தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர்; [தீத்தொழில்-தீமையைப் பயக்கும் தொழில்; சீரியர் - பெரியோர்]
மணக்குடவர் குறிப்புரை: இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
பரிதி: சென்மாந்திரத்திலே பாவிகள் பாவத்துக்குப் பயப்படார்கள்; புண்ணிய சிந்தையரான பேர் பயப்படுவார் என்றவாறு. [சென்மாந்திரத்திலே- வேறு பிறவிகளில்; பாவிகள் - தீவினைகளைச் செய்தோர்கள்; புண்ணிய சிந்தையரான பேர்- நல்வினையே செய்யும் மனமுடையவர்கள்] .
காலிங்கர்: உலகத்து முற்பிறப்பின்கண் கொண்டமைந்த முறையானே தீவினையாளராகிய மறப்பண்பினர் எஞ்ஞான்றும் அஞ்சுவதிலர்; மற்றும் நல்வினையாளராகிய விழுமிய பண்பினர் மிகவும் அஞ்சுவர் [மறப்பண்பினர்-கொடுந்தன்மையினர்; எஞ்ஞான்றும்-எப்போதும்; விழுமிய பண்பினர் - சிறந்த குணம் உடையவர்கள்]
பரிமேலழகர்: முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர்.;
பரிமேலழகர் குறிப்புரை: மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.
'தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி, காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் முற்பிறப்புவினை பற்றிய கருத்துக்களைக் கொணர்ந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கொடியவர் அஞ்சாது செய்வர்; நல்லவர் செய்ய அஞ்சுவர்', 'தீவினைகளைச் செய்ய அஞ்சமாட்டார். ஆனால், மேலோர் பழக்கம் இன்மையால் தீவினை புரிய அஞ்சுவர்', 'தீவினை செய்து பழகினவர்கள் மேற்கொள்ளற்கு அஞ்சமாட்டார்கள்; உயர்ந்தோர் அதற்கு அஞ்சுவர்', 'கெட்ட செயல்களைச் செய்கின்றவர் அஞ்சார்; பெரியோர் அஞ்சுவர்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கொடியதொழிலார் அஞ்சாது செய்வர்; மேலோர் செய்ய அஞ்சுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
தீவினை என்னும் செருக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீவினையாகிய களிப்பை. [களிப்பை - மகிழ்ச்சியை]
காலிங்கர்: யாதினை எனின் தீவினை என்று சொல்லப்பட்ட மறத்தினை என்றவாறு.
பரிமேலழகர்: தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை,
பரிமேலழகர் குறிப்புரை: தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது.
தீவினையாகிய களிப்பு/மறம்/மயக்கம் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தீவினைகளை', 'கொடுஞ்செயல் புரிவோர் முன் செய்து வந்த பழக்கத்தால் செருக்கினால் வரும்', 'தீவினை செய்தற்குக் காரணமாகிய அகந்தையை', 'தீய செயல்களைச் செய்தல் என்னும் இறுமாப்பினை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தீச்செயல் என்னும் அகந்தை என்பது இப்பகுதியின் பொருள்.
|