இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0142அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:142)

பொழிப்பு (மு வரதராசன்): அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

மணக்குடவர் உரை: காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.

பரிமேலழகர் உரை: 'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.
(அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பிறனது வாயிலில் நிற்பவனைப் போலப் பெரும்பாவியும் பெரும்பேதையும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.

பதவுரை: அறன்கடை-அறத்தின் நீக்கப்பட்டவை, அறத்தின் கடையிலே அதாவது தீச்செயல்களின் கடையில்; நின்றாருள்-நின்றவர்களுள்; எல்லாம்-அனைத்தும், எவையும்; பிறன்-மற்றவன்; கடை-வாயிலில்; நின்றாரின்-நின்றவர் போல, நிலைத்தவரை விட; பேதையார்-அறிவிலார், அறிவிலிகள்; இல்-இல்லை.


அறன்கடை நின்றாருள் எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும்;
பரிப்பெருமாள்: காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: அறனும் பொருளும் அறியாது இன்பமே கருதிப் பெண்வழிச்சென்றும், விலைமகளோடு கலந்தும், இழிகுலத்தாரைத் தழுவியும் ஒழுகும் எல்லாரினும்;
பரிதி: கடையாகிய பாவத்தில் நிற்பவர்க்குள்ளே;
பரிமேலழகர்: காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்;
பரிமேலழகர் குறிப்புரை: அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். [அறன் கடை - அறத்தினின்று நீக்கப்பட்டு, அவ்வறத்தின் பின்னே (கடையிலே) நிற்பது பாவம். ஆதலால் அப்பாவம் 'அறன் கடை' எனப்பட்டது]

'காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பாவம் செய்தவர் எல்லாருள்ளும்', 'இல்லற ஒழுக்கத்தில கடை கெட்டவர்கள் எல்லாரிலும்', 'பாவ நிலையில் நிற்பார் எல்லாருள்ளும்', 'அறத்திற்குப் புறம் போகின்ற கயவர்களுள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறத்தின் கடை எல்லையில் நின்றார் எல்லாருள்ளும் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.
பரிப்பெருமாள்: பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.
அவர்கள் இன்பந்தன்னைப் பெறுவர். இவர்கள் அதுதானும் பெறாராதலின் என்றவாறு. பெறாமை என்னை எனின், அச்சமுடையார்க்கு இன்பம் இன்றாம்; புக்கவிடத்து அச்சம் எக்காலும் அச்சமாதலின்.
பரிதி: பிறன்மனையாளை விரும்புவரைப் போலப் பேதையார் இல்லை.
பரிதி குறிப்புரை: தன்மத்தின் கண்ணே நின்றவர்க்குள்ளே பெரியவர் ஆர் எனில், பிறர்மனை நோக்காமல் இருப்பவரே என்றவாறு.
பரிமேலழகர்: பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது. [பெண்வழிச் செல்வார் - தம் வழியில் நடத்தற்குரிய மனைவியின் வழியே நடப்பவர்; வரைவின் மகளிர் - விலை கொடுப்பார் யாவர்க்கும் தன் நலத்தை விற்பதேயன்றி, அந்நலத்தைத் துய்ப்பார் இன்னார், இனியார் என்னும் வரம்பில்லாது ஒழுகும் பொது மகளிர், வரம்பு - எல்லை]

பிறனது தலைவாசலில் நின்றவரைப் போல் அறியாதார் இல்லை என்று மணக்குடவர் இப்பகுதிக்குப் பொருளுரைத்தார். பரிபெருமாள் இன்பமே கருதிப் பெண்வழிச்சென்றும், விலைமகளோடு கலந்தும், இழிகுலத்தாரைத் தழுவியவரைப் போல அறிந்தாரில்லை எனச் சொல்லி அவர்கள் பெறும் இன்பம் போலி இன்பம் என்றும் கூறுகிறார். பரிதியும் இவர்கள் பேதையார் எனக் கூறி அறம் செய்பவர்களில் பெரியார் பிறன்மனை நோக்காதாரே எனவும் கூறினார். பரிமேலழகர் உரை பெரிதும் பரிப்பெருமாள் உரை தழுவியதாய் உள்ளது.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிற்படியில் சென்று நின்றவர் போல அறிவிலிகள் இல்லை', 'இன்னொருவனுடைய மனைவியின்மேல் காம ஆசைகொண்டு அவனுடைய வாசலுக்குப் போகிறவனைவிட மூடன் வேறு யாருமில்லை', 'அயலான் வாயிலில் போய் அவன் இல்லாளை விரும்பி நிற்பாரைப் போல் அறிவிலிகள் இல்லை', 'பிறன் மனைவியை விரும்பி அவன் வாசலில் சென்று நின்றவர்கள் போல அறியாமையுடையார் இலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிறன் மனைவியை நயந்து அவன் வாயிலில் சென்று நிற்பார் போல அறிவிலிகள் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறத்தின் கடை எல்லையில் நின்றார் எல்லாருள்ளும் பிறன்கடை நின்றாரின் அறிவிலிகள் இல்லை என்பது பாடலின் பொருள்.
'பிறன்கடை நின்றார்' யார்?

அடுத்தவன் மனைவியை விரும்பிப் புறக்கடையில் நின்று கொண்டிருக்கிறாயே. உன்னைப் போல கேடு கெட்டவன் இருக்க முடியுமா?

அறம் கடந்து தீநெறியில் ஒழுகுவார் எல்லாருள்ளும் பிறன் மனைவியை இச்சித்து, அவன் வீட்டின்புறம் நின்றவரைப் போல மூடர்கள் இல்லை.
அறத்தைவிட்டுத் தீ நெறியில் ஒழுகுபவர் பலவகையானவர்கள்; அவர்களுள் பிறன்மனைவியை விரும்பி அவன் கடைவாயிலில் சென்று நிற்பவர்கள் இழிவானவர்கள். பிறன்மனை விழைவோர் பாவ நிலையில் நிற்கிறார்; அவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

அறன்கடை நின்றார் என்பதற்கு உரையாளர்கள் காமத்தின்கண்ணே நின்றார், காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார், அறத்தினைச் செய்யாது வாழும் மாந்தரில் கடைசியில் நிற்போர், இல்லற தர்மங்களில் கீழ்க்கடையானவர்கள், அறத்திற் கடையவராக, பாவ நிலையில் நிற்பார் எல்லாருள்ளும், அறத்திற்குப் புறம் போகின்ற கயவர்கள், அறத்தின் எல்லையைக் கடந்த தீயவர்கள், தீமையின்கண் நின்றவர், காமம்பற்றித் தீவினை செய்தார், அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்கள், பாவ வழியில் நடக்கும் மனிதர்கள், அறத்தை விட்டுத் தீய நெறியில் ஒழுகும் கொடியவர்கள், மறத்தின்கண் நின்றவர்கள், அறனற்ற காமத் தீநெறி நின்றார் எனப் பொருள் கூறினர்.
அறத்தினின்று நீங்கி, அவ்வறத்தின் கடையிலே நிலைத்திருப்பது தீச்செயல் (பாவச்செயல்). அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்னும் கருத்தால் அத்தீச்செயல் அறன்கடை எனப்பட்டது. அறன்கடை நின்றார் என்றது அனைத்துத் தீச்செயல்களும் அடங்கக் கடையாகிய தீச்செயலில் நிற்பவர் எனப்பொருள்தரும்.
கொலையும் தீச்செயல்தான். பிறன்மனையின் வாயிலிலே நிற்பதை உரையாளர்கள் கொலை போன்ற கொடியசெயலுக்கு இணையாகக் கொள்ள விரும்பவில்லை போலும்! அதனால் இங்குள்ள அறன்கடை என்ற தொடர்க்கு அறத்திற்குக் கடையாவது காமம் என்று பொருள் கூறி அதன்கண் நிற்றல் அதாவது காமத்தின் கண் நிற்றல் என்று அறன்கடை நின்றார் என்பதை விளக்கினர்; அது இழிந்த மகளிரையும் விலைமாதையும் புணர்தல் என்று சொல்லி அதனினும் கடையாய பேதைமை பிறன் கடைவாயிலின் நிற்றல் எனவும் அவர்கள் உரைத்தனர். எனவே அறன்கடை நின்றார் என்றது காமம் பற்றிய தீச்செயல்கள் புரிவோருள்ளும் பிறன் மனைவியை நாடுபவர் எனப் பொருள்படுவதாயிற்று,

பிறன்கடை நின்றார் இங்கு ஏன் பேதையார் எனச் சொல்லப்படுகின்றனர்? பேதையார் என்பது 'யாதும் அறியமாட்டாதார்' அதாவது அறிவில்லாதவர் எனப்பொருள்படும். இவர்கள் எது குறித்தும் வெட்கப்பட மாட்டார்கள்; வெட்கப்பட வேண்டியதற்குக் கூட வெட்கப்படமாட்டார்கள்; எதை அறிய வேண்டுமோ அதை அறிய முயலமாட்டார்கள். அன்பு காட்ட வேண்டியவர்களிடம் அன்பு காட்டாமல் நடந்து கொள்வர்; காக்க வேண்டியவற்றைப் காக்காது விட்டுவிடுவார்கள். நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் (பேதைமை 833 பொருள்: நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், அன்பின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையது தொழில்) என்று பேதையர் இயல்புகளைப் பிறிதோரிடத்தில் குறள் கூறும். அவர்களைப் போல் அறிவிலிகள் வேறு எவரும் இல்லை என்று இப்பாடல் சொல்கிறது.
பிறன்மனை விழைவார் எதனால் அறிவிலிகள் என்று சொல்லப்படுகிறார் என்பதற்குத் தொல்லாசிரியரான பரிப்பெருமாள் தரும் விளக்கமாவது: 'இன்பமே கருதிப் பெண்வழிச்சென்றும், விலைமகளோடு கலந்தும், இழிகுலத்தாரைத் தழுவியும் ஒழுகும் எல்லாரினும் இவரைப்போல அறியாதாரில்லை. அவர்கள் இன்பந்தன்னைப் பெறுவர். பிறன்மனை நயந்தார் அதுதானும் பெறாராதலின் என்றவாறு. பெறாமை என்னை எனின், அச்சமுடையார்க்கு இன்பம் இன்றாம்; புக்கவிடத்து அச்சம் எக்காலும் அச்சமாதலின். முற்கூறியவாறு ஒழுகுவான் இன்பமாயினும் பெறுவான். இவன் அதனையும் பெறான்'.
பிறன் மனை நயந்தவனுக்கு இன்பமும் கிடைக்காது என்பதை நாலடியார் இவ்விதம் விளக்கும்:
புக்க இடத்தச்சம்; போதரும் போதச்சம்
துய்க்கும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ?
உட்கான் பிறனில் புகல்
(நாலடியார் 83 பொருள்: புகும்போது அச்சம்; திரும்பிவரும்போது அச்சம்; நுகரும்போது அச்சம்; பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம்; இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும்; ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்?) பிறன் மனைவியை விரும்பி யொழுகுதலில் முழுதும் அச்சமேயல்லாமல் இன்பமில்லையே என்பது இதன் கருத்து. அப்படி ஒரு அச்சத்தில் இன்பம் துய்க்க முடியுமா?
இன்பமும் கிடைக்காமல் போவதால் அவனைப் பெரும்பேதை என்கிறது குறள்.

இக்குறளாற் போந்த கருத்தாகத் 'தன்மத்தின் கண்ணே நின்றவர்களுக்குள்ளே பெரியவர் ஆர் எனில், பிறர்மனை நோக்காமல் இருப்பவரே' என்று மாற்றியுரைப்பார் பரிதி.

'பிறன்கடை நின்றார்' யார்?

'பிறன்கடை நின்றார்' என்றதற்குப் பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர், பிறன் இல்லாளைக் காதலித்து அவன் வாயிற்கண் சென்று நின்றார், பிறன் இல்லாளுக்கு ஆசைப்பட்டு அவள் கடைத்தலை வாசற் சென்று நின்றார், பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவர், (பிறனது மனையாளை விரும்பி ௮ப்‌) பிறனது (மனைவாயிற்‌) கடையில் (சென்று) நின்றவர், காமத்தால் பிறனுடைய மனைவிமீது ஆசைப்பட்டு அவனது வாயிலில் சென்று நின்றார், பிறன் மனைவியை விரும்பி அவள் வாழும் வீட்டின் பின் வாயிலில் காத்துநிற்பவர், பிறனது வாயிலில் நிற்பவன், பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிற்படியில் சென்று நின்றவர், பிறனுடைய மனைவியின் மேலுள்ள காம ஆசையினால் அவனுடைய வாசலுக்குச் சென்று நிற்பவன், அயலான் மனைவியின் கடையிலே (வாயிலிலே) நின்றவர், அயலான் வாயிலில் போய் அவன் இல்லாளை விரும்பி நிற்பார், பிறன் மனைவியை விரும்பி அவன் வாசலில் சென்று நின்றவர், பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலிற் சென்று தன் எண்ணம் நிறைவேறுதலுக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன், பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண்போய் நின்றார், பிறன் (வீட்டுப்) புறவாயிலின்கண் நின்றவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பிறன்கடை என்ற சொல் பிறனுடைய வாயில் என்ற பொருள் தரும். பிறன்கடை நின்றார் என்ற சொல்லுக்கு பிறனுடைய வாயிலில் நின்றவர் என்று பொருள். பிறன் (வீட்டுப்) புறவாயி லின்கண் நின்றவர் என்றும் பொருள் காண்பர். பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று (தேவநேயப் பாவாணர்). இத்தொடர்க்கு பிறன் வாசலில் திருட்டுத்தனமாக நிற்பவன் என்றும் பொருள் கூறினர். வ உ சி 'பிறன் மனையாளிடம் செல்பவர் அவன் வீட்டு முன்வாயில் வழியாகச் செல்லாமல் ஒளிந்து பின் வாயில் வழியாகச் செல்வது வழக்காகலின், ‘பிறன்கடை நின்றார்’ என்றார்' என உரைத்தார்.
மற்றவன் மனைவியின் பின் செல்பவர்கள் இழிவும் கள்ள மனமும் உடையவர் என்பதைச் சொல்வது இத்தொடர்.

'பிறன்கடை நின்றார்' என்பது பிறன் வாசலில் நின்றவர் என்ற பொருள் தருவது.

அறமற்ற தீச்செயல்கள் புரிவார் எல்லாருள்ளும் பிறன் மனைவியை நயந்து அவன் வாயிலில் சென்று நிற்பார் போல அறிவிலிகள் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மற்றவர் மனையின் வாயிலில் நிற்பவர் அறங்கெட்டவரிலும் மூடராய் இருப்பவரே என்று பிறனில் விழையாமை அறிவுறுத்தல்.

பொழிப்பு

அறம் நீங்கியவை செய்தவர் அனைவரிலும் பிறன் மனைவியை நயந்து அவன் வாயிலில் சென்று நின்றவர் போல அறிவிலிகள் இல்லை.