இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0291



வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:291)

பொழிப்பு (மு வரதராசன்): வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

மணக்குடவர் உரை: பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல்,
வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.
('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)

வ சுப மாணிக்கம் உரை: வாய்மை என்று போற்றப்படும் பண்பு எது? சிறிதும் தீமை இல்லாத சொற்களைக் கூறுவது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் தீமை இலாத சொலல்.

பதவுரை:
வாய்மை-மெய்ம்மை; எனப்படுவது-என்று சொல்லப்படுவது; யாது-எது; எனின்-என்றால்; யாதுஒன்றும்-எதுவாயினும், சிறுதும்; தீமை-கெடுதி; இலாத-இல்லாதவைகளை; சொலல்-சொல்லுதல்.


வாய்மை எனப்படுவது யாதெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்;
பரிப்பெருமாள்: பொய் சொல்லாமையாவது யாதென்று வினவின்;
பரிதி: உண்மையே சொல்வதற்குச் சரி;
காலிங்கர்: வாய்மை என்று சான்றோரால் எடுத்து ஏத்தப்படுவது யாதோ எனில்;
காலிங்கர் குறிப்புரை: வாய்மை என்பது மெய்ம்மை.
பரிமேலழகர்: மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது.

'மெய்யென்று சொல்லப்படுவது யாதோ எனில்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உண்மை என்று கூறப்படுவது எது என்றால்', 'வாய்மை என்பது என்னவென்றால்', 'வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று கேட்டால்', 'வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று கேட்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

யாதொன்றும் தீமை இலாத சொலல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல்,
மணக்குடவர் குறிப்புரை: வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: பிறர்க்கு தீமை பயவாதது யாதொன்றாயினும் சொல்லுதல்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாய்மையாவது யாது என்றார்க்கு கூறப்பட்டது.
பரிதி: யாவர்க்கும் தோஷ வார்த்தை சொல்லாமல் இருப்பது என்றவாறு.
காலிங்கர்: தமது நாவினால் யாதானும் ஒன்று தமக்கும் பிறர்க்கும் ஒரு தீங்கும் இல்லாதவனாகிய தூய சொற்களைச் சொல்லுதல் என்றவாறு.
பரிமேலழகர்: அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தீமை யாதொன்றும் இலாத' என இயையும். இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.

'பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்க்குத் தீமை சிறிதும் விளையாத சொற்களைக் கூறுதல்', 'யாருக்கும் எந்த விதமான தீமையும் உண்டாக்காத வார்த்தைகளைச் சொல்லுவது', 'எவ்வகையான தீங்குமில்லாத சொற்களைச் சொல்லுதலேயாம்', 'அது வேறு உயிர்கட்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எதுவாயினும் தீமை பயவாதவற்றைச் சொல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எதுவாயினும் தீமை பயவாதவற்றைச் சொல்லுதல் என்பது பாடலின் பொருள்.
'யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

சொல்பவை மற்றவர்க்குத் தீங்கு செய்யாவிட்டால் அது வாய்மையாம்.

வாய்மை என்று சொல்லப்படுவது எது வென்றால் மற்றவர்களுக்குத் தீங்கு விளைக்காத சொற்களைச் சொல்லுவதே ஆகும்.
வெறுமனே நிகழ்ந்தது கூறலும் சொன்னதனைச் சொல்லியபடி மற்றோர்க்குச் சொல்லுதலும் உண்மையாயினும் வாய்மை ஆகாது என்கிறது பாடல். சொல்லியவன் நெஞ்சக் கருத்து மாறாதபடி அவன் சொற்களைப் பிறர்க்குக் கூறவேண்டும்; அவன் உள்ளக் கருத்து மயங்கித் தோன்றுமென்றால், சொல் பெயர்ந்து ஆனால் கருத்துப் பெயராமல் உரைக்கலாம். வாய்மை என்பது வாயிலிருந்து பிறக்கும் வெறும்சொல் அன்று. அது உள்ளங்கலந்து வரும் அகச்சொல்; ஆதலின் நடந்த நிகழ்ச்சிகளாயினும், பிறர் சொல்லிய உரைகளாயினும், உட்கருத்து அழியாதபடி வெளிப்படுத்தல் வேண்டும்.
மனக்கோட்டங் கொண்டது சொற்றூய்மை- வாய்மை ஆகாது. உண்மையையும் பொய்யையும் தம் தேவைகளுக்கேற்ப உரைப்பது - அதாவது தமக்கு நன்மை வருமென்றால், பொய்யையும் சேர்த்துச் சொல்வது, மற்றவர்க்குத் தீது வரும் என்றால் மெய்யும் பேசுதல்- என்றவகையில் ஒழுகுவோரும் உள்ளனர். இவர்களது நோக்கம் உண்மை பேசுவதல்ல. மெய்யாக நிகழ்ந்தது என்பதனைச் சான்றாகக் கொண்டு மற்றவர்க்குத் தீமை விளைப்பதே நோக்கம். இவ்வாறாக, சிலசமயங்களில், வஞ்சகம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் வள்ளுவர் 'தீமையிலாத சொல்லுதலே வாய்மை' என்று இப்பாடல்வழி இலக்கணம் வகுத்தார். எனவே தன் நெஞ்சு அறிந்தவரை பிறர்க்குக் கேடில்லா மொழியே வாய்மை ஆகும் எனக் குறள் கூறுவது தெளிவு.

புரைதீர்ந்த நன்மை பயக்கும், அதாவது குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்கும், பொய்ம்மையும் வாய்மையின் இடத்து வைக்கப்படும் என்று அடுத்து வரும் குறள் (292) கூறும். இவ்விரண்டு குறட்கருத்துக்களையும் இணைத்து நோக்குவது பயன் தரும். ஒருவன் சொல்லுகின்ற சொல்லின் பயன் நோக்கியே, அதனை மெய்ச்சொல், அல்லது பொய் என்று துணிய வேண்டுமேயன்றி, சொல்லளவால் அவ்வாறு கூறுதல் பொருந்தாதென்று வள்ளுவர் கருதுகின்றார். வாய்மை என்பது தீமை தராமலிருந்தால் போதும் என்பதைக் குறிப்பது, நன்மை புரியவேண்டும் என்ற தேவையில்லை. ஆனால் பொய்யை வாய்மையின் இடத்தில் கொள்ள குற்றம் நீங்கிய நன்மை கிடைக்கவேண்டும்.
நன்மை தீமை விளைவை ஆராய்ந்து அறிந்தே எதையும் எவரிடமும் சொல்ல வேண்டும்; சூழல் கருதி பொய் கூறுவதால் மற்றவர்க்குத் தீமை அற்ற நன்மை விளையுமானால் அத்தகைய பொய் கூறலாம் எனும் கருத்துக்கள் இவ்விரு குறள்கள் மூலம் கிடைக்கின்றன.

'யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

இப்பகுதியிலுள்ள யாதொன்றும் என்பதற்கு 'எவ்வகையான' என்றும் 'சிறிதேனும்' என்றும் பொருள் கூறினர்.
.....யாதொன்றும் பேணாமை பேதை தொழில் (பேதைமை 833 பொருள்: ....எதனையும் போற்றாமை ஆகிய இவை அறியாதாரின் தொழில்களாம்) .....நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடரிது (நல்குரவு 1049 பொருள்: ....வறுமை வந்தபோது எவ்வகையாலும் உறங்க முடியாது) என்ற இடங்களில் எதுவாயினும் என்னும் பொருளில் அச்சொல் பயிலப்பட்டது.

உள்ளதை உள்ளவாறு கூறுவதுதானே வாய்மை, உள்ளதனை உள்ளபடி எவ்விடத்திலும் துணிந்து கூறலாமே என்பதுதான் பொதுவாக நாம் நினைப்பது. இங்கே வள்ளுவர் 'உள்ளதனை உள்ளபடி கூறுதல் வாய்மை' என்பதை நீக்கி, 'நிகழ்ந்தது கூறலும் அதாவது உள்ளதைச் சொல்லுதலும் தீமை தராதிருப்பின் மெய்ம்மையாம்; தீமை தருமாயின் பொய்ம்மையாம்' என்று வாய்மைக்கு புதிய இலக்கணம் தருகிறார் வள்ளுவர்.

உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது. உள்ளதை உள்ளவாறு சொன்னால் பொதுவாக நன்மைதான் விளையும். எவ்வெவ்விடங்களில் தீமை விளையும் என்று தெளிவாகத் தெரியுமானால் அவ்விடங்களில் மட்டும் உள்ளதை உள்ளவாறு கூறாமலோ அல்லது சற்று மாற்றியோ கூறலாம். இவ்விடங்களில் பிறர்க்குத் தீமை பயவாமல் இருந்தால் அது மெய்ம்மையாக எண்ணப்படும். இந்த மெய்ம்மையே வாய்மை எனப்படுவது.
யாருக்கும் யாதொன்றுக்கும் எந்த வகையிலும் தீமை பயவாத சொற்களே வாய்மை என்பதனை உணர்த்த 'யாதொன்றும் தீமை இலாத சொலல்' என இக்குறள் வரையறை செய்கிறது. சொற்கள் வாய்மையுடையனவா அல்லனவா என்பதனை முடிவு செய்தற்கு சொற்களுக்குரிய கருத்துக்கள் அல்லது செய்திகள் நிகழ்ந்தவையா? நிகழாதவையா என்ற அடிப்படை எடுத்துக் கொள்ளப்படாமல், சொற்களின் தூய்மையை ஆராய்வதற்கு அவற்றால் விளையும் பயனையே உரைகல்லாகக் கொள்ளப்படும் என்கிறது பாடல். இதன்கண் மாந்தர்தம் செயலின் நன்மை தீமை பற்றிய விழுமியமும் இடம் பெறுகிறது.

உண்மையைக் கூறுதல் எவ்வகையான தீங்கும் பயவாதாயின், அது வாய்மை; ஒருக்கால் நிகழ்ந்ததைக் கூறுவது தீமை தருவதாயின் அது வாய்மையன்று என்பது இப்பகுதியின் பொருள்.

வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எதுவாயினும் தீமை பயவாதவற்றைச் சொல்லுதல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாய்மைக்குப் புதுமையான ஓர் வரையறை.

பொழிப்பு

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் தீமை சிறிதும் இல்லாதவற்றைச் சொல்லுதல்.