இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0203



அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:203)

பொழிப்பு (மு வரதராசன்): தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை.
இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.

பரிமேலழகர் உரை: அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.
(விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கொடுமைகளைப் பகைவர்க்கும் செய்யாது ஒழிக; அதுவே அறிவிற் சிறந்த அறிவாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செறுவார்க்கும் தீய செய்யா விடல், அறிவினுள் எல்லாம் தலைஎன்ப .

பதவுரை:
அறிவினுள்-அறிவுகளுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-சிறப்பு; என்ப-என்று; சொல்லுவர்-சொல்வார்கள்; தீய-தீச்செயல்கள்; செறுவார்க்கும்-பகைவர்க்கும்; செய்யா-செய்யாமல்; விடல்-விடுதல்.


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்;
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.
பரிதி: அறிவுள்ளதற்கு எல்லாம் தலைமையான காரியம் என்க;
காலிங்கர்: அறிவுள்ளதற்கு எல்லாம் தலைமையான காரியம் என்க;
பரிமேலழகர்: தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர்,

'அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும்' என்றும் பரிதி 'அறிவுள்ளதற்கு எல்லாம்' என்றும் பரிமேலழகர் 'உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும்' என்று எதற்குத் தலை என்பதை விளக்கினர். மணக்குடவரும் பரிமேலழகரும் 'நல்லோர் சொல்லுவர்' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடைச் செயல்கள் எல்லாவற்றுக்கும் மேலானது என்று பெரியோர் கூறுவர்', 'அறிவுகளுக்கெல்லாம் மிகச் சிறந்த அறிவு எதுவென்றால்', 'தம்மைத் துன்பப்படுத்துவோர்க்குங் கெடுதியானவற்றைத் தாம் செய்யாது விடுதலேயாம் என்று நல்லோர் சொல்லுவர்', 'நன்மை நாடும் அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலைமையான அறிவாகும் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறிவுடைமை எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

தீய செறுவார்க்கும் செய்யா விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை.
பரிதி: தனக்கு வேண்டாதார்க்கும் தீவினையே எண்ணாமலிருப்பது என்றவாறு.
பரிமேலழகர்: தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.
பரிமேலழகர் குறிப்புரை: விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.

''தமக்குத் தீமை செய்வார்க்கும்/தனக்கு வேண்டாதார்க்கும்/தம்மைச் செறுவார் மாட்டும்தீமை செய்யாதொழிதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீய செயல்களைத் தம்மை வருத்தியவரிடத்தும் திருப்பிச் செய்யாதிருத்தல்', 'பகைவர்களுக்கும் துன்பம் செய்யாமல் விட்டு விடுவது', 'அறிவொடு செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது யாதெனில்', 'தம்மைப் பகைத்து அழிக்க முயலுகின்றவர்க்கும் கேடுகளைச் செய்யாமல் இருத்தல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கொடிய செயல்களைத் தம்மை வருத்தியவரிடத்தும் செய்யாதொழிதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடிய செயல்களைத் தம்மை வருத்தியவரிடத்தும் செய்யாதொழிதல் அறிவுடைமை எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்று சொல்வர் என்பது பாடலின் பொருள்.
தீயவை செய்யாதிருப்பதில் அறிவின் பங்கு என்ன?

தமக்குத் துன்பம் செய்தவர்களிடத்தும் தீச்செயல்கள் புரியாமல் இருப்பது சிறந்த அறிவுடைமையாம்.
தமக்குத் துன்பம் இழைத்துப் பகைப்பவர்க்கும் தீமையைச் செய்யாமல் விடுதலை அறிவுச் செயல்களுள் தலையாயது என்று கூறுவர் என்கிறது பாடல். அப்படி யார் சொல்வர் என்பதற்கு நல்லோர், அறிஞர், பெரியோர், ஆய்ந்தோர், அறிவுடையோர் எனப் பொருள் கூறினர். வள்ளுவர் தாம் படித்த நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும்போது பொதுமையில் 'என்ப' என்று சொல்வதுண்டு.
இன்னா செய்தார்க்கும் இனிய செய்யுமாறு குறளில் பல இடங்களில் வள்ளுவர் வற்புறுத்தியுள்ளார். அதுபோன்ற கருத்துப்பொருளில் இங்கு, அறிவு நிலைகள் பலவற்றிலும் தலையானது எது என்றால், பகைவர்க்கும் தீமை செய்யாமல் விடுவதே ஆகும் என்ற உயர்நிலையை உரைக்கின்றார். கெடுதல் செய்வோருக்கும் நன்மை செய்யும் பொறுமையுடன் கூடிய அறிவையே அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவுடைமை என்கிறார்.

செறுவார் என்பதற்கு அழிப்பவர், கொல்பவர், சினம் கொள்வார் என்ற பொருள்கள் உண்டு. தமக்கு தீமை செய்வார், தமக்கு வேண்டாதார், தம்மைச் செறுவார், தம்மை வருத்துவோர், தனக்குப் பகையாய் இருக்கிறவர்கள், தமக்குத் தீவினை செய்யும் சத்துருக்கள், தம்மை வருத்துவோர், தம்மைப் பகைப்பவர், பகைவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர். நாகை சொ தண்டபாணி '' தீய செறுவார்க்கும் செய்யா விடல்’ என்பது தன்னைக் கொல்வார்க்கும் தீமை செய்யா தொழிதல் எனவும் பொருள் கொள்ளக் கிடந்தது. இதற்கு மெய்ப்பொருணாயனார் செயல் சிறந்ததோர் எடுத்துக்காட்டுமாகும். ஆயினும் இல்லறத்தினிற்பார் எல்லாரும் இதை மேற்கொண்டொழுகல் இயலாதென்பதையுட் கொண்டும் இவ்வாறொழுகினது சாலச் சிறந்த தென்பதை அறிவுறுத்த வேண்டியும் போலும் ஆசிரியர் பகைஞ ரென்றேனும் கொலைஞ ரென்றேனும் கூறாது ‘செறுவார்’ என அவ்விரு பொருளும் பயப்பக் கூறியது என செறுவார் என்ற சொல்லாட்சியை விளக்குவார்.
செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் (குறள் 421), பிழை செறுவார்க்கும் செய்தலரிது (குறள் 843), செறுவார்க்குச் சேணிகவா இன்பம் (குறள் 869) என்று இச்சொல் பயின்ற ஏனையிடமெல்லாம் பகைவர் என்ற பொருளில் ஆளப்பட்டமையால் 'செறுவார்' என்றதற்குப் பகைவர் என்ற பொருள் பொருந்தும்.

தீயவை செய்யாதிருப்பதில் அறிவின் பங்கு என்ன?

தீயவை செய்யாதிருப்பதை மக்கட்பண்பு, ஒழுக்கம், சால்பு, அருட்செயல் என்று கூறாமல் அறிவு என இக்குறட்பாவில் ஏன் சொல்லப்பட்டது?
இப்பாடலிலுள்ள 'அறிவினுள் எல்லாம்' என்ற தொடர்க்கு எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும், அறிவுள்ளதற்கு எல்லாம், தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும், அறிவு எல்லாவற்றிலும், உறுதி தரும் அறிவுகளனைத்திலும், அறிவுச் செயல்களுள், அறிவிற் சிறந்த அறிவு, அறிவுடைச் செயல்கள் எல்லாவற்றுக்கும், அறிவுகளுக்கெல்லாம் மிகச் சிறந்த அறிவு, அறிவுகள் எல்லாவற்றுள்ளும், அறிவொடு செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும், நன்மை நாடும் அறிவுகள் எல்லாவற்றுள்ளும், அறிவுச் செயல்களெல்லாவற்றுள்ளும், அறிந்து கொள்ளத்தக்க நல்லனவற்றுள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அறம் செய்ய மக்களை உந்துவதில் அறிவின் பங்கை வள்ளுவர் பல இடங்களில் கூறியுள்ளார். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (அறிவுடைமை குறள் எண்; 422 பொருள்: உள்ளத்தை அது போன போக்குகளிற் செலவிடா, தீமையினின்று நீக்கி நன்மையின்கண் செலுத்துவதே அறிவாகும்) என்ற பாடலில் தீதினின்றும் விலக்கி நன்னெறியில் கொண்டு செல்லும் அறிவின் ஆற்றலை விளக்கினார். செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். (அடக்கமுடைமை குறள் எண்; 123 பொருள்: அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் அறியப்பட்டு மேன்மை பயக்கும்), கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (அடக்கமுடைமை குறள் எண்; 130 பொருள்: சினம் மனத்தில் தோன்றாமல் அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணச் சமயம் பார்த்து அறக்கடவுள் அவன் வழி நுழைந்து எதிர் நோக்கும்), அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு (வெஃகாமை குறள் எண்; 179 பொருள்: பிறர் பொருளைக் கவர விரும்பாமை அறம் என்ற உணர்வுடையாரைத் தகுதியறிந்து அறிந்து செல்வம் சென்றடையும்) என்ற வரிகள் பகுத்தறிவினால் ஒருவன் இச்செயலின் பயனாக நன்மை விளையுமா தீமை விளையுமா என்றெல்லாம் சிந்தித்துத் தீயதைச் செய்யாமல் நீக்கி நல்லதைத் தேர்ந்தெடுக்கிறான் என்று தெரிவிப்பன. இப்பாடல்கள் எல்லாம் அறத்தைச் செய்யும்படி தூண்டுவதில் அல்லது அல்லாதவற்றைச் செய்யாதபடி விலக்குவதில் அறிவின் பங்கை நன்கு விளக்கிற்று.

கொடிய செயல் செய்வதற்குத் தூண்டுகோல் உணர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாதிருப்பதற்கு அறிவுடைமை தேவை. அந்த அறிவு எல்லா அறிவுகளிலும் சிறந்தது என்கிறார் வள்ளுவர் இப்பாடலில்.

கொடிய செயல்களைத் தம்மை வருத்தியவரிடத்தும் செய்யாதொழிதல் அறிவுடைமை எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒருவனது பகுத்தறியும் திறன் தீவினையச்சம் உண்டாக்கவல்லது

பொழிப்பு

தம்மை வருத்தியவரிடத்தும் கொடிய செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறிவுடைமை எனச் சொல்வர்.