இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0205



இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:205)

பொழிப்பு (மு வரதராசன்): யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

மணக்குடவர் உரை: நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது.
இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.

பரிமேலழகர் உரை: இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
(அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பொருள் இல்லாதவன் என்பதற்காகத் தீங்கு செய்துவிடக் கூடாது. செய்தால் பொருள் இல்லாமை மட்டுமல்ல. அவனிடம் உள்ள மற்ற எதுவும் இல்லாமற் போய்விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் மற்றும் பெயர்த்து இலன்ஆகும் .

பதவுரை: இலன்-இல்லாதவன்'; என்று-என்பதாக; தீயவை-கொடிய செயல்கள்; செய்யற்க-செய்யாதொழிக; செய்யின்-செய்தால்; இலன்-வறியவன்; ஆகும்-ஆம்; மற்றும்-(அசைநிலை); பெயர்த்து-பின்னும்‌, மறுபடியும், மீண்டும், மேலும்.


இலன்என்று தீயவை செய்யற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('இலம்'-பாடம்): நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக;
பரிதி: ('இலம்'-பாடம்) வறுவியோம் என்று பாவமான காரியத்தைச் செய்து பொருள் தேட வேண்டாம்; [வறுவியோம்-ஏழையேம்]
பரிமேலழகர்: யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக;

'வறுமையுற்றேம்/வறியன் என்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லை என்பதற்காகத் தீமைகள் செய்யாதே', 'ஏழை என்று ஒருவன் தீய செயல்களைச் செய்யக்கூடாது', 'தான் வறியவனென்று எண்ணித் தீவினைகளைச் செய்தல் கூடாது', ''பொருள் அற்றேன்' என்று கருதிப் பொருளினை அடைவதற்காகக் கேடான செயல்களைச் செய்யாது ஒழிக' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறியவன் என்பதற்காகத் தீய செயல்களைச் செய்யவேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. [நல்குரவினன் -வறியன்]
மணக்குடவர் குறிப்புரை: இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
பரிதி: தேடின பொருளும் நில்லாது மறுமைக்கும் வறியனாம் என்றவாறு.
பரிமேலழகர்: செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். [பெயர்த்தும்- மீண்டும்]
பரிமேலழகர் குறிப்புரை: அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.

'செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்யின் திரும்பவும் பெரிய ஏழையாவாய்', 'செய்தால் மீண்டும் ஏழையாவான்', 'அவற்றைச் செய்வானாயின் மீட்டும் அதிகமாக அவன் வறியவனாவான்', 'செய்தால் மீண்டும் மேலும் வறியவனாக நேரிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செய்வானாயின் இன்னும் மிகையாக இல்லாதவனாக நேரிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வறியவன் என்பதற்காகத் தீய செயல்களைச் செய்யவேண்டாம்; செய்வானாயின் இன்னும் பெயர்த்து இல்லாதவனாக நேரிடும் என்பது பாடலின் பொருள்.
'பெயர்த்து' என்றதன் பொருள் என்ன?

பிறர்க்குத் தீமை செய்து பொருளுடையனாக மாற நினையாதே! உள்ளதும் இல்லாததாகிவிடும்.

'பொருள் இல்லை என்பதால் தீயசெயல்கள்வழி அதைத்தேட முயலாதே; அப்படிச் செய்தால் நீ இழக்கப்போவது இன்னும் மிகையாம்.
ஒன்றும் இல்லா வறுமையாளன் பிறன் பொருளைக் கவர நினைத்தும், பொய்த்தும், களவாடியும், கொலைசெய்தும் பொருள் தேடி பசியாற்ற விழைகின்றான். இத்தீச் செயல்களினால் அவன் கடைசியில் அடைவது என்ன? ஒன்றுமில்லை. உள்ள நிலையும் இழந்து, இழிபெயர் எய்தி, மேலும் வறுமையாளனாய் விடுவான் ஆகையால் இல்லாமைக்குத் தீர்வு என்று நம்பி தீயவை செய்யக்கூடாது என்கிறது இப்பாடல்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (வினைத்துய்மை குறள் 658 பொருள்: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது) எனக்கூறிச் சான்றோர் பழிக்காத வேறுவழிகளில் பெற்றவள் பசியாற்ற அறிவுரை வழங்குபவர் வள்ளுவர். அதேபோல் பிறர்க்குக் கொடுமை புரிந்து வறுமையைப் போக்கக் கருதுவதற்கு இங்கு அறத்தடை போடுகிறார் அவர்.

இல்லாமை இருக்குமிடத்து தீமையை நாடும் எண்ணம் தோன்ற வாய்ப்புகள் மிகையாகும். 'இலர்' என்ற சொல்லுக்கு நேர் பொருள் 'இல்லாதவர்' அதாவது 'வறுமையாளர்' என்பது. வறுமையைக் காரணம் காட்டி. தீய செயல்களில் ஈடுபட்டு அவற்றை நியாயப்படுத்துவது கூடாது என்கிறது பாடல். வறுமையுடையோம் என்று கொடிய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மேலும் இல்லாதநிலை அடையக்கூடும் என அச்சப்படுத்துகிறார் வள்ளுவர். முன்னர் இலம் என்று வெஃகுதல் செய்யார்... (வெஃகாமை குறள் 174 பொருள்: வறுமையைக் காரணம் காட்டிப் பிறர்பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்) என்ற குறளிலும் இது போன்ற கருத்து கூறப்பட்டது. அங்கு புலன்களை அடக்கிஆற்றின் பிறன்பொருள் வெஃகும் நிலை வராது எனச் சொல்லப்பட்டது. இங்கு பொருளுக்காகப் பிறர்க்குத் தீங்கு செய்தால் மீண்டும் மீண்டும் வறுமைநிலை எய்த நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

இப்பாடலுக்கு 'இவன் பொருளில்லாதவன் என்று அலட்சியம் செய்து வறியவனுக்குத் தீயவை செய்யற்க', 'பிறனது இல்லாமையைப் போக்கவும் தீயவை செய்யற்க', 'தடுக்கும் ஆற்றல் இலன் என்று ஒருவனுக்கு தீமை செய்யற்க', 'இவன் துணையிலன் என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்' என்றெல்லாம் பொருளுரைத்தனர். இவை ஏற்கத்தக்கனவாக இல்லை.

இக்குறட்பாவில் இரண்டிடங்களில் இலன் (அல்லது இலம்) என்ற சொல் வருகிறது. முதலிலுள்ள 'இலன்' என்பது இல்லாதவன் என்ற பொருள் தருவது. பின்னது நற்குண நற்செய்கைகளாலும் வறியன் எனப்பொருள்படும்.

'பெயர்த்து' என்றதன் பொருள் என்ன?

'பெயர்த்து' என்பதற்குப் பின்பும், பின்னும்‌, மறுபடியும், மறுமைக்கும், பிறவிதோறும், மீண்டும் மீண்டும், திரும்பவும், மேலும், மீட்டும் அதிகமாக, மீண்டும் மேலும், உள்ளதும் நீங்கி, நிலைவிலகி, மேலும், பின்வரும் பிறவிகளிலும் என உரைகாரர்கள் பொருள் கூறினர்.

'இலன் ஆகும் மற்றும் பெயர்த்து' என்றதற்கு 'பொருள் இல்லை என்பதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்தால் அவனிடம் உள்ள குணம், குலம், கல்வி, திறமை முதலியன எதுவும் இல்லாமற் போய் மேலும் வறியனாகி மறுமை இன்பத்துக்கும் மார்க்கமில்லாதவனாகி விடுவான்', 'வறுமையால் குற்றம் இழைத்துச் சிறைக்குச் சென்றபின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உறவுகளையும் இழப்பதோடு அவமானத்திற்கு ஆட்படும் நிலை', 'இவ்வாறு தீச்செயலால் பெற்றால், பெற்றபடியே உனக்கும் தீமை செய்து அப்பொருள் போய்விடும். நிலைத்து நிற்காது', 'அவ்வாறு அவன் செய்வானானால் அதனால் அவன் பொருள் உடையவன் ஆகாமல் மறுபடியும் ஏழையாகவே ஆவான்', 'அப்பொருளாலே அல்லாமல் நற்குண நற்செய்கைகளாலும் தரித்திரனாவான்', 'பொருள்‌ இலனாதலோடு கல்வி ஒழுக்கம்‌ முதலிய வற்றையும்‌ இழப்பன்‌' என்றவாறு பொருளுரைப்பர்.
வறுமை நீக்கத்திற்குப் பொருளுடைமை மாற்று அல்ல; செல்வம் ஈட்டுதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ளுதலே நேரான வழி என்பது செய்தி.

'பெயர்த்து' என்ற சொல் இங்கு மீண்டும் எனப் பொருள்படும்.

வறியவன் என்பதற்காகத் தீய செயல்களைச் செய்யவேண்டாம்; செய்வானாயின் இன்னும் மிகையாக இல்லாதவனாக நேரிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வறுமை நிலையிலும் தீவினையச்சம் வேண்டும்.

பொழிப்பு

இல்லாதவன் என்பதற்காகத் தீமைகள் செய்யாதே; செய்யின் மீண்டும் மிகையாக வறியவனாவாய்.