இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0258செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:258)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர் உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்.

மணக்குடவர் உரை: குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை.
இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் ளிவுடையாருண்ணாரென்றது.

பரிமேலழகர் உரை: செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.
( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)

இரா சாரங்கபாணி உரை: குற்றத்தின் நீங்கிய அறிவுடையார் உயிரின் நீங்கிய ஊனைத் தின்ன மாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார்.

பதவுரை:
செயிரின்-குற்றத்தினின்றும்; தலைப்பிரிந்த-நீங்கிய; காட்சியார்-தோற்றத்தார்; உண்ணார்-உண்ணமாட்டார்; உயிரின்-உயிரினின்றும்; தலைப்பிரிந்த-நீங்கிவந்த; ஊன்-உடம்பு.


செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார்;
பரிப்பெருமாள்: குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார்;
பரிதி: அசுத்தத்தின் நெறியை அறிந்த காட்சியினார்;
உயிர் போன உடல், சவம் என்பதாம்.
காலிங்கர்: பாவத்தின்கண் நீங்கி நின்ற அறிவினையுடையோர்; <
பரிமேலழகர்: மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார்;

'குற்றத்தின் நீங்கிய தெளிவுடையார்/அறிவினையுடையார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றத்தை நீக்கிய அறிஞர்', 'பிற உயிர்களுக்குத் துன்பம் உண்டாக்குகிற குற்றங்கள் செய்வதை விட்டொழிந்த நோக்கமுள்ளவர்கள்', 'குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையவர்.', 'மயக்கம் ஆகிய குற்றத்தினின்றும் நீங்கிய அறிவினை உடையார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குற்றத்தை நீக்கிய தோற்றம்கொண்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்ணார் உயிரினின்று நீங்கின உடம்பை.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.
பரிப்பெருமாள்: உண்ணார் உயிரினின்று நீங்கின உடம்பை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனைத் தெளிவுடையா ருண்ணாரென்றது.
பரிதி: உண்ணார், உயிர்போன உடலை என்றவாறு.
பரிதி குறிப்புரை: உயிர் போன உடல், சவம் என்பதாம்.
காலிங்கர்: .... [காலிங்கரின் உரையில் இப்பகுதி சிதைந்துள்ளது]........... <
பரிமேலழகர்: ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.

'ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிரை நீக்கிக் கொண்டுவந்த இறைச்சியை உண்ணார்', 'உயிரைப் போக்கிய ஊனைப் புசிக்கக் கூடாது', ' உயிரின் நீங்கிய ஊனை உண்ணமாட்டார்', 'ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஓர் உயிரை நீக்கி வந்த புலாலை உண்ணமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குற்றத்தை நீக்கிய தோற்றம்கொண்டார் ஓர் உயிரை நீக்கி வந்த புலாலை உண்ணமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'உயிரின் தலைப்பிரிந்த ஊன்' என்றால் என்ன?

தம்மீது குற்றம் நேராது காக்கும் நோக்கம் கொண்டவர் இன்னொரு உயிரை அழித்துச் செய்யப்படும் ஊன் உணவை உண்ணமாட்டார்கள்

ஒவ்வொருவருக்கும் அவரவரது பழக்கவழக்கங்கள், நடத்தை முதலியவற்றால் அவரைப்பற்றிய ஒரு தோற்ற உணர்வு (Image) உருவாகும். மெய்ம்மையான, குற்றமற்ற தோற்றத்தைத் தொடர்ந்து பேணிக் கொள்ள விரும்புவோர் தம்மாலோ பிறராலோ கொல்லப்பட்டதன் ஊனையோ அல்லது இயற்கையிலே உயிர் பிரிந்ததன் உடலையோ உண்ணார்.
உயிர் நீங்கிய உடம்பு பிணம் என அறியப்படும். பிண உடலின் புலாலைத் தின்னற்க என்கிறது பாடல். முன்னர் ஊனைப் புண் என்றார். இங்கு அதைப் பிணத்தின் உடல் என்கிறார். ஊன் தின்பது உயிர்க்கொலைக்குச் சமம் என்பது குறள் கருத்தாதலால், தமது தோற்றத்தின்மீது கறை படியாது காக்கும் இயல்புடையார், உயிர் நீக்கப்பட்ட ஊனைத் தின்னமாட்டார்கள் என்கிறது இப்பாடல். உயிரற்ற பிணத்தை எவரேனும் உண்பார்களா என்று இழிவு தோன்ற கேட்டு புலால் மறுக்கச் சொல்கிறார் வள்ளுவர்.
'செயிரிற்றலைப் பிரிந்த காட்சியர்' என்ற தொடர்க்குக் குற்றம் நீங்கிய தெளிந்த அறிவுடையார் என்று உரையாளர்கள் பொருள் கூறுவர்.

'உயிரின் தலைப்பிரிந்த ஊன்' என்றால் என்ன?

'உயிரின் தலைப்பிரிந்த ஊன்' என்றதற்கு உயிரினின்று நீங்கின உடம்பு, உயிர்போன உடல், ஓர் உயிரின் நீங்கி வந்த ஊன், ஓர் உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊன், ஓருயிரினை விட்டு நீக்கிய ஊன், உயிர் நீங்கிய ஊன், உயிரை நீக்கிக் கொண்டுவந்த இறைச்சி, உயிரின் நீங்கிய ஊன், உயிரைப் போக்கிய ஊன், உயிரில் இருந்து நீங்கிவிட்ட உடலாகிய புலால், ஓர் உயிரின் நீங்கி வந்த ஊன், ஓர் உயிர் பிரிந்த பிணமாகிய ஊன் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'தலைப்பிரிதல்' என்பது ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல் என்பார் தேவநேயப் பாவாணர். தலைப்பிரிந்த என்பதில் 'தலை என்பது பொருளுணர்த்தாத முன்னொட்டாய் (உபசர்க்கமாய்) வந்தமை பற்றித் 'தலைப்பிரிந்தார்' என்பது ஒரு சொல் என்று கூறப்பட்டது என விளக்குவார் இரா சாரங்கபாணி.
தலைப்பிரிந்த என்பதற்கு இங்கு நீங்கிய அல்லது கொன்று நீக்கப்பட்ட எனப் பொருள்கொள்வர். 'உயிரின் தலைப்பிரிந்த ஊன்' ஓர் உயிரின் நீங்கி வந்த ஊன் எனப்பொருள்படும்.

'உயிரின் தலைப்பிரிந்த ஊன்' என்றதற்கு உயிர்போன உடல் என்பது பொருள்.

குற்றத்தை நீக்கிய தெளிவுடையவர் ஓர் உயிரை நீக்கி வந்த புலாலை உண்ணமாட்டார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலால்மறுத்தல் குற்றமற்ற தோற்றத்தை ஒருவருக்குத் தரும்.

பொழிப்பு

குற்றத்தை நீக்கிய அறிவுடையார் உயிரை நீக்கி வந்த புலாலை உண்ண மாட்டார்

.