இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0257உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:257)

பொழிப்பு (மு வரதராசன்): புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப்புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

மணக்குடவர் உரை: புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின்.
இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும்.
('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: புலால் என்பது பிற உயிர்களின் உடம்பில் உள்ள புண்ணேயாகும். புண் என்ற உண்மையை அறியும் அறிவுடையவர்கள் அதனை உண்ணாமல் விலக்குதல் வேண்டும். உண்மை யுணரும் அறிவில்லாதவரே புலால் உண்பார் என்பதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புலாஅல் பிறிதுஒன்றன் புண்; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் .

பதவுரை:
உண்ணாமை வேண்டும்-தின்னக் கூடாது; புலாஅல்-ஊன், இறைச்சி; பிறிது-மற்றது; ஒன்றன்-ஒன்றினுடைய; புண்-புண்; அது-அது; உணர்வார்-அறிவார்; பெறின்-நேர்ந்தால்.


உண்ணாமை வேண்டும் புலாஅல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('புலாலை':பாடம்): புலாலை யுண்ணாமை வேண்டும்;
பரிப்பெருமாள்: புலாலை யுண்ணாமை வேண்டும்;
பரிதி: புலாலைத் தின்னாமல் வேண்டும்;
காலிங்கர்: இப்படியாதலான் எஞ்ஞான்றும் புலாலினை உண்ணாமையைக் கருதவேண்டும் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை உண்ணாதொழியல் வேண்டும்.

'புலாலை யுண்ணாமை வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புலாலை யாரும் உண்ண விரும்பார்', 'உண்ணாதிருத்தல் வேண்டும்', 'அவர்களாவது அதை உண்ணாதிருக்க வேண்டும்', 'புலால் உண்ணாது தவிர்த்தல் வேண்டும் ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புலால் உண்ணாதிருத்தல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறிதுஒன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('பிறிதுஒன்றின்':பாடம்): அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.
பரிப்பெருமாள்: அது பிறிதொன்றின் புண். ஆதலான்; அதனை அவ்வாறு காண்பாருண்டாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: காணாதார்க்கு அமிழ்தாயே தோற்றும். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.
பரிதி: அது எது எனில் தன்னுடம்பின் புண்ணைத் தானே தின்னான். அதுபோல் பிறிதொன்றின் புண் என்றவாறு.
காலிங்கர்: தனது உண்ணாமைத் தன்மையை ஓர்ந்துணர்வாரைப் பெறின் மற்றவ் ஊன்தானும் பிறிதொன்றினது புண் அல்லது மற்றொன்றும் இல்லை;
பரிமேலழகர்: புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.

'அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உரை மூலத்திற்குத் தொடர்பில்லாமல் உள்ளது.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓருடம்பின் புண் என்று அருவருப்புத் தோன்றின்', 'பிறிதோர் உடம்பின் புண் என்று புலாலின் புன்மை அறிந்து அருவருப்பாராயின் அதனை', 'புலால் துண்டம் இன்னொரு பிராணியின் (உடலை வெட்டி வெட்டித் துண்டிக்கும்போது உண்டான) புண். அதை உணர்ந்து பார்க்கக் கூடியவர்கள் இருந்தால்', 'ஊன் பிறிதோருடலின் புண் ஆகும்! அதனைத் தெரிந்து கொள்பவரைப் பெற்றால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறிதோர் உடம்பின் புண் என்று அதனைத் தெரிந்து கொள்பவராக இருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறிதுஒன்றன் புண் என்று அதனைத் தெரிந்து கொள்பவராக இருந்தால், புலால் உண்ணாதிருத்தல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
புலால் ஏன் 'பிறிதுஒன்றன் புண்' எனக் கூறப்பட்டது?

புலால் என்பது பிறிதொரு உடம்பின் புண் என்று உணர்ந்தாயிற்று. பின்னும் ஏன் அதை உண்ணவேண்டும்?

புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே என்ற உண்மையை உணர்ந்தால் ஊனை உண்ணா திருத்தல் வேண்டும். புண்ணை உண்ணுதல் என்ற எண்ணமே மிகவும் வெறுப்பூட்டுவது. அதை உண்பது என்பது எந்த அளவுக்கு அருவருப்பாயிருக்கும்? அதை உணார்ந்து கொல்லப்பட்ட பிற உயிர்களின் உடம்பின் புண்ணைத் தின்ன வேண்டாம் என்கிறது பாடல். அப்படியும் அதனை உண்பவர்கள் எவ்வளவு இழிநிலையினராய் இருப்பர் என்பது கூறாமல் கூறப்பட்டது.
‘அது உணர்வார்ப் பெறின்’ என்பதற்கு, ஊன் என்பது புண் என்ற உண்மையை நோய்ப்பட்டதென்றும் துப்புரவு அற்றதென்றும் அருவருப்பானது என்றும் உணரப்பெற்றால் என்பது பொருள்.
'வேண்டும்' என்ற சொல்லாட்சியால் புலால் உண்ணவே கூடாது என்று கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறுகிறது குறள்.
சில சமயங்கள் குறிப்பிட்ட சில விலங்குகளின் இறைச்சிதான் தூய்மையற்றது எனச் சொல்ல, வள்ளுவர் அனைத்து ஊனுணவும் தூய்மையற்றது எனக் கூறுகிறார்.

'பிறிதுஒன்றன் புண்' எனப் புலால் ஏன் கூறப்பட்டது?

'பிறிதுஒன்றன் புண்' என்ற தொடர்க்குப் பிறிதொன்றின் புண். தன்னுடம்பின் புண், பிறிதொன்றினது புண் அல்லது மற்றொன்றும் இல்லை, பிறிதோர் உடம்பின் புண், வேறோர் உயிரின் புண், பிறிதோர் உடலை அறுத்தெடுத்த புண், பிறிதோர் உடம்பின் தூய்மை யற்ற புண், ஓருடம்பின் புண், பிறிதோர் உடம்பின் புண், இன்னொரு பிராணியின் (உடலை வெட்டி வெட்டித் துண்டிக்கும்போது உண்டான) புண், பிற உயிர்களின் உடம்பில் உள்ள புண் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மருத்துவ அறிவியல் உலகம் ஊன் உண்பதால் சில நன்மைகளும் உண்டு என்று கூறினாலும் பொதுவாக மாந்தர் தம் உடல்நலம் கருதியும், உணவு ஒழுக்கம் எண்ணியும் புலால் உண்ணாமல் இருப்பது நல்லது. வள்ளுவர் அருள் நெஞ்சம் கொண்டவராதலால், அறநோக்கில், கொல்லப்பட்ட எந்த உயிரினது ஊனையும் உண்ணக்கூடாது என்றே சொல்வார். புலாலைப் புண் என்று கூறுவதால் அது தூய்மையற்ற அருவருக்கத்தக்க பொருள் என்று உணர்த்தப்படுகிறது.

தன்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
செம்புண் வறுத்த வறைதின்பர்
(அறநெறிச்சாரம் 102 பொருள்: தமக்கு ஒரு புண் ஏற்பட்டால் அதை மற்றவர் கழுவித் தூய்மை செய்து மருந்தைப் பூசி ஆற்றுவர். (ஆனால்) அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாம் இறைச்சியான வறுத்த புலாலை உண்பர்.) என்ற பாடல் புண்-புலால் உணவு என்று இழிவுபடக் குறிப்பிடுகிறது.

பிறிதோர் உடம்பின் புண் என்று அதனைத் தெரிந்து கொள்பவராக இருந்தால் புலால் உண்ணாதிருத்தல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலால்மறுத்தல் அருவருப்பான உணவை நீக்கும்.

பொழிப்பு

பிறிதோர் உடம்பின் புண் என்று உணர்ந்தார் புலாலை உண்ண மாட்டார்