இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0262



தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது

(அதிகாரம்:தவம் குறள் எண்:262)

பொழிப்பு (மு வரதராசன்): தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருத்தமாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

மணக்குடவர் உரை: தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை.
இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.

பரிமேலழகர் உரை: தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.
(பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)

வ சுப மாணிக்கம் உரை: தவக்கோலமும் தவமுடையவர்க்கே சிறப்பு; அதனைத் தவமிலாதார் கொள்வது பழிப்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தவமும் தவமுடையார்க்கு ஆகும்; அஃதிலார் அதனை மேற்கொள்வது அவம்.

பதவுரை:
தவமும்-தவவடிவும்; தவமுடையார்க்கு-தவஒழுக்கம் உடையவருக்கு; ஆகும்-ஆம்; அவம்-பயனில் முயற்சி; அதனை-அதை; அஃது-அது; இலார்-இல்லாதவர்; மேற்கொள்வது-முயல்வது.


தவமும் தவமுடையார்க்கு ஆகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்;
பரிப்பெருமாள்: தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்;
பரிதி: இளமையிலே தவஞ்செய்கிறோம் என்றாகிலும், தவத்துக்கு இடையூறு ஆக்கும்;
பரிமேலழகர்: பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே;

'தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் 'தவஞ்செய்கிறோம் என்றாகிலும், தவத்துக்கு இடையூறு ஆக்கும்' என்று பரிதியும் 'தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவக்கோலமும் தவமுடையவர்க்கே பொருந்தும்', 'தவம் என்பதும் மேலே சொல்லப்பட்ட தவக் குணங்களாகிய 'உற்ற நோய் நோன்றல் உயிர்க் குறுகண் செய்யாமை' என்ற இரண்டும் உடையவர்களுக்குத்தான் பலிக்கும்', 'தவஞ் செய்தலும் முன்னைத் தவஞ் செய்தவர்கட்கே நன்றாக முடியும்', 'தவச் செயலை மேற்கொள்வது தவத்தில் உண்மையான பற்றுடையார்க்கே கூடும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தவவடிவம் ஏற்பது தவஒழுக்கம் உடையார்க்கே கூடும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.
பரிப்பெருமாள் ('யஃதில்லார்' பாடம்): அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை யேறட்டுக்கொள்வது பயனில்லையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தீவினையுடையார்க்குத் தவம் வாராது; வரினுந் தப்புமென்றது. இத்துணையும் தவத்தின் விழுப்பம் கூறிற்று.
பரிதி: போனசென்மத்தில் விட்டகுறை உண்டாகில், அத்தவத்தை முயலப்பண்ணி முடிப்பிக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.
பரிமேலழகர் குறிப்புரை: பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.

'அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை' என்று மணக்குடவ்ரும் பரிப்பெருமாளும் 'போனசென்மத்தில் விட்டகுறை உண்டாகில், அத்தவத்தை முயலப்பண்ணி முடிப்பிக்கும்' என்று பரிதியும் 'அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அத்தவமில்லாதவர் தவக்கோலத்தை மட்டும் மேற்கொள்வது வீண் செயலே யாம்', 'அந்தக் குணங்கள் இல்லாதவர்கள் தவத்தை மேற்கொள்வது வீண் முயற்சியாகும்', 'முன்னைத் தவம் இல்லாதவர்கள் தமது ஆற்றலுக்கு மிஞ்சிய தவத்தை மேற்கொள்ளுதல் வீண் முயற்சியாம்', 'அங்ஙனம் உண்மைப் பற்றில்லாதார் மேற்கொள்வது பயனற்றதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதனைத் தவமிலாதார் மேற்கொள்வது பழிப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தவவடிவம் ஏற்பது தவஒழுக்கம் உடையார்க்கே கூடும்; அதனைத் தவமிலாதார் மேற்கொள்வது அவம் என்பது பாடலின் பொருள்.
'அவம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

தவஒழுக்கம் உடையார்க்கே தவவடிவம் பொருந்தும்.

தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும். தவஒழுக்கம் இல்லாதார் தவத்தை மேற்கொள்வது வீண் முயற்சி அல்லது பழியாகும் என்கிறது பாடல். 'தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாதிருத்தலும்' என்று முற்குறள் (261) தவத்திற்கு வரையறை செய்தது. இதை எல்லோராலும் மேற்கொள்ளமுடியுமா? தவ ஒழுக்கம் உடையவர்களாலேயே அது இயலும்; தவ ஒழுக்கம் இல்லாதவர்கள் அதாவது உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை மேற்கொள்ளாதவர்கள் தாமும் தவம் செய்கிறோம் என்பது வீண் முயற்சி என்கிறது இக்குறள்.

‘தவமும் தவமுடையார்க் காகும்’ என்பதிலுள்ள தவத்தை ஆகு பெயராகக் கொண்டு தவக்கோலம் எனவும் ‘தவமுடையார்’ என்பதிலுள்ள தவத்தை ஆகுபெயராகக் கொண்டு தவ இலக்கணம் எனவும் கொண்டு இக்குறளுக்கு உரை கண்டனர்.
தவமாகச் செய்வேன் என்ற தன்முனைப்புடையவருக்கே தவம் ஆகக்கூடியது; நிலைத்த கொள்கை, நிலைத்த மனம் இல்லா மற்றவர்கள் தவம் செய்யப் புகுந்தால் அது அவமாக முடியும். எனவே தவம் செய்பவர்க்கு அவர் மன உறுதிப்பாடே, அவரை தவத்திற்கு உரியவராக ஆக்குகின்றது என்றபடியும் உரை செய்வர்.
தவமுடையார் என்றதற்குத் தவத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்குரிய இயல்பான உணர்வும், முயற்சியும் உறுதியும் உடையவர்களாக இருத்தல் எனப் பொருள் கூறுவர்.

இக்குறளிலுள்ள 'தவம்' என்ற முதல் சொல்லுக்கு முன்தவம் எனப் பொருள் கண்டு உரை செய்தார் பரிமேலழகர். முற்றவம் என்பது முற்பிறப்பில் செய்த தவத்தைக் குறிக்கும். பரிமேலழகர் உரைப்படி முற்பிறப்பினில் தவம்செய்தவரால் மட்டுமே இப்பிறப்பில் தவம் செய்யக்கிடைக்கும் என்றாகிறது. மேலும் இவர், 'பழக்கத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய்ச் செய்து முடித்தலினால் 'தவமுடையார்க்கு ஆகும்' என்றும். முற்பிறப்பில் தவஞ் செய்த பழக்கமிலாதார்க்குத் தவத்தினைச் செய்து முடித்தற்குரிய அறிவும், ஆற்றலும் இல்லாமையினால் தவம் இடையூறின்றி நிறைவேறாமையால் அவமாம்' என்ற பொருளில் விரிவுரையும் கூறினார். 'முன் தவத்திற்கும் முன்தவம் வேண்டும் என்று வரம்பின்றிச் செல்லுமாகலின்', தவம் என்றதற்கு முன் தவம் என்று பொருள் காண்பது முற்றிலும் பொருந்தாது எனக் குறளறிஞர்கள் பலர் இவருரையை மறுத்துள்ளனர்.

'அவம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'அவம்' என்ற சொல்லுக்குப் பயனில்லை, பயன் இல் முயற்சி, வீண்முயற்சியாகும், பழிப்பு, வீண் செயலேயாம், இழிவாகும், பயனற்றதாகும், வீண்செயல், பயனற்ற செயல், சமுதாயக் கேடான பாவம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தவ வேடம் கொண்டாருள் நல்லோரும் தீயோரும் உளர். கொள்ளாதாருள்ளும் நல்லவர் தீயர் உளர்; எனினும், வேடத் தீயோர் நம்பிக்கையைப் பயன்கொண்டு வாழ்பவர்; நம் அறிவோட்டத்தைத் தடுப்பவர்; நல்வேடத்தார்க்கும் பழிகொண்டு வருபவர். 'அவம் அதனை அஃதிலார் (தவப்பண்பு இல்லாதவர்) மேற்கொள்வது' அதாவது ‘அவமதனை அஃறிலார் மேற்கொள்வது’ என்ற தொடருக்கு, அக்கோலத்தை அவ்வொழுக்கில்லார் பூணுவது அவர் தமக்கே யன்றி மெய்த்தவ வேடத்தார்க் கெல்லாம் பழியாகும் என வ சுப மாணிக்கம் இக்குறட்பொருளை நயம்பட உரைப்பார்.

'அவம்' என்ற சொல்லுக்கு பழிப்பு என்பது பொருத்தமான பொருள்.

தவவடிவம் ஏற்பது தவஒழுக்கம் உடையார்க்கே கூடும்; அதனைத் தவமிலாதார் மேற்கொள்வது பழிப்பு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தவம் தவத்தையே உறுதிப்பாடாகக் கொண்டவர்க்கேயாகும்.

பொழிப்பு

தவத்தைக் கொள்வது தவக் குணங்கள் உடையார்க்கே கூடும்; தவமிலாதார் அதனை மேற்கொள்வது பழிப்பு