இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0256தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:256)

பொழிப்பு (மு வரதராசன்): புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவர்.

மணக்குடவர் உரை: தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை.
இது, கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை என்றார்க்கு, அதனாலும் கொலைப் பாவம் வரும் என்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.
('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.)

தமிழண்ணல் உரை: உலகில் தின்பதற்காக ஊனை வாங்குவாரின்றேல், விற்பதற்காக உயிர்களைக் கொன்று விலைக்குக் கொடுப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
கொல்லுதல்தானே கூடாது; விலைக்கு வாங்கி உண்டால் பாவமில்லை என்பாரை நோக்கியது இது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தினற்பொருட்டாற் உலகு கொல்லாது எனின் விலைப்பொருட்டால் ஊன்தருவார் யாரும் இல்.

பதவுரை:
தினல்பொருட்டால்--தின்பதற்காக; கொல்லாது-கொலையைச் செய்யாது; உலகு-மக்கள்; எனின்-என்றால்; யாரும்-எவரும்; விலைப்பொருட்டால்-விற்பதற்காக; ஊன்-உடம்பு; தருவார் இல்-இல்லை.


தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('கொள்ளா' பாடம்): தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின்;
பரிப்பெருமாள்: தினற்காக உலகத்தார் கொல்லார்களாகில்;
பரிதி: தின்பது பொருட்டாகப் புலால் விற்பார்கள்;
காலிங்கர்: இவ்வுலகமாவது, ஒன்றின் சுவை கருதி மற்றதனைத் தினற்பொருட்டால் கொல்லாதாயின்;
பரிமேலழகர்: பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின்,
பரிமேலழகர் குறிப்புரை: 'உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது.

'தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின்' என்று மணக்குடவர் இப்பகுதிக்கு உரை தந்தார். பழம் ஆசிரியர்களில் இவர் மட்டுமே 'கொள்ளா' எனப் பாடம் கொண்டார். மற்றவர்கள் 'கொல்லா' எனக் கொண்டு 'ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின்' எனப் பொருள் கூறுவர்,

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தார் தின்னுதற்கு புலால் வாங்காவிடின்', 'தின்னுதற்காக உலகத்தார் ஊன் வாங்காராயின் (கொள்ளாது என்ற பாடம் கொள்ளப்பட்டது. கொல்லாது-பிறர் பாடம்)', 'உண்பதற்கென்று பிற உயிரைக் கொல்லுகிற வழக்கம் உலகத்தில் இல்லையென்றால்', 'உலகத்தார் ஊனைத் தின்பதற்காக வாங்குவதில்லை யென்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தின்னுதற்காக உலகத்தார் வாங்காவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது, கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை என்றார்க்கு, அதனாலும் கொலைப் பாவம் வரும் என்று கூறிற்று.
பரிப்பெருமாள்: விலைக்காக ஊன் விற்பாரும் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, கொன்று தின்னாது விலைக்குக்கொள்வார்க்குக் குற்றமென்னை என்றார்க்கு, அதனானும் கொலைப் பாவம் வரும் என்று கூறப்பட்டது.
பரிதி: புலால் விட்டாரிடத்தில் புலால் விற்பார் இல்லை; அஃதெப்படி என்றால், அகரத்திலே மாங்கிசம் விற்பாரில்லை என்றறிக என்றவாறு. [அகரம்-பார்ப்பனச் சேரி]
காலிங்கர்: இவ்வுலகத்து யாவரும் பொருள் விலையின் பொருட்டாக ஒன்றின் ஊனினைக் கொண்டு வந்து விற்பாரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.

'விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விற்பதற்கென்று விற்பார் யாரும் இரார்', 'எவரும் விலைக்காக ஊன் விற்க மாட்டார்கள்', 'மாமிசத்தை விலைக்கு விற்பவர்களும் இருக்க மாட்டார்கள்', 'விற்பதற்காகக் கொலைசெய்து ஊனைக் கொடுப்பவரும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விலைக்காகக் கொடுப்பதற்கென்று எவரும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தின்னுதற்காக உலகத்தார் வாங்காவிட்டால், விலைக்காகப் புலால் கொடுப்பதற்கென்று எவரும் இல்லை என்பது பாடலின் பொருள் ('கொள்ளா' என்பது பாடம்).
'விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

புலால் உண்பவர் இல்லாவிட்டால் கொல்லப்பட்ட உயிர்களுக்கு விலை இல்லை அதன் வணிகமும் இருக்காது.

ஊன் தின்பதற்காக உயிர்கள் கொல்லப்படுகின்றன. உண்பவர் விலை கொடுப்பதால் ஊன் விற்கப்படுகிறது. புலால் தின்பவர்கள் எல்லாரும் அதை உண்பதை நிறுத்தினால் உயிர்கள் கொல்லப்படா. அதை விலைக்கு விற்பவர்களும் இல்லாமற் போய்விடுவர். ஊனுணவை யாவரும் விட்டொழிப்பின் ஊன் விற்பாரும் அதற்காக உயிர்களைக் கொல்வாரும் இல்லா ஒருநிலை ஏற்படும். உலகமே கொல்லாமை அறம் பூண்டதாகிவிடும் என்பது வள்ளுவரின் உரத்த சிந்தனை.
'உணவுக்காக ஓர் உயிரைக் கொல்வதுதான் குற்ற உணர்ச்சியைக் கொடுக்கும். அதன் ஊன் உண்பவனுக்கு அந்தக் குற்ற உணர்வு இல்லை. உண்பவர் பலருக்கும் கொல்பவர் யாரென்றே தெரியாதுதான். 'யாரோ கொல்கின்றார்கள். அதனால் தின்பது குற்றமன்று' என ஊன் உண்பவர்கள் சொல்வர். உயிர்க்கொலை செய்பவன் அதை ஏன் செய்கிறான்? புலால் உண்பவரின் விருப்பத்தை நிறைவு செய்து அதில் தானும் ஆதாயம் அடைவதற்காகவே கொல்லுகிறான் அவ வூன் வணிகன். ஊன் தின்பவர் இல்லையானால், கொல்வாரும் இருக்க மாட்டார்கள்; விலைக்கு விற்பவரும் இருக்கமாட்டார்கள்; ஆகவே ஊன் தின்பதுவே கொலைக்குக் காரணம்; எனவே ஊன் தின்பவரும் கொல்கின்ற பாவம் செய்தவர் ஆகின்றார். இன்றைய சட்டப் பார்வையில், புலால் உண்பவர்கள் பிறரைத் தம்முடைய புலால் விருப்பம் காரணமாகக் கொலைக்குற்றம் செய்யத்தூண்டுபவராகின்றனர்.
புத்தர் மறைவுக்குப் பின் வந்த புலால் மறுக்க விரும்பாத பௌத்த சமயத்தின் ஒரு பிரிவினர், 'தாம் கொல்லாது விலைக்கு வாங்கிய ஊனை உண்ணுதல் பாவமில்லை' என்று கூறிக்கொண்டிருந்த கருத்தை மறுப்பதற்காக எழுந்தது இப்பாடல் என்பர்.

தின்பது காரணமாக கொல்லவில்லையானால் பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்ற கருத்துப்பட மணக்குடவர் தவிர்த்த மற்றவர்கள் 'கொல்லாது' எனப் பாடம் கொண்டு உரை செய்தனர். மணக்குடவர் கொள்ளாது எனப் பாடம் கொண்டார். 'தருவார்' என்ற சொல் பாடலில் இருப்பதால் அதற்குப் பொருந்த 'கொள்வார்' எனக் கொண்டார் இவர். 'ஊன் 'கொள்வார்' இல்லையாயின் விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை' என்னும் இவரது உரை சிறப்பாக உள்ளது.

புலால் மறுத்தல் அதிகாரம் இல்லறத்தோர்க்கும் உரியதே என்பதை உறுதி செய்வதற்கு இக்குறளும் ஒரு சான்று என்பர். துறவியர் மட்டும் ஊன் உண்ணாதிருப்பின், அதையுண்ணும் இல்லறத்தோர் பொருட்டு விலங்குகளைக் கொல்வோரும் விற்பாரும் இருப்பார்களே என்பதாலும் பொருளைத் துறந்த துறவி விலைகொடுத்து ஊன் வாங்குவது எப்படி முடியும் என்பதாலும் இக்குறள் இல்லறத்தானையும் நோக்கிக் கூறியதாகும் என்பர்.

'விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

'விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்' என்ற பகுதிக்கு விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை, விலைக்காக ஊன் விற்பாரும் இல்லை, புலால் விட்டாரிடத்தில் புலால் விற்பார் இல்லை, யாவரும் பொருள் விலையின் பொருட்டாக ஒன்றின் ஊனினைக் கொண்டு வந்து விற்பாரும் இல்லை, பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை, விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவர், விற்பதற்காக உயிர்களைக் கொன்று விலைக்குக் கொடுப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள், ஊனை விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், விற்பதற்கென்று விற்பார் யாரும் இரார், எவரும் விலைக்காக ஊன் விற்க மாட்டார்கள், விலைக்கு விற்பவர்களும் இருக்க மாட்டார்கள், விற்பனைப் பொருளாகத் தருவார் எவரும் இரார், விற்பதற்காகக் கொலைசெய்து ஊனைக் கொடுப்பவரும் இல்லை, விற்பதற்கு ஊன் தருவார் யாருமிலர், பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார், யாருமே ஊனை விலைக்கு விற்க மாட்டார்களே, விலைக்காகப் புலாலை விற்பவர் எவரும் இல்லை என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

புலால் உண்பவர் யாரும் இல்லையென்றால், அதை வாங்கவும் ஆளில்லை. எனவே ஊனை விலைப் பொருளாக யாரும் விற்கமாட்டார்கள். உலகம் ஊன் உணவு இல்லாததாக மாறிவிடும்.
ஊனின் சுவைக்காகவே அதை உண்பவர் அதன் பின்னுள்ள அருளற்ற காட்சியை உணர்வதில்லை. புலால் சந்தையில் விற்கப்படாத காலமும் வரும். எப்படி போர் இல்லாத பூமியை நோக்கி நாம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறோமோ, அதுபோலவே புலால் உண்ணுபவர் இல்லாததாகவும் இவ்வுலகு ஒரு காலத்தில் மாறும். அப்பொழுது வள்ளுவரின் எண்ணம் நனவாகும்.

தின்னுதற்காக உலகத்தார் வாங்காவிட்டால், விலைக்காகப் புலால் கொடுப்பதற்கென்று எவரும் இல்லை என்பது இக்குறட்கருத்து ('கொள்ளா' என்பது பாடம்).அதிகார இயைபு

புலால்மறுத்தல் மேற்கொள்ளப்படும் உலகில் ஊன் சந்தை இராது.

பொழிப்பு

தின்னுதற்காக உலகத்தார் ஊன் வாங்காவிட்டால் எவரும் விலைக்காக ஊன் கொடுக்க மாட்டார்கள்