புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
(அதிகாரம்:வாய்மை
குறள் எண்:298)
பொழிப்பு (மு வரதராசன்): புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
|
மணக்குடவர் உரை:
உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.
பரிமேலழகர் உரை:
புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம்.
(காணப்படுவது உளதாகலின், 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.)
இரா சாரங்கபாணி உரை:
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் ஏற்படும். அதுபோல மனத்தின் தூய்மை வாய்மையால் ஏற்படும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.
பதவுரை:
புறம்-உடம்பு; தூய்மை-தூய்மை; நீரான்-நீரால்; அமையும்-ஏற்படும்; அகம்-நெஞ்சம்; தூய்மை-குற்றமற்ற தன்மை; வாய்மையால்-மெய்ம்மையால்; காணப்படும்-அறியப்படும்.
|
புறந்தூய்மை நீரான் அமையும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்;
பரிப்பெருமாள்: புறம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்;
பரிதி: உடம்பின் அழுக்கைச் சலம் சுத்தம் பண்ணும்;
காலிங்கர்: ஒருவன் தனது புறமாகிய உடல் தூய்மை நீரினாலே தூய்மையுறும்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்;
பரிமேலழகர் குறிப்புரை: உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்.
'உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'புறந்தூய்மை நீரால் உண்டாகும்', 'உடலின் வெளிப்புறத்தைத் தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்', 'வெளிஉடம்பின் சுத்தம் தண்ணீரால் உண்டாகும்', 'உடம்பு தூயதாம் தன்மை தண்ணீரால் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவனுக்கு வெளிஉடம்பின் தூய்மை நீரால் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.
பரிப்பெருமாள்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்செய்த தவமும் பயன்படாதென்றார், அதற்குக் காரணமென்னை யென்றார்க்கு அவர் மனம் தூயரன்மையானே பயன்படாத் என்று கூறிற்று.
பரிதி: மனத்தின் சுத்தம் சத்தியவாக்கியம் சுத்தம் என்று காட்டும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அகந்தூய்மையானது அவ் அகமாகிய உள்ளத்தினின்றும் புலப்படுகின்ற சொல் அறநெறி வழுவாமையாகிய வாய்மையான் அறியப்படும் என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: காணப்படுவது உளதாகலின், 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.
'மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மனந்தூய்மை பொய் சொல்லாமையால் விளங்கும்', 'உடலின் உட்புறமாகிய மனதைச் சுத்தப்படுத்த வாய்மைதான் வேண்டும்', 'அதுபோல உள்ளத்தின் குற்றமற்ற தன்மை மெய்ம்மையால் உண்டாகும்', 'அது போல உள்ளம் தூயதாம் தன்மை வாய்மையான் உண்டாகும். (புறத்தூய்மை அகத்தூய்மை இரண்டும் வேண்டும் என்று கூறுதல் காண்க.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மனந்தூய்மை பொய் சொல்லாமையால் அறியப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஒருவனுக்கு வெளிஉடம்பின் தூய்மை நீரால் உண்டாகும்; மனந்தூய்மை பொய் சொல்லாமையால் அறியப்படும் என்பது பாடலின் பொருள்.
இங்கு 'காணப்படும்' என்பதன் பொருள் என்ன?
|
நீரால் உடம்பின் வெளிப்புறமும் வாய்மையால் அதன் உட்புறமும் தூய்மை பெறும்.
உடம்பின் வெளிப்புறத் தூய்மை நீரினால் அமையும். உடம்பின் உட்புறமாகிய மனத்தின் தூய்மை வாய்மையால் தெரியவரும்.
புறந்தூய்மை நீரால் ஏற்படும் என்றதால் சுற்றுசூழலின் தூய்மை பற்றியும் சொல்வதாகக் கொள்ளமுடியும். ஆனால் அடுத்தபகுதி அகந்தூய்மை பற்றிப் பேசுவதால் புறந்தூய்மையில் உள்ள புறம் மனிதனது உடலின் வெளிப்புறத்தையே குறிக்கும். நாம் உடல் தூய்மையை, தொடர்ந்து நீராடிப் போற்றிப்பாதுகாத்து நமக்கும் பிறருக்கும் மகிழ்வைத் தரக்கூடிய வகையில் வாழ விரும்புகிறோம். மனிதன் நலமுடன் வாழ உடல் மட்டுமன்றி உள்ளமும் தூய்மையுடையதாய் விளங்க வேண்டும்.
புறம் தூய்மை நீரால் மட்டுமே அமையும். அதுபோல, அகம் தூய்மை வாய்மையால் மட்டுமே உண்டாகும். உடலில் அழுக்கிருந்தால் எவ்வளவு எளிதில் நீக்கி விடுகிறோமோ அப்படி எளிதாக உள்ளத்து கறையையும் 'வாய்மை' மொழிவதாலேயே நீக்கி விடமுடியும். பொய் பேசாமல் இருப்பது வாய்மை எனப்படும். வாய்மையால் உள்ளம் தூய்மை பெறுகிறது அகத்தூய்மை என்பது குற்றம் நீங்குதலைக் குறிக்கும். தூய்மையான மனம் மிகு மகிழ்ச்சியை எய்தும்; உடல் நலமும் மேலோங்கும். புறத்தூய்மை புற வாழ்விற்கு இன்றியமையாதது; அகத்தூய்மை அறவாழ்விற்கு இன்றியமையாதது. அகத்தூய்மை வாய்மையாலே பெறப்படும். புறத்தூய்மை அகத்தூய்மை இரண்டும் வேண்டும் என்று கூறப்பட்டது.
வாய்மை என்னும் ஈதன்றி வையகம்
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ (கம்பராமாயணம்-அயோத்தியா காண்டம், திருவடி சூட்டு படலம், 2578 பொருள்: ‘உலகம் மெய்ம்மை என்கிற இதுவொன்றில்லாமல், தூய்மை என்கின்றஒன்று தனியே இருப்பதாகச்சொல்லுமா?) என்று ‘வாய்மையே தூய்மையாம்; வாய்மைதவிரத் தூய்மை தனிவேறில்லை' என்று பரதனை அரசாளும்படி இராமன் ஆணையிடும்போது கூறுவதாகக் கம்பர் பாடினார்.
சமணர்கள் நீராடாமையினை ஒரு நோன்பாகக் கொண்டவர்கள். குளித்தால் உடம்பில் உள்ள கண்ணுக்குப் புலனாகாத சிறுகிருமிகள் இறந்துவிடும் என்ற கொல்லாமை ஒழுக்கமே இதற்குக் காரணமாகும். புறந்தூய்மை நீராடுதலினால் அமைவது என்று இங்கு வள்ளுவர் உரைத்திருப்பதால் சமணரின் நீராடாமைப் பழக்கம் அவர்க்கு ஏற்புடையது அல்ல எனத்தெரிகிறது.
அதுபோலவே 'புனித நீராடுவதா'ல் தீவினைகள் (பாவங்கள்) நீங்கும் என்ற வைதிகக் கொள்கையினையும் வள்ளுவர் ஏற்கவில்லை.‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்பராதலின் அந்நீரால் மனமாசு நீங்காது என்னும் குறிப்பு இங்குப் புலப்படுகிறது. தீவினைகளை விலக்க அகத்தூய்மையையே அவர் வலியுறுத்துவார். வாய்மையே மனத்தைத் தூய்மைப் படுத்தும் 'நீராடலாகும்' என்பவர் வள்ளுவர்.
ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தில் அரசனைக் கொன்றுவிட்டு குருதிக் கறையுடன் உள்ள மாக்பெத்திடம் கொலைக்குத் துணைநின்ற அவன் மனைவி 'இச்செயலின் அடையாளத்தைக் கழுவ நமக்குக் கொஞ்சம் தண்ணீரே தேவை' (A little water clears us of this deed)' என மாக்பெத்திடம் கூறுவாள். உலகத்திலுள்ள நீர் அனைத்தையும் கொண்டுவந்தாலும் பாவத்தால் உண்டான அந்த இரத்தத்தைக் கழுவித் தூய்மைப்படுத்த முடியுமா?
|
இங்கு 'காணப்படும்' என்பதன் பொருள் என்ன?
'காணப்படும்' என்றதற்கு அறியப்படும், என்று காட்டும், காணப்படும், உண்டாகும், விளங்கும், ஏற்படும், வெளிப்பட விளங்கும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
புறத்தழுக்கையும் நீரையும் கண்ணால் காணமுடியும். ஆனால் அகக் குற்றமும் வாய்மைக் குணமும் காட்சிப் பொருள்கள் அல்ல. எனவே அறியப்படும் என்ற பொருளிலே காணப்படும் என்று சொல்லப்பட்டது. இங்கு காணுதல் என்றது அகக் கண்ணாற் காண்பதை.
ஒருவனது உடல் தூய்மையாக இருக்கிறது என்று சொன்னால் அது நீரால் தூய்மையாக்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொள்வோம். அவனது மனம் தூய்மையாகவே இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதற்கு உரைகல் அவன் பொய்சொல்பவனா? அல்லனா என்பதே. வாய்மையாளனது அகம் தூய்மையானது என்பதை அறிந்து கொள்ளலாம். உள்ளத்தின் தூய்மையைக் காணும் வழி, மனத்தில் தோன்றி வெளிப்படும் வாய்மொழியே ஆகும். 'மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம்' என்ற கொள்கையைக் கைக்கொண்டு வாழ, இஃதொன்றே சிறந்த வழி என்பதாகும்.
உடல் தூய்மையைப் பற்றிப் 'புறந்தூய்மை நீரான் அமையும்' என்கிறார். உடல் உளத்தாற் பாதிக்கப் பெறும் ஆதலின், மனத் தூய்மையின் இன்றியமையாமையை 'வாய்மையாற் காணப்படும்' என்றார். வாய்மையான் அமையும் என்னாது காணப்படும் என்றதால், வாய்மை, பழி பாவங்களைத் தவிர்க்கும் என்பதும், பொய்யே எல்லாக் குற்றங்களுக்கும் உறைவிடம் என்பதும், அதனை நீக்கவே உளம் தூய்தாம்; ஒழுக்கம் தூய்தாம்; உடல் நலம் பெறும் என்பனவும் உணரக்கிடக்கின்றன (தண்டபாணி தேசிகர்).
ஒருவனுடைய வாய்மையால் அவனுக்கு அகந் தூய்மை உண்டாகிறது. அதுபோல, ஒருவனுடைய அகந் தூய்மையை அவனுடைய வாய்மை மூலம் பிறர் உணர்ந்துகொள்வர். வாய்மை அகந் தூய்மைக்குக் காரணமாகவும் அகந் தூய்மையைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. எனவே 'காணப்படும்' என்பது தனக்கு உண்டாகும் நிலையையும் பிறர் உணர்ந்துகொள்ளும் நிலையையும் குறிக்கும். ஆனால் நீர் அபப்டிப்பட்டது அல்ல, நீர் கையாண்டால், புறம் தூய்மை பெறும். ஆனால் நீர் ஒருவனுடைய புறந்தூய்மைக்கு அடையாளம் அல்ல. எனவே 'காணப்படும்' என்ற சொல் தான் இருப்பதை உணர்த்துவதோடு பிறருக்குக் காட்சிப் பொருளாகவும் (பிறர் அறிதல்) அமைகிற சிறப்பை உடையது (செ வை சண்முகம்).
காணப்படும் என்பதற்கு அறியப்படும் என்பது பொருள்.
|
ஒருவனுக்கு வெளிஉடம்பின் தூய்மை நீரால் உண்டாகும்; மனந்தூய்மை பொய் சொல்லாமையால் அறியப்படும் என்பது இக்குறட்கருத்து.
வாய்மையின் முதற்பயன் மனத்தூய்மை.
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; மனத்தின் தூய்மை வாய்மையால் அறியப்படும்.
|