துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
(அதிகாரம்:தவம்
குறள் எண்:263)
பொழிப்பு (மு வரதராசன்): துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்வதை மறந்தார்களோ?
|
மணக்குடவர் உரை:
துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை.
இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.
பரிமேலழகர் உரை:
மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்.
( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)
வ சுப மாணிக்கம் உரை:
இல்லறத்தார் ஏன் தவஞ்செய்ய மறந்தனர்? துறவிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவா?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மற்றையவர்கள் தவம் மறந்தார்கொல்.
பதவுரை:
துறந்தார்க்கு-துறவிகட்கு; துப்புரவு-துய்க்கப்படுவன (உண்டி, மருந்து, உறைவிடம் போன்றவை); வேண்டி-விரும்பி; மறந்தார்-நினைவொழிந்தார்; கொல்-(ஐயம்); மற்றையவர்கள்-பிறர்கள்; தவம்-நோன்பு.
|
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ?
பரிப்பெருமாள்: துறந்தார்க்கு உணவு கொடுத்தலை வேண்டி மறந்தாராயினரோ?
பரிதி: துறந்து தவம் பண்ணினவற்கு ஆகாரம் விசாரிக்க வேண்டிப் பிறந்தார்களோ;
பரிமேலழகர்: துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பி மறந்தார் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: துப்புரவு - அனுபவிக்கப்படுவன.
'துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை விரும்பி மறந்தார் போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துறந்தார்க்கு உதவி செய்தலை விரும்பி மறந்தனர் போலும்', 'துறவிகளுக்கு வேண்டிய வசதிகளைச் செய்வதற்காகத்தான் மறந்திருக்கிறார்கள்', 'துறந்தார்க்கு உண்டி முதலிய துய்க்கும் பொருளை உதவ விரும்பி மறந்தனர் போலும்!', 'தவநெறியில் செல்லாது இல்லற நெறியில் நிற்பவர்கள் துறந்தவர்கட்கு உதவுதல் வேண்டி மறந்தார்கள் போலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
துறந்தவர்கட்கு துய்க்கும் பொருள் உதவுதலை விரும்பி மறந்தனர் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.
மற்றை யவர்கள் தவம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்வார் தவஞ் செய்தலை.
மணக்குடவர் குறிப்புரை: இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.
பரிப்பெருமாள்: இல்வாழ்வார் தவஞ் செய்தலை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தானத்தினும் தவம் மிகுதியுடைத்தென்றது.
பரிதி: ஸ்திரி பர்த்தாக்கள் என்றவாறு.
பரிமேலழகர்: இல்லறத்தையே பற்றி நிற்பார் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.
'இல்வாழ்வார் தவஞ் செய்தலை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்தார் தவம் செய்தலை', 'இல்லறத்தார்கள் தாமும் தவம் மேற்கொள்வதை', 'துறவாத மற்றவர்கள் தவஞ்செய்தலை (மற்றையர்-இல்லறத்தார்; இதனால் தவம் துறவினர் மேற்கொள்ளுவது போலும்.)', 'தாம் தவம் செய்தலை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
துறவாத மற்றவர்கள் தவஞ்செய்தலை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
துறந்தவர்கட்கு உதவுதலை விரும்பி துறவாத மற்றவர்கள் தவஞ்செய்தலை மறந்தனர் போலும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?
|
எல்லோரும் தவம் செய்ய முயன்றால் யார் அவர்களுக்கு உணவிடுவது?
துறந்தவர்களுக்கான அன்றாடத் தேவைகளைத் தந்து உதவுவதற்காக மற்றவர்கள் தவம் செய்வதை மறந்துவிட்டார்களா என்ன? எனக் கேட்கிறார் வள்ளுவர் இங்கு.
துறந்தவர் அல்லாத மற்றவர்கள் இல்லறத்தாரே. இல்லற வாழ்வு நடத்துபவர்களைப் பார்த்து 'நீங்கள் ஏன் தவம் மேற்கொள்ளவில்லை? அப்படி நீங்களும் சென்றுவிட்டால், பின் துறவிகளுக்கு யார் சோறிடுவார் என்பதற்காகவா?' என வினவுகிறார் இப்பாடலில்.
துறந்தார் என்ற சொல் இவ்வதிகாரத்தில் இக்குறளில் மட்டும்தான் உள்ளது. எனவே இப்பாடல் துறந்து புறம்சென்று தவம் செய்பவர்களைப் பற்றியது எனக் கொள்ளலாம். இங்கு சொல்லப்பட்ட துறவியர் ஊருள் வாழ்ந்தனர் ஆதல் வேண்டும். தோலுடுத்திக் கிடைக்கும் காய்கனிகளை உண்டு, முற்றாகக் காட்டில் வாழ்ந்தவராக இருந்தால் பிறர் அவர்க்கு உணவு, உடை முதலியவற்றை அளித்து உதவ வேண்டிய நிலை இராது.
ஒருவகையில் இக்குறட்போக்கு முற்றும் துறந்து தவம் செய்பவர்களை எள்ளுவது போன்றே உள்ளது. மற்றவர் தவம் செய்ய ஏன் மறந்தார் என்பதற்கு, மெல்லிய நகைச்சுவையோடு 'துறந்தவர்கள் துய்ப்பதற்கான பொருள் உதவி செய்தற்காகத் தாம் தவத்தை மறந்துவிட்டிருப்பார்களாயிருக்கும் என அதற்கு வள்ளுவர் விளக்கம் தருகின்றார்.
துறந்தார்க்கும் ............... இல்வாழ்வான் என்பான் துணை (இல்வாழ்க்கை குறள்எண்: 42 பொருள்: துறவிகளுக்கும்..........இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான்) என்றும் அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்? (இல்வாழ்க்கை, குறள்எண்: 46 பொருள்: அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்துவானாயின் அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன?) என்றும் இல்வாழ்க்கை அதிகாரத்தில் துறவு என்பதற்கு ஆதாரமாக இருப்பது இல்லறம்; துறவறத்தில் செல்வதால் என்ன கிடைத்துவிடப் போகிறது? என்ற பொருள்களில் சொல்லப்பட்டன. அவற்றை ஒட்டியே இப்பாடல் கருத்தும் அமைந்துள்ளது. மேலும், இல்லறத்தில் இருந்தும் தவம் செய்யலாமே என்று குறிப்பும் தெரிகிறது.
|
இக்குறள் கூறும் செய்தி என்ன?
'தானத்திலும் தவம் மிகுதியுடைத்து' என்று இக்குறள் கூறுவதாக மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரை வரைந்தனர். அதுபோலவே பரிமேலழகரும் 'துறந்தார்க்கு துப்புரவு செய்யும் தானத்தின் மேல் உள்ள விருப்பமிகுதியால் இல்லறத்தார் தவத்தை மறந்தார் போலும் என்று கூறியதால், தானத்தினும் தவம் சிறந்தது என்பது பெறப்படும்' என்ற பொருளில் விளக்கம் தந்தார். இல்வாழ்பவர்கள் தமது தவக் கடமையை மறந்து, துறந்தவர்களே அனைத்தும் என்ற மயக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றனர் என்று இக்குறட்பொருளை விளக்கினார் கு ச ஆனந்தன்.
துறந்தாரல்லாதாரும் தவத்தினை மறத்தல் ஆகாது. அவ்வாறிருந்தும் அவர்கள் மறந்தது எதனால்? என்று கேட்பதுபோல் குறள் அமைப்பு உள்ளது. துறவிகட்கு இன்றியமையாதனவாகிய பொருள்களை வழங்கவே இல்லறத்தார் தவ வாழ்வை மறந்தார் போலும் என்று குறளிலேயே இதற்குப் பதிலும் உள்ளது. ஆனாலும் குறள் நடை 'தவம் என்பது புறத்துறவியர்க்கு மட்டும் உரியதல்ல; இல்லிலிருந்து தவம் செய்வதும் தவம்தான். துறந்தாரல்லாதார் தவம் செய்வதை மறக்கவில்லை; துறவறம் செய்பவர்களுக்கு இல்லறத்தார் துணை வேண்டியதாகிறதே! அது மட்டுமல்ல, மற்றையவர்கள் இல்லிலிருந்தே தவம் மேற்கொள்கின்றனர்' என்பதையும் தெரிவிப்பதாக உள்ளது.
|
துறந்தவர்கட்கு உதவுதலை விரும்பி துறவாத மற்றவர்கள் தவஞ்செய்தலை மறந்தனர் போலும் என்பது இக்குறட்கருத்து.
துறவு மேற்கொண்டுதான் தவம் செய்யவேண்டுவதில்லை.
துறந்தார்க்கு உதவ வேண்டும் என்பதற்காக துறவாத மற்றவர்கள் தவம் செய்ய மறந்தனர் போலும்.
|