நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை
(அதிகாரம்:பயனில சொல்லாமை
குறள் எண்:193)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
|
மணக்குடவர் உரை:
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்.
இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.
பரிமேலழகர் உரை:
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும்.
(உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)
வ சுப மாணிக்கம் உரை:
பயனில்லாதவற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன் என்று பேராகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பயனில பாரித்து உரைக்கும் உரை நயனிலன் என்பது சொல்லும்.
பதவுரை: நயன்-விரும்பத்தக்க, சிறப்பு, நீதி; இலன்-இல்லாதவன்; என்பது-என்று சொல்லப்படுவது; சொல்லும்-உரைக்கும், அறிவிக்கும்; பயன்இல-பயனற்றவைகளை, வீணானவற்றை, நன்மை இல்லாதவைகளை; பாரித்து-பரக்க, விரித்து; உரைக்கும்-சொல்லும்; உரை-பேசும் சொற்கள், ஒரு சொல்.
|
நயனிலன் என்பது சொல்லும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும்;
பரிதி: நயமில்லாதவன் என்று சொல்லப்படும்;
காலிங்கர்: நயமில்லாதவன் என்று சொல்லப்படும்;
பரிமேலழகர்: இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.
'நயனுடையன் அல்லன் என்பதனை அறிவிக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் நயனிலன் என்றதற்கு வாளா நயமில்லாதவன் என்று கூற பரிமேலழகர் நீதி இலன் எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவன் அறமற்றவன் என்பதைக் காட்டும்', 'விரும்பத் தகுந்தவன் அல்லனென்பதை வெளியாக்கிவிடும்', 'அவன் சிறப்பில்லாதவன் என்பதை உலகுக்குத் தெரிவிக்கும்', 'நீதியொடு பொருந்தாதவன் என்பதனை அறிவிக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அவன் விளங்காதவன் என்பதனை அறிவிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
பயனில பாரித்து உரைக்கும் உரை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது. [இயம்பப்படார் - சொல்லப்படார்]
பரிதி: பயனில்லாத வார்த்தையை எல்லார்க்கும் சொல்லுவானை என்றவாறு.
காலிங்கர்: பயனில்லாத வார்த்தையை எல்லார்க்கும் சொல்வானை என்றவாறு.
பரிமேலழகர்: பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே.
'பயனில்லாதவற்றை விரித்து உரைக்கும் உரை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது வெற்றுரை', 'ஒருவன் வீண் வார்த்தைகளை அதிகமாகப் பேசுகின்ற செய்கையே அவன்', 'பயனில்லாதவற்றை ஒருவன் விரித்துரைத்துக் கொண்டிருப்பானாயின், அவ்வுரை தானே', 'பயன் இல்லாத சொற்களை விரித்துப் பேசும் சொல்லே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது சொல் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது வெற்றுரை அவன் விளங்காதவன் என்பதனை அறிவிக்கும் என்பது பாடலின் பொருள்.
'நயனிலன்' குறிப்பது என்ன?
|
உரைப்பன உப்புச்சப்பில்லாதன. அவற்றைச் சுருங்கச் சொன்னால் என்ன?
பேசுவதோ ஒன்றுக்குமற்றது. அதையும் நீட்டி அகட்டி உரைத்தால் அப்படிப் பேசுபவன் தேறாதவன் என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
கடுகளவு செய்தியைக்கூட கடலளவாக விரித்துப் பேசிக்கொண்டே போனால் கேட்போர் விரைவில் அலுப்படைவர்.
உரை என்ற சொல் பேச்சு மட்டுமன்றி எழுத்தில் சொல்வதையும் குறிக்கும். இன்று செய்தி அனுப்பும் கருவிகள் பல வடிவங்களில் உள்ளன. அவற்றில் சொல்லப்படுபவனவற்றையும் உரையாகவே கொள்ளவேண்டும்.
ஒருவன் பயனற்றவன், வீணன் என்பதை அவன் வெட்டிபேச்சை விரித்து உரைப்பது காட்டிக் கொடுக்கும் என்கிறது பாடல். மற்றொரு இடத்தில் பலசொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற சிலசொல்லல் தேற்றாதவர்(சொல்வன்மை 649: பொருள்: குற்றமற்ற சில சொற்களைச் சொல்லமுடியாதவர் பல சொற்களைச் சொல்ல விரும்புவர்) என்று பயனில் சொல்வோரே விரித்துக் கூறத் தலைப்படுவர் என்று குறள் சொல்லும்.
பரிமேலழகர் நயன் என்ற சொல்லுக்கு நீதி எனப்பொருள் கண்டு நயனிலன் என்றதற்கு நீதி இலன் எனப் பொருளுரைத்தார். அதைத் தழுவி மு வரதராசன் நயனிலன் என்றதற்கு அறம் இல்லாதவன் எனப் பொருள் கொண்டு 'வாய்ச்சொற்கள் நெஞ்சநிலையைக் காட்ட வல்லவை. நெஞ்சில் அறநினைவு இருந்தால் பயனில்லாத எண்ணங்கள் தோன்றா. அந்த எண்ணங்களின் விளைவான பயனில்லாத சொற்களைப் பேசுதலும் இயலாது. நாவடக்கம் இல்லாமலும் மன அமைதி இல்லாமலும் அலையும் நிலையிலேயே பயனில்லாத சொற்கள் வாயில் பிறக்கும். ஆகவே பயனில்லாத சொற்களை ஒருவன் விரிவாகப் பேசும் பேச்சு, அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்' என்று இக்குறளுக்கு விளக்கம் தந்தார்.
'பாரித்தல்’ என்ற சொல் விரித்தல், பரப்புதல் போன்ற பொருளில் குறளில் ஆளப்பட்டது. ....பண்பின்மை பாரிக்கும் நோய் (குறள் 851 பொருள்: ...கொடிய குணம் வளர்க்கும் நோய்) ..... புன்னலம் பாரிப்பார் தோள் (குறள் 916 பொருள்;... இகழத்தக்க இன்பத்தைப் பரப்புவார் தோள் ) என்னும் பிற குறள்களிலும் இச்சொல்லாட்சி காணலாம். பயன் இல்லாதைச் சொல்லுவதே தவறு; அதையும் வள வள என்று மீளநீள உரைக்க வேண்டுமா? வேண்டாம்.
|
'நயனிலன்' குறிப்பது என்ன?
'நயனிலன்' என்றதற்கு நயனுடையன் அல்லன், நயமில்லாதவன், நீதி இலன், அறம் இல்லாதவன், விரும்பத்தகாதவன், நன்மையில்லா அல்லது முறையற்ற வீண்பேச்சாளன், பழகுவதற்குத் தகுதியற்றவன், நீதியில்லாதவன், விளங்காதவன், அறமற்றவன், நல்லது இல்லாதவன், ஒழுங்குமுறை இல்லாதவன், சிறப்பில்லாதவன், நீதியொடு பொருந்தாதவன், நன்மை இல்லாதவன், நேர்மை (நீதி) யில்லாதவன், பயனற்றவன், எந்த நற்செயலையும் செய்யமாட்டாதவன், அறிவு கெட்டவன், நன்மை இல்லாதவன் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
நயம் என்ற சொல்லுக்கு விரும்பத்தக்க என்பது பொருள். பயனில சொல்லல் இனிமை தராது; ௮தைச் சொல்பவன் நயனிலன். நயனில என்பது நயனுக்கு எதிரானது. நயனிலன் என்பது நயமற்ற சொல் பேசுபவன் எனப்பொருள்படும். பேச்சிலே இனிமையும், பொருட்செறிவும், ஆழமும் இல்லாதவற்றை நயமற்ற பேச்சு என்று சொல்வோம். நயமற்றதை யாரும் விரும்புவதில்லை. குறளில் இச்சொல் பெரிதும் விருப்பம் என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. எனவே நயனிலன் என்பதற்கு நயமாகப் பேச இயலாதவன் அதாவது பிறர் விரும்புமாறு பேசத்தெரியாதவன் என்பது பொருள்.
ஔவையார் ஆத்திச்சூடியில் மிக எளிமையாக 'ஞயம்பட உரை' என்றார். இதன் பொருள்: பிறர் மகிழும்படி பேசு. இதே கருத்தில் அமைந்த குறள்தான் இது.
இங்கு வள்ளுவர் பேசுவதையும் நயம்பட உரை என்கிறார்.
'நயனிலன்' என்ற சொல்லுக்கு விரும்புதற்குரியவாறு பேசவல்லவனல்லன் என்பது பொருள்.
|
பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது வெற்றுரை அவன் விளங்காதவன் என்பதனை அறிவிக்கும் என்பது இக்குறட்கருத்து.
பயனிலசொல்லாமை நயம்படப் பேசத்தெரியாதவன் என்னும் பெயரை நீக்கும்.
பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது பேச்சு அவன் சிறக்கமாட்டான் என்பதைக் காட்டும்.
|