இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0270



இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

(அதிகாரம்:தவம் குறள் எண்:270 )

பொழிப்பு (மு வரதராசன்): ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.



மணக்குடவர் உரை: பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

பரிமேலழகர் உரை: இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்.
(செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர'¢ எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உலகில் வறியவர் பலர் ஏன்? முயலாதார் பலர்; முயல்பவர் சிலர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் நோலாதார் பலர்.

பதவுரை:
இலர்-இல்லாதவர்; பலர்-பலர்; ஆகிய-ஆன; காரணம்-காரணம்; நோற்பார்-தவம் செய்பவர்கள்; சிலர்-கொஞ்சம் பேர்; பலர்-பலர்; நோலாதவர்-தவம் செய்யாதார்.


இலர்பலர் ஆகிய காரணம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம்;
பரிப்பெருமாள்: பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம்;
பரிதி: பாக்கியவான்கள் சிறிதாக மிடியாளர் பெருத்ததாகிய காரியம் எது என்னில்;
காலிங்கர்: இவ்வுலகத்து இவ்வாறு தமது பேரிடர் நீங்கிப் பெரும்பயனுறுதலைப் பலரும் இலராதற்கு காரணம் யாதோ எனின்;
பரிமேலழகர்: உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்;
பரிமேலழகர் குறிப்புரை: செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின்.

'பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'பேரிடர் நீங்கிப் பெரும்பயன் உறாதார் பலராதற்கு காரணம்' என்று பொதுவில் பொருள் கூறினார். பரிமேலழகர் பொழிப்பில் வறியவர் பலராதற்குக் காரணம்' எனச் சொல்லி விரிவுரையில் அறிவுடைமை இன்மையையும் இணைத்துச் சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகில் வறியவர் பலராதற்குக் காரணம்', 'எம பயத்தையும் எம வாதனைகளையும் வென்று இச்சைப்படி உடலை விடுகிறவர்கள் பல பேர் இல்லையென்பதற்குக் காரணம்', 'வறியவர்கள் பலராவதற்குக் காரணம் யாதெனில்', 'அறிவில்லாதார் பலராகவும் அறிவுடையோர் சிலராகவும் இருப்பதன் காரணம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இல்லாதவர்கள் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் என்பது இப்பகுதியின் பொருள்.



நோற்பார் சிலர் பலர் நோலா தவர்.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.
பரிப்பெருமாள்: தவஞ்செய்வார் சிலர்; அது செய்யதார் பலர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருளுமிதனானே வருமென்றது.
பரிதி: தவம் பண்ணினவர்கள் அற்பம். தவம் செய்யாதவர் பலராகையால் என்றவாறு.
காலிங்கர்: உலகத்தில் ஞானம் பெற நோற்பார் சிலர். மற்று நோலாதார் அளவிறந்தாராவர் என்றவாறு(மேலது)
பரிமேலழகர்: தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.

'தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவம் செய்வார் சிலராகவும் தவம் செய்யாதார் பலராகவும் இருத்தலேயாகும். (தவம் செய்தார் செல்வம் பெறுவர் என்பதனை, 'அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறுதுயாதும் இல்லை பெறுவான் தவம் (842) என்னும் குறள் குறிப்பின் உணர்த்தும்)', '(இது வரையிலும் சொல்லப்பட்ட முறையில் சரியானபடி) தவம் செய்கிறவர்கள் வெகு சிலர் தாம். தவம் செய்யாதவர்களே அதிகம்', 'தவஞ்செய்பவர் சிலர்; தவஞ் செய்யாதவர் பலர் என்பதே', 'தவம் செய்வோர் சிலராகவும், தவம் செய்யாதார் பலராகவும் இருப்பதே. (தவம் செய்வோர் அறிவுடையாராவர்; தவம் செய்யாதார் அறிவற்றவர் ஆவார்.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தவம் செய்வார் சிலர், தவம் செய்யாதார் பலராவர் என்பது இப்பகுதியின் பொருள்.


நிறையுரை:
இல்லாதவர்கள் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலர், தவம் செய்யாதார் பலராக இருப்பது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உலகில் பலதுறைகளிலும் இலர் பலராகவே இருக்கின்றனர். ஏன்?

முயல்வது தவம். தவத்தின் இலக்கணங்களைப் பின்பற்றி ஒருவர் தம்மிடமுள்ள இன்மையை நீக்க முயற்சிக்க வேண்டும்.
தனக்கு வந்த துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையுமே தவம் என்று அதிகாரத்து முதல் குறள் தவத்தினது இலக்கணம் கூறியது (261). தன் கடமையைச் செய்யும்போது தனக்கு வந்துற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு மேற்செல்லவேண்டும். இந்த முறையில், பிறர்க்கு எவ்வகை ஊறும் செய்யாதிருக்க வேண்டும் அதாவது மற்றவர்க்குத் தீங்கிழைத்து அவர்கள் இழப்பில் தாம் நன்மை அடையவேண்டும் என்றபடி இருக்கக்கூடாது. இத்தவத்தைச் செய்யாதார் பலராக இருப்பதே இன்மையர் பலராக உள்ளமைக்குக் காரணம்; அத்தவத்தன்மை சிலரிடமே காணப்படுவதால் உடையோர் சிலராக இருக்கக் காண்கிறோம்.
தம்கருமம் செய்வார் தவஞ்செய்வார் அதாவது தன் கடமைகளைக் கருத்துடன் செய்கின்றவர் தவம் செய்வார் ஆவார். இவரையே 'நோற்பார்' என இப்பாடல் சுட்டுகிறது. கடமையைத் தவமாக மேற்கொள்ளவேண்டும். கடமையைச் செய்யும் போது அல்லது ஒரு குறிக்கோளை நோக்கி முன்னேறிச் செல்லும்போது, எதிர்கொள்ளும் துன்பங்களயெல்லாம் ஏற்றுப் பொறுத்து, தடைகளையெல்லாம் தாங்கித்தாங்கி முயல்பவனே இறுதியில் வெற்றி காண்பான்; தன்னிடமுள்ள இன்மையை உடைமையாக மாற்றிக்கொள்வான். துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவன் தவமின்மையினால் அவம் செய்கின்றான்; இல்லாதவனாகவே இருக்கிறான். இப்படிப்பட்டவர்களே உலகில் பலராக இருக்கின்றனர் என வள்ளுவர் கூறுகிறார்.
எல்லா இல்லாமைக்கும் காரணம் ஒன்றுதான். அது தவத்தை முயலாமைதான். எந்த இன்மையையும் இட்டு நிரப்புவதற்கு விருப்பம் இருந்தாலும் அதற்கான தேடுதலோ அல்லது முயற்சியோ (தவமோ) பல பேரிடம் இல்லை என்பதைத்தான் குறள் இப்படி குறிக்கிறது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

உடைமையும் இல்லாமையும் வாழ்வில் எல்லா இடத்திலும் உண்டு. ஆனால் செல்வம் இல்லாதவர், வளர்ச்சியில்லாதவர், பேரிடர் நீங்கிப் பெரும்பயன் உறாதார், ஆற்றல் இல்லாதவர், அறிவு இல்லாதவர், கல்வி இல்லாதார், அருள் இல்லாதவர், வலிமை இல்லாதவர், வாழ்க்கையில் சிறந்த பேறுகளைப் பெற வழி இல்லாதவர், இன்பம் இல்லாதவர், எழில்நலமில்லாதவர் என இல்லாதவர்களே எங்கும் பெரும்பான்மையினராக உள்ளனர். உடையவர்கள் சிலராகவும் இல்லாதவர்கள் பலராகவும் இருக்கக் காரணம் என்ன?
தம் கருமத்தில் வெற்றி பெற தவம் தேவையாகிறது. இன்மைகளை நீக்க விரும்பிய நோக்கத்தைத் தவமாகச் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டும். இடைவிடாத முயற்சியும் ஒருவகைத் தவம்தான். சிலர் எளிய முயற்சியில் பெரும்பயன் அடைவர். சிலருக்கோ மிகக் கடின முயற்சி தேவைப்படும். துன்பத்தைத் தாங்கிக் கொண்டு முயற்சியோடும் முனைப்போடும் ஈடுபடுவோர் இன்மையை உள்ளமை ஆக்கிவிடுவர். இவர்கள் சிலராக இருக்கின்றனர். முயற்சியும் துன்பத்தைத் தாங்கும் பொறுமையும் இல்லாதவர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர். இவர்கள் பலராவர். அதாவது முயற்சித் தவமுடையார் சிலர். முயற்சித் தவமிலார் பலர்.

இல்லாமைக்குக் காரணம் முயற்சி இன்மைதான். இன்மை நீக்கும் முயற்சியில் வெற்றி பெறத் தவம் தேவையாகிறது. துயர் தாங்கி மற்றவர்க்கு ஊறு விளைவிக்காமல் மனஉறுதியுடன் தம் கடமையை முனைப்புடன் செய்தால் எவ்வின்மையும் இல்லாமல் ஆகிவிடும். அத்தகைய தவத்தைச் செய்பவர்கள் மிகச் சிலரே; அவர்கள் பலராக மாறவேண்டும் என்பது இக்குறள் கூறும் செய்தி.


இல்லாதவர்கள் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலர், தவம் செய்யாதார் பலராக இருப்பது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தவம் இல்லாமையே எல்லா இன்மைக்கும் காரணம்.

பொழிப்பு

இல்லாதவர்கள் பலராதற்குக் காரணம் தவம் செய்வார் சிலராகவும் தவம் செய்யாதார் பலராகவும் இருத்தலேயாகும்.