இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0196பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:196)

பொழிப்பு (மு வரதராசன்): பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும்.மணக்குடவர் உரை: பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக.
இது மக்கட் பண்பிலனென்றது.

பரிமேலழகர் உரை: பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.
(அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: பயனில்லாத சொற்களப் பேசுவது மட்டுமன்று, அதைப் பலபடப் பாராட்டியும் விடாது கொண்டாடுவானாகிய அவனை மனிதன் எனல் தகாது; மனிதருள் உள்ளீடற்ற பதர் என்று சொல்ல வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல்; மக்கட் பதடி எனல்.

பதவுரை: பயனில்-நன்மையில்லாத; சொல்-மொழி; பாராட்டுவானை-கொண்டாடுவானை; மகன்-மனிதன்; எனல்-என்று சொல்லற்க; மக்கள்-மாந்தர்; பதடி-பதர்; எனல்-என்று சொல்லுக.


பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக;
பரிதி: பயனில்லாத சொல்லை நல்லோர் முன் பாராட்டுபவனை மனிதன் என்பது;
பரிமேலழகர்: பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க;

'பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக' என்று மணக்குடவரும் 'பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பாராட்டுவானை என்றதற்கு 'பலகாலுஞ் சொல்லுவானை' எனப் பரிமேலழகர் பொருள் கூறினார். பரிதி எனல் என்ற சொல்லுக்கு 'என்று சொல்வது' என்ற பொருளில் என்பது என உரை செய்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனில சொல்வானைப் புகழ்கின்றவனை மனிதன் என்னாதே', 'பயனற்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பவனை மனிதனென்றா சொல்லுவது!', 'பயன் இல்லாத சொற்களைப் பலதரஞ் சொல்லிப் பயில்கின்றவனைத் தக்க மனிதன் என்று சொல்லக்கூடாது', 'பயனல்லாத சொற்களைப் பலகாலும் சொல்லுவானை மனிதன் என்று சொல்லற்க' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பயனற்ற சொற்களைப் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லற்க என்பது இப்பகுதியின் பொருள்.

மக்கட் பதடி எனல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மக்களில் பதரென்று சொல்லுக.
மணக்குடவர் குறிப்புரை: இது மக்கட் பண்பிலனென்றது.
பரிதி: நெல்லுடன் பிறந்த பதரை நெல் என்பது போலும் என்றவாறு.
பரிமேலழகர்: மக்களுள் பதர் என்று சொல்லுக.
பரிமேலழகர் குறிப்புரை: அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.

'மக்களில் பதரென்று சொல்லுக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நெல்லுடன் பிறந்த பதரை நெல் என்பது போலும்' என்று இங்கும் எனல் என்பதற்கு 'என்று சொல்வது' என்ற பொருளில் என்பது என உரை வரைகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனிதப்பதர் என்று சொல்', 'மனிதப் பதர் என்றுதான் சொல்ல வேண்டும்', 'அவனை மனிதருள் பதர் என்று சொல்லல் வேண்டும்', 'மக்களுள் பதர் என்று சொல்லுக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மனிதப் பதர் என்று சொல்க என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
பயனற்ற சொற்களைப் பாராட்டுவானை மனிதன் என்று சொல்லற்க; மனிதருக்குள் பதர் என்று சொல்க என்பது பாடலின் பொருள்.
'பாராட்டுவான்' யார்?

சாரமில்லாத பேச்சுக்களை அடிக்கடி பேசுகிறவன் வீணாய்ப் போனவன்.

பயனில்லாத சொற்களைக் கொண்டாடுபவனை மக்களுள் ஒருவன் என்று சொல்லுதல் கூடாது. மக்களுள் பதர் என்று சொல்க.
பயனற்ற வெட்டிப்பேச்சு பேசுவது மட்டுமன்று, அதைப் பலபடப் பாராட்டியும் திருப்பித் திருப்பிப் பேசி கொண்டாடுபவன் உள்ளீடற்ற நெற்பதர் போன்றவன்; அறிவு என்ற உள்ளீடு உடையோர் அவ்வாறு செய்யமாட்டார் என்கிறது இப்பாடல். பயனில பேசுதலை வள்ளுவர் வெறுக்கிறார். தற்புகழ்ச்சி மொழிகள், தன்னலத்தையொட்டிய பொய்யுரைகள், பிறரிடம் நன்மையைப் பெறுவதற்காகக் கூறப்படும் புனைந்துரைகள், பிறரைப் பற்றிய வம்புப் பேச்சுக்கள் போன்றவை பயனற்றவையாம். இயல்பான வாழ்க்கையில் அற்ப மகிழ்ச்சிகளுக்கும் இடம் உண்டுதான். ஆனாலும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிப்பவர்களைக் காணும்போது அவர் சீற்றம் அடைகிறார். எனவே அக்குணம் கொண்டோரை பதர் எனச் சாடுகிறார்; அவனை மனிதனாக மதிக்காதே என்கிறார்.
சமுதாய வாழ்வில் தனிப்பட்ட ஒருவன் தன் காலத்தை வீணடிப்பதே பெருந்தவறாகும்; ஆனால் மற்றொருவனுடைய காலத்தையும் சேர்த்து வீணடிக்கப்படுவது பொறுத்து கொள்ளக்கூடியதல்ல என்று வள்ளுவர் கருதுகிறார். அதனால்தான் வீண் பேச்சை இத்துணைக் கடுமையாகக் கண்டிக்கிறார்.

பதடி என்றது பதர் என்பதைக் குறிக்கும் சொல். உள்ளீடு இல்லாத நெல் என்று பொருள். நெல் பயிராக வளர்ந்து கதிர் விட்டுப் பழுத்தும் உள்ளீடாகிய அரிசி இன்மையால், அறுவடைக்குப் பிறகு, காற்றிலே தூற்றி பதரடித்தல் செய்யும்போது அப்பதர் ஒதுக்கப்பட்டு, நெல் மட்டும் பயனுக்குக் கொள்ளப்படும், பதர் பயனற்றதாகிறது. அதுபோலவே பொருளற்ற சொல் பேசிப் பொழுதைக் கழிப்போர் பதர் என்று தவிர்க்கப்பட வேண்டியவர்கள். பதருக்கு அரிசி ஆகிய உள்ளீடு இல்லாதது போலப் பயனில் சொல் பாராட்டுவானுக்கு பொருளோடு கூடிய சொற்களால் பேசமுடியாமையால் அவன் 'மக்கட் பதடி' எனப்படுகிறான். பதர் உருவில் நெல்போலத்தான் இருக்கிறது என்றாலும் பதரால் பயன் ஏதுமில்லை. அதுபோலத்தான் பயனற்றன பேசுவான் மனித உருவில்தான் இருக்கிறான்; ஆனால், அவனால் பயன் ஒன்றும் இல்லை.
சங்கப் புலவர் ஒருவர் பயனற்ற ஒருநாளைப் 'பதடி வைகல்' என்றார். பயனின்று கழிந்த ஒரு நாள் பதடி வைகல் (பதர்நாள்) ஆகும்பொழுது பயனில்லாத சொற்களைப் பேசியே நாளெல்லாம் கழிக்கும் ஒருவன் மக்கட்பதடி ஆகிறான்.

மகன் எனல், மக்கட் பதடி எனல் என்பவை தனித்தனி வாக்கியங்கள்: 'பயனில்சொல் பாராட்டுவானை' என்பது இரண்டு வாக்கியத்துக்கும் பொதுவான செயப்படுபொருள். எனவே 'பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல், பயனில்சொல் பாராட்டுவானை மக்கட்பதடி எனல்' என்று இரண்டாக்கி வாசித்தால் கருத்துத் தெளிவாகும்.
'எனல்' என்ற சொல் இக்குறளில் இரண்டு இடங்களில் வருகிறது. அதில் முதலிடத்தில் 'சொல்லற்க' என எதிர்மறைப் பொருளிலும், அடுத்த இடத்தில் 'சொல்க' என உடன்பாட்டு நிலையிலும் வருவதைப் பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு கொண்டு உணர்த்துகிறார். (மகனெனல் என்பதை "மகன் எனேல்" என்று எடுத்துக் கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்.) ஒரே பாடலில் ஒரு சொல்லுக்கு இப்படி முரண்பட்ட பொருள் அமைந்துள்ள கவித்திறனைப் புலவர்கள் போற்றிப் புகழ்வர். வெவ்வேறு குறட்பாக்களில் இவ்வாறு வெவ்வேறு பொருட்களில் ஒரே சொல் ஆளப் பெற்றிருப்பின் அது இயல்பாகக் கருதப் பட்டிருக்கும். இரண்டடிக்குள் முதலடியில் ஒரு பொருளும், ஈற்றடியில் அதற்கு நேர்எதிரான பொருளும் ஒரே சொல்வழி ஆக்கப்பட்ட இப்பாடலின் இலக்கிய நயம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

'பாராட்டுவான்' யார்?'

'பாராட்டுவான்' என்றதற்குக் கொண்டாடுவான், பாராட்டுபவன், பலகாலுஞ் சொல்லுவான், பலகாலும் பாராட்டிச் சொல்லுவான், பலபடப் பாராட்டியும் விடாது கொண்டாடுவான், புகழ்கின்றவன், போற்றிக் கொண்டாடுபவன், திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பவன், பலபடச் சொல்பவன், பலதரஞ் சொல்லிப் பயில்கின்றவன், மேன்மேலும் பேசுபவன், பலகாலும் விரும்பிச் சொல்பவன், விரும்பிப் பேசுபவன்-மகிழ்ந்து கேட்பவன், கொண்டாடுதல் அதாவது பிரியமாகப் பேசுதல் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இப்பாடலிலுள்ள பாராட்டுவான் யார் - பயனற்ற சொற்களைப் பேசுபவனா அல்லது பொருளற்ற சொற்களைப் போற்றிக் கொண்டாடுபவனா?
சிலர் யார் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் வாளா பயனில்சொல் பாராட்டுவானை எனக் கூறினர். இது பயனற்ற வார்த்தைகளைப் பாராட்டுபவர்கள் என்ற பொருள் தருகிறது. மற்றும் சிலர் 'பயனில் சொல்லி அதைத் 'தானே பாராட்டி மகிழ்வானை' 'என்று பொருள் உரைத்தனர். இது பயனில் பேசுபவனைக் குறிக்கும். இன்னும் சிலர் 'பயனற்றவற்றைப் பேசுபவனைப் பற்றி இதுவரையில் கூறிவந்த வள்ளுவர், இப்போது அதைக் கேட்டுப் பாராட்டுவோனை, அவரை ஊக்குவித்து உரையாடும் அறிவிலியைப் பற்றி இங்கே பேசுகின்றார்' என்று கூறினர். 'கேட்டுப்பாராட்டுவான் இருத்தலால் அன்றோ, ஒருவன் பொருளின்றிச் சொற்பந்தல் போடுகின்றான். 'பயனில் சொல்வானை ஒப்பக் கேட்டுப் புகழ்வானும் இழிஞன்' என்பதைச் சொல்ல இப்பாடல் இயற்றப் பெற்றது; 'பயனில சொல்லாமை' என்ற அதிகாரத்துப் 'பயனில கேளாமை' யறமும் உடன் கூறப்பட்டது' என்பர் இவர்கள். ‘பாராட்டுவான்’ என்பது சொல்வான் கேட்பான் இருவரையும் குறிக்கும் என்றும் உரை கூறினர்.

பாராட்டுவான் என்ற சொல்லுக்குக் கொண்டாடுவான் அல்லது புகழ்ந்து சொல்பவன் என்பது நேர் பொருள். 'தானே கொண்டாடி மகிழ்வானை' எனக் கொண்டால் அது பயனில் பேசுபவனையே சுட்டும். இதைத் தெளிவாக்கப் பரிமேலழகர் பாராட்டுவான் என்பதற்கு 'பலகாலுஞ் சொல்லுவான் அதாவது 'திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பவன்' எனப் பொழிப்பு கூறுவார்.
பரிமேலழகர் உரையை ஒப்பாமல் இரா சாரங்கபாணி பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்.... (521), .........பயனுடையார் பண்பு பாராட்டுமுலகு (994) என்புழிப் போல ஈண்டும் ‘பாராட்டுதல்’ என்பதற்குப் புகழ்ந்து சொல்லுதல்-கொண்டாடுதல் எனப் பொருளுரைத்தலே சிறப்புடையது. அதற்குப் பலகாலும் சொல்லுதல் என்னும் பொருள் சிறப்பில்லை. ‘பாராட்டுவான்’ என்பது சொல்வானையும் கேட்பானையும் குறிக்கும் என்று கூறுவதும் சிறவாது. பயனில் சொல் பாராட்டுவானையே மகனென்று சொல்லற்க எனின், பயனில் சொல் சொல்லுபவனை மகனென்று சொல்லற்க எனல் குறிப்பாற் பெறப்படுதலின், தனித்துக் கூறல் வேண்டாமை அறிக' என விளக்குவார்.
பாராட்டுவான் என்பதற்குப் புகழந்து சொல்லுதல்-கொண்டாடுதல் எனக் கொண்டாலும் 'தன் சொல்லையே புகழ்பவன் அல்லது கொண்டாடுபவன்' என்று பாராட்டுவான் என்பதற்குப் பொருள் கொள்ளமுடியும். இவ்வதிகாரம் பயனில் சொல்வதைக் கடிவது; கேட்பதை அல்ல. எனவே பரிமேலழகர் உரையில் கண்டபடி இக்குறள் பயனில் சொல்பவனையே பதர் எனச் சொல்கிறது என்பது பொருத்தம்.

'பாராட்டுவான்' என்பது பயனில் சொல்வானைக் குறிப்பது.

பயனற்ற சொற்களைப் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லற்க; மனிதப் பதர் என்று சொல்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பயனில சொல்லாமையும் சொல்லி மகிழாமையும் சிறந்த மக்கட் பண்புகள்.

பொழிப்பு

வீண் சொற்கள் பேசி அதைப் பாராட்டுவோனை மனிதன் என்று சொல்லற்க; மக்களுள் பதர் என்று சொல்க.