இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0252பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:252)

பொழிப்பு (மு வரதராசன்): பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை.

மணக்குடவர் உரை: பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை. அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.
இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை.
(பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பொருளைக் கையாளுதல் அதனைப் பாதுகாவாதவர்க்கு இயலுவதில்லை. அதுபோல, அருளில்லாது புலாலுண்பவர்க்கு அருளொழுக்கத்தைப் பழகிக் கொள்ளுதல் இயலாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை ஆங்கு அருளாட்சி ஊன்தின்பவர்க்கு இல்லை.

பதவுரை:
பொருள்-உடைமை; ஆட்சி-மேலாண்மை; போற்றாதார்க்கு-பாதுகாவாதவர்க்கு; இல்லை-கிடைக்காது; அருள்-அருள்; ஆட்சி-ஆளுதல்; ஆங்கில்லை-அதுபோல இல்லை; ஊன்-உடம்பு; தின்பவர்க்கு-உண்ணுபவர்களுக்கு.


பொருளாட்சி போற்றாதார்க் கில்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை;
பரிப்பெருமாள்: பொருளினை யாளுதல் அதனைக் நோக்கமாட்டாதார்க்கு இல்லை;
பரிதி: பொருளாட்சி செலவழிப்பார்க்கு இல்லை;
காலிங்கர்: தம் பொருளினைக் கெடாமல் பேணி வாழும் ஆட்சியினைக் குறிக் கொண்டு பாதுகாவாதார்க்கு இல்லை;
பரிமேலழகர்: பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை;

'பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'போற்றாதார்க்குப் பொருள்வரவு இல்லை', 'பொருளைக் காவாதார்க்குப் பொருளாளர் ஆதலலில்லை', 'பணத்தைப் பாதுகாக்கதவர்களுக்குப் பணத்தால் வரும் நன்மைகள் இல்லை', 'பொருளால் பயன் கோடல் அதனைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காக்காதவர்களுக்குப் பொருள்மேலான பயன் கிடைக்காது என்பது இப்பகுதியின் பொருள்.

அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது. 'மேல் புலாலுண்ணல் தூய்தன்றென்றார்; அதனாற் குற்றமென்னை தின்றார் உடம்புதானும் தூய்தன்றே'' என்றார்க்கு, அவ்வாறேயல்ல அருட்கேடும் வருமென்று கூறப்பட்டது.
பரிதி: அது போல அருளாட்சி புலால் உண்டார்க்கு இல்லை என்றவாறு.
காலிங்கர்: மற்றது போல அருந்தவமுயல்வாருக்கு ஓர் பெருந்துணையாக முன் சொன்ன அருளினைக் கெடாமல் ஆண்டுப் பெறுவதோர் ஆட்சிப்பாடு இல்லை பிறிதொன்றன் நோவு அறியாது தின்பவனுக்கு என்றவாறு.
பரிமேலழகர்: அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

'அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புலால் தின்பவர்க்கு அருள் வரவு இல்லை', 'அதுபோல ஊன் தின்பவர்க்கு அருளாளர் ஆதலில்லை', 'அதைப்போல் உயிர்களைப் பாதுகாக்காமல் உயிர் நீங்கிய) ஊனைத் தின்பவர்களுக்கு அருளால் பெறக் கூடிய நன்மைகள் இல்லை', 'அதுபோல ஊன் தின்பவர்க்கு அருளால் பயன் கோடல் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதுபோல புலால் உண்பவர்களுக்கு அருட்பயன் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் காக்க மாட்டதவர்களுக்கு அதன்மேலான பயன் கிடைக்காது; அதுபோல ஊன்தின்பவர்க்கு அருளாட்சி இல்லை என்பது பாடலின் பொருள்.
ஊன் தின்னலுக்கும் அருளாட்சிக்கும் என்ன தொடர்பு?

பொருளைக் கருத்துடன் காப்பாற்றத் தெரியாதவர் அதனால் பெறக்கூடிய பயனை இழந்துவிடுவர். அதுபோல, கொல்லப்பட்ட ஓர் உயிரின் ஊன் தின்பவர் அருள் காக்க மாட்டாதாவராகி அதன்பயன் இழப்பர்.

பொருளை ஆளுந்திறன் இல்லாதவர்களால் தம்மிடமுள்ள முதலைக் காத்து அதிலிருந்து ஊதியம் பெற இயலாது. அதுபோல, ஊன் தின்பவர்கள் அருளாளும் திறன் இழந்து நிற்பர். அருளுணர்வு கொண்டவர்களாலேயே எல்லா உயிர்கள் மாட்டும் அன்பு காட்டமுடியும். கதறக்கதற, குருதி சொட்டச் சொட்ட, இரக்கமின்றிக் கொல்லப்பட்ட உயிர்களின் உடலை உண்பவர்களை எங்ஙனம் அருளாட்சியுடையோராகக் கருத முடியும்? என்று இங்கு வினவுகின்றார் வள்ளுவர். பொருளைப் பாதுகாப்பது போல் அருளுடைமையும் காக்கப்பட வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. பொருளைப் போற்றிப் பாதுகாக்காமல் கெட்ட வழிகளில் செலவழிப்பவர் பொருளுடையராதல் இல்லை; அவர்க்கு பொருள் மேலாண்மை இயலாது. அதுபோல, ஊன் தின்பவர் அருள் காத்தவர் ஆகார்; அவர்க்கு அருளாட்சி இல்லை.

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (அருளுடைமை குறள்எண்:247 பொருள்: பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லையாயினாற் போல அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை) என்று முன் அதிகாரத்தில் கூறப்பட்டது. மாந்தர்க்கு பொருள் மேலாண்மையும் தெரிந்திருக்க வேண்டும்; அவர் அருள் ஆள்தலையும் அறிந்திருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது இங்கு. வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையை வகுக்கும் வள்ளுவர், அருளாட்சி, பொருளாட்சி இவை இரண்டையும் இணைத்துக் காட்டிப் பேசுகிறார்.
பொரு​ள் பாதுகாக்கப்பட ​வேண்டியது. அதைப் ​பேணி, அதன்மூலம் ஊதியம் பெற்று, அத​னைப் ​பெருக்குதல் ​வேண்டும். அவ்வாறு வருவ​தையும் ​செலவு ​செய்வ​தையும் ​மேலாண்​மை ​செய்யாது விட்டுவிட்டால் ​பொருள் நமக்குரியதாக இருக்காது என்பது ​பொருளியல் ​மேலாண்​மை​ச் சிந்த​னை. அருளாட்சிக்கு இன்றியமையாது வேண்டுவது ஊன் உண்ணாமை என்பது குறளின் கருத்து. பிற உயிர்க​ளைக் ​கொல்லாதிருப்பதும் அவற்றின் ஊ​னை உண்ணாது இருப்பதும் அருளாளும் எண்ணம் தோன்ற வழி செய்வன. அருளுடையார் புலால் உண்ணார். அருளாட்சி அவர்களுக்கே அமையும். ஊன் தின்பவர்க்கு அருளாட்சி இல்லை என்கிறது பாடல்.
பொருளும் அருளும் இருந்தால் மாந்தர் வாழ்வு சிறக்கும். பொருளைப் போற்றுவது என்பது பொருளைப் பாதுகாத்துப் பிறருக்கு உதவுவது. அவ்வாறே அருளைப் போற்றுவது என்பது புலால் மறுத்தலைக் கொள்கையாகக் கொள்வது. பொருள் போற்றாதார் அதன் பயனை இழப்பர். புலால் உண்போர்க்கு அருளின் பயன் கிட்டாது.

துறவற உலகிற்கு அருளாட்சியும் இல்லற உலகிற்குப் பொருளாட்சியும் இன்றியமையாதன என்பதை விளக்க வந்த பாடல் இது என்கின்றனர் சிலர். ஆனால் புலால் உண்ணாமை எல்லோருக்கும் உரியதாகவே படைக்கப்பட்ட அதிகாரம். அவ்வாறு கொள்வதே இப்பாடலுக்கும் ஏற்றது.

ஒரு நீதிக்கு ஒரு நீதியையே உவமமாகக் காட்டி இரு பயனை எய்த வைப்பது வள்ளுவரின் உத்திகளில் ஒன்று. அவ்வகையான பாடல்களில் இதுவும் ஒன்று.
புலால் மறுத்தல் போல இப்பாடலில் வரும் அருளாட்சி என்ற கலைச் சொல்லும் வள்ளுவரின் கொடையே என்பர். .

ஊன் தின்னலுக்கும் அருளாட்சிக்கும் என்ன தொடர்பு?

அருளாட்சி என்பது அருள் ஆளுதலைக் குறிக்கும். இப்பாடலில் ஆளுதல் என்பது அருளாற் பயன் கொள்ளுதலைக் குறிக்கும் எனக் கொள்வர். 'அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு'.என்றதனால் புலால் உண்பவர்க்கு அருளாட்சி இல்லை என்பது பொருளாகிறது. புலால் உண்பவர் அருளாளராக இருக்க முடியாதா?

மணக்குடவர் 'இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது' என்று சிறப்புரையில் கூறுகிறார். பரிப்பெருமாள் 'மேல் புலாலுண்ணல் தூய்தன்றென்றார்; அதனாற் குற்றமென்னை தின்றார் உடம்புதானும் தூய்தன்றே'' என்றார்க்கு, அவ்வாறேயல்ல அருட்கேடும் வருமென்று கூறப்பட்டது' என்று முன் குறளோடு காரண காரியத் தொடர்புபடுத்திச் சொல்வார். குறளின் இப்பிற்பகுதிக்குக் கா சுப்பிரமணியம் பிள்ளை 'அருளில்லாது புலாலுண்பவர்க்கு அருளொழுக்கத்தைப் பழகிக் கொள்ளுதல் இயலாது' என விளக்கம் தந்தார்.

பரிமேலழகரது சிறப்பு உரை 'ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது' என்கிறது. இதற்கு 'புலால் உண்டாராயினும் உயிரினங்களுக்கு ஒரு கேடும் நினையாதவர்களுக்கு அருளை ஆளுதலில் குறைவில்லை என்று கூறும் புத்தர் முதலியோரை மறுத்து ஊன் உண்பார்க்கு (உயிரைக் காப்பதாகிய அருள் இல்லையால்) உயிரினங்களுக்கும் தீங்கு எண்ணுதலாகிய குற்றம் உண்டாம் என்று கூறுகின்றது' என விளக்கம் தருவர்.
தாமே உயிரைக் கொல்வதில்லை; யாரோ கொன்றதைத் தான் உண்கிறேன் என்று சொல்லும் ஊன் தின்பவர்கள் தாம் உயிர்கட்கு நேரடியாகத் தீங்கு தருவதில்லை என்ற மனப்பான்மையில் இருக்கின்றனர். அவர்கள் மற்றவகையில் அருள் காட்டினாலும் ஊன் தின்பவர் என்னும் இழுக்கு இருப்பதால், அவர்களை வள்ளுவர் அருளாளர் என ஏற்க மாட்டார். புலால் உண்ணாமல் இருப்பவர்களையே அவர் அருளுடையவர்களாகக் கருதுவார்.

பொருள் காக்க மாட்டதவர்களுக்கு அதன்மேலான பயன் கிடைக்காது; அதுபோல புலால் உண்பவர்களுக்கு அருளினை ஆளுதல் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலால்மறுத்தல் அருளினை ஆள வழிகோலும்.

பொழிப்பு

காக்கமாட்டார்க்கு பொருள்மேலாண்மை இல்லை; அதுபோல புலால் உண்பவர்க்கு அருளாள்தல் இல்லை