பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
(அதிகாரம்:பயனில சொல்லாமை
குறள் எண்:191)
பொழிப்பு (மு வரதராசன்): கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்
|
மணக்குடவர் உரை:
பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
பரிமேலழகர் உரை:
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும்.
(அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)
தமிழண்ணல் உரை:
பலரும் வெறுக்கும்படி எப்பொழுதும் பயனற்றவற்றையே பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.
சேய்மையில் வரும்போதே பொழுதை வீணாக்கிவிடுவான் என அஞ்சிப் பலரும் ஒதுங்குவர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
பதவுரை: பல்லார்-பலர்; முனிய-சினம்கொள்ள, வெறுக்கும்படி; பயனில-பயனில்லாதவற்றை, நன்மையில்லாதவைகளை; சொல்லுவான்-சொல்லுபவன்; எல்லாரும்-(அனைவரும்) எல்லாராலும், அனைவராலும்; எள்ளப்படும்-இகழப்படும், இகழப்படுவான்.
|
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்;
பரிப்பெருமாள்: பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்;
பரிதி: தனக்கு வேண்டாதார் இகழும்படியாகப் பயனில சொல்வானை;
காலிங்கர்: தனக்கு வேண்டாதார் இகழும்படியாகப் பயனில சொல்வானை;
பரிமேலழகர்: அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான்;
'பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பல்லார் என்றதற்கு பரிதியும் காலிங்கரும் தனக்கு வேண்டாதார் என்றும் பரிமேலழகர் அறிவுடையார் பலரும் எனப் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை', 'கேட்டோர் பலரும் வெறுக்கும்படி பயனற்ற சொற்களைப் பேசுபவன்', 'பலபேர் வெறுக்கும்படியாக வீண் வார்த்தைகளைப் பேசுகின்றவன்', 'பலரும் வெறுக்குமாறு பயன் இல்லாத சொற்களைச் சொல்பவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பலரும் வெறுக்கப் பயனற்ற சொற்களைச் சொல்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
எல்லாரும் எள்ளப்படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாராலும் இகழப்படுவான்.
பரிப்பெருமாள்: எல்லாராலும் இகழப்படுவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரால் இகழப்பெறுவன் என்கின்றது.
பரிதி: தனக்கு வேண்டினபேரும், வேண்டாதபேரும் இகழ்வர்.
காலிங்கர்: வேண்டினபேரும் வேண்டாதபேரும் இகழ்வார்.
பரிமேலழகர்: எல்லாரானும் இகழப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.
'எல்லாராலும் இகழப்படுவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எல்லாரும் என்றதற்கு 'வேண்டினபேரும் வேண்டாதபேரும்' என பரிதியும் காலிங்கரும் பொருள் உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாரும் இகழ்வர்', 'எல்லோராலும் இகழப்படுவான்', 'எல்லாராலும் ஏளனம் செய்யப்பட்டு அவமானம் அடைவான்', 'எல்லாராலும் இகழப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எல்லாராலும் இகழப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பல்லார் வெறுக்கப் பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'பல்லார்' யார்?
|
வீண்பேச்சுப் பேசுபவன் ஏளன நகைப்பிற்கு இடமாவான்.
பலரும் வெறுக்கும்படி பயனற்றவற்றைச் சொல்பவனை எல்லாரும் ஒதுக்கித் தள்ளுவர்.
பலரையும் ஒரு சேரப் பயன் இல்லாதவற்றைச் சொல்லி நேரத்தையும் ஆற்றலையும் வீணடிப்பவனை யாருக்குத்தான் பிடிக்கும்?
சிலர் பயனற்றவற்றைப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பர். வேண்டாத ஊர்வம்பு பேசுதல், தமக்குத் தொடர்பில்லாதவற்றில் தலையிட்டுப் பேசுதல், வேலை செய்பவர்களைச் செய்யவிடாமல் பேச்சை நீட்டிக்கொண்டேயிருத்தல், தாமும் கெட்டுப் பிறரும் கெடுமாறு பேசிப்பேசியே வெறுப்பை விளைவிப்பர் இவர்கள். இத்தகையவர்களைக் கண்டாலே பலரும் அஞ்சி ஒதுங்குவர்.
ஒருவர் எதை எப்படிப் பேசுகிறார் என்பதை வைத்து மற்றவர்கள் அவரை மதிப்பிடுவார்கள். ஒருவரோடொருவர் உரையாடும்போதோ, பலர் கூடிய பொது இடங்களிலோ, மேடைப் பேச்சுக்களிலோ ஏதாவதொன்றைப் பேசவேண்டும் என்பதற்காக தேவை இல்லாதனவற்றை, பொருளற்றனவற்றை, பயனற்ற சொற்களைப் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவர்க்கு மெல்ல மெல்ல வெறுப்பு ஏற்படும்; வீண் பேச்சும், வெட்டி வம்பும், பிறர் பழியும் தீங்காகும். பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாது வாய்க்குப்பை பரப்பும் மனிதன் எல்லாராலும் இளக்காரமாகப் பார்க்கப்படுவான். எவருக்கும் பயனளிக்காத, கேட்போர்க்கு வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களை ஒருவன் பேசுவானானால், அவன் எல்லோராலும் இகழப்படுவான்.
எல்லாரும் எள்ளப்படும் என்பது, ஆல் உருபை ஏற்காமல், எல்லாராலும் எள்ளப்படும் என்ற பொருளில் நிற்கின்றது. இதை 'ஆல்' உருபு தொக்கது என்பர் இலக்கண அறிஞர்கள்.
கல்லெறிந்தான் என்னும் கூற்றில் ஐ உருபு தொகினும் கல்லை எறிந்தான் என்றே பொருள்படும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்,,, (குறள் 72) என்பதில் 'எல்லாம் தமக்குரியர்' என்ற தொடர் எல்லாப் பொருளாலும் தமக்கே உரியர் என்று பொருள்படுதல் போல்வது இது. விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் (பழைமை 810 பொருள்: பழைய நண்பரிடத்துக் கொண்ட பண்பிலிருந்து மாறாதவர் தம்மை விரும்பாதாராலும் விரும்பப்படுவர்) என்னும் பாடலிலும் 'விழையார் விழையப் படுப' என்பது விழையாரால் விழையப் படுப என்ற பொருளில் நின்றது.
|
'பல்லார்' யார்?
'பல்லார்' என்ற சொல்லுக்குப் பலர், வேண்டினபேரும் வேண்டாதபேரும், தனக்கு வேண்டாதார், அறிவுடையார் பலரும், பலரும், கேட்டார், கேட்டோர் பலரும், பலபேர், கேட்பவர் பலரும், அறிஞர் பலரும், என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்ப' என்று பல்லார் என்ற சொல் அறிவுடையாரைக் குறிப்பதாக உரைத்தார் பரிமேலழகர். 'சொற்பயன் அறிவார் அறிவுடையார் ஆகலின் பல்லார் என்றது அறிவுடையார் மேனின்றது' என்று விளக்கினார் சொ தண்டபாணி பிள்ளை.
'எல்லாரும் என்று பிற்குறித்ததனால் பல்லார் என்று முற்குறித்தது அறிவுடையாரை யென்பது உய்த்துணரப்படும். அறிவுடையார் வெறுக்கவே அவரைப் பின்பற்றி ஏனையோரும் வெறுப்பர் என்பது கருத்து' எனப் பரிமேலழகர் உரையை ஒட்டி தேவநேயப் பாவாணர் பகர்கின்றார். இவ்வளவை ஏற்குமா?
கேட்டவர் பலரும் அல்லது பலரும் வெறுக்கும்படி எனப் பொதுமையில் நிற்பனவுமான பொருள் பொருத்தமாகப் படுகிறது. குறளின் பிற்பகுதியும் எல்லாராலும் என்றே குறிப்பிடுகிறது. இங்குள்ள எல்லாராலும் என்பதற்கு கேட்டவர், கேளாதவர் ஆகிய எல்லாராலும் எனக் கொள்ளமுடியும். பொதுவில் பேசப்பட்டவற்றில் பயனுள்ளவை - பயனற்றவை என்பனவற்றைப் பகுக்க எல்லாராலும் இயலும்.
'பல்லார்' என்ற சொல் (கேட்ட) பலர் என்று பொருள்படும்.
|
பலரும் வெறுக்குமாறு பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான் என்பது இக்குறட்கருத்து.
எல்லாரும் எள்ளி ஒதுக்கி விடுவார்கள் என்பதால் பயனிலசொல்லாமை நன்று.
கேட்டோர் பலரும் வெறுக்கும்படி பயனற்ற சொற்களைப் பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.
|