அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
(அதிகாரம்:புலால் மறுத்தல்
குறள் எண்:259 )
பொழிப்பு (மு வரதராசன்): அவிப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
|
மணக்குடவர் உரை:
நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
பரிமேலழகர் உரை:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
(அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.}
குன்றக்குடி அடிகளார் உரை:
தீயின்கண் நெய் முதலியவற்றை அவியாகச் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்வதிலும் சிறந்தது, ஒன்றின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை. வேள்வியினும் சிறந்தது கொல்லாமை. வேள்வி முதலியவற்றின் காரணமாகக் கொலை நிகழ்தமையை மறுத்தது இது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை, அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் நன்று.
பதவுரை:
அவி-அவிக்கப்படுவது; சொரிந்து-பெய்து; ஆயிரம் வேட்டலின்-ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஒன்றன்-ஒன்றினுடைய; உயிர்-உயிர்; செகுத்து-(போக்கி)கொன்று; உண்ணாமை-உண்ணாதிருத்தல்; நன்று-நன்மையுடையது.
|
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;
பரிப்பெருமாள்: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;
பரிதி: நெய் முதலானவற்றை ஓமத்திலே சொரிந்து ஆயிரம் யாகம் செய்வதில்;
காலிங்கர்: வேள்வித் தீக்கு உரித்தாயுள்ள நெய்யும் அசனமும் முதலாகிய ஓமத்திரவியங்களைக் குறைவறச் சொரிந்து ஆயிரம் வேட்டலினும்
பரிமேலழகர்: தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;
'நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆகுதி பெய்து ஆயிரவேள்வி செய்தலினும்', 'நெய் முதலியவற்றைத் தீயிற் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்தலினும்', 'ஓமத் தீயில் அவிர்ப்பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைக் காட்டிலும்', 'தீயினிடம் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட என்பது இப்பகுதியின் பொருள்.
ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
பரிப்பெருமாள்: ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தெளிவுடையாருண்ணார் என்றார். அவருண்ணாதது யாதனைக் கருதியென்றார்க்கு, அது எல்லாப் புண்ணியத்தினும் நன்றென்று கூறப்பட்டது.
பரிதி: ஓர் உயிரைக் கொன்று புலால் தின்னாமை நன்று என்றவாறு.
காலிங்கர்: மிக நன்று, மற்றொன்றினையே கொன்று அதன் ஊனை உண்ணாமை என்றவாறு.
பரிமேலழகர்: ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.
'ஓர் உயிரைக் கொன்று புலால் தின்னாமை நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஓருயிரைக் கொன்று தின்னாமை மேல்', 'ஓருயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாமை நல்லது', 'இன்னொரு பிராணியின் உயிரை வதைத்து அதன் ஊனைத் தின்னாதிருப்பது நல்லது', 'ஓருயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது. (உயிரைக் கொன்று யாகம் செய்தலை மறுக்கின்றார்.' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?
|
உயிரைக் கொன்று வேள்வி செய்வதால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?
தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து சடங்கு ஆற்றல், புலால் உண்ணாமை இவற்றில் எது நல்லது என்பதை இப்பாடல் ஆய்கிறது.
ஆரிய அந்தணர்களுக்கு அவர்களாலேயே வகுத்துக்கொண்ட ஆறு தொழில்களில் தீ வளர்த்து வேள்வி செய்தல் ஒன்றாகும். வடமொழியில் யாகம் என்று சொல்லப்படுவது தமிழில் வேள்வி எனப்படுகிறது. இந்த வேள்வி தெய்வங்களின் விருப்பத்திற்காகச் செய்யப்படுவது என்று சொல்லப்படுகிறது. வேறுலகத்திலுள்ள தெய்வங்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் வேள்விக் குண்டத்தில் போடப்படும். இதில் குதிரை, பசு, உடும்பு போன்ற உயிர் விலங்குகளும் உயிரோடு அளிக்கப்பட்டன. 'வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன' என்று மனுநூல் (சூத்.5) கூறுகிறது. வெந்த அவற்றின் மாமிசத்தை, தெய்வத்தின் பெயரால், யாகம் வளர்த்தவர்களும் யாகம் செய்வித்தவர்களும் உண்டு மகிழ்ந்தார்கள். இது தேவர்களுக்கு அக்கினி பகவான் மூலம் உணவைக் கொடுத்துஅனுப்பி ஆரியர்கள் வழிபடும் முறையாகும். அவியுண்ட தெய்வங்கள் மகிழ்ந்து வேள்வி செய்வோர் கேட்ட வரம் தருவர் என்பது அவர்தம் நம்பிக்கை. உயிர்க்கொலை செய்து வேள்வி செய்வது புலைசூழ் வேள்வி எனப்பட்டது.
(இந்நாட்களில் வளர்க்கப்படும் வேள்வித் தீயில் உயிர்களைப் போடாமல், விலை மதிப்புள்ள தங்க, வெள்ளிக்காசுகள், பட்டுச்சேலை போன்ற பொருள்களையும் நெய், பால், தானியங்கள் போன்றவற்றையும் சொரிகின்றனர்.)
அவி என்பது வேள்வித் தீயில் சொரியப்படும் உணவாகும். தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடப்படும் எல்லாப் பொருளையும் வடமொழியில் ஹவிஸ் என்பர். அதுவே தமிழில் 'அவி' யாயிற்று. உயிர்க்கொலைகள் செய்யப்பட்டு முன்னாளில் வேள்விகள் நடந்தன என்பது வரலாற்று உண்மை. புத்தர் இத்தகைய புலைசூழ் வேள்வியைக் கண்டித்ததும் வேள்வியை நேரில் கண்ட புத்தரின் உள்ளத் துடிப்பு பிம்பிசாரனின் யாகத்தைக் கலைத்ததும் பதிவாக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகள். மணிமேகலைக் காப்பியத்திலும் ஆபுத்திரன் என்ற அறவோன் புலைசூழ் வேள்வியைத் தடுத்தான் என்பதான காட்சிகள் வருகின்றன. மேலும் பழம் நூல்கள் மூலமும் கொலை வேள்விகள் நடந்தேறியன என்பது தெரியவரும்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரியா ரகத்து (கொல்லாமை குறள்எண்:329 பொருள்: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்) என்ற குறளுக்கு உரை விளக்கம் தரும்போது பரிமேலழகர் "கொலை வினையர் என்றதனான் வேள்விக்கண் கொலையன்மையறிக" எனக் கூறியுள்ளார். இவ்விளக்கம் "வேள்விக்கண் செய்யப்படும் கொலை" என்று ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அப்படிப்பட்ட கொலை வேள்விக்காக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம் என்பதாக அமைந்துள்ளது. மற்றொரு குறளான நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை (கொல்லாமை குறள்எண்: 328 பொருள்: கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்) என்பது எந்த நோக்கமாக இருந்தாலும் உயிர்ப்பலி இழிவானது என்று கூறுகிறது. ஓர் உயிரைக் கொன்று சாந்தி முதலியன செய்வதால் என்ன ஆக்கம் கிடைத்தாலும், மேன்மையுள்ளோர் உயிர்ப் பலியிடும் பாவத்தைச் செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். இக்குறட்பாக்களும் அக்கால வேள்வியில் உயிர்க்கொலைகள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன.
...................விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் (விருந்தோம்பல் 87), .................விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார் (விருந்தோம்பல் 88) என விருந்தோம்பலை வேள்வி என்று ஆசிரியர் குறித்திருத்தலால் வேட்டல்-விருந்தோம்பல் என்று பொருள் கொள்ளலாம் என்று சிலர் கூறினர். இங்கு 'அவி சொரிந்து வேட்டல்' என அடை கொடுத்துக் கூறுவதால் விருந்தோம்பலைக் குறியாது வேள்வியையே குறிக்கும்' எனத் தெளிவுபடுத்துவார் இரா சாரங்கபாணி.
செகுத்து என்பது போக்கி என்ற பொருள்பட்டு உயிர் நீக்குவதைக் குறிக்கும்.
மற்றொரு உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமை ஆயிரம் வேள்விகள் செய்வதைக் காட்டிலும் மேல் என்கிறது பாடல்.
எல்லா உயிர்களும் இயற்கையின் படைப்பே. எனவே, மனிதர்களைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு.
எல்லோரும் வாழ வேண்டும் என்று எண்ணுவதுடன் நில்லாமல், எல்லா உயிரும் வாழவேண்டும் என்று எண்ணி, விலங்கு, பறவை முதலிய மற்ற உயிர்க்கும் தீங்கு செய்யாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று வள்ளுவர் விரும்புவார். உயிர்களைக் கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியன சிறந்த அறங்கள் என்று கருதியவர் வள்ளுவர். தெய்வத்தின் பெயரால் கொலைசூழ் வேள்விகள் பல செய்தலினும் ஓர் உயிரை நீக்கி அதன் ஊன் உண்ணாமை அதாவது புலால் உண்ணா நோன்பு நல்லது என்கிறார் இங்கு.
இக்கருத்துக்களில் உறுதியாக நின்று, எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், உயிர்க்கொலை வேள்வி தனக்கு ஏற்புடையதல்ல என்ற தன் நிலைப்பாடைத் தெளிவாகப் பதிவு செய்கிறார்.
|
இக்குறள் கூறும் செய்தி என்ன?
இக்குறளின் நேரடிப் பொருள் அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றின் உயிரை நீக்கி அதன் உடம்பை உண்ணாமை நன்று என்பது.
புலால் மறுத்தல் அதிகாரத்தில் உள்ளதால் இது புலால் உண்ணாமையை வலியுறுத்த வந்தது என்பது தெளிவு.
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது கொலை வேள்வியையா அல்லது கொலைத் தீமை கலவாத வேள்வியையா? பழைய உரையாசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர், பரிமேலழகர் ஆகிய அனைவரும் நெய் சொரிந்து செய்யப்படும் வேள்வியையே சொல்கின்றனர்; இவர்கள் உரைகளில் உயிர்ப்பலி என்பது கூறப்படவில்லை.
இக்குறள் பற்றி தண்டபாணி தேசிகர் தரும் விளக்கம்: 'இதனால் வேள்விகளையும் அவற்றால் எய்தும் பயனையும் உட்கொண்டு, அவற்றைக் காட்டிலும் கொல்லா விரதத்தின் மேன்மையைக் குறித்துக் கொள்ளச் செய்கிறார்..... கொலை நிகழ்த்துவது கடவுட்காயின் பாவமாகாது என்பதைக் காட்டிலும் கொலையே இல்லாமலிருக்கும் நிலை பெரிது என்பதே திருவள்ளுவர் துணிவு'. இவர் கருத்துப்படி இக்குறள் கொலைவேள்வி பற்றியதே. கொலையற்ற வேள்வியே இப்பாடலில் சொல்லப்படுவது என்றால் ஒப்புமைக் கூறுகளின் பொருத்தம் முழுமையாக அமையாது. கொலை அல்லாத வேள்வியை இங்கு சொல்லவேண்டிய தேவையே எழவில்லை. மேலும் சொல்லாட்சி, நடைப்போக்கு இவற்றையும் நோக்கும்போது புலைசூழ் வேள்வியையே வள்ளுவர் இங்கு குறிக்கிறார் என்பது தெளிவாகும்.
இனி, இக்குறள் வேள்விகளை மறுத்து சொல்லப்பட்டது என சிலர் விளக்கம் கூறினர். வள்ளுவர் கொலை வேள்வியை மட்டும் வேண்டாம் என்றாரா அல்லது வேள்வியையே முற்றிலும் மறுத்தாரா? இக்குறள் வேத வேள்விக்கு -அவி வேள்வி ஆயினும் அல்லது கொலை வேள்வி ஆயினும்- எதிரானது என்று இன்றைய பெரும்பான்மை
தமிழரிஞர்களும் ஆய்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் வேள்வியை ஆதரிப்போர் ‘ஆயிரம் யாகத்தைவிட அகிம்சை உயர்ந்தது’
என்றால் அது கைவிடத்தக்கது என்பது பொருள் அல்ல; வேத வேள்வியைவிட புலால் உண்ணாமை சிறந்தது என்று கூறியதாகத்தான் கொள்ள வேண்டும்
என்பது இவர்கள் கருத்து. இக்குறளில் வேட்டல் தாழ்வாகக் குறிப்பிடப்படவில்லை; வேள்வி சாடப்படவில்லை என்று இவர்கள் வாதிடுவர். மேலும்
அவர்கள் குறள் 413-ஐத் துணைக் கொள்வர்: செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (கேள்வி குறள்எண்:413 பொருள்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்)
என்று குறளில் 'அவியுணவின் ஆன்றோர்' என்ற சொல்லாட்சி உயர்வுநவிற்சியிலே சொல்லப்பட்டிருப்பதால் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர்
அல்ல என்று சொல்வர். 'அவி' என்ற சொல்லே குழப்பத்துக்குக் காரணம். அவி என்று பொதுவாக குறள் எண் 413-லும் இக்குறளிலும் அடையின்றி
குறித்ததால் இச்சிக்கல் எழுகிறது. இக்குறளில் சொல்லப்பட்ட அவி புலைசூழ் வேள்வியில் சொரியப்படுவது என்றும் குறள் 413-இல் கூறப்பட்ட அவி
கொலையற்ற வேள்வியில் போடப்பட்டது என்றும் கொண்டால் ஓரளவு குழப்பம் நீங்கும்.
வேள்வி என்பது ஒரு வகையான வழிபாடு தான். அதில் சான்றாண்மை நிறைந்த வள்ளுவர் குறுக்கிடமாட்டார். கொலையற்ற வேள்விக்கு வள்ளுவர் ஏன் மறுப்புத்
தெரிவிக்க வேண்டும்? எனவே வேள்விக்கே எதிரான பாடல் இது என்று கொள்ளமுடியாது. ஆனால் இப்பாடல் கொலைவேள்விக்கு எதிரானது - அது கடவுளுக்கே
ஆயினும்- என்பதில் சிறுதும் ஐயம் இல்லை.
உயிர்க்கொலைக் கொடுமை செய்து நிகழ்த்தப்படும் வேள்வியைக் கண்டிக்கும் அதேவேளையில் புலால் உண்ணாமையின் மேன்மையும் இங்கு உணர்த்தப்படுகிறது. தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்காக சடங்குகள் செய்வதைவிட கொன்ற உடம்பின் புலால் உண்ணாமல் இருப்பது நல்லது என்பது இக்குறள் கூறும் செய்தி.
|
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.
படையல் என்ற பெயரிலும் ஊன் உண்ணவேண்டாம் எனும் புலால் மறுத்தல் பாடல்.
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலினும் ஓர் உயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாமை நல்லது.
|