இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0192பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது

(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:192)

பொழிப்பு: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

மணக்குடவர் உரை: பயனில்லாதவற்றைப் பலர்முன்பு கூறுதல், விருப்பம் இல்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே என்றவாறு.
இது பயனில சொல்லல் இம்மை மறுமை இரண்டின்கண்ணும் தீமை பயக்கும் என்றது.

பரிமேலழகர் உரை: பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.
('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பயனற்ற சொற்களைப் பலர்முன் பேசுதல் விருப்பமற்ற செயல்களை நண்பர் இடத்துச் செய்தலைக் காட்டிலும் தீயது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது.


பயன்இல பல்லார்முன் சொல்லல்:
பதவுரை: பயன் -நன்மை; இல-இல்லாதவைகளை; பல்லார்-பலர்; முன்-எதிரில்; சொல்லல்-சொல்லுதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாதவற்றைப் பலர்முன்பு கூறுதல்;
பரிதி: பயனில்லாத வார்த்தையை நல்லோர்முன் சொல்லுதல்;
பரிமேலழகர்: பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்;

'பயனில்லாதவற்றைப் பலர்முன்பு கூறுதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலர்முன் வீண்பேச்சுப் பேசுவது', 'பலபேருக்கு முன்னால் பயனற்ற பேச்சைப் பேசுவது', 'பயனில்லாத சொற்களைப் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல்', 'பயன் இல்லாத சொற்களைப் பலர் முன் சொல்லுதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வீண் சொற்களைப் பலர் முன் சொல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது:
பதவுரை: நயன்-விருப்பம்; இல-இல்லாதவைகளை; நட்டார்கண்-நண்பரிடத்தில்; செய்தலின்-செய்தலைக் காட்டிலும்; தீது-கொடிது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருப்பம் இல்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது பயனில சொல்லல் இம்மை மறுமை இரண்டின்கண்ணும் தீமை பயக்கும் என்றது.
பரிதி: நயனில்லாத வார்த்தையைச் செற்றாரிடத்தில் செய்தலின் தீதாம்.
பரிமேலழகர்: விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.
பரிமேலழகர் குறிப்புரை: 'விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.

'விருப்பம் இல்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே' என்றபடி மணக்குடவரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நயனில்லாத வார்த்தையைச் செற்றாரிடத்தில் செய்தலின் தீதாம்' என்னும் மாறுபட்ட உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நண்பர்க்கு வேண்டாதன செய்தலினும் தீது', 'நண்பர்களிடத்தில் விரும்பத்தகாத குற்றங்களைச் செய்து விடுவதைக் காட்டிலும் கெடுதி உண்டாக்கக் கூடியது', 'நயமில்லாத செய்கைகளைத் தன் நண்பரிடத்துச் செய்தலினுந் தீயதாம்', 'விருப்பம் இல்லாத செயல்களைத் தம் நண்பரிடம் செய்தலிலும் தீது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விருப்பம் இல்லாத செயல்களை நண்பர்களிடத்தில் செய்தலினும் கெடுதியானது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீண் சொற்களைப் பலர் முன் சொல்லுதல் விருப்பம் இல்லாத செயல்களை நண்பர்களிடத்தில் செய்தலினும் கெடுதியானது என்பது பாடலின் பொருள்.
பாடலின் முன்பகுதிக்கும் பின்பகுதிக்கும் என்ன தொடர்பு?

பயனில என்ற சொல்லுக்கு பயனற்றவை என்பது பொருள்.
பல்லார்முன் சொல்லல் என்ற தொடர் பலர் முன்பு கூறுதல் என்ற பொருள் தரும்.
நயன் என்ற சொல்லுக்கு விருப்பம் என்று பொருள். நன்மை, அன்பு, நாகரீகம், நீதி, இனிமை எனவும் பொருள் உண்டு.
இல என்ற சொல் அற்ற என்ற பொருள் தருவது.
நட்டார்கண் என்றது நண்பரிடத்து எனப் பொருள்படும்.
செய்தலின் தீது என்ற தொடர் செய்தலைவிடத் தீமையானது என்ற பொருளது.

ஒருவர் பலர்முன் வீண்பேச்சும் பேசுகிறார். அவரே தன் நண்பர் விரும்பாதவற்றையும் செய்கிறார்; இவை இரண்டில் எது மிகவும் கெடுதி பயப்பது? என்று ஆய்வதுபோல அமைந்துள்ளது பாடல்.
பலர்முன் பேசுவது என்பது பொதுமேடை எனக் கொள்ளலாம். இன்று ஊடகங்களில் சொல்லப்படுவனவற்றையும் பலர்முன் சொல்லலாகக் கொள்ளலாம். இதற்கு முந்தைய பாடலில் (குறள் 191) கேட்டவர் வெறுக்கும்படியான பேச்சு சொல்லப்பட்டது. இங்கு நண்பர் வெறுப்பன செய்தல் கூறப்படுகிறது. நண்பர் வெறுப்பன செய்தலினும் பலர்முன் பயனற்றவற்றைச் சொல்வது தீது என்கிறது இக்குறள்.

'நயனில' என்ற தொடர் நயன்+இல என விரியும். இதற்கு விருப்பம் இல்லாதவற்றை, நயனில்லாத வார்த்தை, விருப்பம் இலவாகிய செயல்கள், அறம் இல்லாத செயல்கள், நற்பயனற்ற செயல்கள், விரும்பப்படாத செயல்கள், வேண்டாதன செய்தல், விருப்பமற்ற செயல்கள், அன்பற்ற செயல்கள், முறைகேடான செயல்கள், நயமில்லாத செய்கைகள், விருப்பம் இல்லாத செயல்கள், நன்மை பயவாத செயல்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். பரிமேலழகர் நயன் என்ற ஒரு சொல்லுக்கு நீதி, ஈரம், விருப்பம், ஒப்புரவு, ஒழுகலாறு என வேறு வேறு பொருளைப் பல இடங்களில் கூறியுள்ளார்.
இங்கு நயனில என்றதற்கு விருப்பம் இல்லாதவை என்ற பொருள் பொருந்துவதாக உள்ளது.

பாடலின் முன்பகுதிக்கும் பின்பகுதிக்கும் என்ன தொடர்பு?

இக்குறளுக்குப் 'பயன் இலாதவற்றைப் பலர் முன்பு சொல்லுதல் என்பது, விருப்பம் இல்லாத செயல்களை நண்பர்களுக்குச் செய்வதைக் காட்டிலும் தீதானது' என்று பொழிப்புரை கூறி 'நண்பர்கள் நட்பு நலன் கருதிப் பொறுத்தாலும் பொறுப்பர். ஆனால் யாரும் பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்குதலை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்; வெறுப்பர்' என உரையாளர்கள் விளக்கம் கூறினர்.
ஒன்று சொல்வது மற்றது செய்வது. சொல்லப்படுவது பொதுமக்கள்முன், செய்யப்படுவது நண்பர்க்கு. இவை இரண்டிற்கும் கருத்துத் தொடர்பு இருப்பதுபோல் தோன்றவில்லை. இவற்றை இயைபுபடுத்த முயன்ற ஆய்வாளர்கள், நட்டார் என்ற சொல்லுக்கு பாடவேறுபாடுகள் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
பரிதி உரை கொண்டு தண்டபாணி தேசிகர் குறளின் முன்பகுதிக்கும் பின்பகுதிக்கும் தொடர்பு காண்கிறார். அவரது உரைப்பகுதி 'பரிதியார் 'நயன்' இல்லாத வார்த்தையைச் செற்றாரிடத்துச் செய்தலின் தீதாம்' என்று உரை கண்டுள்ளார். 'நட்டார்கண் செய்தலிற்றீது' என்பது இப்பொருள் பயவாது என்பதை எவரும் அறிவர். ஆதலால் பரிதியார் செற்றார்கட் செய்தலிற்றீது' என்றே பாடங்கொண்டிருப்பர் எனத் தோன்றுகிறது. தீதினைச் சிறப்பிக்க வந்த வள்ளுவர், நட்பால் பேதைமையாகவும் பெருங்கிழமையாகவும் கொள்ளக்கூடிய நட்டார்முன் நயனில செய்தலைக் கூறியிருக்கமாட்டார். ஒன்றுக்குப் பத்தாகப் பழிதீர்க்கும் நோக்கமுடைய செற்றார்முன் தீமையைச் செய்தலையே கூறியிருப்பர் எனவும் பரிதியார் கொண்ட பாடமே சிறந்தது எனவும் துணியத் தோன்றுகிறது. 'செற்றார்கண் செய்தலின் தீது' என முற்றுமோனையும் இருத்தல் காண்க' என்கிறது.
இரா சாரங்கபாணி 'பரிதியாரது சில உரைகளை மூலத்தோடு பொருத்திப் பார்க்கும்போது உரையாசிரியர் வேறுபாடம் கொண்டிருப்பார் என உய்த்துணர முடிகிறது. ஆயினும், அப்படி நாம் காணும் பாடங்கள் இதுவரை யாரும் ஏட்டுச் சுவடிகளில் கண்டு காட்டாதவைகளாக உள்ளன' எனக்கூறி இக்குறளை மேற்கோள் காட்டி 'நயனில்லாதவற்றை செற்றாரிடத்துச் செய்தலின் தீதாம் என்று உரை காணப்படுகிறது. நட்டார் என்பதற்குச் செற்றார் என்று பொருளின்மையின் 'நன்னார்' என்று பாடம் கொண்டிருக்கலாம் என எண்ண இடமுண்டு' எனவும் கூறினார்.
தண்டபாணி தேசிகரும் இரா சாரங்கபாணியும் செற்றார், நன்னார் எனப் பாடமாக இருக்கலாம் என்கின்றனர். அவ்விதமாகப் பாடம் கொண்டால், முன்பகுதிக்கும் பின்பகுதிக்கும் தொடர்பு உண்டாகலாம்.

வீண் சொற்களைப் பலர் முன் சொல்லுதல் விருப்பம் இல்லாத செயல்களை நண்பர்களிடத்தில் செய்தலினும் கெடுதியானது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பலர்முன் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதல் செற்றார்கண் செய்தலின் தீது என்னும் பயனிலசொல்லாமை பாடல்.

பொழிப்பு

பலர்முன் வீண்பேச்சுப் பேசுவது நண்பர்க்கு விருப்பமற்றனவற்றைச் செய்தலினும் தீது.