொல்லாசிரியர்களில் பரிமேலழகர் 'துறவான் அமைந்தார்' எனத் துறவோர் என்ற பொருள் தந்தார். பலர் சான்றோர் என்றே பொருள் கூறினர். மற்றவர்கள் துறவான் அமைந்த சான்றோர், செந்தண்மை பூண்டொழுகும் அறவோர், உயர்ந்த அறிவுடைய மேலோர், நல்லோர், குணங்களால் அமைந்த பெரியார், ஒழுக்கத்தால் சிறந்து விளங்கும் பெரியோர் எனப் பொருள் உரைத்தனர்.

இவ்வதிகாரம் வாய்மையைப் போற்ற எழுந்தது. வாய்மை என்பது அனைத்து வகை மாந்தரும் பின்பற்றவேண்டிய அறமாகும். பின் ஏன் சான்றோர் விதந்து சொல்லப்பட்டனர்? சான்றோர் என்ற சொல் நற்குண நற்செயல் உடையோர், மிக உயர்ந்த குணங்களுள்ள நல்லவன், வீரன், கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்தோன், அறிவினாற் பெரியன் என்ற பல பொருள் தருவதாக உள்ளது. குறளில் சில இடங்களில் இச்சொல் நீதிஅரசரை(Judicial Authority)க் குறிக்கச் சொல்லப்பட்டது போல் தோன்றுகிறது. ஆனால் உரையாளர்கள் எவரும் இப்பொருளை எங்கும் குறிப்பிடவில்லை. இப்பாடலில் சான்றோர் என்ற சொல் நீதி வழங்கும் அதிகாரம் படைத்தவரைச் சுட்டுவதாகவே தெரிகிறது. வழக்கில் முறைமுதல்வராக இருந்து தீர்ப்பளிப்பவர் இவர். எந்தவகை வழக்கானாலும் இவர் உண்மை கண்டறிய வேண்டும். எனவே பொய்யாமையை நாடுபவராவார். பொய் சொல்லாதவரே இவருக்கு ஒளியாக விளங்குவர்.
இக்குறள் நீதியை நிலைநாட்ட உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதைச் சொல்ல வந்ததால், முறைமன்ற நடுவரான சான்றோர் விதக்கப்பட்டார்.

சான்றோர் என்ற சொல் இங்கு நீதிசொல்லும் பெரியாரைக் குறிக்கும்.

எல்லாம் ஒளியும் விளக்கம் அல்ல, சான்றோர்க்கு பொய்யாமையினால் உண்டாகும் ஒளியே விளக்காகும். என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாய்மைஇல்லாவிட்டால் நீதி இருட்டுக்குள் மறைந்துவிடும்.

பொழிப்பு

ஒளி எல்லாம் ஒளியாகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கு தருவதே ஒளியாம்