இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0204



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:204)

பொழிப்பு (மு வரதராசன்): பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

மணக்குடவர் உரை: பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்.
இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.

பரிமேலழகர் உரை: பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.
('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பிறனுக்குத் துன்பந்தரும் செயலை மறந்தும் நினைக்காதே. நினைத்தால் துன்பந்தரும் செயலை அறக்கடவுள் நினைக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் சூழ்ந்தவன் கேடு அறம்சூழும்.

பதவுரை: மறந்தும்-தவறியும், நினைவொழிந்தும்; பிறன்-மற்றவன்; கேடு-அழிவு; சூழற்க-நினையாதொழிக; சூழின்-நினைத்தால்; அறம்-அறக்கடவுள்; சூழும்-திட்டமிடும்; சூழ்ந்தவன்-எண்ணியவன்; கேடு-கெடுதி.


மறந்தும் பிறன்கேடு சூழற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக; [கேட்டை - தீமையை; சூழாது ஒழிக - சூழ்ச்சிசெய்து செய்யாது விடுக]
பரிதி: மறந்தும் ஒருவருக்குப் பொல்லாங்கு செய்வான் அல்லன்;
பரிமேலழகர்: ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக;
பரிமேலழகர் குறிப்புரை: 'கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.

'பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறந்தும் பிறனுக்குக் கேடு எண்ணாதே', 'மறந்தாற்போலக்கூட இன்னொருவனுக்குக் கேடுண்டாக்க நினைக்க வேண்டாம்', 'ஒருவன் மற்றவனுக்கு மறந்தும் தீமை பயக்குஞ் செய்கையை எண்ணாதொழிக', 'பிறனுக்குக் கேடுதரும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறனுக்குத் தீமை பயக்குஞ் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக என்பது இப்பகுதியின் பொருள்.

சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
பரிதி: அப்படிச் செய்தால், தன்மம் தனக்குக் கேடுவிளைவிக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். [தனக்கு - பிறனுக்குக் கேடுபயக்கும் வினையை எண்ணினவனுக்கு; ]
பரிமேலழகர் குறிப்புரை: 'கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.

'எண்ணுவானாயின், சூழ்ந்தவனுக்குக் கேடு பயக்கும் வினையை அறம் எண்ணும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். அறம் என்பதற்கு அறக்கடவுள் எனப் பொருள் கூறினார் பரிமேலழகர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எண்ணின், அறம் உன்னை வாழவிடுமா?', 'நினைத்தால் அப்போதே தர்ம தேவதை அப்படி நினைக்கிறவனுக்குக் கேடுண்டாக்க நினைத்துவிடும்', 'எண்ணுவானாயின் அவனுக்குக் கெடுதியை உண்டாக்குஞ் செயலை அறக்கடவுள் எண்ணுவர்', 'அங்ஙனம் எண்ணினால் கேடு செய்ய அறக் கடவுள் எண்ணும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எண்ணினால் எண்ணுபவனுக்குக் கெடுதி செய்ய அறம் திட்டமிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறனுக்குத் தீமை பயக்குஞ் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும்வகை கெடுதி செய்ய அறம் திட்டமிடும் என்பது பாடலின் பொருள்.
இங்கு 'அறம்' என்ற சொல் குறிப்பது என்ன?

அடுத்தவர்க்குக் கொடுமை செய்ய எண்ணினால், உடனேயே உன்னை எப்படிக் கையாள வேண்டுமென்று இறை திட்டமிடும்.

தவறியும் மற்றவர்க்குக் கொடிய செயல்களைச் செய்ய எண்ணவேண்டாம்; எண்ணினால் அறக்கடவுள் எண்ணியவனை ஒறுக்க எண்ணும்.
ஒருவன் அறத்தை மறந்து அதற்கு மாறுபட்ட வகையில் மற்றவர்க்குத் தீமை எண்ணிய உடனேயே அறமானது அவனைத் தண்டிக்க எண்ணிவிடும். அறத்தின் ஒறுத்தலிலிருந்து தப்பிக்க முடியாதலாதலால் தீங்கு செய்வதை நினைக்கவே கூடாது. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கை உடைய வள்ளுவர் சிலருக்கு அறிவுநடையில் அறவுரை பகர்வார். மற்றும் சிலருக்கு அச்சநடை ஏற்றது என்று கருதி தீயவற்றை எண்ணினாலே அறக்கடவுளிடமிருந்து தப்ப முடியாது என அச்சுறுத்துவார். இப்பாடல் அச்ச நடையில் கூறப்பட்டது. அறக்கடவுள் கேடு நினைத்தவனை ஒறுக்கும் வகையில் கேட்டை எண்ணும்.

கனவிலும் நினைக்காதே என்று உலகியலில் வழங்கிவருவது போன்று மறந்தும் என்ற சொல்லும் பெரிதும் வழக்கில் உள்ளது. மறந்தும் என்றது மறதியிலும், மறந்தாற் போலக்கூட, தவறியும், பிழைத்தும், தான்அறியாமலும் போன்ற பொருளில் ஆளப்படுகிறது. மறந்தும்கூட பிறர்க்கு இன்னா செய்ய எண்ணாதே என்று இங்கு அறவுரை தரப்படுகிறது.
இப்பாடலிலுள்ள 'கேடு' என்பவை இரண்டும் ஆகுபெயராகக் கேட்டைத்தரும் தீச்செயல்களை உணர்த்திற்று. கேடு என்ற சொல் அதிகாரம் நோக்கி கொடுமையான செயல் என்று பொருள்படும்.

இங்கு 'அறம்' என்ற சொல் குறிப்பது என்ன?

இப்பாடலிலுள்ள 'அறம்' என்ற சொல்லுக்கு அறம், தன்மம், அறக்கடவுள், தருமதேவதை, ஒழுக்கச்சட்டம், அறத்தெய்வம் என உரையாளர்கள் பொருள் கூறினர்.
அறம் என்பது இயற்கைப் பேராற்றலைச் சுட்டுவது; அது நடுநிலை பிறழாது நிற்பது; அதை அறக் கடவுளென்றும் கூறுவர். பரிமேலழகர் பண்டை மரபு பின்பற்றி அறக்கடவுள் என எழுதினார். அக்கடவுள் நல்வினை செய்தோர்க்கு நன்மைகளையும் தீவினை செய்தோர்க்குத் துன்பங்களையும் தருவதாக நம்பப்படுவது. அறம் ‘கேடு நினைப்பவன் கெட்டுப் போகும்படி’ செய்து விடும் என்கிறது இக்குறட்பா. அறம் ஒறுப்பது பற்றி என்பில் அதனை வெயில்போலக் காயுமே அன்பில் அதனை அறம் (அன்புடைமை குறள் 77) என்னும் பாடலில் அன்பு இல்லாத உயிரை அறம் எலும்பற்ற புழுக்களைப் போல துடிதுடிக்க வைத்துத் தண்டிக்கும் என்று சொல்லப்பட்டது. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (அடக்கமுடைமை குறள் 130 பொருள்: சினம் மனத்தில் தோன்றாமல் அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணச் சமயம் பார்த்து அறக்கடவுள் அவன் வழி நுழைந்து எதிர் நோக்கும்) என்ற குறளில் அறம் நல்லது செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் எனச் சொல்லப்பட்டது.

அறத்தின் ஒறுக்கும் ஆற்றலைக் காட்டும் குறள் இது. அறம் ஒரு இறைச்சட்டமாதலால் அது மாற்றமுடியாதது. ஒருவன் செய்யும் தீமைக்குத் தனிமனிதனோ அரசனோ ஒறுத்தல் செய்யாவிடினும் கடவுள் தண்டனை அளிப்பார் என்பது கோடிட்டுக் காட்டப்படுகிறது. அறமானது யார் யார் எதனைச் செய்கிறார்களோ அவரவர்களுக்கு, அதனதன் விளைவுகளை அடையச்செய்கிறது என்ற உண்மையையும் இதனால் அறியமுடிகிறது. தான் பிறர்க்குத் தீங்கு நினைக்கும்போதே அந்தத் தீமையின் பயன் தன்னை வந்து தாக்கும் என்பதை உணர்ந்தால் யாரும் தீங்கு செய்ய மாட்டார்கள் என்ற உண்மையை உரைத்து அதனை அறத்தின்மேல் ஆக்கியதாகவும் கொள்ளலாம். சூழ்தல் என்பது பலகாலம் எண்ணிச் செய்தல் எனப்பொருள்படும். மறந்தும் என்றதில் உள்ள உம்மை சூழற்க என்றது. நினைவே செயலுக்குக் காரணமாதலால், நினையாதொழிந்தால் செயல் நடவாது என்பது தெளிவாக்கப்பெறுகிறது. பிறர்க்குக் கேடு செய்ய நினைப்பதும், திட்டங்கள் வகுப்பதும், சூழ்ச்சிகள் தீட்டுவதும் , கொடிய செயல்களும் எதிர் மறையானவை. அவை கெட்ட விளைவுகளையே உண்டாக்கும். எல்லாம்வல்ல அறத் தெய்வம்‌ தண்டித்தே தீருமாதலால், மற்றவர்க்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.

'நம்மால் கேடு சூழப்பட்டவன் நமக்குக் கேடு எண்ணுவதற்கு முன் அறக்கடவுள் நமக்குக் கேடு சூழும்' என்பது மணக்குடவர் உரையின் சாரம். பரிமேலழகர் 'இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும். அதாவது பிறனுக்குக் கேட்டைத்தரும் வினையைச் செய்ய எண்ணின இவன் பிறனுக்குத் தீவினையைச் செய்வது இடையூற்றின் மிகுதிப்பாட்டால் நிறைவேறாது போயினும், அல்லது நிறைவேறக் காலம் செல்லுமாயினும், அறக்கடவுள் அவனுக்குக் கேட்டைத்தரும் வினையைச் செய்வது தவறாது உடனே நிறைவேறும் என்பதாம்' என்றவாறு பொருளுரைத்தார்.
மு வரதராசன் 'ஊழால் இன்ப துன்பங்களும் அமைகின்றன. புறவாழ்வில் செல்வம் நுகர்வு முதலியவற்றை அமைப்பது போலவே அகவாழ்வில் பிறர்க்கு நன்மை செய்தோர் நன்மை அடையுமாறும் தீமை செய்தோர் தீமை அடையுமாறும் ஊழே அமைகின்றது. அகவாழ்வில் அறத்தைப் போற்றி வளர்க்க உரிமை கொடுத்த ஊழ் அதற்கு ஏற்ப நன்மை தீமை விளையும் முறை பிறழாமல் ஆட்சி புரிந்து வருகின்றது. அதாவது அறநெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையுமாறும், அறநெறி புறக்கணித்து வாழ்ந்தால் தீமை விளையுமாறும் அமைந்திருக்கின்றது. அறத்தைப் போற்றவும் புறக்கணிக்கவும் மக்களுக்கு உரிமை இருக்கின்றதே அல்லாமல் அதனால் விளையும் நன்மை தீமையை மாற்றிவிட உரிமை இல்லை' என அறத்தை ஊழுடன் இயைபுபடுத்திக் கூறினார்.
தீவினை செயப்பட்டான்‌ தீவினை செய்தானை ஒறுப்பினும்‌ ஒறுக்கும்‌; ஒறுக்கப்‌ பிற்படினும்‌ படும்‌; ஒறுக்கா தொழியினும்‌. ஒழியும்‌. அவனுக்கு முற்பட்டு அறக்கடவுள்‌ அவனை ஒறுத்தல்‌ ஒருதலை யென்பார்‌ 'சூழின்‌ அறஞ்சூழும்‌' என்றார்‌. அறத்தின் உறுதிப்பாடும் விரைவும் இதனால் உணர்த்தப்பட்டன. பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பதும் மட்டும் அன்று எண்ணாதிருப்பதும் அறமே என வேறு வகையாகவும்‌ தீவினையின்‌ கொடுமை கூறப்பட்டது.

பிறனுக்குத் தீமை பயக்குஞ் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும்வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தீயவை செய்பவர்க்குத் தீயசெயல் சென்று தாக்கும் என்பதால் தீவினையச்சம் கொள்க.

பொழிப்பு

பிறனுக்குத் தீமைதரும் செயலை மறந்தும் நினைக்காதே; நினைத்தால் உனக்குத் துன்பமுண்டாகும் செயலை அறம் எண்ணும்