இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:194)

பொழிப்பு: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும்.
இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

பரிமேலழகர் உரை: பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.
(பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)

சி இலக்குவனார் உரை: பலரிடையே பேசுகின்ற பயனில்லாத பண்பற்ற சொற்கள் நீதியோடு பொருந்தாது நன்மையடைவதிலிருந்து தடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பல்லார் அகத்து பயன்சாராப் பண்பில்சொல் நயன்சாரா நன்மையின் நீக்கும்.


நயன்சாரா நன்மையின் நீக்கும்:
பதவுரை: நயன்-விருப்பம்; சாரா-சேராத; நன்மையின்-நன்மைகளின்றும்; நீக்கும்-விலக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடு சாராது நன்மையினீங்கும்;
மணக்குடவர் குறிப்புரை: இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.
பரிதி: நயஞ்சேராமல் திருமாதும் போம்;
காலிங்கர்: நயம்சேராமல் திருமாதும் பொய்க்கும்;
பரிமேலழகர்: அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.

'நடு சாராது நன்மையினீங்கும்' என்று மனக்குடவரும் 'நயஞ்சேராமல் திருமாதும் போம்' என்று பரிதியும் 'நயஞ்சேராமல் திருமாதும் பொய்க்கும்' என்று காலிங்கரும் 'நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்' என்று பரிமேலழகரும் வெவ்வேறு விதமாக இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவும் இல்லை நன்மையும் இல்லை', 'இன்பத்தோடு பொருந்தாததால் அவனை அறத்தினின்று நீக்கும்', 'இன்பத்தைக் கெடுத்து நன்மையைத் தடுத்துவிடும்', 'அவன் சொற்கள் சிறப்பில்லாதவனாய் அவனை நன்மையினின்று விலக்கிவிடும் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிறப்பில்லாதவையாய் நன்மையடைவதிலிருந்து தடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

பயன்சாராப் பண்பில்சொல் பல்லார் அகத்து:
பதவுரை: பயன்-நன்மை; சாரா-சேராத; பண்பு-குணம்; இல்-இல்லாத; சொல்-மொழி; பல்லார்-பலர்; அகத்து-இடையில்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின்.
பரிதி: பயனில்லாத வார்த்தையைச் சொல்லுவானிடத்து என்றவாறு.
காலிங்கர்: பயனில்லாத வார்த்தையைச் சொல்லுவானிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.

'பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனில்லாத சிறுசொல்லைப் பலர்முன் கூறுவது', 'பயன் தராத பண்பற்ற சொற்களைப் பலர்முன் ஒருவன் பேசினால் அப்பேச்சு', 'பல பேர்களுக்கிடையில் வீண் வார்த்தைகளையும் தகுதியற்ற வார்த்தைகளையும் பேசுவது', 'பயனற்ற இழிந்த சொற்களை ஒருவன் பலரிடம் சொல்லுவானாயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பலரிடையே பேசுவது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பலரிடையே பேசுவது நயன்சாரா நன்மையிலிருந்து தடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'நயன்சாரா நன்மை' என்பதன் பொருள் என்ன?

நீக்கும் என்ற சொல்லுக்கு நீக்கிவிடும் என்பது பொருள்.
பயன்சாராப் பண்பில்சொல் என்றது பயனுடன் கூடாத பண்பற்ற சொற்கள் என்ற பொருள் தரும்.
பல்லார் அகத்து என்ற தொடர்க்குப் பலர் இடையில் என்று பொருள்.

ஒருவன் பேசும் சொற்களால் பயனில்லை; அவற்றையும் பண்பற்ற முறையில் பலர்முன் சொல்லளக்கிறான். அதனால் சிறப்பும் இல்லை. அவனுக்கு நன்மையும் வராது.
பலபேரிடம் பயனில்லாச் சொற்களை பண்பில்லாமல் பேசுபவனிடமிருந்து நன்மைகள் நீங்கும். பண்பில்லாமல் பேசுதல் என்பது இனிமையற்றதும் உண்மையில்லாததும் பொருளற்றதுமான சொற்கள் பேசுவதை இங்கு குறிக்கும். பயனில் பேச்சு விரும்பத்தகாததாய் ஆகி அவனடைய வேண்டிய நன்மைகளையும் பெறமுடியாமல் போகும் என்கிறது பாடல்.

'நயன்சாரா நன்மை' என்பதன் பொருள் என்ன?

'நயன்சாரா நன்மை' என்றதற்கு நடு சாராது நன்மையின், நயஞ்சேராமல் திருமாதும், நீதியோடு படாவாய் அவனை நற்குணங்களின், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து, விரும்பத்தகாதவனாக்கி அவனடைய வேண்டிய நன்மைகளையும், நீதி சேராது நன்மையிலிருந்து, அறிவும் நன்மையும், இன்பத்தோடு பொருந்தாததால் அறத்தினின்று, இன்பத்தைக் கெடுத்து நன்மையை, ஒழுங்கு முறை யொடு கூடாமல் நன்மையில் இருந்து, சிறப்பில்லாதவனாய் நன்மையினின்று, நீதியோடு பொருந்தாது நன்மையடைவதிலிருந்து, அனபையும் நன்மைகளையும், நேர்மையொடு பொருந்தாது நற்குணத்தினின்று, மகிழ்ச்சியைக் குலைத்து நன்மையை, இன்பம் பொருந்தாதனவாய் அறத்தினின்று என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் விரும்பத்தகாததாய் நன்மை என்பது பொருத்தமானது.

பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பலரிடையே பேசுவது சிறப்பில்லாதவையாய் நன்மையடைவதிலிருந்து தடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பயனற்றவற்றை பண்பில்லாமல் பேசுபவன் எந்த நன்மையும் அடையமாட்டான் என்னும் பயனிலசொல்லாமை பாடல்.

பொழிப்பு

பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பலர்முன் பேசுவது சிறப்பும் இல்லை நன்மையும் தராது.