இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0296பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:296)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற புகழ்நிலை வேறொன்றும் இல்லை; அஃது அவன் அறியாமலே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.

பரிமேலழகர் உரை: பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும்.
('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: பொய் சொல்லாமை பெரும் புகழாம்; பொய் சொல்லத் தெரியாமை பேரறமாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.

பதவுரை:
பொய்யாமை-பொய் கூறாதிருத்தல்; அன்ன-(அது) போன்ற; புகழ்-புகழ்; இல்லை-இல்லை; எய்யாமை-அறியாமை; எல்லா-அனைத்து; அறமும்-அறமும்; தரும்-கொடுக்கும்.


பொய்யாமை அன்ன புகழ்இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை;
பரிப்பெருமாள்: ஒருவனுக்குப் பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை;
பரிதி: சத்தியத்தைப் போலே புகழில்லை;
காலிங்கர்: ஒருவருக்கு வாய்மையை ஒத்ததோர் வன்புகழில்லை;
பரிமேலழகர்: ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை;
பரிமேலழகர் குறிப்புரை: 'புகழ்' ஈண்டு ஆகுபெயர்.

'பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுக்குப் பொய் கூறாமை போலப் புகழ் தரும் அறவினை வேறில்லை', 'பொய் சொல்லாதிருப்பதைவிட கீர்த்தி தரக்கூடியது வேறொன்றுமில்லை', 'பொய்யாமையானது அதுபோலப் புகழிற்குக் காரணமாவது வேறொன்றும் இல்லை', 'ஒருவர்க்குப் பொய் கூறாமையை ஒத்த புகழுக்குரிய காரணம் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இவன் பொய்சொல்லான் எனப்படுவதுபோல புகழ் வேறொன்றில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

எய்யாமை எல்லா அறமும் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('பொய்யாமை' பாடம்): பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.
பரிப்பெருமாள் ('பொய்யாமை' பாடம்): பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தானத்தினும் தவத்தினும் நன்றென்றார்; அஃதாமாறென்னை என்றார்க்கு, இஃதொன்றனையுஞ் செய்ய, மேலையவெல்லாம், முயலாமற்றானேயெய்து மென்று கூறப்பட்டது.
பரிதி: இந்த நிலைமையிலே நிற்பானாகில், சிவ புண்ணியம் பசு புண்ணியம் எல்லாம் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அதனினும் அரியது ஒன்று உண்டாவது யாதோ எனில், 'யான் வாய்மைக் குணமுடையேன்' என்று மதித்திராமையும் உடையனாயின், மற்று அது தான் வருந்தாதிருக்க எல்லா அறத்தின் பயனையும் தரும் என்றவாறு,
காலிங்கர் குறிப்புரை: எய்யாமை என்பது முயலாமை; அறியாமை என்பாரும் உளர்.
பரிமேலழகர்: மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.

எய்யாமை என்பதற்குப் பொய்யாமை என மணக்குடவரும் பரிப்பெருமாளும் பாடம் கொண்டதால் 'பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையும் கொடுக்கும்' என்று பொருள் கூறினர். பரிதி 'இந்த நிலைமையிலே சிவ புண்ணியம் பசு புண்ணியம் எல்லாம் உண்டாம்' என்றார். காலிங்கர் 'தான் வருந்தாதிருக்க எல்லா அறத்தின் பயனையும் தரும்' என உரை செய்தார். 'மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும்' எனப் பரிமேலழகர் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது அவன் அறியாமலே அவனுக்கு எல்லா அறவாழ்வின் பயனையும் கொடுக்கும்', 'வேறு முயற்சிகள் செய்து பாடுபடாமலேயே எல்லா தர்ம பலன்களையும் தரும்', 'ஒருவனுக்கு யாதொரு உடல் வருத்தமும் இல்லாமலே எல்லா நன்மைகளையுங் கொடுப்பதால்', 'மெய் வருந்தாமல் எல்லா அறங்களின் பயனையும் அது தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவன் அறியாமலே எல்லா அறங்களின் நன்மைகளையும் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவன் பொய்சொல்லான் எனப்படுவதுபோல புகழ் வேறொன்றில்லை; அவன் அறியாமலே எல்லா அறங்களின் நன்மைகளையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'எய்யாமை' என்ற சொல்லின் பொருள் என்ன?

பொய்பேசாமல் இருந்தால் போதும். மற்ற அறங்களின் பயன்கள் எல்லாம் தாமே கூடி வரும்.

பொய் பேசாமல் இருத்தலைப் போல ஒருவனுக்குப் புகழ் தருவது வேறொன்றுமில்லை. அது அவன் அறியாமலே எல்லா அறங்களையும் அவனுக்கு அளிக்கும்.
பொய் பேசாதிருப்பவன் யாவர்க்கும் எதற்காகவும் தீமை தரும் சொல்லைக் கூறமாட்டான். இதற்காக அவன் பெறும் நற்பெயர் போல் வேறொன்றும் இல்லை. இசைபட வாழ்தல் மக்களுயிர்க்கு மிகவும் பயன் தருவது. புகழ் பெறாத மனிதன் இகழ்ச்சிக்குரியவன். புகழைப் பலழைகளால் பெறமுடியும். வள்ளுவர் கூறும் எளிய வழியானது பொய்பேசாமை. வறிதே பொய்யாமை ஒழுக்கம் மேற்கொண்டு நற்புகழ் பெறலாம்.
புகழ் மட்டுமல்ல எல்லாவகையான அறப்பயன்களையும், வாய்மை மொழிவதால், தாம் அறியாமலே பெறலாம் என்றும் வள்ளுவர் கூறுகிறார். பொய் சொல்லுவதனாலே பல குற்றங்கள் உலகில் நிகழ்கின்றன என்பதில் வள்ளுவர் அழுந்த நம்புகிறார். பொய்கூறுவதை நீக்கிவிட்டால் அறங்கள் தழைக்கும்; அழுக்காறாமை, கண்ணோட்டம் போன்ற மன அறங்கள், இனியவை கூறல், புறங்கூறாமை போன்ற சொல்லறங்கள் முதலியன வாய்மையறம் ஒன்றினால் உளவாம். இதனாலேயே 'எல்லா அறமும் தரும்' என்றார். எல்லா அறங்களும் செய்ய அவற்றால் உண்டாகும் பயன்களைப் பொய்பேசாதவன், தான் அறங்கள் செய்தோம் என்ற உணர்வில்லாமலே, பெற்றவனாவான் என்றும் வள்ளுவர் இங்கு கூறுகிறார்.

'எய்யாமை' என்ற சொல்லின் பொருள் என்ன?

'எய்யாமை' என்ற சொல்லுக்கு சிவ புண்ணியம் பசு புண்ணியம் எல்லாம், தான் வருந்தாதிருக்க, மெய் வருந்தாமல், அவன் அறியாமலே, அவன் அறியாமல், (பொய் சொல்லத்) தெரியாமை, அவன் அறியாமலே, வேறு முயற்சிகள் செய்து பாடுபடாமலேயே, யாதொரு உடல் வருத்தமும் இல்லாமலே, மெய் வருந்தாமல், அவனை வருந்தச் செய்யாமல், உடம்பு வருந்தி எதுவுஞ் செய்யாமலே, அவ்வாய்மையை மறவாது பாதுகாத்தலால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'எய்யாமை' என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் பாடம் ‘பொய்யாமை' ஆதலால், இவர்கள் 'பொய்யாமை எல்லா அறமும்தரும்' எனக்கொண்டனர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'பொய்யாமை எல்லா அறமும்தரும்' என்ற பாடத்திற்குப் 'பொய்யாமையானது அவன் அறியாமல் தானே எல்லா அறங்களையும் கொடுக்கும்' என உரை வரைந்தனர். ஆனால் அவன் அறியாமல் தானே எல்லா அறங்களையும் கொடுக்கும் என்னும் மணக்குடவர் உரையை நோக்குழி, அவரும் ‘எய்யாமை’ என்று பாடங் கொண்டிருப்பாரோ என்று தோன்றுகிறது(இரா சாரங்கபாணி).
மற்றைய உரையாசிரியர்கள் அனைவரது பாடம் ‘எய்யாமை எல்லா அறமும் தரும்’ என்பது. காலிங்கர் 'அது தான் வருந்தாதிருக்க' எனப் பொருள் கூறினார். அவரைத் தொடர்ந்து பரிமேலழகரும் அவரைப் பின்பற்றுபவரும் 'எய்யாமை எல்லா அறமும் தரும்' எனப் பாடங்கொண்டு 'மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும் தானே கொடுக்கும்' எனப் பொருள் கூறுவர்.
வ சுப மாணிக்கம் '(பொய் சொல்லத்) தெரியாமை' என எய்யாமைக்குப் பொருள் கூறுவார். வை மு கோபாலகிருஷ்ணமாச்சார்யார் குறளின் பிற்பகுதிக்குப் 'பொய்யாமை ஒன்றே அனைத்தறங்களின் பயனையும் எவரும் அறியாதபடி தானே கொணர்ந்து கொடுக்கும் என்றுமாம்' எனப் பொருள் கூறினார்.
'எய்யாமையே அறியாமையே' (342) என்பது தொல்காப்பியம் ஆதலால் எய்யாமை என்ற சொல்லுக்கு மெய் வருந்தாமல் எனப் பொருள் கொள்வதைவிட அறியாமல் எனக் கொள்வது சிறக்கிறது. மேலும் இச்சொல்லை 'பொய் என்பதை அறியாமை' என்றும் 'ஒருவன் அறியாமலே தானாகவே' என்றும் விளக்கினர். வாய்மை இருந்தால் போதும், எல்லா அறங்களும் ஒருவன் அறியாமலேயே தானாக வந்து சேரும் என்ற உரைப்பொருள் நன்றாகிறது.

'எய்யாமை' என்ற சொல்லுக்கு அறியாமை என்பது பொருள்.

இவன் பொய்சொல்லான் எனப்படுவதுபோல புகழ் வேறொன்றில்லை; பொய்யாமை அவன் அறியாமலே எல்லா அறங்களின் நன்மைகளையும் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாய்மைமொழிபவன் நாடிச் செய்யாமலேயே அறங்களின் பயன்களுக்குரியவனாகிறான்.

பொழிப்பு

பொய் சொல்லாமை போலப் புகழ்தருவது வேறில்லை; பொய்யாமை ஒருவனுக்கு அவன் அறியாமலேயே எல்லா அறங்களின் பயன்களையும் கொடுக்கும்.