தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்
(அதிகாரம்:தவம்
குறள் எண்:268)
பொழிப்பு (மு வரதராசன்): தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
|
மணக்குடவர் உரை:
தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும்.
உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.
பரிமேலழகர் உரை:
தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - அது பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.
(தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)
இரா சாரங்கபாணி உரை:
தவ ஆற்றலால் தன்னுயிர் என்றும் தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் நீங்கப் பெற்றவனைப் பிற உலகத்துயிர்களெல்லாம் மதித்துக் கைகூப்பித் தொழும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்.
பதவுரை:
தன்னுயிர்-தனது உயிர்; தான்-தான்; அற-நீங்க; பெற்றானை-பெற்றவனை; ஏனைய-மற்ற; மன்-நிலைபெற்ற உயிர்(உலக உயிர்); எல்லாம்-அனைத்தும்; தொழும்-கும்பிடும்.
|
தன்னுயிர் தான்அறப் பெற்றானை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை;
மணக்குடவர் குறிப்புரை: உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.
பரிப்பெருமாள்: தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை;
பரிப்பெருமாள் குறிப்புரை: தன் என்றது சலிப்பற்ற அறிவை; உயிரென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல். மேற்கூறிய நெறியேயன்றி அகங்காரம் விடல் வேண்டும் என்பதூஉம் அதனாற் பயனும் கூறப்பட்டது.
பரிதி: தன் ஆத்மா ஈடேறப் பார்ப்பானை;
பரிமேலழகர்: தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை;
பரிமேலழகர் குறிப்புரை: தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார்.
'தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை' எனப் பொருள் உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன்னுயிர் தன்முனைப்பு இல்லாதவனை', 'மற்ற உயிர்களைக் காட்டிலும் தன்னுயிர் பெரிது என்ற பாசமும் மற்றவர்களைக் காட்டிலும் தான் உயர்ந்தவன் என்ற அகங்காரமும் அடியோடு விட்டொழித்தல் பெற்றுவிட்டவனை', 'தன்னுடைய உயிரைத் தனக்கு முழுதும் உரியதாகப் பெற்றவனை', 'தன்னை அடக்கி ஆளும் வன்மை உடையவனை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தன்னுயிர் என்றும் தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் நீங்கப் பெற்றவனை என்பது இப்பகுதியின் பொருள்.
ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும் .
பரிப்பெருமாள்: ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும் .
பரிதி: 'இவனாலே நாமும் ஈடேறுவோம்' என்று சகல ஆத்மாவும் தொழும் என்றவாறு.
பரிமேலழகர்: அது பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.
'ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்து உயிரெல்லாம் வணங்கும்', 'உலகத்திலுள்ள மற்றெல்லாரும் வணங்குவார்கள்', 'அங்ஙனம் பெறாத மற்ற உயிர்களெல்லாம் வணங்கும்', 'பிற உயிர்களெல்லாம் வணங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிற உயிர்களெல்லாம் தொழும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தன்னுயிர் தான்அறப் பெற்றானை பிற உயிர்களெல்லாம் தொழும் என்பது பாடலின் பொருள்.
'தன்னுயிர் தான்அறப் பெற்றான்' யார்?
|
தனது உயிர் பற்றிப் பொருட்படுத்தாமலும் தான் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பவனுமான தவம் செய்பவனை உலக உயிர்கள் எல்லாம் கொண்டாடும்.
உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை ஆகிய பண்புகளுடன், தன் உயிர் பற்றியும் தான் என்று எண்ணுவதையும் முற்றிலும் நீங்கப்பெற்று உலக நன்மைக்காக முயலுபவன் இந்த உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாவற்றாலும் போற்றப்படுவான்.
பாடலிலுள்ள, 'உயிர்கள் எல்லாம் தொழும்' என்ற தொடர், இங்கு சொல்லப்படுபவர் உலக மேன்மைக்காகத் தவம் செய்பவர் என்பதை உய்த்துணரச் செய்கிறது.
அநீதி, அடக்குமுறை இவற்றை எதிர்த்து நிற்பவர்கள், பகுத்தறிவுக்குப் பாதை வகுப்பவர்கள், உயிர்களின் உரிமைக்காகவும் நலத்துக்காகவும், உயிர்ச்சூழலுக்காவும் போராடுபவர்கள் முதலானோர் 'தான்' என்ற அகப்பற்றும் 'தனது' என்ற புறப்பற்றும் அறவே நீங்கி தவம் மேற்கொள்பவர்களாவர். அவர்கள் தம்மைக் குறித்த நினைவில்லாதவர்களாயிருப்பர். ஒரு சீரிய குறிக்கோளை மட்டுமே மனத்தில் நிறுத்தி, செயல்புரிந்து அதை அடைவதற்காக இறுதி மூச்சுள்ளவரை பாடுபடுவர்கள். இத்தகையவர்களை உலகம் போற்றி வணங்கிக் கொண்டாடுவதைக் கண் முன்னர்க் காண்கிறோம். அவர்கள் போன்றோர் மேற்கொள்ளும் முயற்சித் தவமே இங்கு கூறப்படுகிறது. மகாவீரர், புத்தர், இயேசு, சாக்ரடீஸ், காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற உலகப் புகழ்பெற்ற பெருமக்கள் நினைவுக்கு வரலாம். தன்னுயிர்/தன்னுடல் காக்க நினையாமல் மற்றவர் குறித்து மட்டும் கருதுவோரைப் பிற உயிர்கள் தொழுவதில் வியப்பில்லை.
உயர்தகைமை பெற்ற மாந்தர்கள் போற்றப்படுவதே 'தொழ' என்ற சொல்லால் குறிக்கப் பெறுகிறது. இங்குள்ள மன்னுயிர் என்ற சொல்லுக்கு நிலையான உயிர் என்றும் உலக உயிர்கள் என்றும் பொருள் கூறுவர்.
|
'தன்னுயிர் தான்அறப் பெற்றான்' யார்?
'தன்னுயிர் தான்அறப் பெற்றான்' என்றதனை தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவன், தன் ஆத்மா ஈடேறப் பார்ப்பான், தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவன், தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவன், தன் உயிரைத் தானே தனக்கு முழு உரிமையாகப் பெற்றவன், உயிரின் இயற்கை முனைப்பாகிய 'தான்' என்ற உணர்வு அற்ற தவமுடையார், தன்னுயிர் தன்முனைப்பு இல்லாதவன், தவ ஆற்றலால் தன்னுயிர் என்றும் தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் நீங்கப் பெற்றவன், மற்ற உயிர்களைக் காட்டிலும் தன்னுயிர் பெரிது என்ற பாசமும் மற்றவர்களைக் காட்டிலும் தான் உயர்ந்தவன் என்ற அகங்காரமும் அடியோடு விட்டொழித்தல் பெற்றுவிட்டவன், தன்னுயிர் என்றும் 'தான்' என்றும் உண்டாகும் பற்றுகள் முழுமையாக நீங்கப் பெற்ற தவத்தினன், தன்னுடைய உயிரைத் தனக்கு முழுதும் உரியதாகப் பெற்றவன், தன்னை அடக்கி ஆளும் வன்மை உடையவன், தன் உயிரையே தான் என்று எண்ணும் சுய நலம் எண்ணம் முற்றிலும் நீங்கப்பெற்றவன், தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவன், தவ வலிமையால் தன் உயிர் என்றும், தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் அறப்பெற்ற குணமுடையான் என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.
'தன்னுயிர் தான் அறப் பெற்ற' தவம் செய்பவனை, தன்னுயிரானது தான் என்று கருதும் கருத்து அறப்பெற்றவன் என்றும் செருக்கு அறப்பெற்றவன் அல்லது பற்றுக் கெடுமாறு ஒழுகுபவன் என்ற வகையில் விளக்கம் செய்தனர். இக்குணங்கள் தவவலிமையால் பெறப்பட்டன என்றும் கூறினர்.
பரிதி தன் ஆத்மா ஈடேறப் பார்ப்பானை 'இவனாலே நாமும் ஈடேறுவோம்' என்று சகல ஆத்மாவும் தொழும் என்றார். 'தனது உயிர் ‘தான்’ என்பது நீங்கப் பெற்றவனை' என்று வ உ சி கூறுவர். காமாட்சி சீனிவாசன் 'தன்னுயிர் தானறப் பெற்றானை' என்பது பரிமேலழகர் கருத்துக்கியைய 'முழுவதும் தன்வயத்தனாயவனை' (One who has complete control over oneself) எனப் பொருள்படுமா மணக்குடவர் கருத்துக்கியைய தன் தனித்தன்மை பற்றிய உணர்வை இழந்தவனை (one who has lost the sense of one's individuality) எனப் பொருள்படுமா என்பது ஐயமே எனச் சொல்லி முன்னதே பொருளாகலாம் என முடிக்கிறார். ஜி வரதராஜன்: தவ வலிமையால் தன் உயிர் என்றும், தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் அறப்பெற்ற குணமுடையானை எனப் பொருள் கூறினார். தமிழண்ணல் 'தன் உயிர் தான் அறப் பெறுதல் தன் உயிர்ப்பண்புகளை வளர்த்துத் தான் முழுமை அடைதல்' என்றார்.
‘தன்னுயிர் தானறப் பெற்றானை’ என்பதற்கு 'தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை' என்ற மணக்குடவர் உரை சிறப்பாக உள்ளது.
|
தன்னுயிர் என்றும் தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் நீங்கப் பெற்றவனை உலக உயிர்களெல்லாம் தொழும் என்பது இக்குறட்கருத்து.
இடைவிடாத பக்குவநிலையாலே உயிர்கள் உய்யத் தவம் செய்பவர் பற்றியது.
தன்னுயிர் தன்முனைப்பு இல்லாதவனை பிற உயிர்களெல்லாம் தொழும்.
|