இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:195)

பொழிப்பு: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

மணக்குடவர் உரை: பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம்.
இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.

பரிமேலழகர் உரை: பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.
(நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: பண்புடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும் போய் விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின்.


சீர்மை சிறப்பொடு நீங்கும்:
பதவுரை: சீர்மை-விழுப்பம்; சிறப்பொடு-நன்கு மதிக்கற்பாட்டுடன்; நீங்கும்-அகலும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம்.
பரிதி: ஒழுக்கமும் செல்வமும் கெடும்;
காலிங்கர்: அப்பொழுதே சிறந்த ஒழுக்கம் ஆக்கம் என்னும் இரண்டும் கெடும்;
காலிங்கர் பதவுரை: சீர்மை என்பது ஒழுக்கம். சிறப்பு என்பது ஆக்கம்.
பரிமேலழகர்: அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.

'சீர்மையும் சிறப்பும் நீங்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். சீர்மையும் சிறப்பும் என்றதற்கு ஒழுக்கமும் செல்வமும் என்று பரிதியும் ஒழுக்கமும் ஆக்கமும் என்று காலிங்கரும் விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் என்று பரிமேலழகரும் பொருள் தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சீரும் சிறப்பும் கெட்டுவிடும்', 'அவர்களுடைய மேன்மையும் கீர்த்தியும் அவர்களை விட்டு நீங்கிவிடும்', 'அவர்களுடைய உயர்வும் மதிப்பும் நீங்கிப் போகும்', 'பெருமையும் மதிப்பும் அவரை விட்டு நீங்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விழுப்பமும் சிறப்பும் நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

பயன்இல நீர்மை உடையார் சொலின்:
பதவுரை: பயன்-நன்மை; இல-இல்லாதவைகளை; நீர்மை-இனிய இயல்பு; உடையார்-உடைமையாகக் கொண்டவர்; சொலின்-சொன்னால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.
பரிதி: பயனில்லாத வார்த்தையை நல்லோர்முன் சொல்லுவது என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சில் தண்ணளியுடையோர் மற்றப் பயனில்லாதவற்றைச் சில சொல்லுவராயின்.
காலிங்கர் பதவுரை: நீர்மை என்பது தண்ணளி.
பரிமேலழகர்: பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.

'பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். நீர்மையுடையார் என்ற சொல்லுக்குக் காலிங்கர் தண்ணளியுடையோர் என்று பொருள் கூறுவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனிலவாகிய சொற்களை இனிமைப் பண்புடையார் பேசினால்', 'பயனில்லாத வார்த்தைகளை மேலான தன்மையுடையவர்கள் சொல்லிவிட்டால்', 'பயனில்லாத சொற்களை நல்லியல்புடையவர் சொல்வார்களாயின்', 'இனிய குணமுடையார் பயனில்லாத சொற்களைச் சொன்னால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இனிய இயல்புடையவர்கள் பயனில்லாதவற்றைச் சொன்னால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீர்மை உடையார் பயனில்லாதவற்றைச் சொன்னால் விழுப்பமும் சிறப்பும் நீங்கும் என்பது பாடலின் பொருள்.
'நீர்மை உடையார்' யார்?

சீர்மை என்ற சொல்லுக்கு மேன்மை அல்லது விழுப்பம் என்பது பொருள்.
சிறப்பொடு என்றது பெருமையொடு என்ற பொருள் தரும்.
நீங்கும் என்ற சொல்லுக்கு அகலும் என்று பொருள்.
பயனில என்ற சொல் பயனற்றவை எனப்பொருள்படும்.
சொலின் என்றது சொன்னால் என்ற பொருள் தருவது.

ஒருவர் இனிய தன்மையுடன் விளங்குபவர்தான். ஆனாலும் அவர் பயனில சொன்னால் அவரது விழுப்பமும் உயர்வும் அவரைவிட்டு மறைந்துபோம்.
தனது இனிய குணத்தால் விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் சேர்த்து வைத்திருக்கும் ஒருவர் பயனற்ற சொற்களை உரைப்பாரானால் கூட்டி வந்த எல்லா மேன்மையும் நீங்கிவிடும் என்கிறது பாடல். மற்றப்படி உயர்ந்தோராய் இருந்தாலும் பயனற்ற சொற்களைச் சொன்னால் சிர்மையும் சிறப்பும் நீங்கிவிடும்.

'நீர்மை உடையார்' யார்?

'நீர்மை உடையார்' என்ற தொடர்க்கு நீர்மையுடையார், நல்லோர்முன், நெஞ்சில் தண்ணளியுடையோர் (அருளுள்ளம் பூண்டவர்கள்), இனிய நீர்மையுடையார், நல்ல பெரியோர்கள், நற்பண்புடையார், நல்ல தன்மையை உடையோர், இனிய தன்மையுடைய உயர்ந்தோர், பண்புடையவர்கள், இனிமைப் பண்புடையார், மேலான தன்மையுடையவர்கள், சிறந்த பண்பு உடையவர், நல்லியல்புடையவர், இனிய குணமுடையார், அரும் பண்புகளை உடையவர்கள், பெருந்தன்மையுடையார், நல்லவர் என்று மதிக்கத்தக்கவர், துறவுத் தன்மையையுடையார், மேலான நிலையில் உள்ளவர்கள், நல்ல பதவியில் உள்ளவர்கள் என உரையாசிரியரகள் பொருள் கூறினர்.

நீர்மை என்ற சொல்லுக்கு நீரின் தன்மையை அடைதல் அல்லது ஈரமாதல் எனப் பொருள் கொண்டால், நீர்மை உடையார் என்பதற்குக் காலிங்கர் உரையில் கண்டவாறு தண்ணளி உடையவர் அதாவது அருளுள்ளம் கொண்டவரெனப் பொருள் கிடைக்கும். பரிமேலழகர் நீர்மை என்றதற்கு நீரின் தன்மை என்று குறிப்பிட்டு இனிய தன்மை எனப் பொருள் காண்பார். நீர்மை, இனிமைப் பண்பு சுட்டுதலை நீரினும் இனிய சாயல் (புறநானூறு 105) என்னும் சங்கப்பட்டாலும் அறியலாம். நீர்மையுடையார் என்பது உயர்ந்த குணங்களையுடையவரைக் குறிக்கும் சொல்லாகும்.

'நீர்மை உடையார்' என்ற தொடர்க்கு இனிய தன்மையுடையவர் என்பது பொருள்.

இனிய இயல்புடையவர்கள் பயனில்லாதவற்றைச் சொன்னால் அவர்களது விழுப்பமும் சிறப்பும் நீங்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இனிய தன்மைகொண்டவாராயினும் பயனிலசொல்லாமை நல்லது.

பொழிப்பு

இனிய தன்மையுடையவர் பயனில்லாதவற்றைச் சொன்னால் அவரது விழுப்பமும் சிறப்பும் நீங்கும்.