இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:297)

பொழிப்பு (மு வரதராசன்): பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

மணக்குடவர் உரை: பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.

பரிமேலழகர் உரை: பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று.
(அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உண்மையை உண்மையாகவே கடைப்பிடித்தால் பிற அறங்கள் செய்யவும் வேண்டுமோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் பிறஅறம் செய்யாமை செய்யாமை நன்று.

பதவுரை:
பொய்யாமை-பொய் கூறாதிருத்தல்; பொய்யாமை-தவறாமல்; ஆற்றின்-ஒழுகுவானாயின்; அறம்-அறம்; பிற-பிறவாகிய; செய்யாமை-செய்யாதிருத்தல்; செய்யாமை-செய்யாமலிருத்தல்; நன்று-நல்லது.


பொய்யாமை பொய்யாமை ஆற்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின்;
பரிப்பெருமாள்: பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின்;
பரிதி: பொய்யாமையாகிய சத்தியத்தை மறவாமல் நடத்துவானாகின்;
காலிங்கர்: பொய்யாமையாகிய வாய்மையைச் செலுத்தும் இடத்து இடையிடையே பொய்புகுந்து வழங்காமல் நடத்த வல்லனாகில்;
பரிமேலழகர்: ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின்;

'பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொய்யாமையைப் பொய்யாமல் இடையறாது ஒழுகுவானாயின்', 'பொய் சொல்லா அறத்தைத் தவறின்றிக் காத்தால்', 'பொய் சொல்லாதிருத்தலைத் தவறாது ஒருவன் மேற்கொண்டு ஒழுகவல்லனாயின்', 'பொய்யாமையைத் தவறாமல் செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொய்யாமையைப் பொய்யாமல் ஒழுகுவானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.
பரிப்பெருமாள்: பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொய்பட ஒழுகுவனாயின் தவம் செய்தாலும் பயன்படாதென்றது.
பரிதி: தன்மம் செய்யாமல் இருந்தாலும் நன்று என்றவாறு.
காலிங்கர்: அதுவே அறம். இதற்கு வேறாகிய பாவங்களை மேற்கொண்டு செய்யாமையாகிய தவிர்தலை உடைய செயல்களே நன்று என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: செய்யாமை செய்யாமை என்றது ஒருவன் அறம் செய்யக் கருதும் இடத்துப் பொய்யுரையாகிய பாவங்களையும் தவிருவான் என்பது பொருள் ஆயிற்று என அறிக என்றவாறு. இப்படியன்றி இடையே பொய்புகின் அறமும் நன்றாகாது என்றவாறு.
பரிமேலழகர்: அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார். இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.

'பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'தன்மம் செய்யாமல் இருந்தாலும் நன்று' என்பது பரிதியின் உரை. காலிங்கர் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் என்றும் பிற செய்யாமை செய்யாமை நன்று என்றும் இரு தொடராகப் பிரித்துக் கொண்டு, 'வேறாகிய பாவங்களை மேற்கொண்டு செய்யாமையாகிய தவிர்தலை உடைய செயல்களே நன்று' என உரை பகன்றார். 'பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று' என்பது பரிமேலழகரின் பொழிப்புரை.

இன்றைய ஆசிரியர்கள் 'பிற அறங்களைச் செய்யாமையே (உறுதியாக) நல்லது. (பிற அறங்கள் தரும் பயனை வாய்மை ஒன்றே தரும் என்பது கருத்து.)', 'வேறு அறம் ஒன்றும் செய்யாதிருப்பதே நல்லது', 'மற்ற அறங்களை அவன் தொடர்ந்து செய்யாதிருத்தல் வாய்மை யறத்தைச் செவ்வனே நடத்தற்கு இடந்தருவதால் நல்லதாகும். (பிற அறங்கள் அதனுள் அடங்குமென்ப. அல்லது ஒருவன் பொய்யாமையைத் தவறாது கடைப்பிடித் தொழுகவல்லனாயின், பிற அறங்களைச் செய்தலைவிடாமை சிறந்ததே என்றுங் கொள்ளலாம். எல்லா அறத்திற்கும் வாய்மை அடிப்படை என்பது கருத்து.)', 'வேறு அறங்களைச் செய்தல் நன்மை தரும். (பொய்கூறின் பிற அறம் செய்கை நன்மை தராது.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வேறுஅறம் செய்யாதிருப்பினும் நன்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொய்யாமையைப் பொய்யாமல் ஒழுகுவானாயின்; வேறுஅறம் செய்யாதிருப்பினும் நன்று என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் கருத்து என்ன?

வாய்மை அறத்தைத் தவறாது கடைப்பிடித்தால் மற்ற அறங்கள் செய்யாமல் இருந்தாலும் இழப்பு ஒன்றும் இல்லை; பொய்யாமையே எல்லா நன்மைகளையும் தரும்.

ஒருவன் பொய்பேசாதிருத்தலைத் தவறாது செய்து வருவானேயானால் அவன் பிற அறங்களைச் செய்ய வேண்டுவதே இல்லை.
உள்ளம் அறிய மனச்சான்றின்படி பொய்பேசாது ஒழுகுபவன், அந்த வாய்மைப் பேரறச் செயலால் எல்லா அறமும் செய்கிறானாதலால் பிறஅறம் செய்யாமை செய்யாமை நன்று என்கிறது பாடல். இதனால் பிற அறங்களைச் செய்யவேண்டாமென்பது அல்ல; மற்ற அறங்களெல்லாம் வாய்மைமொழிவதில் அடங்கும் என்பதே கருத்து. பொய்யாமையே எல்லா அறமுமாகிவிடும் என நுட்பமாகக் கூறப்பட்டது. உள்ளத்தால் பொய்யாதொழுகினால் வேறு அறம் செய்யவேண்டிய தேவையில்லை.

வாய்மை என்பது எவ்வகையாலும் யாரிடத்திலும் தீமை பயக்காத சொல் கூறுவது. பொய்யற்றதாக இருப்பது எது எனினும், அது பிறர்க்குத் தீமை செய்யாத தாகவும் இருக்க வேண்டும் என்பதால் வாய்மை அறம் உயர்வாக எண்ணப்படுகிறது. வாய்மை அகந் தூய்மை செய்வதும் ஆகும். அதனால் உள்ளத்திலிருந்து வெளிப்படும் எண்ணம் மொழி செயல் ஆகியவை ஒளிபெற்று உயர்வுறும். தீய செயல்களுக்கு எல்லாம் அடிப்படை பொய் சொல்லுதல்தான். குற்றங்களை மறைப்பதற்காகப் பொய்யைக் கேடயமாகப் பயன்படுத்தித் தீயோர் தங்களைக் காத்துக் கொள்ள முற்படுகின்றார்கள். வாய்மைமொழிவதன்வழி புறங்கூறுதல், இன்னாச்சொல் கூறல், களவு, கொலை, போன்ற குற்றங்கள் யாவும் நீங்கிவிடும்; மறம் குறைந்து அறம் செழிக்கும்.
வாய்மை அறம் எல்லா அறங்களுக்கும் அடிப்படையாகின்றது. இதை மட்டும் மேற்கொண்டாலே ஏனைய அறங்கள் செய்ததற்கான பயன்களும் கிடைக்கும். எல்லா அறங்களையும் ஒருவனால் செய்ய இயலாவிடினும் வாய்மை அறத்தை மட்டும் செய்யுங்கள்; மற்ற அறங்களைச் செய்யாவிட்டாலும் நன்மைகள் குறைவதில்லை என்கிறார் வள்ளுவர் இங்கு.

இக்குறள் கூறும் கருத்து என்ன?

வாய்மையைக் காட்டிலும் உயர் அறம் வேறுஇல்லை என்பதைச் சொல்ல வந்தகுறள் இது.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று (பிறனில் விழையாமை 150 பொருள்: அறத்தைத் துணையாகக் கொள்ள அறியாதவனாய் அறம் அல்லாதனவற்றைச் செய்வானாயினும் பிறனது எல்லையின்கண் உள்ள அவனது மனைவியின் பெண்மையை விரும்பாமை நல்லது) என்ற பாடலில் 'அல்ல செயினும்' அதாவது மற்ற 'தீயன செய்தாலும்', பிறன்மனை நயத்தலாகிய தீய குணம் இல்லாமலிருப்பதே நல்லது என்று பொருள்படும்படி - தீயன செய்தலுக்கு ஒத்திசைந்து போவது போல - பாடல் அமைந்தது. அங்கு 'பிறனில் விழையாமை' என்ற அறவுயர்வைக் காட்டுவதற்காக அப்படிச் சொல்லப்பட்டது. அது போல, ‘அறம் பிற செய்யாமை நன்று’ என்ற நடையும் இங்கு வாய்மை யறத்தை வற்புறுத்த எழுந்தது. அக்குறளுக்குக் காலிங்கரது 'ஒருவன் தனக்கு அறத்தைத் துணையாக அணைத்துக் கொள்ள அறியானுமாய்' என்பது போன்ற விளக்கங்கள் அமைதியாயின.

இக்குறளின் முதற்பகுதியான 'பொய்யாமையைப் பொய்யாமல் ஒழுகுவானானால்' என்பது தெளிவாக உள்ளது. ஆனால் 'அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று' என்ற இறுதிப் பகுதியின் சொல்லமைப்பு காரணமாக வேறுவேறான கருத்துக்கள் கொண்ட பல உரைகள் உண்டாயின. அவை:

 • பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம். (மணக்குடவர்/பரிப்பெருமாள்) [இதன் விளக்கம்: பிற அறம் செய்கை நன்று என்பது பொழிப்பு. பொய் கூறின் பிற அறஞ்செய்கை நன்றாகாது என்பது அதனாற் போந்த பொருள்.]
 • தன்மம் செய்யாமல் இருந்தாலும் நன்று (பரிதி)
 • இதற்கு வேறாகிய பாவங்களை மேற்கொண்டு செய்யாமையாகிய தவிர்தலை உடைய செயல்களே நன்று. செய்யாமை செய்யாமை என்றது ஒருவன் அறம் செய்யக் கருதும் இடத்துப் பொய்யுரையாகிய பாவங்களையும் தவிருவான் என்பது பொருள் ஆயிற்று என அறிக. இப்படியன்றி இடையே பொய்புகின் அறமும் நன்றாகாது. (பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் என்றும் பிற செய்யாமை செய்யாமை நன்று என்றும் இரு தொடராகப் பிரித்துக் கொண்டுள்ள உரை) (காலிங்கர்)
 • 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று' என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார். (பரிமேலழகர்)
 • மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
 • பிற அறங்கள் செய்யவும் வேண்டுமோ?
 • பிற அறங்களைச் செய்யாமையே (உறுதியாக) நல்லது. (பிற அறங்கள் தரும் பயனை வாய்மை ஒன்றே தரும் என்பது கருத்து.)
 • பிற அறங்களைச் செய்யவே இலலையென்றாலும் நன்மை விளையும்.
 • செய்யக்கூடாத பிறவற்றைச் செய்யாதிருத்தல், மேலும் நல்லதாகும்.
 • மற்ற அறங்களை அவன் தொடர்ந்து செய்யாதிருத்தல் வாய்மை யறத்தைச் செவ்வனே நடத்தற்கு இடந்தருவதால் நல்லதாகும். (பிற அறங்கள் அதனுள் அடங்குமென்ப. பிற அறங்களைச் செய்தலைவிடாமை சிறந்ததே என்றுங் கொள்ளலாம். எல்லா அறத்திற்கும் வாய்மை அடிப்படை என்பது கருத்து.)
 • வேறு அறங்களைச் செய்தல் நன்மை தரும். (பொய்கூறின் பிற அறம் செய்கை நன்மை தராது.)
 • வேறு அறம் ஒன்றும் செய்யாதிருப்பதே நல்லது.
 • பிற அறங்களைச் செய்ய வேண்டுவதே இல்லை.
 • பொய் சொல்லாதிருத்தலாகிய அறமுடையவனுக்கு மற்றைத் தருமங்கள் செய்தல் நல்லதாகும் அத்தருமம் இல்லாதவனுக்கு மற்றைத் தருமங்கள் செய்தும் நல்லா தாகாது என்பது வேறோர் உரை.
இவற்றுள் தொல்லாசிரியர்கள் உரைகளை ஒப்பு நோக்கி வேற்றுமைகளை அறியலாம். மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோர் உரைகளும் காலிங்கர் உரையும் ஒருவைகயன. இவர்கள் பொய்யாமையை விடுத்து வேறு பிற அறம் செய்தலால் பயனின்று; அதனை அடித்தளமாகக் கொண்டே வேறு பிற அறங்களையும் செய்ய வேண்டும் என்ற கருத்தினர். இது சிறப்பாக இருந்தாலும் குறள் சொற்கிடக்கை அதற்கேற்ப அமைந்திருக்கவில்லை. பரிதியின் உரையைத் தழுவியே பரிமேலழகர் உரை கண்டுள்ளார். பரிதி வேறுபிற அறம் செய்யாமல் இருந்தாலும் நன்று எனக் கூறுவதால் பொய்யாமையோடு வேறுபிற அறமும் செய்ய வேண்டும் எனக் கருதுகிறார். ஆனால் பரிமேலழகரோ குறள் சொற்கிடக்கையையே முழுமையாகப் பற்றி வேறு பிற அறம் செய்யத் தேவையில்லை எனக் கூறுகிறார். வள்ளுவர் கூறிய சொற்கிடக்கையும் வாய்மையின் தலையாய சிறப்பையும் போற்றும் வகையில் பரிமேலழகர் உரை அமைந்துள்ளது. வேறு பிற அறங்களையும் செய்யவேண்டுமெனக் கூறிய பரிதியின் உரைக்கு சொல்லமைப்பு அரண் செய்யவில்லை.

செய்யாமை செய்யாமை என்ற இரண்டு எதிர்மறைச் சொற்கள் சேர்ந்து ஓர் உடன்பாட்டுப் பொருளான செய்தல் என்ற பொருள் கொண்டு, அதன் மேலும், மற்ற அறங்களையும் செய்யாதிருத்தலையும் செய்யாது, அதாவது மற்ற அறங்களையும் செய்தொழுக வேண்டும் என்று செய்தலை வலியுறுத்துவதாகக் கொண்டவர்கள் ஒரு சாரார், மற்றவர்கள் வேறு அறங்களைக் கூட செய்யவேண்டியதில்லை. வாய்மையே, எல்லா அறங்களின் பயனையும் தரும் என்றனர்.
பிற அறங்களை விட வாய்மையை முதன்மைப்படுத்த வந்த குறள் இது. எதை வற்புறுத்த வேண்டுமோ, அதை முதன்மைப் படுத்தி, மற்றவற்றை அடுத்ததாக நினைக்குமாறு செய்வது வள்ளுவரின் உத்திகளில் ஒன்று. மற்றவற்றைச் செய்யாவிட்டாலும் இதை இப்பொழுது செய்; மற்றவற்றைப் பிறகு செய்யலாம் என்பது அது. ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்று வள்ளுவர் சொல்லுவாரே அன்றி, ஒன்றைச் செய்வதினால் மற்றவற்றைச் செய்யவேண்டாம் என்று அவர் விலக்கு அளிப்பதாகக் கொள்ளக்கூடாது.

பொய்யாமையாகிய ஒழுக்கத்தைத் தொடர்ந்து கடைப் பிடிப்போர், வேறு பிற அறச்செயல்களைச் செய்தொழுக வேண்டிய தேவையில்லை. பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருந்தாலும் கேடில்லை; பிறகும் நன்மைதான்.
வாய்மையே அடிப்படை அறம். ஒருவன் வாய்மையைக் கூறினால் மட்டுமே, அவன் பிற அறங்களைச் செய்தாலும் பயன் உண்டு என்பது செய்தி.

பொய்யாமையைப் பொய்யாமல் ஒழுகுவானாயின்; வேறுஅறம் செய்யாதிருப்பினும் நன்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாய்மைப் பேரறத்தில் எல்லா அறங்களும் அடங்கும்.

பொழிப்பு

பொய்யாமையைப் பொய்க்காமல் கடைப்பிடிப்பானானால், பிற அறங்கள் செய்யாமையும் நன்று.