இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0209



தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:209)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

மணக்குடவர் உரை: தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.
இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: தன்னைத்தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
(நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் தன்னிடத்தில் அன்புடையன் ஆயின் தீவினைப் பகுதியாகிய செய்கைகளுள் எவ்வளவு சிறியதொன்றையுங் பிறர்பால் செய்தல் கூடாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னைத்தான் காதலன் ஆயின் தீவினைப் பால் எனைத்தொன்றும் துன்னற்க.

பதவுரை:
தன்னைத்தான்-தன்னைத்தான்; காதலன்-காதல் உடையவன், விரும்புபவன்; ஆயின்-ஆனால்; எனைத்தொன்றும்-எவ்வளவு சிறிதாயினும்; துன்னற்க-செய்யாதொழிக; தீ-கொடிய; வினை-செயல்; பால்-பகுதி.


தன்னைத்தான் காதலன் ஆயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குத் தான் நல்லவனாயின்;
பரிதி: தன்னைத்தான் பிரியமுள்ளவன் ஆகில்;
பரிமேலழகர்: ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்;

'தனக்குத் தான் நல்லவனாயின்/பிரியமுள்ளவன்/காதல் செய்தல் உடையவன் ஆயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான்வாழ ஆசை இருக்குமானால்', 'ஒருவன் தன்னுடைய நலன்களை விரும்புவானாயின்', 'ஒருவன் தனக்குத்தானே அன்பு செய்கிறவனாயின்', 'ஒருவன் தன்னை விரும்புகின்றவனாயிருப்பின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் நலம் விரும்புவன் என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.
பரிதி: பாவமான காரியத்தைச் செய்வான் அல்லன். பரிதி குறிப்புரை: அது எப்படி என்றால், தான் செய்த பாவம் தன் ஆத்மாவை வருத்தும் என்றவாறு. [ஆத்மா - உயிர்]
பரிமேலழகர்: தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
பரிமேலழகர் குறிப்புரை: நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.

'யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைச் சிறிது ஒன்றாயினும் பிறர்க்குச் செய்யாதொழிக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறுதும் தீவினைப் பக்கம் செல்லாதே', 'தீய செயல்களின் பக்கத்தே ஒரு சிறுதும் தலைகாட்டக்கூடாது', 'தீங்கு செய்யும் காரியங்களின் பக்கத்தில் கொஞ்சங்கூட நெருங்கப்படாது', 'அவன் தீய செயல் சிறிதேனும் பிறர்க்குச் செய்யாது இருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதீர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னைத்தான் காதலன் என்றால் ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதீர் என்பது பாடலின் பொருள்.
'தன்னைத்தான் காதலன்' யார்?

நீ நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயா. அப்படியென்றால் தீய செயல்கள் பக்கம் நெருங்காதே.

ஒருவன், தன்நலம் விரும்பி வாழ்பவனானால், அவன் சிறிதளவேனும் தீய செயல்களின் பக்கத்தில் நெருங்காமல் ஒழுகுவானாக.
தன்னைத்தான் விரும்புகின்றவன் அதாவது தான் நலமுடன் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றவன், எவர்க்கும், சிறிதளவும் தீங்கையும் செய்யாதிருக்கட்டும் என்கிறது பாடல். தன்னைத்தான் விரும்புதற்கும் தீச்செயல்கள் ஆற்றாதிருப்பதற்கும் என்ன தொடர்பு? தன்னைத்தான் காதலித்தல் என்பது தன்நலத்தைக் காத்துக் கொள்வதாம். தன்நலம் என்பது தனது உடல், உள்ளம், பொருள் நலங்களைக் குறிக்கும். தீய செயல்களின் விளைவுகள் இவற்றுள் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்பது இரண்டுக்குமுள்ள இயைபை விளக்கும்.
'பிறர்க்குத் தீங்கு செய்யாதே' என்பதை, 'தீமை இழைப்பின், எறிந்த பந்து திரும்பிவந்து தாக்குவது போல நீ தீதடைவாய்' எனச் சிறிது அச்சுறுத்தும் நடையில் கூறப்படுகிறது. தீயவை செய்தார் தாமே கெடுவர்; தான் செய்த தீச்செயல் அத்தனையும் தன்னையே வந்து சேரும் என்ற உண்மை அறியப்படவேண்டும். தீவினை விடாது துரத்தித் துன்புறுத்தும் ஆகையால் அதைத் தடுக்கவே- தன்னைக் காக்கவே -தனக்குத் துன்பம் விளையாதிருக்கவே-தீவினைப் பக்கம் செல்லவேண்டாம் என்கிறது பாடல்.

'முதலில் உன்னையே நீ காதலி! பிறகு உலக உயிர்கள் மீது உன் காதல் இயல்பாக ஏற்படும். பின் பிறர்க்குத் தீமை செய்யமாட்டாய். தன்னைக் காக்க நினைப்பவன் பிறருக்குத் துன்பம் செய்யமாட்டான்' எனவும் 'தன் உடலை நலமாக வைத்துக் கொள்வது; தான் சுத்தமாக நோய் நொடியின்றியிருப்பது தன் திறமை அறிந்து ஆற்றலை வளர்த்துக் கொள்வது எல்லாம் தன்னைக் காதலிப்பதன் பயன்களாகும். நீ உன்னையே காதலிப்பது உண்மையானால், சிறியதொரு தீங்கையும் நெருங்கவிடமாட்டாய்' எனவும் இக்குறட்கருத்தை விளக்குவர்.
'தீமையிழைக்கப்பட்டவன் தாக்குதற்குத் தகுந்த காலத்திற்காகவும் வலி சேர்வதற்தாகவும் காத்து இருப்பான்; தீமை செய்தவர்க்கு அது முடிவில் தீதாய் முடியும்; அதனால் பிறர்க்குத் தீமை செய்யாதே' என்றபடியும் இப்பாடலுக்கு உரை கூறினர்.

'தன்னைத்தான் காதலன்' யார்?

'தன்னைத்தான் காதலன்' என்றதற்குத் தனக்குத் தான் நல்லவன், தன்னைத்தான் பிரியமுள்ளவன், தன்னைத்தான் காதல் செய்தல் உடையன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவன், தனக்குத் தானே ஆசைப்படுவான், தான்வாழ ஆசை இருப்பவன், தன்னுடைய நலன்களை விரும்புவான், தனக்குத்தானே அன்பு செய்கிறவன், தனக்கு என்றும் நலமானதையே விரும்புவான், தன்னிடத்தில் அன்புடையன், தன்னை விரும்புகின்றவன், தன்னைக் காதலிப்பவன் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

தன்னைத்தான் காதலனாயின்’ என்பதற்குத் 'தனக்குத்தான் நல்லவனாயின்' என மணக்குடவர் பொருள் கண்டார். 'தன்னலத்தைத்தான் விரும்புவனாயின்' எனச் சொ.தண்டபாணிப்பிள்ளை உரை கூறினார். ஒன்றைக் காதலிப்பது என்பது ௮தன் நலத்தைச் காதலிப்பதைக் குறிக்கும். தன்னைக் காதலிப்பது என்றது தன் நலத்தைக் காதலிப்பதைச் சொல்வதாயிற்று,

தன்னைத்தான் காதலன் என்பதற்கு தன் நலத்தை விரும்புவன் என்பது பொருள்.

தன் நலம் விரும்புவன் என்றால் ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதீர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தீவினையச்சம் கொண்டவனது நலம் தானாகவே காக்கப்படும்.

பொழிப்பு

தன் நலம் விரும்புவன் என்றால் சிறுதளவேனும் தீய செயல்களின் பக்கம் செல்ல வேண்டாம்.