இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0255உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:255)

பொழிப்பு (மு வரதராசன்): உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

மணக்குடவர் உரை: உயிர் நிலையைப் பெறுதல் ஊனையுண்ணாமையினால் உள்ளது. ஊனை உண்ண, உண்டாரை எல்லா உலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது என்றவாறு.
அங்காவாது-புறப்பட விடாமை.

பரிமேலழகர் உரை: உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.
(உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: உயிர்கள் உடம்போடு நிலைபெற்று வாழ்தல் என்பது ஊன் உண்ணாமையால்தான். ஒருவன் ஊன் உண்பானாயின் அவனது இழிந்த உடலைத் தின்ன நரகமும் வாய்திறக்காது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உயிர்நிலை ஊன் உண்ணாமை உள்ளது உண்ண அளறுஅண்ணாத்தல் செய்யாது .

பதவுரை:
உண்ணாமை-(ஊன்) உண்ணாதிருத்தல்; உள்ளது-இருக்கின்றது; உயிர்நிலை-உயிரால் நிற்கப்படுவது (உடம்பு); ஊன்-உடம்பு; உண்ண-தின்ன; அண்ணாத்தல்-அங்காத்தல் அதாவது வாய் திறத்தல்; செய்யாது-செய்யாது; அளறு-நரகம். (சேறு, புதைகுழி என்றும் பொருள் உண்டு).


உண்ணாமை உள்ளது உயிர்நிலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயிர் நிலையைப் பெறுதல் ஊனையுண்ணாமையினால் உள்ளது;
பரிப்பெருமாள்: ஊனையுண்ணாமையால் உயிர் நிலையைப் பெறுதலால்;
பரிப்பெருமாள் குறிப்புரை: உயிர்நிலை என்றது உயிர்க்கு நிலைபேறாகிய முத்தித் தானம்.
பரிதி: புலால் விடுத்தல் உயிர்நிலை பெறுதல்;
பரிமேலழகர்: ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; [ஒருசார் உயிர்-தின்பதற்கு உரியவாகாத உயிரினங்கள்]

'உயிர் நிலையைப் பெறுதல் ஊனையுண்ணாமையினால் உள்ளது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிர்கள் உடம்போடு நிலைபெற்று வாழ்தல் என்பது ஊன் உண்ணாமையால்தான்', 'மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா சத்துப் பொருள்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன', 'உயிருக்கு உறுதியான நன்னிலை, ஊன் உண்ணாமையால் உளதாவது', 'உயிர்கள் உடம்போடு வாழ்தல் ஊன் உண்ணாமை என்னும் அறத்தினைச் சார்ந்துள்ளது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உயிருக்கு உறுதியான நிலை, ஊன் உண்ணாமையால் உள்ளது என்பது இப்பகுதியின் பொருள்.

ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊனை உண்ண, உண்டாரை எல்லா உலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: அங்காவாது-புறப்பட விடாமை.
பரிப்பெருமாள்: ஊனுண்ண எல்லா உலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: அங்காவாது-புறப்பட விடுதலின்மை. இஃது உண்பார்க்குளதாகும் குற்றம் கூறிற்று.
பரிதி: புலால் உணவு நரகத்தை விட்டு மேலேறவொட்டாது என்றவாறு.
பரிமேலழகர்: ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.
பரிமேலழகர் குறிப்புரை: உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

'ஊனை உண்ண, உண்டாரை எல்லா உலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் ஊன் உண்பானாயின் அவனது இழிந்த உடலைத் தின்ன நரகமும் வாய்திறக்காது', 'உயிர் போன பிணத்தை ஏற்றுக் கொள்ள நரகம்கூட வாய் திறக்காது', 'ஊன் உண்டால் துன்பம் அல்லது நரகமானது உண்டவனை விட்டு நீங்காது. ('அண்ணாத்தல் செய்வது' என்று பாடமானால் விழுங்க வாய்திறக்கும் என்பது பொருள்.)', 'அந்நிலை கெடுமாறு உயிரைக் கொன்று ஊனைத் தின்றால் நரகம் கூட அவனை வெறுக்கும். ஏற்றுக் கொள்ள வழி திறவாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஊன் உண்பானாயின் அவனது உடலை ஏற்க நரகமும் வாய்திறக்காது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை. ஊன் உண்பானாயின் அவனது உடலை ஏற்க நரகமும் வாய்திறக்காது என்பது பாடலின் பொருள்.
'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்ற பகுதி குறிப்பது என்ன?

ஊன் உண்பவனை நரகம் கூட வெறுத்து ஒதுக்கும்.

மாந்தர் உயிர் நிலைத்து நிற்க ஊன் உண்ண வேண்டியதில்லை. புலால் உண்ணாதிருந்தாலும் நீண்டு நிலைக்கும் அவ்வுயிர். ஆனால் புலால் உண்டுவிட்டால், அவன் இறந்தபின் ஊன் உண்ட இழிந்த அவன் உடலை (பிணத்தை) ஏற்றுக் கொள்வதற்குக் கொடிய நரகம்கூட வாயில் திறவாது.
மக்கள் மறைவுக்குப்பின் அறஞ்செய்தவர் என்றால் தேவருலகம் எனச் சொல்லப்படும் இன்ப உலகம் செல்வர் என்றும் அறந்தவறியார் என்றால் நரகம் (அளறு) புகுந்து துன்பம் எய்துவர் என்றும் தொன்மங்கள் கூறும். கொடிய நரக உலகத்திற்கு வருவர்களை விழுங்கப் பசி எடுத்ததுபோல் அது வாய் திறந்து காத்திருக்குமாம். ஊன் உண்பவருக்கு நரகம்தான் கிட்டும் என்பதைக் கூற வந்த வள்ளுவர், அவனது இழிந்த உடலை உட்கொள்வதற்கு அந்த நரகமும் வாய்திறக்காது என இழிவுபடச் சொல்லி முடிக்கிறார்.

'அண்ணாத்தல் செய்யாது அளறு’ என்பதற்கு ஊனுண்டவனை விழுங்கிய நரகம் பின் உமிழ வாய்திறவாது எனப் பரிமேலழகர் உரை கூறுவர். அவர் உரைக்கு ‘அளறு’ முதற்கண் ஒருமுறை வாய்திறந்து விழுங்கிக் கொண்டது எனப் பொருள் கொள்ளவேண்டும். ‘அண்ணாத்தல்’ என ஒருமுறை வாய் திறப்பே குறட்கண் குறிக்கப்படுதலின், ஊனுண்டவனை நரகம் கூட ஏற்றுக் கொள்ள வாய்திறவாது என உரைப்பதே உரைச்சிறப்பும் ஊனுண்பானுக்கு இழிவு தருவதும் ஆகும் (இரா சாரங்கபாணி). இப்பகுதிக்கு 'இழிந்த உடலை (புலாலை) நரகமும் உண்ணாது' என்றும் 'ஊனுண்ண முந்துகிற கொடியோரை, நரகம் கூட வா வென்றழைக்க வாய்திறக்காது' என்றும் உரை கூறியுள்ளனர். அண்ணாத்தல் செய்யாது அளறு என்பதற்கு ஊனுண்டவனை நரகம் கூட விழுங்க வாய் திறவாது என்பது இயல்பான உரையாகும்.

நரகத்தை 'அளறு' என்றும் 'ஆரிருள்', 'இருள்சேர்ந்த இன்னாஉலகம்' என்றும் குறள் குறிக்கும்.
இப்பாடலைத் தாப்பிசைப் பொருள்கோள் முறையில் அமைந்தது என்பர். ஒரு செய்யுளின் நடுவில் நிற்கும் சொல் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் சென்று சேர்ந்து பொருள் தரும் முறையைத் தாப்பிசைப் பொருள்கோள் எனக் கூறுவர். ஊஞ்சல் போல (அதாவது நடுவில் உள்ள பலகை முன்னும் பின்னும் போவதுபோல) இடைநின்ற சொல் இரண்டு பக்கமும் சென்று சேருவது தாப்பிசைப் பொருள்கோள். இக்குறளில் சொற்கள் அமைந்துள்ளவாறு பொருள் கொண்டால், உண்ணாமை உள்ளது உயிர்நிலை என்ற முதல் பகுதி ‘உணவு உண்ணாமல் ஒருவன் இருந்தால் உயிர் நிலைக்கும்’ எனப் பொருள்படும். இக்குறளின் நடுவில் உள்ள ஊன் என்னும் சொல்லை இக்குறளின் முன்னும் பின்னும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். அதாவது ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண, அண்ணாத்தல் செய்யாது அளறு என்று பொழிப்புரைக்க வேண்டும்.

'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்ற பகுதி குறிப்பது என்ன?

'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றதற்கு

 • உயிர் நிலையைப் பெறுதல் ஊனையுண்ணாமையினால் உள்ளது,
 • ஊனையுண்ணாமையால் உயிர் நிலையைப் பெறுதலால்,
 • புலால் விடுத்தல் உயிர்நிலை பெறுதல்,
 • ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது,
 • உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை,
 • உலகில் வாழும் உயிர்கள் உடம்பொடு பொருந்தி அழியாமல் நிலைபெறுவது மனிதர்கள் ஊன் உண்ணாமையைப் பொறுத்துள்ளது,
 • புலால் உண்ணாமையால் நீண்ட ஆயுள் உண்டு,
 • உயிர்கள் உடம்போடு நிலைபெற்று வாழ்தல் என்பது ஊன் உண்ணாமையால்தான்,
 • மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா சத்துப் பொருள்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன,
 • புலால் உண்ணாமையை உறுதியாகக் கொண்ட உடலே உயிர் நின்ற உடல்,
 • உயிருக்கு உறுதியான நன்னிலை, ஊன் உண்ணாமையால் உளதாவது,
 • உயிர்கள் உடம்போடு வாழ்தல் ஊன் உண்ணாமை என்னும் அறத்தினைச் சார்ந்துள்ளது,
 • உயிர்கள் உடம்போடு வாழ்கின்ற தன்மை ஊன் உண்ணாமையாகிய செயலினாலேயே நிலைத்து இருக்கின்றது,
 • (ஊனைத் தின்றவனை நரகமானது தன் வாய் திறந்து வெளிவிடுவதில்லை. ஆகையால்) ஊன் உண்ணாமையால் தான் உயிரின் இன்பவாழ்க்கை நிலைத்திருக்கிறது.
 • உயிர் நற்கதி யடையும் நிலைமை ஊன் உண்ணாமையினான் உள்ளது
 • ஊனை உண்பதற்காக வாயைத் திறக்கும் உடம்பு நரகம்.
என உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.

'உடல், யாக்கை என்பவை உடல் குறித்து வழங்கும் சொற்கள். இவ்வுடம்பிற்குப் புதியதொரு சொல்லை வழங்குகிறார் திருவள்ளுவர். அஃது உயிர்நிலை என்பதாம். உயிர் நிலை பெற்று இருப்பதற்கு இடமாகி இருப்பது எதுவோ அது உயிர் நிலை என ஆளப்பெறுகிறது. குறள்கள் 80, 255, 290 உயிர்நிலைபெறுந் தன்மையையும் உடலையும் குறிப்பனவாம். நீர்நிலை, அஞ்சல்நிலையம் இன்னவற்றைக் கருதுக' என்பது இரா இளங்குமரன் குறிப்பு.
'உண்ணாமை யுள்ள துயிர்நிலை’ என்பதற்கு அன்பின் வழியது உயிர்நிலை..... (அன்புடைமை குறள் 80) என்பது போலக் கொண்டு ஊனுண்ணாமையையுடைய உடம்பு உயிர் நின்ற உடம்பு எனப் பொருள் கொள்வது பொருத்தம்.
ஊன் உண்ணாமலும் உயிர் நிலைத்து நிற்கும். மனிதரின் உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய உணவு ஊன் உண்ணாமையிலேயே இருக்கிறது. அப்படித்தான் உயிர் படைக்கப்பட்டிருக்கிறது. பிற உயிர்களை அடித்துத் துன்புறுத்திக் கொன்று அவற்றின் ஊனை உண்ணும் நிலையில் அல்ல; இயற்கை அதுவல்ல. இதனால்தான் வள்ளுவர் ஊனுண்ணலை இவ்வளவு கடுமையாகச் சாடுகிறார்.

உயிருக்கு உறுதியான நிலை, ஊன் உண்ணாமையால் உள்ளது; ஊன் உண்பானாயின் அவனது உடலை ஏற்க நரகமும் வாய்திறக்காது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலால்மறுத்தல் மாந்தர்க்கு இயல்பான உணவு ஒழுக்கம்.

பொழிப்பு

புலால் உண்ணாமையால் உயிர் நிலைபெற்றுளது; புலால் உண்டவனின் உடலை நரகமும் உண்ணாது.