இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0254அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:254)

பொழிப்பு (மு வரதராசன்): அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

மணக்குடவர் உரை: அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல்.
இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.

பரிமேலழகர் உரை: அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.
(உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அருள் யாதெனில் கொல்லாமையாகும். அதற்கு எதிரிடை யாதெனில் கொல்லுதலாகும். ஆதலின் அருட்பயன் தராதது யாதெனில் கொலையாகிய பாவத்தால் வந்த ஊனை உண்ணுதலே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருள்யாதுஎனின் கொல்லாமை அல்லது (யாதெனின்) கோறல் அவ்வூன் தினல் பொருளல்லது.

பதவுரை:
அருள்-அருள்; அல்லது-ஆகாதது; யாது-எது; எனின்-என்றால்; கொல்லாமை-கொலை செய்யாதிருத்தல்; கோறல்-கொல்லுதல்; பொருள்-பொருள்; அல்லது-ஆகாதது; அவ்வூன்-அந்த உடம்பு; தினல்-தின்னுதல்.


அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்;
பரிப்பெருமாள்: அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்;
பரிப்பெருமாள் குறிப்புரை: கொல்லாமை கோறலை செய்நன்றி கொன்றான் என்றாற் போலக் கொள்க. அன்றியும் அருளும் அருள் அல்லாததும் கொல்லாமையும் கோறலும் என்று பொருள் உரைப்பாருமுளர்.
பரிதி: அருளாவதும், அருளல்லாமையும் யாவை எனில், கொல்லாமையே அருள்; அருள் அல்லாமையே கொலை;
காலிங்கர்: உலகத்து அருளும் அல்லதும் யாவை எனில் ஒன்றினை ஊன் சுவை கருதிக் கொல்லாமையும் அதனைக்கோறலும் அன்றே;
பரிமேலழகர்: அருள் யாது எனின், கொல்லாமை: அருள் அல்லது யாது எனின் கோறல்;
பரிமேலழகர் குறிப்புரை: உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'அருள்அல்லது' என்ற தொடரை ஒரு சொல்லாக்கியும் 'கோறல்' என்ற சொல்லுக்குச் சிதைத்தல் என்று பொருள் கொண்டும் 'அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்' என்று இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் அருள் யாது எனின்/அருள் அல்லது யாது எனின் என்ற வினாக்களுக்கு விடைதருவன போல் உரை செய்தனர். இவர்கள் கோறல் என்பதற்குக் கொல்லுதல் எனப் பொருள் கொள்வர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொல்லாமையே அருள்; கொல்லுதலே பாவம்', 'அருள் யாதென்றால் கொல்லாமை. அருளல்லதாகிய கொடுமை யாதென்றால் கொல்லுதல்', 'அருள் என்பது கொலை செய்யாதிருப்பது. அருள் அல்லாதது என்பது கொலை செய்வது', 'அருளுடைமை யாது என்றால் கொல்லாமையாகும்; அருள் இல்லாமை யாது என்றால் கொல்லுதல் ஆகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருள் யாது என்றால் கொல்லாமை; அருளல்லதாது எது எனில் கொல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

பொருளல்லது அவ்வூன் தினல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.
பரிப்பெருமாள்: பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அருள் கெடுதலேயன்றி அதனை யுண்டாற் பெறுவதொரு பயனுமில்லை என்றது. உடம்பு வளர்தல் பயனாயின் அதற்குப் பிறிது முணவுண்டாதலான். .
பரிதி: உபதேசமும் உபதேசம் இல்லாமையும் யாவை என்னில், உபதேச நெறியே புலால் மறுத்தல்; உபதேச நெறியல்லாமை புலாலுண்டல் என்றவாறு.
காலிங்கர்: மற்றதுபோல ஒருவன் தவப் பெரு நெறியல்ல ஊங்கியாது எனில் மற்ற ஊனைத் தின்றல் என்றவாறு.
பரிமேலழகர்: ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.

'பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல்' என்று இப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை கூறினர். பரிதி முற்பகுதிபோலவே இதையும் இரண்டாக்கி 'உபதேச நெறி புலால் மறுத்தல்; உபதேச நெறியல்லாமை புலாலுண்டல்' என உரைக்கிறார். காலிங்கர் புலாலுண்டல் தவப் பெரு நெறியல்ல என்கிறார். பரிமேலழகர் ஊன் தின்றல் பாவம் என உரை தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'புலால் உண்ணுதலே சிறுமை', 'பொருளற்றதாகிய பாவம் யாதென்றால் கொல்லப்பட்ட ஊனுண்டல்', 'அப்படியிருக்க அருள் நெறியை மேற்கொண்ட ஒருவன் கொலை செய்து கிடைக்கிற புலாலை உண்பது அர்த்தமறியாத காரியம்', 'ஆதலினால் உயிரைக் கொன்று ஊனைத் தின்னுதல் நன்மை தருவது அன்று (பாவம்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பயன் தராதது புலால் உண்ணுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருள் யாது என்றால் கொல்லாமை; அருளல்லதாது எது எனில் கொல்லுதல்; பொருளல்லது புலால் உண்ணுதல் என்பது பாடலின் பொருள்.
'பொருளல்லது' என்றதன் பொருள் என்ன?

உயிர்களைக் கொல்லுதல் அருளற்ற செயல். அதன் ஊன் தின்னுதல் பொருளற்ற செயல்.

இப்பாடலிலின் முதல் வரியிலுள்ள 'அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்' என்பதை 'அருள் யாதுஎனின் கொல்லாமை; (அருள்) அல்லது யாதுஎனின் கோறல்' என நிரல்நிறையாகப் (வரிசைப்படி) பகுத்துப் பொருள் கொள்வர். ஓர் உயிரையும் கொல்லாமல் இருத்தல் அருள் ஆகும்; பிற உயிர்களைக் கொல்லுதல் அருளல்லது அதாவது அருள் அற்றது என்று இரு கருத்துக் கொண்டதாக இவ்விளக்கம் அமைகிறது.
இவ்வாறில்லாமல், ஒரே கருத்துத் தோன்றுமாறு, அருளல்லது என்பதனை ஆற்றொழுக்காக, 'அருளல்லது கொல்லாமை கோறல்' எனக் கொண்டு 'கொல்லாமை என்னும் அறத்தை அழித்தல்' என்றும் முதற்பகுதிக்குப் பொருள் காண்பர்.
ஈற்றடி உயிரைக் கொன்று அதன் ஊன் தின்னுதல் பொருளற்றது என்கிறது.
புலாலுண்ணல் என்பது கொல்லுதல் என்னும் அறமல்லாத செயலை ஒக்கும் என்பது பாடலின் திரண்ட கருத்து.

'பொருளல்லது' என்றதன் பொருள் என்ன?

'பொருளல்லது' என்ற தொடர்க்குப் பொருளல்லது, பாவம், அறம் அல்லாதது, உபதேச நெறியல்லாமை, உறுதிப்பொருளாகாது, பொருளுமல்ல, சிறுமை, பொருளற்றதாகிய பாவம், அர்த்தமறியாத காரியம், சிறந்த பொருளன்று, நன்மை தருவது அன்று, கரிசு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பொருளல்லது' என்பது பொருளற்றது எனப்பொருள்படும். பொருள் என்பது இங்கு பொருட்செல்வத்தைக் குறிக்காது. பொருள் என்பது அர்த்தம் என்ற பொருளில் நின்று ஊன் தின்னுதல் அர்த்தமற்ற செயல் எனப் பொருள் தருகிறது. ஊன் தின்னுதல் ஏன் பொருளற்ற செயல்?
இன்னொரு உயிரை நீக்குதற்கு யாருக்கும் உரிமையில்லை. அப்படி அதைக் கொன்று அதன் உடலை உண்டு வாழும் வாழ்க்கையில் என்ன பொருள் இருக்க முடியும்? அது ஒரு சிறுமையான வாழ்வல்லவா? அந்த வாழ்க்கை தேவையா? அதில் என்ன பயன்? என்ற கேள்விகளை இங்கு வள்ளுவர் தொடுப்பது போல உள்ளது. அறமல்லாத (பாவமாகிய) கொல்லுதலுக்கு காரணமான ஊன் உண்ணுதல் என்பதால் அது பொருளற்றது எனப் பரிமேலழகர் விளக்குவார். அருள் நெறியை மேற்கொள்ளவேண்டிய மாந்தர் கொல்லாமை என்னும் அறத்தை மீறுவதே அருளுக்கு மாறாகும். அவ்வாறு அருளை நீத்து இன்னொரு உயிரைக் கொன்று கிடைக்கிற புலாலை உண்பது பொருளற்றதே. அதனால் ஊன் உண்பதில் உள்ள விருப்பத்தை விட்டுவிடும்படி அறவுரை தருகிறார்.

அருள் யாது என்றால் கொல்லாமை; அருளல்லதாது எது எனில் கொல்லுதல்; பயன் தராதது புலால் உண்ணுதல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலால்மறுத்தல் பொருள் பெறும்.

பொழிப்பு

அருள் யாது என்றால் கொல்லாமை. அருளல்லது எது எனில் கொல்லுதல்; பயன் தராதது புலால் உண்ணுதல்.