பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்
(அதிகாரம்:பிறனில் விழையாமை
குறள் எண்:146)
பொழிப்பு (மு வரதராசன்): பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
|
மணக்குடவர் உரை:
பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.
பரிமேலழகர் உரை:
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.
(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
பிறன் மனையாளிடம் எல்லை கடந்து நடந்து கொள்பவனிடம் பகை, பாவம், அச்சம், பழி நான்கும் அவனை விட்டு நீங்காவாம்.
அவன்தன் கணவன், சுற்றத்தால் பகை நேரும். தீய செயலாதலின் பாவம் சேரும். செய்யத்தகாததைச் செய்ததால் அச்சத்தால் மனம் தடுமாறும். ஊராரால் பழிக்கப்படுவான்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்இறப்பான்கண் பகை,பாவம்,அச்சம்,பழி, எனநான்கும் இகவாவாம்.
பதவுரை: பகை-பகை; பாவம்-தீச்செயல்; அச்சம்-அச்சம், நடுக்கம், பயம்; பழி-பழிக்கப்படுதல்; என-என்ற; நான்கும்-நாலும்; இகவா-நீங்கமாட்டா; ஆம்-ஆகும்; இல்-மனை, இல்லாள்; இறப்பான்கண்-செல்பவன்கண்; நெறி கடந்து நடப்பவன் இடத்து.
|
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்:
பரிதி: பகையும் பாவமும் பயமும் அபகீர்த்தியும் மிக உண்டாம். ஆதலால் இன்பம் என்ன? என்ன இன்பம் கொண்டான்? என்று பலராலும் இகழப்படுவான். [அபகீர்த்தி- இகழ்ச்சி]
பரிமேலழகர்: பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.
'பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகை பாவம் அச்சம் பழி என்ற நான்கும் விடமாட்டா', 'பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கும் நீங்காவாம்', 'பகை, பாவம், பழி, நடுக்கம் என்னும் நான்கும் விட்டு நீங்காவாம்', 'பகை, பாவம், அச்சம், பழி என நான்கும் நிலைத்து நிற்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கும் நீங்காவாம் என்பது இப்பகுதியின் பொருள்.
இல்இறப்பான் கண்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.
பரிமேலழகர்: பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து.
பரிமேலழகர் குறிப்புரை: எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.
'பிறனில்லின்கண்ணே நெறிகடந்து செல்வானிடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறன் வீட்டில் நுழைவானை', 'பிறன் மனைவியினிடம் முறை கடந்து நடப்பவனிடத்து', 'பிறர் மனைவியிடத்தே நெறிகடந்து செல்வானை', 'பிறன் மனைவியிடம் நெறி கடந்து செல்பவனிடம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
பிறன் வீட்டில் நெறிகடந்து நுழைவானிடத்து என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பிறன் வீட்டில் நெறிகடந்து நுழைவானிடத்து பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கும் இகவாவாம் என்பது பாடலின் பொருள்.
'இகவாவாம்' என்பதன் பொருள் என்ன?
|
பலரைப் பகைத்து அச்சத்துடன் உலவச்செய்து, பாவமும் பழியும் உண்டாக்கும் கள்ளஉறவுக் காமம் என்ன இன்பம் தரஇயலும்?
பிறன் மனைவியினிடத்து முறை தவறிச் செல்பவனிடம் பகைமை, பாவம், அச்சம், பழி இந்த நான்கு குற்றங்களும் நீங்காமல் நிற்கும்.
பகை: பகை என்றது தன் மனையாள் பகை, பிறன் வீட்டுக்குடையான், உறவினர் இவனிடம் மேற்கொள்ளும் பகை, இவன் அவர்களிடம் மேற்கொள்ளும் பகை இவற்றைக் குறிக்கும்.
பாவம்: பிறன் மனைச் செல்லுதல் தீச்செயல் ஆதலால் பிறவிக்குப் பாவத்தைத் தேடிக்கொள்கிறான்.
அச்சம்: அச்சம் என்பது அத்தீமை புரிவதற்கு முன்னும் செய்யும்போதும் செய்த பின்னும் உண்டாவது. நாலடியார் பாடல் ஒன்று அச்சம் பற்றி நன்கு விளக்கும். அச்சம் என்ற சொல் பிறன்மனை நாடுவானைக் கண்டு பிறர் அஞ்சுவதையும் குறிக்கும்.
"புக்க இடத்து அச்சம்; போதரும் போது அச்சம்;
துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமைக் காப்பு அச்சம்;
எக் காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ,
உட்கான், பிறன் இல் புகல்? (நாலடியார் 83: பொருள்: புகும்போது அச்சம்; திரும்பிவரும்போது அச்சம்; நுகரும்போது அச்சம் பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம்; இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும்; ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்?)
பழி: பழி என்பதற்கு குடிப்பழி, ஊர்ப்பழி, உலகப்பழி எனப் பலவாறாகக் கூறினர். உலகோரால் பழிக்கப்படுவர் என்பது பொருள்.
இல்இறப்பான் கண் என்ற தொடர் பிறன் வீட்டின்கண் நெறிகடந்து செல்பவன் எனப் பொருள்படும்.
பிறன் மனையாளை நாடிச்செல்பவன் அச்சத்துடனேயே செல்வான்; அங்கு சென்றுவந்தபின்னும் பயத்துடனே உலவி வருவான்; அங்கு சென்றபின் அவளது கணவன், உறவினர் முதலியோரின் பகையை ஈட்டிக்கொள்கிறான்; அங்கு சென்றதானால் பழி உடன் நிகழ்கிறது; எல்லோரும் அவனது இழிசெயலுக்காக பழிப்பர்; அத்தீச்செயல் அறத்தின்முன் கடுந்தண்டனைக்குட்பட்டதாகிறது. அவன் நெறிகடந்து பிறனில் செல்வது, அச்சத்தில் தொடங்கி பகையும் பாவமும் உண்டாகி பாவத்தில் முடியும்.
இந்நான்கும் பிறன்மனை புகுவானிடத்துத் தொடர்ந்து நிலையாய் இருக்கும். அவற்றைத் துடைத்துத் தூர எறியமுடியாது.
|
'இகவாவாம்' என்பதன் பொருள் என்ன?
இகவாவாம் என்பதற்கு நீங்காவாம், நீங்காது நிற்கும், ஒருகாலும் நீங்காவாம், விட்டு நீங்காவாம், விடமாட்டா, நீங்காமல் இருந்துகொண்டிருக்கும், நீங்காமல் நிலைபெறும், நிலைத்து நிற்கும், நீங்காமல் இருக்கும், விலகமாட்டா, நின்று நீங்காவாம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'இகவாவாம்' என்றதற்கு நீங்காவாம் என்பது பொருள். பிறன் மனையின்கண் நெறிதவறிச் செல்பவனிடத்தே, பகை, பாவம், அச்சம், பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் விடாது குடியிருக்கும். ஒரு மனிதன் பெறக்கூடாத இப்பொருள்கள் பிறன்மனையாளை விரும்புவானிடத்து சென்றடைந்து நிலைநின்று அவனது மனச்சான்றை எப்பொழுதும் உறுத்திக் கொண்டே இருக்கும்; சொல்லப்பட்ட அந்நான்கு குற்றங்களும் பிறன்மனை விழைவானது உள்ளத்தில் நிறைந்து இடைவிடாது இன்னல் உண்டாக்கும்.
பரத்தையரை நாடுவோனும் ஒழுக்கத்துக்கு இசைவற்றவன் என்றாலும் அவனுக்கு இத்துணை குற்றங்கள் சொல்லப்படவில்லை என்பதை உரையாளர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
'இகவாவாம்' என்றது நீங்காவாம் என்ற பொருள் தருவது.
|
பிறன் வீட்டில் நுழைவானிடத்து பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கும் நீங்காவாம் என்பது இக்குறட்கருத்து.
பிறனில் விழையாமை ஒருவனைப் பெருங்குற்றங்களுக்கு ஆட்படாமல் தடுக்கும்.
பகை பாவம் அச்சம் பழி என்ற நான்கும் பிறன் வீட்டில் நுழைவானிடத்தினின்று நீங்காவாம்.
|