இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0197நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:197)

பொழிப்பு: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

மணக்குடவர் உரை: சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று.
இது சான்றோர்க்கு ஆகாதென்றது.

பரிமேலழகர் உரை: நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.
('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: சான்றோர் சிறப்பில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; பயன் இல்லாத சொற்களை அவர்கள் சொல்லாதிருத்தல் நலம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நயனில சான்றோர் சொல்லினும் சொல்லுக, பயனில சொல்லாமை நன்று.


நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்:
பதவுரை: நயன்-இனிமை; இல-இல்லாதவைகளை; சொல்லினும்-சொன்னாலும்; சொல்லுக-சொல்வாராக; சான்றோர்-சால்புடையோர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்;
பரிதி: நயமில்லாத வெட்டையான வார்த்தை சொன்னாலும்; [வெட்டையான வார்த்தை -பொருளாழமில்லாத பயனற்ற வெளிற்றுச் சொல்]
பரிமேலழகர்: சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது.

'சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சான்றோர் முறையல சொல்லினும் சொல்லலாம்', 'சால்புடையார் அறனல்லாத சொற்களைக் கூறினும் கூறுக', 'அறிவுடையவர்கள் இரக்கமில்லாத வார்த்தைகளைச் சொன்னாலும் சொல்லலாம்', 'சான்றோர் இனிமையில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சான்றோர் இனிமை இல்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

பயனில சொல்லாமை நன்று:
பதவுரை: பயன்-நன்மை; இல-இல்லாதவைகளை; சொல்லாமை-சொல்லாதிருத்தல்; நன்று-நல்லது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது சான்றோர்க்கு ஆகாதென்றது.
பரிதி: பயனில்லாத வார்த்தையைச் சொல்லுவான் அல்லன் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.

'பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனற்றவை சொல்லல் ஆகாது', 'அவர் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லது', 'ஆனால் பயனில்லாதவற்றைச் சொல்லக்கூடாது', 'ஆனால் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சான்றோர் நயனில சொன்னாலும் சொல்லட்டும்; வெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
'நயனில' என்றால் என்ன?

சொல்லினும் சொல்லுக என்ற தொடர்க்குச் சொன்னாலும் சொல்லுங்கள் என்பது பொருள்.
சான்றோர் என்ற சொல் சால்புடையோர் என்ற பொருள் தரும்.
சொல்லாமை என்றதற்குச் சொல்லாமலிருத்தல் என்று பொருள்.
நன்று என்ற சொல் நல்லது என்ற பொருளது.

நயம் அற்றவற்றைச் சான்றோர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும், அதனால் ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் பயனற்றவற்றை மட்டும் சொல்லாதிருக்கட்டும்.
சான்றோர் நயனில சொல்லினும் சொல்லுக; சான்றோர் பயனில சொல்லாமை நன்று என வாசிக்கலாம்.
சான்றோர் என்ற சொல் குறளில் நற்குண நற்செய்கை உடையவர் என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. நயனில என்பது இனிமையற்றன என்ற பொருள் தருவது. சான்றோர் பொதுவாக இனிமையற்ற சொற்கள் பேசமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்கள். ஆனாலும் ஒருசில நிலைமைகளில் அப்படிப் பேச நேரிட்டால் பேசிவிட்டுப் போகட்டும்; கசப்பான மருந்தைப் போல் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எந்த சூழலிலும் பொருளற்ற, பொருத்தமற்ற வீண்பேச்சு பேசாதிருத்தல் நல்லது. .

பயனில என்பதற்கு இனிமை பயவாத செவியறிவுறூஉவான வேம்பும் கடுவும் போன்ற சொற்கள் எனப் பொருள் கொண்டு கடுஞ்சொல் பேசினாலும் வெட்டிப் பேச்சு பேசாமை நன்று என்று இக்குறளுக்குப் பொருள் கொள்ளலாம். அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று (பிறனில் விழையாமை குறள் 150 பொருள்; ஒருவன் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.) அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது (புறங்கூறாமை குறள் 181 பொருள்: அறம் பற்றிப் பேசவும் செய்யாது, அறமல்லாத செயலைச் செய்பவனாய் ஒருவன் இருந்தாலும் கூட, அவன் புறங்கூற மாட்டான் என்று பெயர் பெற்று வாழ்வது நல்லது.) என்ற இடங்களில் மிகக் கொடியதை உடன் வைத்துக் கூறக் காண்கின்றோம். அதுபோன்ற நடைக்கருத்தில் இங்கு, விரும்பத்தகாத சொற்களைச் சான்றோர் சொல்லினும், பொருளில்லாத வெட்டிப் பேச்சை அவர்கள் பேசவேண்டாம் எனக் கூறப்பட்டது.

'நயனில' என்றால் என்ன?

'நயனில' என்பதற்கு நயனில்லாதவை (நடுவுநிலைமை யற்றவை), நயமில்லாத பொருளாழமில்லாத பயனற்ற வெளிற்றுச் சொற்கள், நீதியோடு படாதவை, இனிமை இல்லாத நயமற்றவை, முறையல, அறனல்லாத, இரக்கமில்லாத, அன்பில்லாத, பிறர் விரும்பிக் கேட்க இயலாத, சிறப்பில்லாத, இனிமையில்லாத, அழகும் இனிமையும் இல்லாத, அறமல்லாதவற்றை, நேர்மையில்லாத, நீதியற்ற, இனிமை பயவாத கடுஞ்சொல் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நீதியற்றவை, அறமற்றவை, நடுவுநிலைமையற்றவை, முறையற்றவை பேசுவதற்கு வள்ளுவர் யாருக்குமே உரிமை வழங்கமாட்டார். அதுவும் சான்றோர்க்கு இவைபோன்ற சலுகைகளை அவர் தரமாட்டர் என்று உறுதியாகச் சொல்லலாம்.
குறளில் நயன், நயம் என்ற இரண்டு சொற்கள் பலவிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நயம் என்ற சொல்லின் கடைப்போலிதான் நயன் என்பர். “நயன்” என்ற சொல்லுக்கு, விருப்பம், ஈரம், நயம், இன்பம், நன்மை, பயன், மகிழ்ச்சி, செவ்வி, நீதி என்று பல பொருள்கள் உள. இச்சொல்லுக்குப் பயனில சொல்லாமை அதிகாரத்தில் உரையாசிரியர்கள் பலவகைப் பொருள் கொடுத்து விளக்கியுள்ளனர். இச்சொல் வேறு வேறு அதிகாரங்களில் அவ்வவ்வதிகார இயைபுடைய பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் அறியத்தகும். பொதுவாக 'நய' என்ற வேர்ச்சொல் விருப்பம் என்ற பொருளில் குறளில் பெரிதும் ஆளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
தண்டபாணி தேசிகர் கடுஞ்சொல் தீய சொல்லாகாததால் அதனைச் சொல்லினும் சொல்லுக என இழிவு சிறப்பு உம்மை கொடுத்துக் கூறவேண்டிய தேவை இல்லை' என்பார். ஆனால் சான்றோர் உரைக்கும் விரும்பிக் கேட்க இயலாத கடுஞ்சொல்லும் கடியத்தகுவதே எனக்கொண்டு 'இனிமையற்றன' என்ற பொருளிலேயே நயனில என்றது இக்குறட்பாவில் பயிலப்பட்டது எனலாம். வன்சொல்லினும் வெற்றுரை மோசமானது என்பது கருத்து.

'நயனில என்றதற்கு இங்கு இனிமையில்லாத என்பது பொருள்.

சான்றோர் இனிமை இல்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்; வெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சான்றோர் வன்சொல் கூறினும் பயனில சொல்லாமை நல்லது.

பொழிப்பு

சான்றோர் பிறர் விரும்பாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்; வெற்றுரை பேசாதிருத்தல் நல்லது.