தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
(அதிகாரம்:புலால்மறுத்தல்
குறள் எண்:251)
பொழிப்பு (மு வரதராசன்): தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?
|
மணக்குடவர் உரை:
தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ?
ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை?
(பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.)
சி இலக்குவனார் உரை:
தன் உடலை வளர்க்கும் பொருட்டுத் தான் வேறோர் உயிரின் உடலைத் தின்பவன், அருளைக் கொண்டிருப்பது எவ்வாறு? ஒருகாலும் முடியாது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.
பதவுரை:
தன்-தனது; ஊன்-உடம்பு; பெருக்கற்கு-வளர்த்தற் பொருட்டு; தான்-தான்; பிறிது-மற்றது; ஊன்-உடம்பு; உண்பான்-தின்பவன்; எங்ஙனம்-எப்படி; ஆளும்-நடத்தும்; அருள்-அருள்.
|
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன்;
பரிப்பெருமாள்: தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன்;
பரிதி: தன்னுடம்பு பெருக்குதற்குத் தான் பிறிதொன்றன் உடலைத் தின்பார்க்கு;
காலிங்கர்: தன் ஊனினைப் பெருக்கி வளர்ப்பதோர் காரணமாகத் தான் பிறிதொன்றினது ஊனை உண்கின்ற பாவியானவன்;
பரிமேலழகர்: தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்,
பரிமேலழகர் குறிப்புரை: பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று.
'தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன் தசை பெருக்கப் பிறதசை தின்பவனுக்கு', 'தன்னுடம்பைப் பெருக்க வைப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் உடலைத் தின்பவன்', 'தன்னுடைய உடல் பருக்க வேண்டுமென்று இன்னொரு பிராணியின் உடலை உண்பவன்', 'தன் உடம்பை வளர்த்தற்கு மற்றோர் உயிரின் உடம்பைத் தின்பவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தன் உடம்பை வளர்த்தற்கு மற்றோர் உயிரின் உடலைத் தின்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
எங்ஙனம் ஆளும் அருள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளுடையவனாவது மற்றியா தானோ?
மணக்குடவர் குறிப்புரை: ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: அருளுடையவனாவது மற்றியா தானோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: எப்படி அருள் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்ற அனைத்துயிர்மாட்டும் அருளினை எவ்வாற்றால் மருவிப் போதுமோ என்றவாறு.
பரிமேலழகர்: எவ்வகையான் நடத்தும் அருளினை?
பரிமேலழகர் குறிப்புரை: 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.
'எவ்வகையான் நடத்தும் அருளினை?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எங்ஙனம் அருள் பிறக்கும்?', 'எங்ஙனம் அருளாளன் ஆவான்?', 'எப்படி ஜீவகாருண்யமுள்ளவனாக நடந்து கொள்ள முடியும்?', 'எப்படி அருளை மேற்கொள்ளுதல் கூடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எப்படி அருள் உணர்வுடையவனாக இருக்கக் கூடும்? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தன் உடம்பு பெருக்கற்கு மற்றோர் உயிரின் உடலைத் தின்பவன், எப்படி அருள் உணர்வுடையவனாக இருக்கக் கூடும்? என்பது பாடலின் பொருள்.
'பெருக்கற்கு' என்ற சொல் குறிப்பது என்ன?
|
பிறிதொரு உயிரின் உடம்பை உண்ணுபவன், அருளாட்சி உடையவனாவதில்லை.
அருள் உள்ளம் கொண்டவன் பிறிதொரு உயிர்க்குத் தீமை செய்ய அஞ்சுவான். புலாலுண்ணாமை அவனுக்கு இயல்பாய் அமையும்.
அவன் தான் வாழ விரும்புவதுபோலவே மற்ற எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்று விரும்புவான். அவன் மற்றதன் உடம்பை உண்டு தன் உடல் உரம் பெறுவது பற்றி எண்ணமாட்டான். அப்படிக் கருதி மற்றோர் உயிரின் ஊனை உண்கின்றவன் எப்படி அருளுடையவனாக இருக்க முடியும்?
ஊனைத்தின்று ஊனைப் பெருக்க வேண்டும் என்றில்லை. ஊன் உண்ணாதவர்களிலும் பலர் உடற்பெருக்கத்தோடு காணப்படுகின்றனர். புலால் உண்பவன் அதன் சுவை மட்டும் கருதி உடல் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பான். அருள் வாழ்வு பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் ஒருவனுக்குப் புலால் உண்ணத் தோன்றாது. ஏற்கனவே ஊன் உண்பவனும், அருள் வாழ்க்கை வேண்டினால், புலாலைத் துறந்துவிடுவான். கதறக் கதறக் கழுத்தை அறுத்து குருதி வழிய இரக்கமின்றிக் கொல்லப்பட்ட உயிரிலிருந்து கிடைக்கப்பெற்ற புலாலைச் சுவைத்து உண்பவன் எங்ஙனம் அருளாட்சியுடையவனாக இருக்க முடியும்? என்பது வள்ளுவரது வினா.
புலால் கலவாத உணவும் நல்ல சுவையுடன் கிடைக்கிறது; அது நல்ல உடல்நலத்தையும் தரக்கூடியதே; அருளோடு கூடிய நல்லுணர்விற்கும் துணை செய்யவல்லது.
அருள் உணர்வு துறவிகளுக்கு அடிப்படையானது. அருளுணர்வோடு தொடர்புபடுத்தி ஊன் உண்ணுதல் இங்கு சொல்லப்படுவதால் இது துறவிகளுக்கான பாடல் என்கின்றனர் சிலர். 'உங்கள் ஊனைப் பெருக்கிக் கொள்வதற்குச் சிறுதும் அன்பின்றிப் பிற உயிர்களின் உடம்பை உண்ணும் நீங்கள் எப்படி அருளுடைய துறவியாய் இருக்க முடியும்?' என்று துறவியரை நோக்கித் தொடுக்கப்பட்ட வினா' என்பர் இவர்கள்.
ஆனால் புலாலுண்ணாமை யாவர்க்கும் உரியது என்பதே வள்ளுவர் கருத்து. ஆகையால் இக்குறள் அனைவரையும் நோக்கிச் சொல்லப்பட்டது என்றே கொள்ளவேண்டும்.
சேலம் மாவட்டம் மல்லூரை அடுத்துள்ள பொன்சொரிமலை அடிவாரத்தில் தாமரைப்பாழி என்னும் இடத்தில் சமண முனிவர்கள் தங்கிய இயற்கைக் குகையின் மேல்பகுதிப் பாறையில் இக்குறள் 14-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் கல்வெட்டாக உள்ளது என்பது அறியத்தக்க செய்து.
|
'பெருக்கற்கு' என்ற சொல் குறிப்பது என்ன?
'பெருக்கற்கு' என்றதற்கு வளர்த்ததற்கு, வீக்குதற் பொருட்டு, பெருக்கி வளர்ப்பதோர் காரணமாக, பெருக்கச் செய்வதற்காக, பெருக்குவதற்கு, பெருத்து வளர்வதற்காக, பெருக்க, பெருக்க வைப்பதற்காக, பருக்க வேண்டுமென்று, பருக்க வைத்தற்காக, வளர்க்கும் பொருட்டு, வளர்த்துக்கொள்ள, பெரிதாக்குவதற்காக, கொழுத்துப் பெருகுவதற்கு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஊன் மட்டுமல்ல எந்த வகை உணவையும் மிகையாக உண்டால் உடல் பெருக்கத்தான் செய்யும். எனவே உடல் பெருகுவதற்காக ஊன் உண்ணப்படுவதில்லை. புலால் உணவு உடலுக்கு வலிமை சேர்க்கும் என்ற கருத்தும் தவறானது. ஊன் உண்பவர்கள் அதன் சுவைக்கு அடிமைப்பட்டு உண்கின்றனர். சுவை மட்டும் வேண்டுவோர் மிகையாகவே உண்பர். அவ்விதம் அருளற்று இறைச்சி உண்ணப்படுவது வெறுப்புடன் பார்க்கப்படுகிறது. பாடலின் நோக்கம் உடல் பெருக்கம் பற்றியது அல்ல. புலாலுண்ணாமை அருட்செயல் என்று சொல்ல வரும் பா இது. பிற உயிர்கள் அருளில்லாமல் கொல்லப்பட்டு அவற்றின் ஊன்கொண்டு சமைக்கப்பட்ட உணவை மிகமகிழ்வுடன் சுவைக்கின்றானே!' என்ற இகழ்ச்சிக் குறிப்பு தோன்றச் சொல்லப்பட்டது. 'உடல் கொழுத்துப் பெருகுவதற்காகவா இப்படி ஊன் உண்கிறாய்! உன்னிடம் எப்படி அருள் உண்டாகும்?' எனப் புலால் உண்பவனைப் பார்த்துக் கேட்கிறார் வள்ளுவர்.
'பெருக்கற்கு' என்ற சொல்லுக்கு வளர்த்தற்கு என்னும் பொருள் பொருத்தம்.
|
தன் உடம்பை வளர்த்தற்கு மற்றோர் உயிரின் உடலைத் தின்பவன், எப்படி அருள் உணர்வுடையவனாக இருக்கக் கூடும்? என்பது இக்குறட்கருத்து.
புலால்மறுத்தல் ஒருவனிடத்து அருள் பெருகத் துணை செய்யும்.
தன்னுடம்பைப் பெருக்கப் பிறிதோர் உயிரின் உடலைத் தின்பவனுக்கு எங்ஙனம் அருள் பிறக்கும்?
|