இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0148



பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:148)

பொழிப்பு (மு வரதராசன்): பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.



மணக்குடவர் உரை: பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம்.
இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.

பரிமேலழகர் உரை: பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.
(புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: பிறன் மனைவியை விரும்பி ஒழுகாத ஒழுக்கம், நிறைந்த பேராண்மையுடைய சான்றோர்க்கு அறம். அறம் மட்டுமன்று. ஒழுக்கமும் கூட.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.

பதவுரை: பிறன்-மற்றவன்; மனை-மனைவி; நோக்காத-பாராத, மனத்தில் உட்கொள்ளாத, நெஞ்சால் நினைக்காத, உள்ளத்தால் கருதாத; பேராண்மை-பெருமைக்குரிய ஆற்றல், திட்பம்; சான்றோர்க்கு-பல நற்குணங்களானும் நிரம்பியவர்க்கு; அறன்-அறம்; ஒன்றோ-அது மட்டுமா; ஆன்ற-நிறைந்த; ஒழுக்கு-நடத்தை.


பிறன்மனை நோக்காத பேராண்மை :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே;
பரிதி: சமர்க்களத்திலே வெட்டி மீண்டு வருகிறது ஆண்மையல்ல; பிறர்மனையை நோக்காமலிருப்பதே ஆண்மை ஆதலால்; [சமர்க்களம் - போர் செய்யும் இடம்]
காலிங்கர்: பிறனொருவன் மனையாளைத் தமதுள்ளத்தால் கருதாமையாகின்ற பெரிய ஆண்மைத் திண்மையானது;
பரிமேலழகர்: பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை;
பரிமேலழகர் குறிப்புரை: புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார்.

'பிறனொருவன் மனையாளைத் தமதுள்ளத்தால் கருதாமையாகின்ற பெரிய ஆண்மைத் திண்மை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறன் மனையை விரும்பி நினையாத பேராற்றல்', 'பிறன் மனைவியை விரும்பி நோக்காத பேராண்மை', 'பிறன் மனையாளை விரும்பி நோக்காத பெரிய வீரம்', 'பிறன் மனைவியைக் காம விருப்பத்தோடு பார்க்காத பெரிய ஆண் தகைமை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வேறொருவனுடைய மனைவியைக் காமக் குறியோடு பார்க்காத ஆண்மைத்திண்மை என்பது இப்பகுதியின் பொருள்.

சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.
பரிதி: தனக்கு ஒழுக்கம் அதுவே அறிவுடையோருக்கு என்றவாறு.
காலிங்கர்: அதுவே சால்புடையாளருக்கு அறனாதல் சாலும்; மற்று அஃது ஒன்றுமேயன்றி அமைவுடைய ஆசாரமும் ஆம் என்றவாறு. [அமைவுடைய - ஏற்ற அல்லது தக்க]
பரிமேலழகர்: சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம். [ஒன்றோ என்பது ஒழுக்கத்தோடுங் கூடி அறனுமாம் ஒழுக்கமுமாம் என எண்ணுப் பொருள்பட்டு வந்தமையின் எண்ணிடைச் சொல் ஆயிற்று; இதனை - பிறன்மனையாளைக் கூடக் கருதுதலை]

'சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சான்றோர்க்கு அறமும் ஒழுக்கமும் ஆம்', 'சால்பு உடையவர்க்கு அறம் மட்டுமா? நிறைந்த ஒழுக்கமும் ஆகும்', 'நல்லோர்க்கு முறையாம்; அது மாத்திரமும் அல்லாமல் சிறந்த ஒழுக்கத்தையும் தரும்', 'நற்குணங்களால் அமைந்தோர்க்கு அறனும் நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

சான்றோர்க்கு அறம் மட்டுமா? நிறைந்த ஒழுக்கமும் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
வேறொருவனுடைய மனைவியைக் காமக் குறியோடு பார்க்காத ஆண்மைத்திண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமா? நிறைந்த ஒழுக்கமும் ஆகும் என்பது பாடலின் பொருள்.

பிறர்க்கு உரிமையான பெண்ணை நோக்காமை உயர்ந்த ஆண் இயற்கை.

பிறனொருவன் மனைவியைக் காமக் குறியோடு நோக்காத பெரிய ஆண் தகைமை, சான்றோர்க்கு அறமும் உயர்ந்த ஒழுக்கமும் ஆகும்.
நோக்காத என்பது நோக்கா எனக் குறைந்து நின்றது. நோக்குதல் மனத்தின் செயலாகக் கூறப்பட்டுள்ளது. நோக்காத என்பது மனத்தால் கருதாத எனப்பொருள்படும். பிறன்மனை நோக்காத என்பது பிறன் மனைவியைத் தவறான உள்நோக்கத்துடன் அதாவது காமஇச்சையுடன் தன் மனமும் மெய்யும் இணைந்த நிலையிலான அகக்காட்சியை பார்க்காததைக் குறிக்கும். மற்றவன் தோட்டத்து மல்லிகையின் மணம் காற்றில் கரைந்து வருவதைத் துய்க்கலாம்; அதைப் பறித்து நுகர நினைப்பது குற்றம். அதுபோலப் பிறர்க்குரிய ஒரு பெண்ணின் எழில்நலத்தைக் காதற் குறிப்பின்றி, வெளிப்பரப்பில் ஒரு மயிலின் அழகை, இயல்பாகக் கண்டு களிப்பதுபோலப் பார்க்கலாம். அப்பெண்ணைப் பாலியல் ஒழுக்கக்கேடாக அடைய நினைப்பதுதான் பிறன்மனை நோக்கும் தீய செயல் ஆகும். இல்லிற் செல்வதும் பழிக்கப்படவில்லை; இல் இறப்பதுவே அதாவது பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வதுவே இழித்துரைக்கப்படுகிறது.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் (கள்ளாமை குறள் எண் 282: பொருள்: குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பிறன் பொருளை அவன் அறியாத வகையால், `வஞ்சித்துக் கொள்வோம்’ என்று எண்ணாதிருக்க வேண்டும்) என்று பிறிதோரிடத்தில் பிறர் பொருளைக் கவர நினைக்கும் குற்றத்தைக் கடிந்துரைப்பார் வள்ளுவர். இங்கு பிறனது உரிமைப் பொருளாக, அவனுடைய வாழ்வின் பொருளாக இருப்பவளின் பெண்மையைக் கவர உள்ளத்தாலும் உள்ளாத பண்பு உயர்ந்தேத்திக் கூறப்படுகிறது.

பேராண்மை என்ற புதிய சொல் ஏற்றமிகு தோற்றம் பெற்று இக்குறளில் மிளிர்கின்றது. ஆண்மை என்னும் சொல்லினை அடிப்படையாகக் கொண்டு பிறபொருள்களில் மற்ற குறட்பாக்களிலும் சொல்லப்பட்டிருந்தாலும் பேராண்மை என்னும் சொல்லாட்சி இங்குத் தனிச் சிறப்புப் பெறுகின்றது. மக்கள், விலங்கு ஆகியவற்றைத் தன் படை வலியால் உடல் உறுதியால் ஆளுவது ஆண்மையாகும். அவ்வகையில் பேராண்மை என்பது பெரிய வீரம் எனப்பொருள்படும். ஆனால் இக்குறளில் பிறன் மனையாளை விரும்பாத மன வலிமையைப் பேராண்மை என்று வள்ளுவர் குறிக்கிறார். இது உள உறுதியால் ஒருவன் தன் காமமிகுதியைத் தடுத்து ஆளும் பேராண்மை பற்றியது. இன்னொருவகையில் சொல்வதானால் காமப்புலன்களின் இழுப்பிற்கு வீழ்கிறவன் ஆண்மகன் இல்லை என்பதாகப் பொருள்படுவது. வீரத்தைக் குறிக்கும் உடல் வலிமை ஆண்மை என்றால் பிறன் மனையாளை விரும்பாத மன உறுதி பேராண்மையாம்.
பிறன் மனைவியிடம் உறவு வைப்பது ஆண்மைக்கு அடையாளம் என்று மார் தட்டுவது மடமை. பிறன் இல்லாள்மீது உண்டாகும் விருப்பத்தை அடக்கிப் பழிப்படுபவது செய்யாமையே பேராண்மை என்கிறது குறள். தனக்கு உரியள் அல்லாதாரை நோக்காமைதான் ஆண்மையின் அடையாளம். பிறன்மனைவியை விரும்பி நினையாததற்குப் பேராற்றல் தேவை.
பிறன்மனை நோக்காமை ஆண்மையிற்‌ பெருமையுடத்து என்பதால் பேராண்மை எனப்பட்டது எனவும் விளக்குவர். முறையற்ற காமத்தை வெல்லுதல், மதிக்கத்தக்க பேராண்மை என்று பாராட்டப்படுகிறது. எவ்வாறு பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் (வாழ்க்கைத்துணை நலம் 54 பொருள்: பெண்ணிலும் பெருமை மிக்கன எவை உள்ளன? கற்பென்னும் திண்மை பெற்றிருந்தால்) எனப் பெண்ணின் கற்புகாக்கப்படுதல் போற்றப்பட்டதோ அவ்விதம் பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஆணின் பாலியல் ஒழுக்கம் பாராட்டப்படுகிறது.
பேராண்மை என்ப தறுகண்..... (படைச்செருக்கு 773) என்று அஞ்சாமையையும் சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் (மானம் 962) எனப் பழியோடு படாதவற்றைச் செய்வதையும் பேராண்மையாக குறளின் மற்ற இடங்களில் குறிக்கப்பெற்றன.

பல நல்ல பண்புகளைக் கொண்ட அறிவுடையோர் சான்றோர்கள் என அழைக்கப்படுகின்றனர். அத்தகைய சான்றோர்களுக்கு மற்றவர் மனைவியை விழையாமை எனும் இயல்பு இருக்குமானால் அது அறம் மட்டும் அல்ல நிறைந்துயர்ந்த ஒழுகுநெறியாகவும் அமைந்து அது அவர்களுக்குக் கூடுதல் பெருமை சேர்ப்பதாக இங்கு சொல்லப்படுகிறது.
அறம் என்ற சொல்லை வள்ளுவர் பொதுவான நிலையில் பலஇடங்களில் பயன்படுத்தியுள்ளார். இங்கு 'பிறர்மனை நோக்காத பேராண்மை அறன்' எனக் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அறியத்தக்கது.
அறன் 'ஒன்றோ' என்பது அறன் ஒன்றுதானா? (மட்டும்தானா?) என்று பொருள்படும். இது பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க..... (பழைமை 805: ....அறியாமையால் மட்டுமன்றி மிக்க உரிமையுடனும் செய்யப்பட்டது என்று உணர்தல் வேண்டும்....) என்னும் குறள் நடையில் அமைந்தது.

'சான்றோர்'க்கு என விதந்து கூறப்பட்டது ஏன்?

பிறன் மனையை விரும்பி அலையாத பேராற்றல் சான்றோர்க்கு அறமும் ஒழுக்கமும் ஆம் என்கிறது பாடல். சான்றோர்க்கு இங்கே இயைபு இருக்கிறதா? பல நல்ல இயல்புகளைக் கொண்டவர் சான்றோர் என அழைக்கப்படுவார். பரிமேலழகர் நற்குண நற்செயல்கள் நிறைந்தவர் சான்றோர் என்று அடிக்கடி சொல்வார். இவ்வாறு சான்றோர் என்றாலே நற்குணங்கள் கொண்டவர் என்ற வரையறை உள்ள போது, சான்றோர்க்கு அது ஒழுக்கமும் ஆகும் என்று ஏன் பாடல் கூறுகிறது? அப்படியென்றால் பிறன்விழையாமை அவரது நற்குணங்களில் அடங்கவில்லையா? 'சான்றோர்'க்கு என அவர் தனித்துக் கூறப்பட்டது ஏன்? சான்றோர்க்கு அறமும் ஒழுக்கமும் ஆகும் என ஏன் விதந்து சொல்லப்பட்டது? இக்குறள் பொதுமைக் கருத்து கொண்டது. இது மாந்தர் அனைவருக்கும் பொருந்துவதானது. ஆனால் சான்றோரை நோக்கிக் கூறப்பட்டுள்ளதாக அமைந்துள்ளது. சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள சான்றோர் பிறர்மனை நயப்பதை ஒரு தனிஉரிமையாக எதிர்பார்ப்பவர்களா?
'ஒழுக்கம் தன்னளவில் அமைந்திருப்பது. அதுவே பிறர் மாட்டுப் பயன் தருவதாயின் அறமெனப்படும். சான்றாகப் பிறருடைய மனையாளை நோக்காதிருப்பது இவனளவில் வைத்துக் காணுமிடத்து ஒழுக்கு; மனையாளை உடையான் சார்பில் வைத்து அவ்வொழுக்கத்தைக் காணுமிடத்து, இவன், அவன் சார்பில் அறம் செய்தவன் ஆகிறான்' என்று ஓர் உரை உள்ளது (ப சு மணியம்). இது ஏற்கத்தக்கதோர் விளக்கமாக உள்ளது.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் (குறள் 983) என்று அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம், வாய்மை ஆகிய பண்புகளைப் பெற்றவர் சால்புடையவர் என்று வள்ளுவர் கூறியுள்ளார். சான்றாண்மையை வரையறை செய்யும்போது அவர் சமுதாய நலப்பண்புகளையே காட்டியுள்ளார். சான்றோர் என்பவர் பொது வாழ்க்கை மேற்கொண்டு தொண்டு ஆற்றுபவராயிருப்பார். ஒழுக்கம் என்பது தனிமனித அறம். சமூகநிலைப் பண்புகளுடன் தனது தனிப்பட்ட குணமாக பிறனில் விழையாமை எனும் இயல்பு இருக்குமானால் அது சான்றோர்க்கு மிகவும் சிறப்பான ஒன்றாக அமையும் என்று இப்பாடலில் சொல்லப்படுகிறது. சான்றோர்களுடைய ஒழுக்கநெறியில் அதுவும் இருக்கவேண்டும் என்பதாகவும் உள்ளது.

வேறொருவனுடைய மனைவியைக் காமக் குறியோடு பார்க்காத ஆண்மைத்திண்மை சால்புடையவர்க்கு அறம் மட்டுமா? நிறைந்த ஒழுக்கமும் ஆகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறனில் விழையாமை நிறைந்த ‌ஒழுக்கமாம்.

பொழிப்பு

பிறன் மனைவியை நோக்காப் பேராண்மைப் பண்பு கொண்ட சான்றோர்க்கு அது அறமும் நிறை ஒழுக்கமும் ஆகும்.