இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0147



அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறஇயலாள்
பெண்மை நயவா தவன்

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:147)

பொழிப்பு (மு வரதராசன்): அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

மணக்குடவர் உரை: அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்.
இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.

பரிமேலழகர் உரை: அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.
(ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நெறியோடு வாழும் குடும்பத்தான் யார்? இன்னொரு குடும்பத்தாளை விரும்பாதவனே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறஇயலாள் பெண்மை நயவாதவன்.

பதவுரை: அறன்அறம்; இயலான்-இயல்போடு; இல்-இல்லறம்; வாழ்வான்-வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; பிறன்-மற்றவன்; இயலாள்-உரிமையின்கண் நிற்பவளது; பெண்மை-பெண்ணின் தன்மை; நயவாதவன்-விரும்பாதவன்.


அறன்இயலான் இல்வாழ்வான் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான்;
பரிதி: அறத்தின் வழியிலே இல்வாழ்பவர் ஆர்எனில்;
காலிங்கர்: மறைநூல் சொல்லுகின்ற இல்லற மரபினானே இல்வாழ்வான் என்று ஏத்தப்படுவான் யாவனோ எனின்; [ஏத்தப்படுவான் - புகழப்படுவான்]
பரிமேலழகர்: அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.

'அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறநெறிப்படி இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன்', 'இல்லற முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் யாரென்றால்', 'அறத்தின் இயல்பொடு கூடி இல்வாழ்க்கை நடத்துகிறவன் யாரெனின்', 'அறநெறியில் இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்க்கை நடத்துகிறவன் என்று சொல்லப்படுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறஇயலாள் பெண்மை நயவா தவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
பரிதி: பிறர்மனை விரும்பாதவர் என்றவாறு.
காலிங்கர்: பிறர்மனையின் மரபின்கண் தாழ்ந்து பெண்மைப் பருவத்தைச் சிறுதும் விரும்பாதவன் என்றவாறு. [மரபின்கண் தாழ்ந்து - தங்குலநலத்தினின்று தாழ்ந்து].
பரிமேலழகர்: பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.

'பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனுக்குரியவளது பெண்மையை விரும்பாதவனாவான்', 'இன்னொருவனுடைய இல்லறத்துக்காக வாழ்க்கைப்பட்டிருகிற பெண்ணின் காம இன்பத்தை விரும்பாதவனே', 'பிறனுக்கு உரிமை பூண்டவளுடைய பெண் நலத்தை விரும்பாதவனே', 'பிறன் மனைவியை விரும்பாதவனே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிறனுக்கு உரிமையானவளுடைய பெண் தன்மையை விரும்பாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்க்கை நடத்துகிறவன் என்று சொல்லப்படுபவன் பிறஇயலாள் பெண் தன்மையை விரும்பாதவன் என்பது பாடலின் பொருள்.
'பிறஇயலாள்' யார்?

அறநெறி சார்ந்து இல்லறம் நடத்துபவர் இன்னொருவரின் இல்லறவாழ்வின் இயல்பைப் பாழ்படுத்த மாட்டான்.

பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கையை நடத்துகிறவன் ஆவான்.
அறத்தின் இயல்போடு இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் யார்? என்ற வினாவிற்கு விடையிறுப்பது போல அவன் பிறனுக்குரியவளது பெண்மையை விரும்பாதவன் என்கிறது இப்பாடல். பெண்மையை விரும்பாதவன் என்றால் இங்கு பெண்ணின் தோள்‌ நலம்‌ விரும்பாதவன் அதாவது உடலுறவை நாடாதவன் எனப் பொருள்படும்.
மற்றவன் மனைவியின் பெண்மையை விரும்பாதவரே அறவழியில் குடும்பம் நடத்துபவர் ஆவார். வேறுவகையில் சொல்வதானால், இன்னொருவனுடைய இல்லற வாழ்க்கையை அழித்து இன்பம் துய்க்க நினைப்பவன் தனது இல்லத்தை அறவழியில் நடத்த மாட்டாதவன். மற்றவன் இல்லில் புகுபவன் அம்மற்றவனுக்கு மட்டுமே உரியவான பெண்மையை அழித்து அவனது இல்லறத்துக்கு ஒன்றும் இல்லாமல் செய்து பெரும்பழி எய்துகிறான். எனவே அவன் தன் குடும்பத்தில் வேறு எந்த அறங்களைச் செய்து ஒழுகினாலும் அறநெறியில் இல்வாழ்வான் ஆகான். அவன் தன் மனைவியின்வழி குழந்தை பெற்று விருந்தோம்பி இன்சொல் கூறி அடக்கமாக வாழ்ந்தாலும் அவன் 'அறன்இயலான் இல்வாழ்வான்' ஆகான்.
அறமற்றவை செய்யாதிருந்தாலும் அறமே ஆதலால், பிறன்இல் விழைதலின்றி அறத்தின் தன்மையோடு, தன் மனைவியோடு மட்டும் இணைந்து குறையேதுமின்றி இல்வாழ்க்கை நடத்துபவன் அறமற்றவை செய்யாதிருந்தாலும் அவன் அறவழியில் இல்வாழ்வான் ஆவான் என்பதும் பெறப்படும்.

'அறனியலான் இல்வாழ்வான்' என்றது 'அறமாகிய இயல்போடு குடும்பத்தில் கூடி வாழ்பவன்' எனப்பொருள்படுபதலால், வாழ்பவனுக்கு அறம் ஓர் இயல்பாக வேண்டுமென்பது குறிப்பு. மனித மன இயல்பும், சமூக இயல்பும், அறத்தின் இயல்பும் ஒருவனுக்கு ஒருத்தி என்றும் ஒருத்திக்கு ஒருவன் என்றும் இயல்பாக்கியுள்ளது. அவ்வாறு இயல்பு படுத்தப்பட்ட வாழ்வில் பிறன் மனைவியைக் கவர்ந்து கொள்ள நினைப்பவன் அறத்திற்குப் புறம்பாக நடக்கிறான். பிறன் மனை விழையாதவனே, நல் அறத்தின்கண் இல்வாழ்க்கை ஒழுகுபவனாம் என்பது பிறன் மனைவிக்குரிய உடம்புக்கு ஆசைப்படுவது அறத்துக்கு எதிரானதாகையால் குடும்பத்தோடு ஒழுகுகிறவன் அதை நாடமாட்டான்.

'பெண்மை நயவாதவன்‌' என்பதற்குச் சொ தண்டபாணிப்பிள்ளை 'பெண்மைக்‌ குணமாவன அச்சம்‌ நாணம்‌ மடம்‌ பயிர்ப்பு என்பன, இப்‌ பெண்மைக்‌ குணம்‌: நான்கும்‌ மகளிர்‌ கற்புக்குக்‌ காவலாய்‌ நிற்பன. இக்‌ காவலை அழித்‌தன்றிப்‌ பிறன்மனையாள்‌ தோள் தோய்தல் இயலாதாகலின்‌, பிறன்‌ மனை விழைவான்‌ அவ்‌ வரணைக்‌ கவர்ந்து கொள்ள விரும்புதல்‌ ஒருதலையாதலின்‌ 'பெண்மை நயவாதவன்‌' என்றார்‌' என விளக்கம் தந்தார். பிறன் மனைவியை நயத்தல் பெண்மையை நயத்தல் என்றதில் வேறுபாடு குறிக்கப்பட்டது.

அறநெறிப்படி வாழ்கின்றவர்கள் பிறன் மனைவியின் பெண்மையைச் சிதைக்க விரும்பும் இந்த செயலைச் செய்யார் என்று கூறி, அறத்துப்பாலின் அடிக்கருத்தாக இருக்கும் அறன்வலியுறுத்தல் சொல்லப்படுகிறது. இதன் மூலம் வள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால் இல்லறத்தில் வாழ்வோர் எப்போதும் தீய செயலாகிய பிறன் மனையாளைக் காதலிப்பதைச் செய்யாமல் இருங்கள் என்பதே.

'பிறஇயலாள்' யார்?

இத்தொடர்க்கு பிறன்வழியானவள் அதாவது அயலானுக்குரியளாய் அவன் வழி நிற்பாள், பிறர்மனை, பிறர்மனையின் மரபின்கண் தாழ்ந்து, பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாள், பிறன் மனைவியாய்க் கூடி வாழ்பவனது, இன்னொரு குடும்பத்தாள், பிறனுக்குரியவள், பிறன் உரிமையாளாய் அமைந்தவள், பிறனுக்கு உரிமை பூண்டவள், பிறனுக்கு உரிமைபூண்டு அவன் வழி நிற்பவள், அடுத்தவனுக்கு உரிமையானவள், பிறருக்கு உரிய மனையாள், பிறஇயலாள் இன்னொருவனுக்கு முறைமைப்பட்டவள், பிறனது இயல்புக்குத் தக்கபடி ஒழுகுகின்றவள், பிறனுக்கு இயல்பாகி உரிமை பூண்டவள், பிறனுக்கு உரிமையுள்ளவள் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

பிறன் இயலாள் என்பதே 'பிறஇயலாள்' என்று வந்துள்ளது. இக்குறளில் 'பிறனியலாள்' என்ற சொல் தொடைநயம் நோக்கி அமைந்தது என்றும், அறனியலான் என்ற சொல்லுக்கேற்ப 'பிறனியலாள்' என்ற சொல்லைக் கையாண்டு, 'பிறன் மனைவி' என்பதைக் குறிக்கப் 'பிறனியலாள்' என்ற ஒரு புதிய சொல் வடிவத்தைப் பெற வைக்கின்றார் வள்ளுவர் என விளக்குவர்.

பிறன்இயலாள் என்ற தொடர்க்கு பிறன் இயல்புக்குத் தக்கபடி ஒழுகக் கடமைப் பட்டவள் எனப் பொருள் உரைத்தனர். அந்தப் பிறன் என்பவன் அவளது கணவனாகும். அதாவது பெண்ணானவள் தன் கணவனது இயல்புக்குத்தக்கவாறு ஒழுகுவாள் என்ற பொருளிலேயே உரையாசிரியர்கள் பலரும் உரை கூறினர்.
தெ பொ மீனாட்சி சுந்தரம் 'இங்கு 'இயல்' என்று கூறப்படுகின்ற இடம், இல்லற இயலாதலின், அஃது இல்லற ஒழுக்கமே ஆகும். 'இயல்பினான் இல்வாழ்வான்' என வருதல் காண்க. எனவே, 'பிறன் இயலாள்' என்பது 'பிறனொருவருடைய இல்லறத்தாள்' என்றாகிப் 'பிறனுடைய இல்லறத்தை இனிதிருந்து நடத்துபவள்' எனப் பொருள்படுகிறது' என விளக்கி பிறன் இயலாள் என்பது பெண் கணவனுக்கு அடிமைப் பொருள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்துவார். பெண்ணினிடத்தே உள்ள பெண்மை ஒன்றுதான் கணவனுக்கே சிறப்பாக உரியது அதனை நயத்தல் ஆகாது என வள்ளுவர் கூறுகிறார். இவ்வாறு பெண்மையும், பெண்கட்குரிய மற்றைய சிறப்பு நலங்களும் வேறுபடுத்திக் காட்டப்பட்டது.

'பிறஇயலாள்' என்ற சொல் பிறனுக்கு இயல்பாகி உரிமை பூண்டவள் குறித்தது.

அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்க்கை நடத்துகிறவன் என்று சொல்லப்படுபவன் பிறனுக்கு உரிமையானவளுடைய பெண் தன்மையை விரும்பாதவன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறனில் விழையாமை ஓர் அறம்.

பொழிப்பு

அறநெறிப்படி இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் பிறனுக்குரியவளது பெண்மையை விரும்பாதவன்.