படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
(அதிகாரம்:புலால்மறுத்தல்
குறள் எண்:0253)
பொழிப்பு (மு வரதராசன்): ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகிய அருளைப் போற்றாது.
|
மணக்குடவர் உரை:
ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.
பரிமேலழகர் உரை:
படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது.
(சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
கொல்லுங் கருவியைக் கைகொண்டவனுடைய நெஞ்சம் கொலையையே செய்வதன்றி நன்மையானவற்றைச் செய்யக் கருதாது. அதுபோல, பிற உயிரின் ஊனையுண்டு சுவைகண்டவர்களின் மனம், அவ்வூனையே கருதுவது அன்றி அவ்வுயிரைப் பாதுகாத்தலாகிய நன்மையை நோக்காது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
படைகொண்டார் நெஞ்சம்போல் ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் நன்றுஊக்காது.
பதவுரை:
படை-கொலைக் கருவி; கொண்டார்-பெற்றவர்; நெஞ்சம்-உள்ளம்; போல்-போல; நன்று-நல்லது; ஊக்காது-ஊக்கம் கொள்ளாது (அதாவது செய்ய இடந்தராது); ஒன்றன்-ஒன்றினுடைய; உடல்-உடம்பு; சுவை-சுவை; உண்டார்-உண்டவர்கள்; மனம்-உள்ளம்.
|
படைகொண்டார் நெஞ்சம்போல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல்;
பரிப்பெருமாள்: படை கையிற்கொண்டவர்கள் நெஞ்சுபோல்;
பரிதி: அரிவாளும் கையும் பிடித்தவர் மனம் கொலை மேலே நினைப்பதுபோல;
காலிங்கர்: அந்தணராயினும் ஆயுதத்தைக் கைப்பற்றினால் அதனைச் சுற்றுதல், எறிதல், தீட்டுதல், நிமிர்த்தல், வெட்டுதல் செய்வர்;
பரிமேலழகர்: கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல,
'கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆயுதம் தாங்கியவனுக்கு இரக்கம் இருக்குமா?', 'கொலைக் கருவியைக் கையிலேந்தியவர் உள்ளம் அருளை நாடாதது போல', 'கொலைக் கருவியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறவர்களுடைய மனதைப் போல', 'கொலைக் கருவியைக் கொண்டவர் மனத்தைப்போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கொலைக் கருவியைக் கையிலேந்தியவர் உள்ளம் போல என்பது இப்பகுதியின் பொருள்.
நன்றுஊக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.
பரிப்பெருமாள்: நன்மையை நினையாது;: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் ஊனுண்பார் அருளாளுதற்கு வேறு நெறியில்லை என்றார்க்கு அஃது உண்டானும் உயிர்க்கு அருள்செய்வனாயின் அருளுண்டாகாதோ என்றார்க்கு கூறப்பட்டது.
பரிதி: புலாலுண்டார் மனமும் கொலையை நினைக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்றதுபோல நன்றிக்கண் செல்லாது யாதுஎனில், ஓர் உயிர்வாழ் சாதியின் ஊனின் சுவை கருதி உண்டாரது நெஞ்சம் என்றவாறு.
பரிமேலழகர்: பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது.
பரிமேலழகர் குறிப்புரை: சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.
'நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்' என்ற பொருளில் மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'புலாலுண்டார் மனமும் கொலையை நினைக்கும்' என்றார். காலிங்கர் 'நன்றிக்கண் செல்லாது ஊனின் சுவை கருதி உண்டாரது நெஞ்சம்' என்று பொருள் கூறினார். பரிமேலழகர் 'பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது' என விரித்துக் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இறைச்சி சுவைத்தவனுக்கு அருள் தோன்றாது', 'ஓருயிரின் உடலைச் சுவைத்துத் தின்றவர் மனமும் அருட்செயலில் முனையாது', 'இன்னொரு பிராணியின் ஊனைத் தின்று சுவை கண்டவனுடைய மனமும் நல்ல காரியங்களில் நாட்டங் கொள்ளாது', 'வேறோர் உயிரின் உடலின் சுவையை உண்டு கண்டவரின் மனம் அருளைக் கருதாது (கொல்லும் கருவியைக் கொண்டோர் கொலையையே எண்ணுவர்; அதுபோல ஊனைத் தின்று சுவை கண்டவர் ஊன் தின்னுதலையே எண்ணுவர்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஓருயிரின் ஊனையுண்டு சுவைகண்டவர் மனமும் நல்லது செய்தலில் ஊக்கம் கொள்ளாது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
கொலைக் கருவியைக் கையிலேந்தியவர் உள்ளம் போல, ஓருயிரின் ஊனையுண்டு சுவைகண்டவர் மனமும் நல்லது செய்தலில் ஊக்கம் கொள்ளாது என்பது பாடலின் பொருள்.
'நன்றுஊக்காது' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
உயிர் கொல்வார் புலால் உண்ணுபவர் இருவரது மனங்களும் நல்லது செய்வதில் அவ்வளவாக ஈடுபடா.
படை என்ற சொல், 'கருவி', 'போர்ப்படை' என்னும் இரண்டு பொருளில் குறளில் ஆளப்பட்டுள்ளது.
கொலைக் கருவியைக் கையில் ஏந்துபவர் -படைவீரர், அரசின் கொலைக்களப் பணியாளர், உணவிற்காக உயிர்க்கொலை செய்பவர்- யாராயிருந்தாலும், அவர்கள் மனம் அருளற்று தங்கள் நோக்கமான உயிர்நீக்கல் ஒன்றையே குறிக்கொண்டு இருப்பர். அதுபோல மற்றொரு உயிரின் உடலை உண்டு சுவை கண்டவர் தீங்குறும் உயிரைப் பாதுகாத்தலாகிய நன்மையை நோக்காது இரக்கமற்ற உள்ளத்தினராய் இருப்பர். இருவர் மனங்களும் நல்லன செய்ய ஊக்கம் கொள்வன அல்ல.
கொலைத்தொழில் செய்வார்க்கு பிற உயிர்களுக்குத் ஊறு செய்தலில் எவ்வித குற்றவுணர்வும் தோன்றாது இயல்பாய் செய்வர்; ஊன் உண்பவர்களுக்கும் உயிர்களைக் கொன்ற உடலைத் தின்கிறோம் என்ற உணர்வு தோன்றாது அதன் சுவை ஒன்றிலேயே நாட்டமாய் இருப்பர்.
மேலும் கொலை செய்யும் கருவியைத் தம் கையில் கொண்டவர் நெஞ்சம் நன்மையின்பாற் செல்லாது. அதுபோலவே கொலைத் தொடர்புடைய புலால் உணவைச் சுவைத்து உண்பவர்களின் மனத்திலும் அருள் சிந்தனை இராது.
படைக் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்திப் பழகிப்போன மனத்திலும் கொன்றதைத் தின்பவர் உள்ளத்திலும் துன்புறும் உயிர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகாது என வள்ளுவர் கருதுகிறார்.
படை என்ற சொல் இங்கு பயன்படுத்தப்பட்டதால், படைக்கலங்களைக் குவித்து போர் வெறி பிடித்த நாடுகள், மக்கள் நலம்பயக்கும் நல்ல பணிகளில் மனம் கொள்ளா என்பதும் குறிக்கப்பெறுகிறது எனக் கொள்ளலாம்.
|
'நன்றுஊக்காது' என்ற தொடர் குறிப்பது என்ன?
'நன்றுஊக்காது' என்றதற்கு நன்மையை நினையாது, நன்றிக்கண் செல்லாது, நன்மையாகிய அருளைப் போற்றாது, நல்லதை எண்ணாது, அறத்தின்பாற் செல்லாது, அருட்செயலில் முனையாது, நல்ல காரியங்களில் நாட்டங் கொள்ளாது, நல்ல தன்மையைக் கருதாது, நன்மையானவற்றைச் செய்யக் கருதாது, அருளைக் கருதாது, நன்மையான செயலைச் செய்வதற்கு இடங்கொடாது, நன்மையை நினையாது, நல்லதையே நினைக்கத் தோன்றாது, நன்மை செய்ய எழாது என உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.
கொலைக் கருவியைக் கையில் ஏந்தியவரின் மனமும் ஓருயிரின் உடலைச் சுவைத்து உண்பவரின் மனமும் நல்லதை நினைக்காது என்பது இக்குறள் கூறும் செய்தி.
படையைப் பிடித்தவன் மனம் கொலை நோக்கிலே இருக்கும். அதுபோல கொலைநின்று தின்றொழுகுவான் மனம் எப்பொழுதும் சுவை நோக்கிலே இருக்கும். இவர்கள் சிந்தனை இவற்றைத் தாண்டி நல்லது செய்ய ஊக்கம் கொள்வதில்லை. இருவருக்கும் உள்ளத்தில் இரக்கம் தோன்றுவதில்லை. அவர்களிடம் அருளாட்சி இல்லை.
இவ்வாறு ‘நன்றூக்காது. என்ற பொதுத்தன்மை கொண்டு கொலைஆயுதம்கொண்ட நெஞ்சத்திற்கும் ஊன் சுவை தேடும் உள்ளத்திற்கும் உவமைப் பொருத்தம் காணப்பட்டது.
அதிகாரம் புலால்மறுத்தல் என்பதால் ‘நன்றூக்காது' என்பதற்கு அருட்செயலில் ஊக்கங் கொள்ளாது எனப் பொருள் காண்பர்.
'நன்றுஊக்காது' என்ற தொடர்க்கு 'நல்லவற்றில் ஊக்கம் கொள்ளாது' என்பது பொருள்.
|
கொலைக் கருவியைக் கையிலேந்தியவர் உள்ளம் போல, ஓருயிரின் ஊனையுண்டு சுவைகண்டவர் மனமும் நல்லது செய்தலில் ஊக்கம் கொள்ளாது என்பது இக்குறட்கருத்து.
புலால்மறுத்தல் அருள் உணர்வு பெருக ஏதுவாகும்.
கொலைக் கருவியைத் தாங்கியவன் உள்ளம் போல, ஓருயிரின் ஊனையுண்டு சுவைகண்டவர் மனமும் உயிர்களுக்கு நல்லது செய்ய ஊக்கம் கொள்ளாது.
|